ஏற்காடு இளங்கோ (Yercaud Elango) எழுதிய அந்தமான் அழகு (Andaman Azhagu) - நூல் அறிமுகம் - https://bookday.in/

ஏற்காடு இளங்கோ எழுதிய அந்தமான் அழகு – நூல் அறிமுகம்

ஏற்காடு இளங்கோ எழுதிய அந்தமான் அழகு – நூல் அறிமுகம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ “அந்தமான் அழகு” என்னும் அருமையான பயணக்கட்டுரை நூலை வெளியிட்டுள்ளார். அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு தன் மனைவியுடன் ஒரு வாரம் சுற்றுலா சென்று அந்தமான் தீவுகளின் அழகை இரசித்து நூலாக்கியுள்ளார்.

அந்தமான் தீவுகள், நிகோபர் தீவுகள் என இரண்டாகப் பிரித்துள்ளனர். இது இந்தியாவின் ஏழு யூனியன் பிரதேசங்களில் ஒன்று. துணை நிலை ஆளுநர் உள்ளார். ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. இதன் தலைநகர் போர்ட்பிளேர். மோடி அரசு தலைநகரின் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என்று மாற்றியுள்ளார்.

அந்தமானில் அகில இந்திய வானொலி நிலையம் செயல்படுகிறது. 584 கிலோஹெர்ட்ஸில் மத்திய அலைவரிசை ஒலிபரப்பும், 100.9 மெகா ஹெர்ட்ஸில் எப்.எம் எனப்படும் பண்பலை வானொலி ஒலிபரப்பும் உள்ளது. 7 மொழிகளில் ஒலிபரப்பாகிறது. சில மணி நேரங்கள் தமிழிலும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
இத்தீவுகளில் தமிழர்கள் இரண்டாம் இடத்தில் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். மொத்தம் 572 தீவுகள் இருந்தாலும் 38 தீவுகளில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர்.

மற்ற பகுதிகள் காடுகளாக உள்ளன. அந்தமான் நிகோபர் தீவுகளில் 60,000 ஆண்டுகளாக பழங்குடியினர் வெளியுலகுடன் எந்த தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கின்றனர். சென்டினல்கள், நிகோபரிகள் என பல்வகைப்பட்ட பழங்குடியினர் வசிக்கின்றனர்.

அந்தமான் என்றால் மலாய் மொழியில் அனுமன் என்று அர்த்தமாம். நிகோபர் என்பது பிரிட்டீஷார் வைத்த பெயர். நிகோபர் என்றால் நிர்வாணமாக வாழும் பழங்குடி மக்கள் என்று பொருள். மொத்த மக்கள்தொகை மூன்று லட்சத்து எண்பதாயிரத்து இருநூற்று எண்பத்து நான்கு ஆகும்.தமிழ், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, ஆங்கிலம் பேசும் பலதரப்பட்ட மக்கள் வசிப்பதால் இத்தீவுகளை குட்டி இந்தியா என அழைக்கின்றனர். 1841 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது நிகோபர் தீவுகள். மொத்தம் 22 தீவுகள் உள்ளன. இவை மலைப்பாங்கானவை. அந்தமானில் 520 தீவுகள் உள்ளன.

இதில் 28 தீவுகள் மட்டுமே மக்கள் வாழத் தகுதி வாய்ந்தவை.சென்டினல்ஸ் பழங்குடியினர் 400 முதல் 500 பேர் வரை இருக்கக்கூடும் என கூறுகின்றனர்.1957ஆம் ஆண்டு சிறப்பு மண்டலமாக இத்தீவு அறிவிக்கப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியிலும் ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் இது கப்பற்படைத் தளமாக இருந்துள்ளது. சிறிது காலம் ஜப்பான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இங்குள்ள பழங்குடியினரின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல். மீன், பழங்கள் ஆகியவற்றை உண்கின்றனர். தேன் சேகரிக்கின்றனர். தேனீக்கள் கடிக்காமல் இருக்க ஒரு வித தாவரத்தின் இலைச்சாறைப் பூசிக்கொள்கின்றனர். இவர்கள் பேசும் மொழி சென்டினலிஸ்.

வெளியாட்களை இவர்கள் பார்க்க விரும்புவதில்லை. அப்படிப் பார்த்தால் அவர்களைத் தாக்குகின்றனர். அப்படி அவர்கள் தாக்கினாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் சட்டப்படி எடுக்க முடியாது.1950ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இத்தீவுகள் இணைக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.2001ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி 62,961 தமிழர்கள் இங்கு வசிக்கின்றனர்.அந்தமான் குரல், அந்தமான் முரசு என தமிழ் இதழ்கள் வருகின்றன.தேசிய அரசியல் கட்சிகள் உள்ளன. தி மு க, அ தி மு க கட்சிகள் உள்ளன. நடிகர்களுக்கு இரசிகர் மன்றங்கள் , சாதிச்சங்கங்கள் உள்ளன. இங்குள்ள வித்தியாசமான புறாக்கள், நண்டுகள், மீன்கள் ஆகியவற்றைப் படத்துடன் எழுதியுள்ளார் ஆசிரியர் ஏற்காடு இளங்கோ. மரம் ஏறும் நண்டு போன்ற அதிசயங்களை நூலில் பதிவு செய்துள்ளார்.

அந்தமான் என்றதும் அனைவரது நினைவுக்கு வருவது அந்தமான் சிறை தான். உலகின் கொடிய சிறைகளில் இது இதுவும் ஒன்றாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது கடுமையாகப் போராடிய இந்தியர்களை இந்தச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். உலகின் கொடிய தனிமைச் சிறையாக விளங்கிய இந்தச் சிறை பற்றி நிறைய படங்களுடன் செய்திகளைப் பகிர்ந்துள்ளார் ஏற்காடு இளங்கோ. காந்திப்பூங்கா, மானுடவியல் அருங்காட்சியகம், சமுத்திரவியல் அருங்காட்சியகம் எனப் பார்த்து இரசிக்க வேண்டிய பல இடங்கள் உள்ளன.

பயணக்கட்டுரைகளை வாசிக்க விரும்புகிற வாசகர்களும், சுற்றுலாப் பயணிகளும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் “அந்தமான் அழகு.”

நூலின் தகவல்கள் :

நூல் : அந்தமான் அழகு
ஆசிரியர் : ஏற்காடு இளங்கோ (Yercaud Elango)
வெளியீடு : நாம் தமிழர் பதிப்பகம், சென்னை.
திருச்சி கௌரா புத்தக நிலையம் இந்நூலை விற்பனை செய்கிறது.

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

கவிஞர் செ. ஜெயக்குமார்
சேலம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *