இந்தியாவில் மிக பழமையான இயற்கை வளைவு (Ancient Natural Arch) ஒன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. இது இந்தியாவின் பழமையான இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தேசிய புவிசார் பாரம்பரிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது திருப்பதி மாவட்டத்தில் உள்ள சக்கர தீர்த்தம் அருகே, திருமலை மலைக் கோயிலுக்கு (Tirumala Hill Temple) வடக்கே 1 கிலோமீட்டர் தொலைவில் இடம் பெற்றுள்ளது.
இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மிகவும் பிரபலமான இயற்கை சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இது இயற்கையாக உருவான ஒரு புவியியல் வளைவாகும். உள்ளூர் மக்கள் இந்த வளைவை சிலத்தோரணம் (Silathoranam) என்று அழைக்கின்றனர். தெலுங்கு மொழியில் சிலா என்றால் பாறை என்றும், தோரணம் என்றால் வாசலில் கட்டப்பட்ட மாலை என்றும் பொருள். அதாவது “பாறைகளால் ஆன மாலை” ஆகும்.
இந்த வளைவு 26.2 அடி (8 மீட்டர்) அகலமும், 9.8 அடி (3 மீட்டர்) உயரமும் கொண்டது. இது இரண்டு தனித்துவமான இயற்பியல் பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த வளைவு தரையிலிருந்து இருபுறமும் உயர்ந்த பாறைகளின் இரண்டு நெடுவரிசைகளால் ஆனது. ஆனால் இந்த வளைவு இரண்டு வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வளையின் புவியியல் வயது 25 லட்சம் (2.5 மில்லியன்) ஆண்டுகளாகும். 1980 ஆம் ஆண்டில் திருமலை பகுதியில் தொடர்ச்சியாகப் புவியியல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் இந்த இயற்கை வளைவு கண்டுபிடிக்கப்பட்டது. இது வானிலை, இயற்கையின் முறுக்குவிசை தாங்கிய நீரோடை செயல்பாட்டின் அரிப்பு ஆகியவற்றால் ஏற்பட்டது. இது ஒரு அரிய புவியியல் பிழையாகும்.
இது புவியியல் ரீதியாக எபார்க்கியன் இணக்கமின்மை (Eparchaean Unconformity) என்று அழைக்கப்படுகிறது. இது 160 கோடி ஆண்டுகள் பழமையான குடப்பா சூப்பர் குரூப்பின் வண்டல் பாறைகளுக்கும், 210 கோடி ஆண்டுகளுக்கும் மேலான ஆர்க்கியன் பாறைகளுக்கும் இடையே உள்ளது. இந்த இரண்டு பாறை அடுக்குகளுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் 50 கோடி ஆண்டுகளாகும். ஆகவே இது ஒரு புவியியல் அதிசயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கட்டுரையாளர்:

ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
