கவிதை: கைகழுவிய காலம் -அன்பூகைகழுவிய காலம்

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது…

கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும்
நம்ம தோப்புதாம்புன்னு தாத்தா சுட்டியதும்…

வீடு நிறைக்கும் உறவுகளோடு
உள்ளத்து நிறைய உவகை கிட்டியதும்…

மிக நன்றாகவே நினைவிருக்கிறது.

அண்ணன் தம்பி அக்கா தங்கை
அத்தை சித்தி …
பெரியம்மா பெரியப்பாயென
உறவுக்குப் பஞ்சமில்லை.

மாந்தோப்பும் புளியந்தோப்பும்
நெல் விளையும் பூமியோடு…
காயும் கனியுமாய் இறைந்த நிலத்தே விழித்து…

நீருலாவிக் களித்த காலம்
நினைவேட்டில் நீங்கவில்லை.

காலமான தாத்தாவோடு
கண்ணை நிறைத்ததந்த காலமும்…
கண்முன்னே காலத்தோடே காலமாகிப் போனதே.

வீடும் தோப்பும் பங்கு பிரிக்க…

கொட்டிக் கவிழ்த்த நெல்லிக்காய் மூட்டையென…
திசைக்கொருவராய் உருண்டோடினர்
பிழையாகிப் போன சனங்கள்.

என் தாத்தா தோப்புக்குள் வீடு வைத்திருந்தார்…

என் அப்பா வீட்டுக்குள் தோட்டம் வைத்திருந்தார்…

நான் தோப்பையும் தோட்டத்தையும்
சுவற்றிலே மாட்டியிருக்கிறேன்…

நினைவில் தங்கிப்போன
பாட்டன் பூட்டன்களின்
எச்சத்தோடு மிச்சமாய்
நானிருக்க…

கை கழுவிய காலத்தின்
உதிர்தலாய் என் மகன்…

மண்ணோடும்
மனிதத்தோடுமான
ஈரத்தை அகழ்வாய்வு
செய்வானோ…

வரலாற்றின் வரிகளில் கண்ணோட்டுவானோ…
யாமறியேன்.

– அன்பூ