கவிதை: அன்பின் இம்சை – அன்பூஅன்பின் இம்சை

எழுதிமுடிக்காத கவிதையின்
வார்த்தை உருட்டுக்களைப்
போலத்தான்….
நெருடிக்கொண்டிருக்கிறாய்
என்னுள்
புரண்டுகொண்டேயிருக்கும்
நீ….

என்னைக் கடந்து விடுவதென்று
முடிவு செய்த பின்னே…
திரும்பிப் பார்த்து விடாதே…

மீண்டும் விரும்பத் தொலைக்கும்
அபாயமிருக்கலாமுனக்கு.

நிச்சயமதில் சகாயமேதுமில்லையெனக்கு.

வளியிடைத் தெறித்துச்
சிணுங்குமென்
கொலுசொலியின்
கூடவே
கோர்த்துக்கொள்கிறது…
முயக்கத்தினூடே
முணங்கித் தகிக்குமுன்
தாகச்சிதறல்களின்
நிழல்.

நிலவைக் காட்டி
சோறூட்டுவதைப்
போலத்தான்….
நின் நினைவைக் காட்டியே
என் பொழுதின்
பசியாற்றுகிறேன் நான்.

– அன்பூ