கவிதைகள்: அன்பின் இம்சை – அன்பூ

கவிதைகள்: அன்பின் இம்சை – அன்பூ

அன்பின் இம்சை
ஒரு
ஏகாந்த வேளையில்
எதையேனும்
பாடென்கிறேன்…
தென்றல் வந்து
தீண்டும்போது
என்ன வண்ணமோ மனசுல
என்று
உதடசைத்து
என்னுயிரைப் பிடுங்கி
உன் மடியமர்த்திக் கொள்கிறாய்.
அசைந்து
இசைகிறதென் ஆவி.
எதுவும் சொல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
மனசெல்லாம்
இனிப்பா இனிக்கிறதென்று
காதோரம்
காதலெழுதுகிறாய்.
உன் இதழுளிக்குக்
கிறங்கிச் சரியும்
என்னிமைகள்
இழுத்தணைத்துக்கொள்கின்றன
இருளை…
தொலைவது தெரியாமல்
நான் தொலைவதற்கு.
நேசத்தில் நெக்குருகி
நீயும் நானும்
நாமெனக்
கரைவதை
வெட்கமின்றி
வேடிக்கை செய்கிறது
காற்று.
அன்பின் இம்சை

விட்டகுறை தொட்டகுறையாய்
உன்னையும் என்னையும் நேர்க்கோட்டில்
நிறுத்திப் பார்த்த
காலத்திற்கு….
சலித்துப் போனதோ என்னவோ…

எதிரெதிர்த் திசையில்
பிய்த்துப்போட்டு
வேடிக்கை காட்டுகிறதிப்போது.

வாழ்வின் நெடுந்தூரப் பயணத்தின் வட்டத்தில்…
நேருக்கு நேராய் நம்மை நிறுத்தி
சம்பந்தமில்லாதவர்களைப்
போலதொரு
சந்திப்பை…
இந்தப் பொல்லாத காலம்
நமக்குத் தந்தாலும் தரலாம்.

அதுவரைக்கும்…
எப்போது காண நேர்ந்தாலும்
சிரித்த முகத்தோடே
உன் நலம் கேட்கும் ஆவலை மட்டும்
இறவாது பார்த்துக் கொள்ள வேண்டும் நான்.

அதற்கும் முன்பாக
எப்படியாகிலும்…

என்றைக்கோ
கள்ளமற்று கதைத்துக் கிடந்த
அந்த மாயைக் கணங்கள் அழுத்துகின்ற
எண்ணம் மழுங்கி…
தேளின் அருவமாய்
சதா கொட்டிக்கொண்டிருக்கும்
அந்த நினைவுக் கொடுக்குதனை
வெடுக்கென்று
பிடுங்கி
கண் காணா தூரத்தே
எறிந்துவிட வேண்டுமெனக்கு.

அவ்வளவே தான்.

– அன்பூ

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *