சிறுகதை: அடையாளம் – அன்பூவீட்டுக்குள் நுழைந்ததும் அங்குமிங்குமாக அம்மாவைத் தேடிக்கொண்டே அடுக்களைக்குள் புகுந்தாள் நந்தினி. எதிர்பார்த்தது போலவே அங்கு எதையோ கிளறிக் கொண்டிருந்த அம்மாவைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.

“என்ன ஜானூ…என்ன செய்ற. நான் உனக்கொரு சர்ப்ரைஸ் கொண்டு வந்திருக்கேன். என்னன்னு சொல்லு பாக்கலாம்”.

தன்னை அணைத்துக்கொண்ட வேகத்திலேயே அவள் உடலும் மனமும் எல்லையற்றதொரு மகிழ்வில் திளைத்ததை உணர்ந்த ஜானு… அவள் மகிழ்வில் தானும் பங்கேற்றபடியே…

“என்னாச்சுடாம்மா… இத்தனை சந்தோசமா உன்னை நான் பாத்ததே இல்லையே நந்து…இப்டி உன்னைப் பார்க்கவே எத்தனை அழகா இருக்கு தெரியுமா” என்றாள் ஜானகி.

சட்டென்று இறுகிப் போன முகத்தோடு…அம்மாவைக் கட்டிக் கொண்டிருந்த கைகளை விலக்கிக் கொண்டு “உண்மைதான் ஜானு. நான் இத்தனை வருசமா எந்தக் கணத்துக்காக காத்திருந்தேனோ… அந்தக் கணம் இப்போ இந்தக் கையில”.

“நீ இத்தனை வருசமா காத்திருந்த சந்தோசம்னா…ம்ம்ம்….அப்டின்னா..
அது நிச்சயமா உன் வேலையா மட்டும் தான் இருக்கும். கரெக்ட்டுதானே நந்துமா”

” ரொம்பச் சரி.ரொம்ப ரொம்பச் சரி..
அத்தே தான்” கன்னத்தைக் கிள்ளியெடுத்து உம்மா என்றாள் நந்தினி.

“அப்பாடி…போதுண்டி ராசாத்தி. தவம் போல நீ படிச்சதுக்கும், காத்திருந்ததுக்கும்
புண்ணியமாப் போச்சு.
ஜெயிச்சுட்டடி கண்ணம்மா. ம்ஹும்… என்னை ஜெயிக்க வச்சுட்டே. அதான் உண்மை”.
கைகளால் திருஷ்டி சுத்தி நெட்டி முறித்தாள் ஜானு.

“இல்ல ஜானு. என் இலக்குல ஒரு பாதி மட்டும் தான் நான் தொட்டிருக்கேன். மறுபாதி உன்கிட்ட தான் இருக்கு. நான் எப்பவும் சொல்லிக்கிட்டு இருக்குறது தான். புதுசா ஒன்னும் இல்ல. இது நமக்குள்ள நாம போட்டுக்கிட்ட அக்ரிமெண்ட்டுதானே. நான் என் சவால்ல ஜெயிச்சுட்டேன். இப்போ நீ தான் சொல்லனும்”

” நீ இன்னும் அத மறக்கலியா.
முதல்ல என்ன வேலை..எங்கே ஏதுன்னு விவரம் சொல்லு. கொஞ்ச நாள் முன்னாடி ஆன்லைன் இண்டர்வியூ ஒன்னு அட்டெண்ட் பண்ணியே. அதுவாடா”.

“மறக்கறதா. விளையாடுறியாமா நீ.
அதேதான்.என்னோட ஐ.டி.பீல்டு வொர்க்கு தான். ஹைதராபாத்ல.
ம்ம்…இன்னும் இருபது நாள்ள ஜாயின் பண்ணியாகனும். ம்மா..கொஞ்சம் வேலை இருக்கு. ஒரு மெயில் அனுப்பனும். ராத்திரி டிபனுக்கப்புறமா இதப் பத்தி நம்ம இடத்துல பேசுவோம்..ஓக்கே..”.

இரவு உணவுக்குப் பிறகு எப்போதும் மொட்டைமாடியில் சிறிது நேரம் உலாவுவதும் அளவளாவுவதும் இவர்களின் தினசரி வாடிக்கை.

நந்தினி எதைப் பற்றிப் பேசப் போகிறாளென்பது தெரிந்தது தான் என்றாலும் …ஏனோ திடும்மென்று ஒரு பதட்டமும் பலவீனமுமாக
மனம் இரையத் தொடங்கி இருந்தது
ஜானுவுக்கு.

இதமாய் வருடிக் கொடுக்கும் தென்னை மரத்துக் காற்றை அவர்களுக்காய் மடி நிறைய நிரப்பியபடி காத்துக் கொண்டிருந்தது மொட்டைமாடி.

அவர்கள் இருவருக்குமிடையே வெகு அடர்த்தியானதொரு
மெளனமொன்றும் வலுக்காட்டாயமாக அவர்களைப் பின் தொடர்ந்தே வந்திருந்தது மாடிவரைக்கும். யார் முதலில் அதனைத் துரத்தியடிப்பது என்பதில் இருவருமாய் அந்த விரும்பாத மெளனத்தோடு மன்றாடிக் கொண்டிருப்பதை
இருவருமே உணர்ந்திருந்தார்கள்.

எதைத் தொட்டுத் தொடங்கலாமென்று மொட்டைமாடியைச் சுற்றிலுமாய்
மனதைக் கொஞ்சம் காலார நடக்கவிட்டிருந்தாள் நந்தினி.
அவள் தொடங்கப்போகும் விசயத்துக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதற்காய்
அலைபாய்ந்து கொண்டிருந்த தன் மனதை…ஒரு நிலைப் பாட்டில்
இழுத்து வந்து கட்டியிருந்தாள்
ஜானு.

மணக்க மணக்க குழம்பு வாசமும்… சலசலவென வாயாடுதலுமாக மொட்டைமாடியின் பக்கவாட்டுச் சுவர்… காதையும் கண்ணையும் தன்னாலே அதன் பக்கம் இழுக்க… மெல்ல அதனருகே வந்து கீழே எட்டிப் பார்த்தவளுக்கு பாதி வெளிச்சமும் மீதி இருட்டுமாகப் பக்கத்து வீட்டின் வாசல் பல்லைக் காட்டியது. வாசலின் ஒரு ஓரமாய்க் கிடந்த கயிற்றுக் கட்டிலில் கருத்த உருவமொன்று பெருத்த வயிறோடு தட்டுக்கும் வாய்க்குமாய் வாத்தியம் இசைத்துக் கொண்டிருக்க… பக்கத்திலேயே ஒரு பெண்மணியும் கொஞ்சம் தள்ளி வயதுவந்த பிள்ளைகள் ஆணொன்றும் பெண்ணொன்றுமாக…
சிரிப்பும் பேச்சுமாக அந்த இடத்தின்
கலகலப்பு… இவள் கன்னத்தில் அறைந்தாற் போல பற்றிக் கொண்டு வந்தது நந்தினிக்கு.

” ம்மா…இங்கே வந்து பாரேன்.. உன் அருமைப் புருசனை. பாக்கக் கண்கொள்ளாக் காட்சியா இருக்கு”

“ஏய்..இங்கே வாடி. அது நமக்குத் தேவையா” கிசுகிசுத்தாள் ஜானு.

அந்த இடம் விட்டு மெல்ல நகன்று
மேல்நிலை தண்ணீர்த்தொட்டிக்குப் போட்டிருந்த ஏணிப்படிக்கு லாவகமாக தன் முதுகைக் கொடுத்தவாறே…
“அதத்தானம்மா நானும் வருசக் கணக்காக் கேக்குறேன். இது நமக்குத் தேவையா… விட்டொழிச்சுட்டு வாம்மான்னு. அங்கே போய்ப் பாரு..
மாடிக்கு வந்தா நாம அந்தப் பக்கமே போகமாட்டோம் தான். ஆனா இன்னிக்குப் போய்ப் பாரு.
அப்போதான் உனக்கும் புரியும். பாத்தா மொத்தமாச் செத்துருவ”.

அம்மாவின் அருகே வந்து அவளின் கைவிரல்களுக்குள் தன் விரல்களைச் சேர்த்தணைத்துக் கொண்டாள்.. நந்தினி. அந்த மெல்லிய அழுத்தம் இருவருக்குள்ளும் புதைந்திருந்த புகைச்சல்களை உடைப்பெடுக்கும் பணியை மிக லாவகமாகச் செய்யத் தொடங்க…அதற்கு நேரம் விட்டு நின்றாள் நந்தினி.“ஜானு.. இதப் பத்தி பேசி நாம இன்னிக்கு ஒரு முடிவுக்கு வந்தே ஆகனும். பொண்டாட்டி புள்ளைங்களோட அந்தாளுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. அந்தக் குடும்பம் பத்தாதுன்னு ஊருக்குள்ள ஏகப்பட்ட பொம்பள சகவாசம். நாம எதுக்காக யாருக்காக இப்படியொரு அசிங்கத்துல ஒட்டிக்கிட்டு இருக்கனும். போதும்..எல்லாம் போதும். என் வாயை எதுக்காக இத்தனை நாள் அடைச்சு வச்சே. படிச்சு முடிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போனதுக்கப்புறமா இதப் பத்தி பேசுன்னு சொன்னேல்ல. தோ.. வேலைக்கு ஆர்டர் வந்தாச்சு. இப்போப் பேசும்மா. பேசித்தான் ஆகனும். இந்தக் கணத்துக்காகத் தான் நான் இவ்ளோ காலம் பொருத்திட்ருந்தேன். உன்ன ஏமாத்தி புள்ளயக் குடுத்துட்டான்னு
இவன்ட்ட போயி உன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் அடகு வச்சுட்டியேம்மா”.

“அப்பன் பேரு தெரியாம… அடையாளமில்லாம
நீ போயிடக்கூடாது… ஒதுங்கிக்க எனக்குன்னு ஒரு நிழல் வேணும். இதச் சொல்லித்தான் என்னை இந்த இடத்துக்கு விதி இழுத்துட்டு வந்து நிறுத்திச்சு. என்னைக் கேட்டு எதுவும் நடந்துச்சாயென்ன. நான் பண்ணின ஒரே தப்பு இவன்கிட்ட ஏமாந்து போனது மட்டும் தான். பொறந்ததுலேர்ந்து எது கிடைக்காம நான் தவிச்சேனோ அந்த அன்பைக் காட்டில்ல இவன் என்னை ஏமாத்தினான். வாழ்க்கையிலேயே முதன்முதலா எம்மேல கரிசனமும் அக்கறையுமாப் பேசின ஒருத்தன சந்திக்கிறப்போ… அந்த நேரத்துல… அந்தக் கருமமெல்லாம் போலியா அசலான்னு சிந்திக்கிற நிலைமையிலயா நான் இருந்தேன்”
நெஞ்சு நிரம்பி தொண்டைக் குழிக்குள் முட்டிக்கொண்டிருந்த அழுகை சட்டென்று எட்டிப்பார்க்க… மகளின் மடியில் முகம் புதைத்துக் கொண்டு விம்மத் தொடங்கினாள் ஜானு. குலுங்கும் அவளின் முதுகுக்கு ஆதூரமாய்த் தன் கைகளை ஓட்டியபடி மெளனத்துக்குள் ஒடுங்கினாள் நந்தினி.

இரவின் இருளும் அமைதியும் மட்டுமே இவர்களைச் சுற்றி உறவாடிக் கிடந்தது. அவற்றின் தனிமையைத் தட்டிப் பறிக்க மனமில்லாது சிறிது நேரம் அப்படியே கழித்துவிட்டு மடியில் கிடந்த அம்மாவோடு சேர்ந்து அவளும் அப்படியே தரை தாழ்ந்து கால் நீட்டி மல்லாந்து படுத்துக் கொண்டு மேலே பார்க்க… வைத்த கண் வாங்காமல் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது நிலா.
பக்கத்தில் ஜானுவும் இப்போது விசும்பல் நிறுத்தி நிலா பார்க்கிறாள். பார்த்துக்கொண்டே இருக்கிறாள். பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். எட்ட நின்று இவர்களின் கதையை இது நாள் வரைக்கும் கேட்டுக் கேட்டுச் சலித்த நிலா… இப்போது இவர்களைப் பார்த்து இவர்களின் கதையை இவர்களுக்கே சொல்லத் தொடங்குகிறது.

நந்துவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இதோ கீழே பக்கத்து வீட்டில் குடும்பமாய் உட்கார்ந்து கூடிக் களித்துக்கொண்டிருக்கிறானே இவள் பிறக்கக் காரணமானவன்.. அவனோடு இவள் பேசியதுமில்லை. நேருக்கு நேராய் நின்று அந்த முகத்தைப் பார்த்ததுமில்லை.

தன் முதல் திருமணத்தை மறைத்து
ஜானுவைத் திருமணம் செய்து கொள்வதாய் ஏமாற்றி வயிற்றில் இவளைக் கொடுத்துவிட்டு
தப்பிக்க நினைத்தவன் தான் இவன். தாய் தகப்பன் இல்லாது தாய்மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து கல்லூரி முடித்து தனியார் பள்ளியொன்றில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த ஜானுவைத் துரத்தித் துரத்தி வீழ்த்தியவன். வயிற்றுச் சுமையோடு நின்றவளை.. எப்படிக் கரைசேர்ப்பது.. இன்னும் எத்தனை நாளைக்கு இவளைத் தான் பராமரிக்க முடியுமென்று மருகித் தவித்து நான்கு பெரிய மனிதர்களை அழைத்துக் கொண்டு மாமா நியாயம் கேட்கப் போக… அது காவல் நிலையம் வரைக்கும் போய்க் கதவைத் தட்ட… அதன் இறுதிக்கட்ட விளைவாக.. சூழ்நிலைக் கைதியாகி வேண்டா வெறுப்பாக இவள் கழுத்தில் தாலியைக் கட்டி வீட்டிற்கு அழைத்து வந்தவன் தான் இவன். வாய்பேசத் தெரியாத… ஏனென்று கேட்க ஆளில்லாத சிறுக்கி… வெளியில் தெரியாமல் அப்படியே காணாமல் போயிடுவாளென்று நினைத்தது இப்போ தாலி கட்டுகிற வரைக்கும் வந்துவிட்டதே நிலைமையென்று ஜானு மீது தீராத கோபம் அவனுக்கு.

இவளின் வருகையில்… இரண்டு குழந்தைகளோடிருந்த முதல் மனைவி அவளின் பிறந்த சனத்தைக் கூட்டி …இருந்த சொத்துக்களையெல்லாம்
தன் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டு…அவளளவில் அவள் சுதாரித்துக் கொண்டாள்.

அடுத்தடுத்து இரட்டை வீடாய் இருந்த சொந்த வீட்டின் ஒரு பக்கமாக… உயிரோடு இருக்கும் காலம் வரைக்கும் ஜானு இருந்து விட்டுப் போகட்டும். அதுதான் தாங்கள் செய்ய முடியுமென்று ரொம்பவும் நியாயமாக தீர்ப்பு வழங்கப்பட்டது… முதல் தாரத்தின் பக்கமிருந்து.

அண்டிக்கொள்ள பாதுகாப்பாக நான்கு சுவரும்… தன் பிள்ளைக்கு அப்பா என்ற அடையாளமும் தனக்குக் கிடைத்ததுவே அப்போதைய தன் நிலைமைக்கு ஆகப் பெரிய விசயமாகத் தான் இருந்தது ஜானுவுக்கு.

” எனக்கு வேற வழி தெரியல தாயி. உனக்கும் இதை விட்டா வேற வழியில்லை. இருக்க இடம் இருக்கு.
ஆகாத பயதான்னாலும் பக்கத்துல இருக்கான். நாளப்பின்ன உனக்கு ஊணிக்கிறதுக்கு உம்புள்ளெ இருக்கு. மனச வுட்ராத தாயி. உனக்குன்னு நான் எப்பவும்
தூணாட்டம் பக்கத்துல தான் இருக்கேன். பத்திரமா இரு” என்று சொல்லி விட்டுச்சென்ற தாய்மாமனின் துணையோடு பிள்ளைப்பேறு முடித்து… தான் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த… தனியார் பள்ளி வேலையை மீண்டும் தொடரலானாள் ஜானு. எஞ்சிய நேரங்களிலெல்லாம் தையல் மிசினோடு தன்னைப் புதைத்துக் கொண்டு அதில் முழுவதுமாய்த் தன்னைத் தொலைக்கக் கற்றுக்கொண்டாள். இந்த வருமானங்களே…எவரையும் எதிர்பார்க்காது பிழைத்துக் கிடப்பதற்கும் நந்தினியைப் படிக்க வைப்பதற்கும் அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

இவளைக் கழற்றிவிட முடியாத நிலையில் எதிர்பாராமல் தாலிகட்ட நேர்ந்ததில் ஆரம்பத்திலிருந்தே இவள்மீது எரிச்சலும் வெறுப்பும், பிள்ளையின் மீது கூட உறவோ ஒட்டுதலோ அணுசரனையோ இல்லாத இவனின் இந்தப் பற்றுதலின்மையே இவனை எதற்கும் எதிர்பார்க்காமல்
வாழப் பழகிக் கொள்வதற்கு காலம் நிறையவே சொல்லிக் கொடுத்திருந்தது ஜானுவுக்கு.

பக்கத்துவீட்டுக் குடும்பம் இவர்கள் நின்ற இடத்தில் நிற்காது. அத்தனை வன்மம் இவர்கள் மீது. அந்த வீட்டில் எவரும் இல்லாதபோது இந்த வீட்டுக்குள் நுழைந்து அவனாக எதையாவது எடுத்துப் போட்டு தின்றுவிட்டுப் போவான். எப்பொழுதும் ஜானுவையும் நந்தினியையும் ஒருவித விரைப்பும் முறைப்புமாகத் தான் கடந்து செல்வான்.

இந்தச் சூழலும் வீடும்…வளர வளர அறவே பிடிக்காமல் போனது நந்தினிக்கு. இங்கிருந்து போய்விடலாமென்று எத்தனையோ முறை அம்மாவிடம் வெடித்திருக்கிறாள்.

ஜானுவும் கூட வீட்டில் செருப்பு மாட்டினால் பள்ளியும், பள்ளியில் மணியடித்தால் வீடுமாக தனக்குள்ளேயே சுருங்கிப் போனாள்.யாரிடமாவது நெருங்கிப் பேசவும் பழகவுமே பயமாயிருந்தது. எங்கே தன்னைப் பற்றி…தன் குடும்பம் பற்றி எதையேனும் கேட்டு வைத்து… அடுத்தவள் புருசனைக் கட்டிக்கொண்டவள் தானேயென்று
நகைக்கக் கூடுமென உள்ளொடுங்கிக் கூசிப்போவாள். அப்படியான இடக்குகளை அக்கம்பக்கத்திலும் பள்ளியிலுமாக நிறையவே சந்தித்திருக்கிறாள். இதே பிரச்சினை தான் நந்தினிக்கும். ஒன்றாம் வகுப்பிலேயே… உனக்குத் தனியா அப்பா இல்லியாமே…உங்க பக்கத்து வீட்டு சோமுவோட அப்பாதான் உனக்கும் அப்பாவாமே… என்ற கேள்விக்குப் பிறகு … அழுது அடம்பிடித்து பள்ளியை மாற்றிக்கொண்டு.. அங்கே கொத்தித் தின்ற அப்பன் யாரென்ற கேள்விகளுக்கு அப்போதைக்கு வாய்க்கு வந்ததைச் சொல்லி அந்த அப்பனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாள் அவனுக்கே தெரியாமல்.

இந்தச் சூழலிலிருந்து விடுபடவோ இந்த அவமானங்களை துடைத்தெறியவோ வேண்டுமெனில், நீ உன் காலில் எப்போது நிற்கிறாயோ அப்போது தான் இதுவெல்லாம் சாத்தியப்படும் என்று சமாதானப்படுத்தியே இவளை வளர்த்து முடித்திருந்தாள் ஜானு.இது தன் வீடில்லை..இவன் தன் அப்பா இல்லை என்று ஆழப் பதிந்துகொண்ட நந்தினி… அதிலிருந்து மிகத் தீவிரமாகத் தன் கவனத்தைப் படிப்பில் கொண்டு செலுத்தலானாள். படிப்பொன்றே தன் மிகப்பெரிய ஆயுதம் என்பதை மிகத் தெளிவாகக் கண்டுகொண்டாள்.

படிக்க வேண்டும்… நல்ல வேலை தேடிக் கொள்ள வேண்டும்… தன் சொந்தக் காலில் அம்மாவும் தானும் தனித்து இயங்க வேண்டும். அடுத்தவள் புருசனை மயக்கிக் கட்டிக்கொண்டவள்… பக்கத்துவீட்டு அப்பாவிற்குப் பிறந்தவள் என்ற இந்த அருவருப்பான தங்களின் அடையாளத்தையும் சூழலையும் அறுத்தெறிந்து விடவேண்டும் என்பதொன்றே நந்துவின் முழுநேரப் பிரார்த்தனையாக இருந்தது.

குழந்தைத்தனம் தொலைந்து போவதற்கு முன்பாகவே ஒரு குழந்தையைச் சுமந்து அவலத்திற்கு வாழ்க்கைப்பட்ட அம்மாவுக்கு… அச்சமும் அடிமைத்தனமுமே மிச்சமாகிப்போன நாட்களை மட்டுமே நுகர்ந்தவளுக்கு..
அவளின் பால்யத்தில் அவள் தொலைத்த அத்தனை விருப்பங்களையும் ,கற்றுக்கொள்ள ஏங்கின அத்தனை விசயங்களையும் தோண்டியெடுத்து அவளுக்கே அவளுக்கான ஒரு மறு உலகத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். காலம் அவள் மீது வலுக்கட்டாயமாக திணித்திருக்கும் இப்படியானதொரு அசிங்கத்தைத் துடைத்தெறிந்து விட்டு.. அழகானதொரு அடையாளத்தை அவளுக்குச் சூடிப் பார்க்க வேண்டும். இவர்களின் கண்ணீரைச் சுமந்து சுமந்து உப்புப் பூத்து இறுகிக் கிடக்கும் இந்த மொட்டைமாடி அல்லாது … நட்சத்திரங்கள் பூத்துக்கிடக்கும் வேறொரு மொட்டை மாடியையும் அவளுக்குப் பரிசளிக்க வேண்டுமென்ற தீராத் தாகத்திற்கு நெருப்பை ஊற்றிக்கொண்டே தான் வளர்ந்திருந்தாள் நந்தினி.

மொட்டைமாடியில் படுத்துக் கொண்டு தன் வீட்டுக் கதையில் நிலாவோடு உலா வந்து கொண்டிருந்தவளின் கன்னம் தொட்டுப் போன ஊதற்காற்றின் உரசுதலில் சிந்தனை தடைப்பட்ட நந்தினி முகம் திருப்பி அம்மாவைப் பார்க்கிறாள்.

நிலாவைப் பார்த்துக் கிடந்த அம்மா இப்போது இவள் பக்கமாய் திரும்பி
இவளை அணைத்தவாறு கண்மூடிக் கிடந்தாள்.

” ஜானு… தூங்கிட்டியா”

” ம்ம்..இல்லை. பழசெல்லாம் வந்து வந்து மனசைப் பிசையும் போது எங்கிட்டுடா தூங்குறது”.

“எனக்கும் தான். அந்தப் பழசுல உனக்குப் பிடிச்சதா ஏதாச்சும் ஒன்னு இருந்தா சொல்லேன் ஜானு”.

“ம்ஹும்..அப்டியெதுவுமே இல்லங்கிறது தான் உண்மை.
கண்ணுக்குத் தெரியாத ஏதோவொன்னு என்னை இழுத்துக்கிட்டுப் போவுது. நானும் போய்க்கிட்டு இருக்கேன். எனக்குப் புடிச்சது புடிக்காததுங்கிற புள்ளிய நான் இதுவரைக்கும் தொட்டதேயில்ல”.

“உனக்கு என்ன வேணும்… என்ன வேணாம்னாச்சும் யோசிச்சுருக்கியாம்மா. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இல்ல”.

” வேணும் வேணாம்னு முடிவு பண்ணுற எடத்துல நான் இருந்ததேயில்லயே”.

“இதுவரைக்கும் இல்ல…
இனிமே… யோசிப்போமே. நமக்கு என்ன வேணும் என்ன வேண்டாம்னு நம்ம ரெண்டு பேருமே யோசிக்கிற நேரத்துக்கு இப்பத்தான் காலம் நம்மளக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. கடந்து போன காலம் நிறைய தன்னம்பிக்கையக் கொடுத்துருக்கு. மனசு திடமாகியிருக்கு. நம்ம இனி போகப்போற பாதை எதுன்னு இப்போ ரொம்பத் தெளிவாத் தெரியுது. நமக்கு என்னெல்லாம் வேண்டாங்கிறதுல தெளிவாயிட்டோம்னா… எதெல்லாம் வேணுங்குறது பளிச்சுன்னு தெரியும்.
இப்போ…நான் கேக்குறதுக்கு நல்லா நிதானமா யோசிச்சு பதில் சொல்லு ஜானு. நமக்கு அந்தாளு தேவையா..
அவரில்லேன்னா நமக்கு எந்த விதத்திலாவது பாதிப்பு இருக்கா”.

“ம்க்கும்…இதுல யோசிக்க என்ன இருக்கு. என் சம்பாத்தியத்துல தான் நாம வாழறோம். நம்முடைய எந்த தேவைகளுக்கும் அந்தாளு வந்து நின்னதில்ல. சொல்லப் போனா நீ என்ன படிச்சே… என்ன செய்யறேன்னு கூட தெரியாது.
அந்தாளும் நம்மள அவுரு குடும்பம்னு வெளில சொல்லிக்கிட்டதும் கிடையாது.
அந்தாளு எனக்குப் புருசன்னும் உனக்கு அப்பான்னும் தெரிஞ்சுபோன இடத்துல எல்லாம் நாம அவமானப்பட்டு கூனிக் குறுகி நின்னதுதான் மிச்சம். ஏதோ நாந்தான் இன்னொருத்தி புருசனை வளைச்சுப் போட்டுக்கிட்டா மாதிரி ஒரு எள்ளல்.. நக்கல். கல்யாணம் ஆனவன்னு கூட தெரியாமயா புள்ளய வாங்கிக்கிட்டேங்கிற அந்த ஒத்தக் கேள்வியில செத்துப் போகுது மனசும் உடம்பும்”.

“ம்மா..ஒரு பறவை நம்ம தலைக்கு மேல பறக்குறதை நம்மாள தடுக்க முடியாது. ஆனா அதே பறவை நம்ம தலையில கூடு கட்டி குடும்பம் நடத்தி குஞ்சு பொறிக்கிறதை நம்மாள தடுக்க முடியும்னு எங்கியோ எப்பவோ படிச்சது நினைவுக்கு வருது. யாரோ ஒருத்தர் சிந்துற சிந்தனைக்கு நாம பலியானது போதும். அச்சப்பட்ட சூழ்நிலையில பாதுகாப்பா இருக்குறதவிட பயமில்லாத சுதந்திரம் மேல் இல்லியா.போனது போகட்டும். இனிமே நாம யாரு.. என்ன செய்யனும்கிறத நாம முடிவெடுப்போம். நாம நமக்கு எந்த பிம்பம் கொடுக்கிறோமோ அதுதான் உலகம் எடுத்துக்கும். நமக்குப் பிடிச்சதைச் செய்யுறதுங்கறத விட பிடிக்காததச் செய்யாம இருப்போம். நாம ரெண்டு பேரும் ஹைதராபாத் போறோம். பிரைவேட் ஸ்கூல்ல உனக்கு வேலை வாங்கிக்கிறது ஒன்னும் சிரமமில்ல.
இனி நாம எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையையும் ரொம்ப நிதானமா எடுத்து வைப்போம். விடாம நாம போர்த்திக்கிட்டு இருக்குற இந்த அசிங்கத்தையும் அவமானத்தையும் தலையச் சுத்தித் தூக்கிப் போட்டுருவோம்.புதுசா நமக்கே நமக்குன்னு ஒரு உலகம்
நம்மள வரவேற்கக் காத்துக்கிட்டு இருக்க. நாமளும் இனி புதுசாப் பொறப்போம். சரிதானே ஜானு”.

“எல்லாம் சரிதான் நந்து. நீ சொல்றது எல்லாமே கரெக்ட்டு தான். ஆனா கல்யாண வயசுல நிக்குற உனக்கு நாளப்பின்ன அப்பா எங்கேன்னு கேக்குற உலகத்துக்கு… நான் என்ன பதில் சொல்ல”.

வெடித்துச் சிரிக்கிறாள் நந்தினி.

“ம்மா…நடந்து முடிஞ்ச சம்பவங்களுக்கே இப்பத்தான் நமக்கு தீர்வு கிடைச்சுருக்கு. நீ என்னடான்னா நடக்காததெல்லாம் இழுத்து வந்து மேலமேல கழுத்துல மாட்டிக்கிறேன்ரியே.
ஜானூத் தங்கம்… நல்லாத் தெளிவாக் கேட்டுக்கோ. நமக்கே நமக்குன்னு ஒரு செல்ப் ரெஸ்பெக்ட் இருக்கு. அதிகாரமா ஆங்காரமா அதக் கீழபோட்டு மிதிச்சுட்டு மீசைய முறுக்கி சிரிச்சுக்கிட்டு நிக்கிற அசிங்கமான ஒரு அடையாளம் நமக்குத் தேவையேயில்ல. மனசுல கருத்துத் தெளிவோட நம்மள நாம முதல்ல மதிக்கனும். நமக்குன்னு தனி அடையாளத்தை நமக்கு நாமதான் உருவாக்கிக்கனும். இனிமே நாம எதிர்கொள்ளப் போற புது உலகத்துக்குள்ள…
நீயும் நானும் மட்டும் தான்”.“புது இடம். புது மனுசங்க. புது சூழ்நிலை. உன்னப் பத்தி தான் எனக்குக் கவலை. சமாளிச்சுடுவோமா நாம”.

“ம்மா. எதையும் எதிர்கொள்ளுற பக்குவத்தையும் நிதானத்தையும்
நம்மளக் கடந்து போன வாழ்க்கைக்கிட்டேருந்து நிறையவே சம்பாதிச்சு வச்சுருக்கோம். இனிமே கூட நமக்கு எல்லாமே வெற்றிதான்னு நான் சொல்ல
வரல. ஆனா…தோல்வியே மேல வந்து விழுந்து கடிச்சாலும் கடிச்ச இடத்துலயே விழுந்து கிடக்காம… எழுந்து நடக்கத் தெரியும். கல்லெடுத்து எறிஞ்சா தான் அது ஓடும்னா எறியவும் தெரியும். இது போதும் எதையும் எதிர்கொள்ள”.

” எங்கிருந்து உனக்கு இத்தனை
நிதானமும் தெளிவும் வந்ததுடா என் செல்லமே”.

ஜானுவைத் தோளோடு சேர்த்து அணைத்தவாறு முகத்தோடு முகமுரசி…”எல்லாமே இதோ…இங்கிருந்து தான் தங்கமே”
என்று இடுப்பைக் கட்டிக்கொண்டு
அப்படியே சுற்றத் தொடங்கினாள்.
நாலைந்து சுற்று சுற்றியதிலேயே
தலை கிர்ரென்றது இருவருக்கும்.
சிறு தடுமாற்றத்தோடு தரையில் காலூன்றி நிற்க எத்தனிக்கையில்
நந்தினியின் கையோடு மாட்டிக்கொண்டிருந்த ஜானுவின் கழுத்துச் சங்கிலி அறுந்து அதிலிருந்த தாலி மட்டும் தெறித்து விழுந்தது. சங்கிலி மட்டும் அறுந்த நிலையில் கழுத்தோடு தனித்துத் தொங்கிக் கொண்டிருந்தது.

பார்த்த கணத்தில் இருவரும் ஒரு நிமிடம் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றனர்.

வெகு நிதானமாய்… எந்தச் சலனமுமின்றி வாயுதிர்த்தாள் ஜானு.

“என்னை மீறி எப்படி வந்துச்சோ…அப்படியே போயிடுச்சு. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் மிக நன்றாகவே நடக்கும்”.