அன்பூ கவிதைகள்கா கா கா

தூங்கமுடியவில்லை
காக்கை குருவிகளின் சத்தம்
கூட்டியள்ளி மாளவில்லை குப்பைகளையென்று
அலுத்துச் சலித்துக்கொண்டு
வாசலுக்கு இருபுறமுமாய்
நிழலுர்த்திக் கொண்டிருந்த
புங்கையையும்
வேங்கையையும்
கூலிக்கு ஆளமர்த்தி
வேரோடு தூரோடு
பிடுங்கியெறிந்த
எதிர்வீட்டுக்காரம்மா…

இரண்டொரு நாளில்
அமாவாசைச் சோற்றின்
கூவலுக்கு செவி சாய்க்கா காக்காயை
ரொம்பக் கிராக்கி தான் இந்தக் காக்காய்க்கு என்று
நெட்டி முறித்துக் கொண்ட போது…

மருந்துக்கும் கூட
தென்படவில்லை
அந்தக் காக்கையின்
குடிலைத் தான்
வெட்டிச் சாய்த்தோமென்ற
விசனம்.
தாங்கும் கரங்கள்
தாங்குமிடத்திலெல்லாம்
மிதவையாகிப் போகிறது…
அகதியாகித் திரிந்த
மனது.வானம்

அண்ணாந்து தான்
பார்க்கிறோம்
ஆனாலும்
வானமென்பது
வேறொன்றுமில்லை…

நம்
கண்ணளக்கும்
நீள அகலம் தான்
அதற்கு.

புலப்படுவதை நோக்கி
நாம்
கண்ணெறிந்தால்
புலப்படாதது
நமக்குக்

கல்லெறியாதாயென்ன…?!கருத்துப் பிழை
நான்
எழுதியெழுதிப் பார்க்கும்
என்
எழுத்துப் பிழை
நீ.
– அன்பூ