அறிவியலாற்றுப்படை 11: ஆதிகால மனிதனின் கட்டிட பணிக்கு சுட்டகல் வேண்டுமா? சுடாத கல் வேண்டுமா? (Ancient Brick For Construction)

அறிவியலாற்றுப்படை 11: சுட்டகல் வேண்டுமா? சுடாத கல் வேண்டுமா? – முனைவர் என்.மாதவன்

சுட்டகல் வேண்டுமா? சுடாத கல் வேண்டுமா?

அறிவியலாற்றுப்படை

பாகம் 11

முதலில் பாபெல் கோபுரம் பற்றிய கதை. இது மிகவும் கற்பனை கலந்த சுவாரஸ்யமான கதை.. இதுவும் இது பாபிலோன் நகரோடு தொடர்புடையது. நாம் அடுத்து காணப்போகும் சுமேரிய நாகரீகத்தின் பின்பகுதியில் உருவாகப்போகும் நகரமிது. ஒரு பெருமழைக்குப் பின்னர் ஷினார் என்ற நகரிலிருந்த மக்கள் அவர்களின் நகரின் பெயர் விளங்க என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். யாரோ அப்போதிருந்த அறிவாளி நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு உயரமான கோபுரம் கட்டுங்கள் உங்கள் பெயர் விளங்கும் என்று யோசனை கூறினார். உடனே அந்த மக்கள் உற்சாகமடைந்தனர். அனைவரும் ஒன்றுகூடித் திட்டமிட்டனர். எந்த செயலானாலும் மக்கள் பங்கேற்பில்லாமல் எப்படி நடக்கும். மக்களும் உழைப்பும்தான் என்றைக்கும் மாறாதது. அதுதானே அனைத்து முன்னேற்றத்திற்கும் அடிப்படை.

அவர்கள் விண்ணுலகை எட்டும் உயரத்திற்கு ஒரு கோபுரத்தைக் கட்ட முடிவுசெய்கின்றனர். இதன் மூலம் விண்ணுலகிலுள்ள கடவுளை நேரடியாக சந்தித்து வேண்டியதைக் கேட்போம் என்பது அவர்களின் ஆவல். அப்போது அவர்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசிக்கொண்டிருந்தார்கள். இதனால் எளிதில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடிந்தது. பணிகளும் மளமளவென நடந்தது. இவர்கள் கோபுரத்தைக் கட்டிமுடித்துவிட்டு ஏதாவது வரம் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று கடவுள் குழம்பினாராம். உடனே அவர்கள் வெவ்வேறு மொழிகள் பேசிக்கொள்வோராக மாற்றிவிட்டார். இப்போது அவர்களுக்கிடையே தகவல் தொடர்பு குறைந்தது. இதனால் ஒற்றுமையும் குறைந்தது. கோபுரத்தின் பணி பாதியிலேயே நின்றுபோனது. இப்படித்தான் உலகில் பல்வேறு மொழிகள் பிறந்தது என்று சுவாரஸ்யமான கதை ஒன்றுண்டு. ஆனால் மொழிகள் பிறந்த வரலாறு அருமையானது. பின்னால் அதனைப்பற்றியும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

நாம் இதுவரை விவாதித்துவந்ததில் அடுத்தபடியாக வரவேண்டியது மொழியும் எழுத்தும்தான். எழுத்தின் உருவாக்கத்தைப் பொறுத்தும் சுவையான கருதுகோள்கள் உண்டு. வெந்ததைத் தின்று வீணாய் குகைகளில் நேரம் போக்கிய மனிதர்கள் சும்மாயிருக்கவில்லை. தாங்கள் கண்ட மிருகங்கள், சூரியன், சந்திரன், என பலவற்றையும் கையில் கிடைத்ததைக் கொண்டு வரைந்து தள்ளினர். பின்னர் இலை தழைகளின் சாறுகளையும் பயன்படுத்தி வண்ணமடித்ததாக வரலாற்றுக்குறிப்புகள் உள்ளன. இப்படி சித்திரங்களை அடிப்படையாக வைத்தே பின்னாளில் வரிவடிவங்கள் வந்ததாகவும் ஆய்வுகள் பல உள்ளன. மொழியும்,எழுத்தும் மனிதர்களின் மனிதர்களாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்துவருகின்றன. இவை இரண்டையும் பற்றியும் கூடுதலாகப் பின்னர் பார்க்கலாம்.

மீண்டும் நாகரீகத்திற்கு வருவோம். மனிதர்கள் நாகரீகமடையவேண்டுமானால் அவனுக்கு உழைப்போடு ஓய்வும் உறுதிசெய்யப்பட்டிருக்கவேண்டும். அந்த ஓய்வை உறுதி செய்ததில் உறைவிடத்திற்கு பங்குண்டு. உறைவிடங்கள் வலுவானதாக மாறுவது அதன் அடிப்படை. அறிவியல் அதனை உறுதிப்படுத்த அனுபவங்களை அளித்து செழுமைப்படுத்தியது. அதனைக் கொஞ்சம் பகிர்ந்து இந்த பகுதியை முடிப்போம். இதுவும் அனுமானத்தின் அடிப்படையிலானாது. ஆனால் அறிவியல் பூர்வமான அனுமானம்.

Introductory Chapter: Bricks between the Historical Usage and Sustainable Building Concept | IntechOpen

இன்றைக்கிருக்கும் வசதியான வீடு போன்ற இருப்பிடங்கள் மனிதர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் அமைந்துவிடவில்லை. குகைகளிலும் மலைகளிலும் வாழ்ந்த காலங்களைவிட சமவெளியில் வாழ்ந்தபோது வீடுகளைக் கட்டுவதற்கான கற்பனைகள் தோன்றின. ஏற்கனவே பார்த்தது போல கூரைகளை வேய ஓலைகளும் இலைதழைகளும் உதவியிருக்கும். ஆனால் செங்கற்கள்? செங்கற்களும் சுட்ட செங்கற்களும் எவ்வாறு கிடைக்கப்பெற்றன என்பது குறித்து கொஞ்சம் யோசிப்போம். யார் கண்டது இப்படி நடந்திருக்கக் கூடாத என்ன?

காட்டாறாக வெள்ளம் ஓடிய இடங்கள் நமக்கு சரிப்பட்டுவராது என மேட்டுப்பான பகுதிகளுக்கு ஓடினான். பின்னர் காட்டாற்றுவெள்ளம் தணிந்தபின்னர் கோடைக் காலம் வந்திருக்கலாம். ஆற்றின் ஓரக்கரைகளில் ஆறு அறுத்து அடித்துச்சென்ற இடங்களில் பாறைகள் போன்று செங்குத்தாக வண்டல் மண் கெட்டிப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆஹா மண்ணைக் காயவைத்தால் கெட்டியான பாறை போன்ற அமைப்பு கிடைக்கிறதே என மண்ணைக் குழைந்து செங்கற்கள் போன்ற அமைப்பாக மாற்றத் தொடங்கியிருக்கலாம். இது போன்ற அமைப்பைவைத்து வீடுகளைக் கட்டிக்கொண்டு ஆஹா வந்தது வாழ்வு என்று வாழ்ந்துகொண்டிருந்த நேரத்தில் மழைவந்து குடிசைகளைக் கரைத்திருக்கலாம்..

வேறு ஒரு நேரம் இவ்வாறான கெட்டியான மண்ணாலான கட்டிகள் இருந்த இடத்தில் வளர்ந்த கோரைகள் மற்றும் சிறுசெடிகள் காய்ந்த செடிகளில் தீ பிடித்திருக்கலாம். இந்த தீயானது மண் கட்டிகளை மேலும் கடினமானதாக்கியதைக் கவனித்திருக்கலாம். இது கூட சுட்ட செங்கற்களின் கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச் சென்றிருக்கலாம்.

இதே நேரம் கற்களோடு மண்கட்டிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்போது அவற்றின் கெட்டித்தன்மை கூடியிருப்பதைக் கவனித்திருக்கலாம். சுண்ணாம்பு போன்ற கலவைகளில் கெட்டித்தன்மை கூடியிருப்பதைக் கவனித்திருக்கலாம். இதனை வைத்து காரை பூசுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். யார் கண்டது மனிதர்களை அந்த நாளில் சுட்ட கல் வேண்டுமா? சுடாத கல் வேண்டுமா? என்று கூட யாராவது ஒரு செங்கல் உற்பத்தியாளர் கேட்டிருக்கலாம்தானே.

The History of Bricks and Brickmaking

சக்கரத்தின் கண்டுபிடிப்பு நகர்வதற்கு உதவியதோடு தண்ணீர் இறைக்கும் இராட்டினம், மண்பானை செய்தல் போன்ற பல புதுமைகளுக்கு இட்டுச்சென்றிருக்கலாம். இவை அனைத்தும் நடைபெற பல்லாண்டுகள் பிடித்திருக்கும். இருப்பினும் இந்த கண்டுபிடிப்புகள் அந்த நாட்களில் பெரிய கண்டுபிடிப்புகள். இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளால் மனிதர்களின் வாழ்வு நாகரீகமானது உலகின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்றுள்ளது.

இந்த ஆயிரக்கணகான ஆண்டுகளில் நடைபெற்றுவந்த தகவல்களை எழுத்துவடிவமாக எழுதும் கலாச்சாரம் வளர நீண்ட காலம் பிடித்தது. இவ்வாறு எழுதியபின்னரும் அவை அப்படியே பாதுகாக்கும் வாய்ப்பும் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கடல்கோள், பெருவெள்ளம், பூகம்பம், அயல்நாட்டவர்களின் படையெடுப்பு போன்ற பல்வேறு காரணிகள் இந்த நில அமைப்புகளை பாதிப்புக்குள்ளாக்கின. இதனால் இவ்வாறு வளர்ந்துவந்த நாகரீகங்கள் அழிந்திருக்கலாம். தோல்வி பற்றி ஒரு கருத்து சொல்வதுண்டு. தோல்விக்குப் பிறகு மீண்டும் துவங்கத் தயங்காதீர்கள் எனென்றால் நீங்கள் புதிய துவக்கத்தை பழைய அனுபவத்தைக் கொண்டே அனுகப்போகிறீர்கள் என்பார்கள். அந்த வகையில் இப்படிப்பட்ட பேரழிவுகளுக்குப் பின்னர் எஞ்சியிருந்தோர் அன்றைய தேதியில் தாம் பெற்றிருந்த அனுபவத்தைக் கடத்தத் தயங்கவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக ஆற்றங்கரைகளில் பல்வேறு நாகரீகங்கள் மலரத் தொடங்கின. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்குவோம்.

படை எடுப்போம்.

கட்டுரையாளர்:

தொடர் 1: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai): உலகில் வேறு எதையும் விட அறிவியல் மனிதர்களின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. N. Madhavan (என். மாதவன்)

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்

முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 10 : நாகரீகங்களின் தொடக்கம் (Beginning of civilizations)– முனைவர் என்.மாதவன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *