கவிதை: நகர்தல் நயம் – அன்பூ

கவிதை: நகர்தல் நயம் – அன்பூ



நகர்தல் நயம்

அந்தக் கதவு
நமக்கினி
திறக்கப்போவதில்லை….
அதனுள்ளிருந்து
எத்தகைய வெளிச்சக் கீற்றும்
நம்மை நனைக்கபோவதில்லை…
நம் தலைகோதும்படியான
ஆதூரக் கரங்களெதையும்
அது நீட்டப்போவதில்லை…
நம் தடுமாற்றங்களுக்குப்
பற்றிக்கொள்ளுமாறு
எந்ததொரு வேரும்
கிளை பரப்பப்போவதில்லை..
நீளும் காலத்தின்
பயணங்களினூடே
நெஞ்சைழுத்தும் பாரத்தினை
சற்றே இறக்கிவைத்து
ஆசுவாசம்
பூசிக்கொள்ளும்படியாய்
எந்தச் சுமைதாங்கிக்
கல்லொன்றையும்
அது நமக்கு
சமைத்துவிடப்போவதில்லை…
என்பதையெல்லாம்
வெகு திட்டவட்டமாக
அது நமக்கு
உறுதிப்படுத்திய பின்னே…

அதனுள்ளிருக்கும்
சட்டதிட்டங்களை
வகுத்துப் பெருக்கிக்
கூட்டிக் கழித்துப் பார்த்தலில்…
மிஞ்சப் போவதென்ன…
தங்கப்போவது தான் என்ன…?!

இறுகிச்சமைந்த
ஆகப்பெரும் பாறையை தாகத்திற்காக வேண்டி
தகர்த்துக்
கொண்டிருப்பதைக் காட்டிலும்….

விரிந்து பரந்து கிடக்கும் நிலத்தில்
நகர்தலுக்கு
இன்னும் ஏராளம் இடம் இருக்கிறது
என்ற பதத்தினைக்
கற்றுத் தெளிந்து
கடந்துவிடுதல்
அதி உத்தமம்.

இது சத்தியம்.

– அன்பூ



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *