டாஸ்மாக்
டாஸ்மாக் கடைகளை உடனே மூட ஐகோர்ட் ...
கன்னியரின் கண்ணீர் தேசமெங்கும்
குப்பியிலடைத்த தண்ணீரின் குமட்டல் வாசம்
குமுறிக் கொதிக்கிறது.
மானமிழந்து மரியாதையிழந்து
கம்பீரமிழந்து கட்டுப்பாடிழந்து
சுயமிழந்து தரமிழந்து
தன்னிலை மறந்த பித்து நிலைகளில்…
பிடிப்புகளறுந்த வெடிப்புகளாய்
விரக்தி பாரித்துக் கடக்கின்றன
ஒரு நூற்றாண்டின் அந்நியோன்னியத்தை
விழுங்கிச் செரித்த உறவுமுறைகள்.
கும்பி விட்டு எம்பிக் குதிக்கும்
குடலறுந்த வீச்சத்தில்
வீழ்ந்து மடிவதற்கு விளக்கேற்றுகின்றன
மஞ்சள் பூத்த தாலிக்கொடிகளின்
நெஞ்சையறுக்கும் ஓலங்கள்.
கனவினைச் சிதைத்து
நனவினைத் தின்னும்
மனவினையின் கோரப் பற்களுக்கிடையில்…
அருவாளுக்குத் தப்பாத கிடாயாய்க்
குருதி கக்கிச் சமைகின்றன
வெட்டுண்டு விலாசம் தொலைத்த
கட்டுக்கோப்பிழந்த நேசக்குடில்கள்.
மணம்புரிந்த விதியை நொந்து
மனச்சிதைவுகளின் புழுக்கத்தில்
புதைந்துபோன புன்னகைகள் யாவும்…
கடைவாயோர எச்சிலொழுகலில்
மதுக் கடைகளின் வாசல் நெரிசலில்
வரிசையில் நிற்கின்றன
பூமிப்பந்தின் சாகாவரங்களாய்
எதற்கும் நோகாத பிண்டங்கள்.
கத்தரிக்கோல் பேச்சிலேயே 
கண்ட கழிசடைகளையும்
கழுத்தைக் குதறிவிடும்
குருவம்மாக்களின் வாய்த்திமிரெல்லாம்
குடித்தே அழியும் கொண்டவனின் கொடுமைகளை
நெஞ்சுக்குள் புதைத்து
ஒற்றை விசும்பலுக்குள்
நசுக்கிக் கும்பிட்டே நிற்கும் அவலம்
தலைமுறைக்கும் தொடரும்.
சத்தியமாய்த் தொடமாட்டேன் என்று
முப்பொழுதும் குற்றங்கள் சமைக்கும்
குரங்கு மனங்களின் பிடிக்குள்
மீளமுடியாத கருகல் பூத்த சாம்பலின் மிச்சமாய்க்
குடும்ப வன்முறைகள்.
விரல்களின் நடுக்கத்தில் உதிர்ந்த உதிரங்களாய்
மிதிபட்ட உறைநிலையில் குரல்வளை நசுங்கிய விடியல்கள்.
குணங்களைச் சிதைத்துக்
குடும்பங்களைக் குலைக்கும்
குடியெனும் மாயப்பிசாசு
ஆடிக்களிக்கும் தாண்டவக் கூத்தில்
சவக்குழிக்குப் பரிவட்டம் கட்டிப்
பல்லக்குத் தூக்குகிறது
சல்லடைப் பொத்தலுக்குள்ளும்
காலூன்றத் தடுமாறும் போத்தல்களின் தாகம்.
அவிழும் ஆடை
உமிழும் உளறலில்
தெறித்து வீழுமிவன் நிர்வாணத்தில் நாணிச் சிவக்கிறது
வயிறு வளர்த்தலுக்காய்க்
கயிறு சுமப்பவளின் வேசைப்பிழைப்பில்
நீந்திவந்து பருப்பு டப்பாவில் முங்கி
மூர்ச்சையிழந்த சில்லறைகளின் வாக்கு மூலங்கள்.
மடியுதித்த கணத்தில்
நல்விதையாய் வந்தவை தாம்
மனம்பிறழ்ந்த கணத்தில்
மக்காக் குப்பைகளாய் நிலத்திற்குச்
சுமையாகிப் போனதன் விந்தை
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கோ…..?!!
                  –அன்பூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *