நம்மில் பலரும் நன்கு அறிந்த அந்தமான் கூண்டுச் சிறைகள் (cellular jail) நாட்டின் விடுதலைப் போராட்டத்தோடு நெருங்கிய தொடர்புடையது. தேசிய நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒன்று.
இது
“அடிமைத்தனத்தின் சின்னமா ?”
“ஒப்பற்ற சுதந்திரப்போராட்டத்தை நினைவூட்டும் சின்னமா ?”
“ஈவு இரக்கமற்ற ஆங்கிலேய ஆதிக்கத்தின் குறியீடா ?”
எப்படி எடுத்துக் கொள்வது ? இதற்கான பதில் , வரலாற்றை எந்த கண்ணாடி அணிந்து பார்க்கிறோம் என்பதில் இருந்தே கிடைக்கிறது. ஜப்பானிடம் இருந்து பின் சுதந்திர இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தமானில்தான் இந்தியாவின் முதல் தேசியக் கொடி , நேதாஜி தலைமையில் 1943 டிச.23ல் பறக்கவிடப்பட்டது. தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்த இந்நிகழ்வில் 1:30 மணி நேர உரையின் முடிவில்தான் அவரது புகழ் பெற்ற “டெல்லி சலோ” முழக்கம் எழுப்பப்பட்டது.
சுருக்கமாக 15 அத்தியாயங்களில் செறிவாகவும் , முழுமையாகவும் அந்தமான் சிறை குறித்து விளக்கியிருப்பது நூலாசிரியரின் கடுமையான பணிக்கு சான்று பகர்கிறது.
“கத்தியின்றி , இரத்தமின்றி பெறப்பட்ட சுதந்திரம் எங்கள் சுதந்திரம்” என போலிவேசம போட்டு பிதற்றித் திரியும் போலித்தனம் என்று ஒழிகிறதோ அன்றுதான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை நம் தலைமுறைகள் முழுமையாகவும் , உண்மையாகவும் அறிந்துகொள்ள முடியும் . அத்தகைய அறிதலுக்கு வகை செய்யும் வழிகளில் ஒன்றாக இரத்தம் சிந்தியும் பெற்றதுதான் எங்கள் சுதந்திரம் என உரக்கச் சொல்ல ஆசைப்பட்டேன்.அந்த ஆசையின் வெளிப்பாடுதான் இச்சிறிய தொகுப்பு!” என்று நூலாசிரியர் தமது உரையில் முன்னரே குறிப்பிட்டு விடுகிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் பின் அத்தியாங்கள் ஒவ்வொன்றும் துணை புரிகின்றன.
1858 மார்ச் 10ல் திறந்தவெளிச் சிறையாக செயல்படத் தொடங்கிய சிறை , பின்னாளில் ஏன் ஏழு பிரிவுகள் , 696 சிறிய அறைகளாக மாறியது என்பதற்கு நூலாசிரியர் தருகிற விளக்கம் ஏற்புடையதாக இருக்கிறது.
அதுபோலவே , இன்றும் அங்கே இஸ்லாமியக் குடியிருப்பு அதிகமாக இருப்பதற்கான காரணத்தை , வரலாற்றில் “மாப்ளமார் கலகத்தில்” இருந்து எடுத்து தந்திருப்பதும் சிறப்பானதாக இருக்கிறது.
அதுபோலவே ஆந்திரா ரம்பா பழங்குடியினர் கலகமும், தலைமையேற்று நடத்திய அல்லூரி சீத்தாராம ராஜூவின் போராட்டங்களுக்கும் , இந்த சிறைக்குமான தொடர்பும் நாம் அவசியம் தெரிந்தாக வேண்டிய ஒன்று.(அண்மையில் ராஜமவுலியின் Pan இந்தியத் திரைப்படமான RRR படத்தின் ட்ரைலர் ஒன்லைனும் காட்சியமைப்பும் இதைத் தான் நினைவூட்டின)
சிறைக்குள் நடந்த உச்சகட்டக் கொடுமைகள் , அவற்றுக்கு எதிராக அணியமான கைதிகளின் தொடர் கிளர்ச்சிகள் , ஆங்கில அரசைப் பணிய வைத்த உண்ணாவிரதப் போராட்டங்கள் , சிறைக்கூடம் தத்துவங்களை வளர்த்தெடுத்த சிந்தனைக்கூடமாக மாறியதன் பின்னணி , “ஆசியா ஆசியர்களுக்கே” என்று முழங்கிய ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு,அவர்களால் சீரழிந்த உள்ளூர் கிராமங்கள் என நாம் அதிகம் கேட்டிராத பல தகவல்களை கோர்வையாக சுவைபட எடுத்துக் கூறியிருக்கிறார்.
அதிகபட்சம் ஒண்ணரை மணிநேரத்திற்குள் வாசித்துவிடலாம். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
நூல்: அந்தமான் – செல்லுலார் சிறை ஒரு வரலாறு
ஆசிரியர்: மு.கோபி சரபோஜி
விலை: ரூ. 60/-
பக்கங்கள்: – 56
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.