செவ்வாய்க் கிரகத்தில் கடற்கரை (Ancient Earth-like beach discovered on Mars) | Yercaud Elango - தியான்வென் -1 (Tianwen -1)

செவ்வாய்க் கிரகத்தில் கடற்கரை

செவ்வாய்க் கிரகத்தில் கடற்கரை

– ஏற்காடு இளங்கோ

செவ்வாய்க் கிரகம் ஒரு குளிர்ச்சியான, தூசி நிறைந்த, வறண்ட பாலைவனமாகக் காட்சி அளிக்கிறது. ஆனால் இது சுமார் 350 முதல் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடர்த்தியான வளிமண்டலத்தையும், வெப்பமான காலநிலையையும் கொண்டிருந்தது. அப்போது செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்தது. ஆறுகள், ஏரிகள் இருந்ததற்கான சுவடுகளும் உள்ளன. ஆனால் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஏதோ நடந்தது. இதனால் பெரும்பாலான திரவ நீர் ஆவியாகி விட்டது.

தற்போது செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் இருந்து பார்க்கும்போது வியத்தகு வறண்ட பள்ளத்தாக்குகள் மற்றும் நதி கால்வாய்கள் காணப்படுகின்றன. அதே சமயத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பான பண்டையக் கனிமப் பொருட்கள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கனிமப் பொருட்கள் திரவ நீரில் மட்டுமே உருவாகக்கூடியவை. ஆகவே பண்டைய காலத்தில் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்தது என்பதற்கு இது முக்கிய சான்றாகும்.

தண்ணீர்

அண்மைக் காலத்தில் நடந்த ஆய்வில் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நீர் உடைந்த பாறைகளுக்குள் தேங்கி நிற்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கிரகத்தின் வெளிப்புற மேல் ஓட்டில் (Crust) இருக்கும் பாறைகளின் ஆழத்தில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது 10 முதல் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கிறது. மேலும் துருவப் பகுதியில் நீர் உறைந்து பனிக்கட்டிகளாக உள்ளது.

கடல்
Ancient Oceans on Mars May Have Been Older and Shallower Than Thought | Space
                                                                            பண்டைய கடல்

சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூரோங் ரோவர் (Zhurong Rover) சுமார் 350 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரையைக் கண்டுபிடித்துள்ளது. இது பூமியைப் போன்ற பண்டைய கடற்கரை ஆகும். இது மேற்பரப்பிற்கு அடியில் புதைந்துள்ளது. இதன் மூலம் செவ்வாய்க் கிரகத்தில் பண்டைய கடல் இருந்தது என உறுதி செய்யப்படுகிறது.

தியான்வென்

செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக தியான்வென் -1 (Tianwen -1) என்ற விண்கலத்தை 2020 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று சீனா அனுப்பியது. தியான்வென் என்றால் “சொர்க்கத்திற்கான கேள்விகள் அல்லது வானங்களை கேள்வி கேட்பது” என்று பொருள். இது லாங் மார்ச் -5 (Long March) எனப்படும் கனரக தூக்கும் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இந்த விண்கலம் ஜூரோங் என்ற ரோவரை எடுத்துச் சென்றது.

தியன்வென்-1 - தமிழ் விக்கிப்பீடியா
                         தியான்வென்

இந்த விண்கலம் 202 நாட்கள் பயணத்திற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 அன்று, செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது. இது செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் தன்னை இணைத்துக் கொண்டது. அதன் பிறகு அது செவ்வாய்க் கிரகத்தை பலமுறை சுற்றி வந்தது. அது செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கும் தளங்களை ஆய்வு செய்தது. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு மே 14 அன்று லேண்டர் விண்கலத்திலிருந்து பிரிந்தது.

லேண்டர் சுமார் 9 நிமிடத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட உட்டோபியா பிளானிட்டியா (Utopia Planitia) என்ற இடத்தில் தரை இறங்கியது. இது மென்மையான தரையிறக்கம் (Soft landing) என்ற முறையைப் பின்பற்றியது. இது சீனாவின் முதல் செவ்வாய்க் கிரகப் பயணமாகும். எந்தவொரு நாடும் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்திற்கு ஒரு ஆர்பிட்டர் மற்றும் ரோவரை அனுப்பியது கிடையாது. ஆனால் சீனா இந்த இரண்டையும் அனுப்பி ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றது.

உலக நாடுகள் அனைத்தும் கால்பதிக்க துடிக்கும் செவ்வாய் கிரகம்!!! மர்மம் நிறைந்த அதன் சிறப்புகள்!! - Tamil News - IndiaGlitz.com
       தியான்வென் விண்கலம்
ரோவர்

ஜூரோங் ரோவர் என்பது 6 அடி உயரமும், 240 கிலோ எடையும் கொண்டது. ஆறு சக்கரம் கொண்ட இந்த ரோவர் 4 சூரிய மின்கலங்களால் இயக்கப்பட்டது. செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 6 அறிவியல் கருவிகளும், புகைப்படம் எடுக்க கேமராக்களும் இதில் இருந்தன. செவ்வாய்க் கிரகத்தின் காலநிலை மற்றும் புவியியலைப் படிப்பதற்கான கருவிகள் மற்றும் பாறைகளைத் துளைத்து, அதன் வேதியல் மூலக்கூறுகளைப் பதிவு செய்வதற்கான கருவிகளும் இடம் பெற்றிருந்தன.

இதில் குறிப்பாக தரை ஊடுருவும் ரேடார் கருவி இருந்தது. இது சுமார் 330 அடிக்கு (100 மீட்டர்) கீழே படம் பிடிக்க 2 அதிர்வெண்களைக் கொண்ட ஊடுருவும் ரேடார் ஆகும். இந்த ரோவர் மே 22 அன்று தனது ஆய்வு பணியைத் தொடங்கியது. இந்த ரோவர் 93 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்வதற்காகத் திட்டமிடப்பட்டது. அதாவது இதன் ஆயுட்காலம் 93 நாட்களாகும். ஆனால் இது 358 நாட்கள் செயலில் இருந்தது. இது 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் தன் செயல்பாட்டை இழந்தது. இது செவ்வாய்க் கிரகத்தில் 6,302 அடி (1926 மீட்டர்) தூரம் வரை பயணம் செய்தது.

Zhurong (rover) - Wikipedia
           ஜூரோங் ரோவர்

ரோவர் பயணித்த பாதைகளில் ரேடாரைப் பயன்படுத்தி நிலத்தடி நீர் பாக்கெட்டுகளைக் கண்டறிந்தது. செவ்வாய்க் கிரகத்தின் நிலத்தடியில் திரவ நீர் இருக்க முடியும் என்பதை இது குறிக்கிறது. மேலும் ரோவர் பயணம் செய்த 1.9 கிலோமீட்டர் பாதையில் தரை ஊடுருவும் ரேடாரைப் (GPR) பயன்படுத்தியது. இந்த ரேடார் உயர் அதிர்வெண் ரேடியோ அலைகளைக் கொண்டது. இந்த ரேடார் மூலம் செவ்வாய்க் கிரகத்தின் தரையில் 262 அடி (80 மீட்டர்) ஆழம் வரை ஆய்வு செய்தது.

ரேடியோ அலைகள் குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பிறகு, மீண்டும் பிரதிபலித்தது. இது பாறை மற்றும் வண்டல் அடுக்குகளுக்கு இடையிலான எல்லைகள் போன்ற நிலத்தடி அம்சங்களை வெளிப்படுத்தியது. ரேடார் கருவியானது ரேடியோ அலைகளை மேற்பரப்பில் படம் பிடித்து பிரதிபலிப்பு நேரங்களை அளவீடு செய்தது. இதன்மூலம் பூமியில் உள்ள விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகத்தின் தரைக்கு கீழே உள்ளவற்றின் 3D வரைபடத்தை ஒன்றாக இணைக்க முடிந்தது.

கடற்கரை

ஜூரோங் ரோவர் செயல்பாடு என்பது மே 2022 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. அது அனுப்பிய தரவுகளை 2 ஆண்டுகளுக்கு மேலாக சீன விஞ்ஞானிகள், நாசா விஞ்ஞானிகள் மற்றும் சில பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்து வந்தனர். சீன ரோவர் ஒரு ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்பைச் செய்துள்ளது. நீண்ட காலமாக காணாமல் போன செவ்வாய்க் கடற்கரைகளில் ஒன்றின் முதல் ஆதாரத்தை அது வெளிப்படுத்தியது.

இந்தக் கடற்கரை செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் புதைந்துள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் வடக்கு சமவெளிகளில் நீண்ட காலத்திற்கு முன்பு இருந்த ஒரு பெரிய கடலின் மணல் நிறைந்த கடற்கரையை இது வெளிப்படுத்துகிறது. செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்புக்கு அடியில் சுமார் 33 அடி (10 மீட்டர்) ஆழத்தில் மென்மையான மற்றும் சாய்வான மணல் அடுக்கு இருக்கிறது. இது பல மீட்டர் தடிமன் கொண்டது.

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை கண்டுபிடிப்பு - அதுவும் 300 கோடி ஆண்டுகள் பழசாம்.. - தமிழ்நாடு
                                                                                  கடற்கரை

இந்த மணல் அடுக்கு 15 டிகிரி கோணத்தில் சாய்வாக மேல் நோக்கி செல்கிறது. இது பூமியில் உள்ள கடற்கரை போன்றது. பூமியில் இந்த தடிமன் கொண்ட படிவுகள் உருவாக மில்லியன் கணக்கான ஆண்டுகள் எடுத்திருக்கும். இது சாய்வான கரை ஓரத்தில் படிவுகளை விநியோகிக்க அலை நடவடிக்கைகளுடன் கூடிய நீண்ட கால நீர் நிலையைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறது.

ஆய்வுக் குழு

இந்த அடுக்குகளில் உள்ள துகள்களின் அளவையும் ரேடார் தீர்மானித்தது. இது மணலின் அளவைப் போன்றது. இந்த கட்டமைப்பு மணல் திட்டுகளைப் போல இல்லை. அது ஒரு விண்கல் தாக்கப் பள்ளம் போலவும் இல்லை. மேலும் எரிமலைக் குழம்பு ஓட்டங்களைப் போலவும் தெரியவில்லை. அப்போதுதான் நாங்கள் கடல்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினோம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூமி மற்றும் கிரக அறிவியல் பேராசிரியர் மைக்கேல் மங்கா (Michael Manga) கூறினார்.

தரையில் ஊடுருவும் ரேடாரைப் பயன்படுத்தியதன் மூலம் மேற்பரப்பில் இருந்து பார்க்க முடியாத கடலோரப் படிவுகளின் நேரடி ஆதாரங்களைக் கண்டறிந்தோம் என்று சீனாவின் விஞ்ஞானி ஹை லியு (Hai Liu) கூறினார். இவர் சீனாவின் தியான்வென் -1 பயணத்திற்கான அறிவியல் குழுவின் தலைவர்களில் ஒருவர் மற்றும் குவாங்சோ பல்கலைக்கழக கிரக விஞ்ஞானி ஆவார். பூமியில் உள்ளதைப் போன்ற அலைகள் மற்றும் அலைகளால் கடற்கரைகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்று தனது ஆய்வு மூலம் லியு தெரிவித்தார்.

பெருங்கடல்

செவ்வாய்க் கிரகத்தில் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரால் நிரம்பிய, பரந்து விரிந்த பெருங்கடல் இருந்தது. செவ்வாய்க் கிரகத்தின் பாதி பகுதியை ஒரு கடல் மூடி இருக்கலாம் என நம்பப்படுகிறது. சீன மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கையின்படி செவ்வாய்க் கிரகத்தில் கடற்கரைகள் என்பது ஒரு பெரிய, பனிக்கட்டி இல்லாத கடலைக் குறிக்கிறது. செவ்வாய்க் கிரகத்தின் காலநிலை வியத்தகு முறையில் மாறிய போது கடல் மறைந்து போனது.

இந்த கடல்நீர் ஆவியாகி விண்வெளிக்குச் சென்று இருக்கலாம். அதே நேரத்தில் பெரும்பாலான நீர் பனிக்கட்டியாக நிலத்தடியில் சிக்கி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கடற்கரை செவ்வாய்க் கிரகத்தின் பண்டைய காலத்தில் இருந்த ஒரு உண்மையான கடலுக்கான முதல் சான்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கடல் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

இது தடிமனான மணல் அடுக்குகளை விட்டு செல்லும் அளவுக்கு நீண்ட காலம் கொண்டது. மேலும் ஆறுகள் மூலம் கடலுக்கு நீர் வந்த சேர்ந்தது என விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். ஏனெனில் அந்த ஆறுகள் கடலில் வண்டலைக் கொட்டியிருக்கும். அலைகள் இறுதியில் கரையில் அந்த வண்டலைப் பரப்பி, நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு கடற்கரையை உருவாக்கி இருக்கும் என கூறுகின்றனர்.

பூமியில் ஒரு பழைய கடற்கரை எப்படி இருக்குமோ அதற்கு இணையாக செவ்வாய்க் கிரகத்தின் கடற்கரையும் உள்ளது. மணல் போன்ற கடற்கரையைக் குவிக்க நீண்ட காலத்திற்கு கடல் இருந்தது என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தக் கடற்கரை சரியான நோக்கு நிலை மற்றும் சரியான சாய்வு இரண்டையும் கொண்டுள்ளது. இது செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பண்டைய கடற்கரை என விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

செவ்வாய்க் கிரகத்தில் ஒரு சமவெளிக்கு அடியில் கடற்கரைகள் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு 2025 ஆம் ஆண்டு ‌பிபரவரி 24 அன்று வெளியிட்டது. இது செவ்வாய்க் கிரகத்தில் ஒரு பண்டைய கடல் இருந்ததற்கான சாத்தியக் கூறுகளை அடிக்கோடிட்டு காட்டியது. இந்த ஆதிகால கடலில் உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

கட்டுரையாளர் :

செவ்வாய்க் கிரகத்தில் கடற்கரை (Ancient Earth-like beach discovered on Mars) | Yercaud Elango - தியான்வென் -1 (Tianwen -1) - https://bookday.in/

– ஏற்காடு இளங்கோ

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *