நூல் அறிமுகம்: *அந்திமகாலத்தின் இறுதி நேசம் சிறுகதைத் தொகுப்பு* – கருப்பு அன்பரசன்நூல்: அந்திமகாலத்தின் இறுதி நேசம் சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: தக்ஷிலா ஸ்வர்ணமாலி
சிங்கள மொழியில் இருந்து
தமிழுக்கு எம் ரிஷான் ஷெரீப்
பதிப்பகம்: ஆதிரை வெளியீடு
விலை: ரூ. 150/-
பக்கங்கள்: 128
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/andhima-kalathi-iruthi-nesam/

மனித மனம் என்பது இலகுவானது, எல்லோரையும் அன்பு பாராட்டச் சொல்வது. எதிர்பார்ப்பின்றிய நேசத்திற்காக ஏங்கித் தவிப்பது. ஆதரவான,ஆறுதலான வார்த்தைகளை ஆரத் தழுவிக் கொள்வது. இப்படியான அன்பிற்குள்ளும் கள்ளத்தனம் என்கிற ஒற்றைச் சொல்லை வீசிச் சென்றது எவர்?. பெண்மனதை பார்க்காமல் அவளின் உடல் தனக்கான உடைமை என்கிற நிலையிலிருந்து நம் மூத்தவர்கள் வரைந்து வைத்திருக்கக்கூடிய பண்பாடு கலாச்சாரம் என்கிற வட்டத்திற்குள் இருந்து அன்பும் காதலும் ஒத்திசைவு மாறும், விலகும் தருணம் கூடவே இன்னொருபக்கம் அன்பின் வேர் வரைந்திருக்கும் கோட்டினை அழித்தும் கட்டியிருக்கும் கோட்டையைத் துளைத்தும் பிளந்தும் எட்டிப் பார்க்கிறது. அப்படியானதொரு அன்பின் தேடலுக்கு கள்ளம் எனப் பெயர் கொடுத்து வேரின் முனைதனை வெட்டி பெயர் அறியா உறவின், நட்பின் ஏதோ ஒன்றின் உயிர் மூச்சு நிறுத்தத் துடிக்கிறது பண்பாடும் கலாச்சாரமும். கள்ளம் இல்லாத மனிதர்கள் ஒருவர் கூட பேரன்பு வாழ்ந்திடும் இந்த உலகில் கிடையாது என்பது நிஜம். ஆனால் அதை வெளிப்படையாக பேசுவது என்பதே இங்கே நமது பண்பாட்டிற்கு இழுக்கவும் கலாச்சாரத்திற்கு சீர் கேடாகும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்பும் காதலும் எல்லோருடைய பொதுப் புத்தியிலும் இங்கு பெண் உடல் சார்ந்தது என்றே பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்.. அதையே பயிற்றுவித்து கொண்டிருக்கிறோம். அந்தப் பொதுப்புத்தியில் “அந்திம காலத்தின் இறுதி நேசம்” என்கிற சிறுகதைத்தொகுப்பு தக்ஷிலா ஸ்வர்ணமாலி அவர்களின் எழுத்துக்களால் வழியாக கல் வீசப் பட்டிருக்கிறது.. அவர் எறிந்த கல் ஏற்கனவே கட்டமைத்து வைக்கப்பட்டிருக்கும் மனித மனங்களின் குளத்தினில் அலையை எழுப்பிக் கொண்டிருக்கிறது. எழும்பிய அலை அமைதி அடையும் பொழுது மனித மனங்கள் தெளிவடையலாம்.. இருக்கும் நிஜங்களின் நியாயத்தை உணரலாம்.

அந்த நியாயம், பேரன்பு தவழும் நிலமெங்கும் மனோ ரஞ்சித்தின் வாசத்தை, அந்திக் கருக்கலில் வந்து உரசும் தென்றலின் தழுவலை, பூவரசமரத்துக் குயிலின் அழைப்பு கேட்டு மரத்தின் கீழ் நின்று மேல் நோக்கி பார்க்கும் நேரம் மஞ்சள் நிலவாய் பூத்திருக்கும் பூவின் இதழ் வழியாக வடிந்து முகத்தில் பட்டுத் தெறிக்கும் பனித்துளி ஒன்றின் சுகமான ஸ்பரிசத்தை.. இயற்கையின் மேன்மைகள் அனைத்தும் நம்மை ஆரத்தழுவி கட்டிக்கொள்ளும்.. மனித மனங்களுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் இவைகளையெல்லாம் பேசலாமா கூடாதா பேசினால் மற்றவர்கள் நம் ஒழுக்கம் குறித்து என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணங்களை எல்லாம் இழுத்து பொதுவெளியில் விட்டிருக்கிறார்.. பண்பாடு கலாச்சார காவலர்களுக்குள் ரணகளம் நிகழ்த்தக்கூடிய படைப்பு “அந்திம காலத்தின் இறுதி நேசம்”.

தக்ஷிலா ஸ்வர்ணமாலி அவர்களின் எழுத்தில் சிங்கள மொழியில் வெளிவந்திருக்கும் 10 சிறுகதைகளை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியரின் அதே உணர்ச்சியோடு எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள். வடிவான அட்டைப்பட தோடு வெளியிட்டிருக்கிறார்கள் ஆதிரை பதிப்பகத்தார்.. அனைவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.“உயிரோடு இருக்கும் இந்த வாழ்வின் எல்லா நிலைகளிலும் தீர்மானமான முடிவு எடுப்பது என்னுடைய முழுதான கவனத்தில் அக்கறையில் இருந்து மட்டுமே.. புறச் சூழலின் வலுவான அல்லது வலுவற்ற காரணங்களைச் சொல்லி இப்படியாக நான் ஆனதற்கு காரணம் அவைகள்தான் எனச் சொல்லுவதென்பது என் முடிவிற்கான சாய் மானத்தை தேடிப் போவதும், பிடிப்பதும் ஆகும்.. திருமணமும் விவாகரத்தும் என்னுடைய அறிவுப்பூர்வமான ஒப்புதலோடு நடைபெற்ற பொழுது, எனக்கு பிடித்தமான, என்னோடு அன்பு பாராட்டும் ஒருவனின் இருப்பைத் தேடி நான் இரவு பகலாக அலைவதில் தவறேதும் கிடையாதே. என் மீது மெய்யான அன்பு பாராட்டும் ஒருவருக்காக அவனுடைய சுமைகள் அனைத்தையும் நான் ஒருத்தியே கூட தாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறேன், அப்படிப்பட்ட ஒருவனுக்காக நான் அலைந்து கொண்டிருக்கிறேன் நகரின் வீதிவீதியாக ஒவ்வொரு கடைகளாக..

இதைச் சொல்லிக்கொள்வதில் எதற்காக நான் வெட்கப்பட வேண்டும்.? அப்படிப்பட்ட அன்பு கொண்டவனவனை நான் கண்டடையும் பொழுது அவனை என்னுடைய கிராமத்திற்கு அழைத்து சென்றால் என்னுடைய ஒழுக்கம் குறித்து பலர் கேள்வி எழுப்பினாலும் என்னுடைய பிரியம் கொண்ட அப்பா என்னை முழுவதுமாக நம்புவார், அப்படிப்பட்ட அன்புள்ளம் கொண்டவனை தேடிக்கொண்டிருக்கிறேன்.. அவனை நான் கண்டடைவேன் எனச் சொல்வதில் நான் எதற்கு அசிங்கப்பட வேண்டும். அவனை நான் கண்டு கொண்டேன். நான் தேடும் அவன் அதோ.. அங்கு..! ஆனால் அவன் வேறு ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டு இருக்கிறான்.? அவன் எனக்கானவன் இல்லையா..?

மெய்யான அன்பினை கொண்டவர்களால் மட்டுமே அடையாளம் காண முடியும், நம் மீது அன்பு செலுத்துபவர்கள் இன்னொரு ஆணோடோ பெண்ணோடோ பேசிக்கொண்டிருக்கும் பொழுது நம் நோக்கி வெளிப்படுத்தும் வார்த்தைகளிலிருந்தும் அவர் கண்களின் மொழியிலிருந்தும் அவர் நம்மீது கொண்ட அன்பின் நிஜத்தை போட்டு உடைத்து விடும்.. தாம் நேசித்து ஒருவரின் அன்பு, நமக்கானது இல்லை என்று உணர்ந்தால் அவரின் நலன் பொருட்டு விலகி தன்வழி பார்ப்பதே மெய்யான அன்பு என்பதை தெருவழியே என்கிற கதையில் பொய்யாக வாழும் ஆண்களிடையே நிஜமான அன்பிற்காய் ஏங்கி அலையும் ஒருத்தியின் அன்பினை பேசியிருப்பார் ஆசிரியர்.

நிஜமான அன்பினை தேடுபவர்களால் மட்டுமே நடிப்பவர்களின் வார்த்தைகளில் உள்ளிருக்கும் அன்பான பொய்யினை உணரமுடியும், அடையாளம் காணமுடியும். அந்த ஒருத்தியின் உள்உணர்வு வழியாக கதைக்குள் ஆசிரியர் பேசிடும் பல நிஜங்கள் நம்மால் பேச பயந்ததாகும்.

//எனக்கு உன் கூந்தல் பிடித்து இருக்குன்னு நினைக்கிறேன்

எல்லார்கிட்டயும் நீ அப்படித்தான் சொல்ற

ஓ அது பொய்யில்லை நிஜம் தான்

நீ அஞ்சலிய காதலிச்ச காலத்திலே பூர்ணிகாவையும் உனக்கு பிடித்திருந்தது

ஆமா..யார் இல்லைன்னு சொன்னது.
தப்புன்னு அடுத்தவங்கதான் சொன்னாங்களே தவிர நான் சொல்லவில்லையே.!

என்னால அப்படி முடியாது.

பொய்.. அப்படின்னா எதுக்கு மஞ்சுவுக்கு தெரியாமல் திருட்டுத்தனமா என்னை பார்த்துட்டு போக இப்படி வீட்டுக்கு வர்றே..

தெரியல.//

இப்படியான சம்பாஷணைகள்
நிலூகாவிற்கும்.. அருணுக்கு மிடையே கதை முழுவதும் நடந்து கொண்டே இருக்கும்..

நிலூகா.. பெற்றோர்கள் பார்த்து வைத்து மஞ்சுவை கரம் பிடித்தவள்.. இவர்களுக்கு ஒரு மகன்.

அருண்.. எதற்கும் மெனக்கடாதவன்..
இயற்கையை உயிர்களை நேசிக்க தெரிந்தவன்.. வாசிப்பும் நேசிப்புமாகவே அவனுடைய வாழ்க்கை.
இப்பொழுது இவனை அஞ்சலி என்கிற தமிழ் பெண் காதலித்துக் கொண்டு இருக்கிறாள்.. நிலூகாவும் அறிவாள் இதை. நிலூகாவுக்கு தெரியும் என்பது அருணுக்கும் தெரியும்.

நிலூகாவும் அருணும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள்.. நிலூகாவின் கணவன் மஞ்சு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவன். வீட்டில் நுழைந்தாலும் அவனுக்கு அலுவலகத்தின் வேலையே. நிலூகாவின் மனச்சுமையை அவளின் மனதின் சின்னச் சின்ன ஆசைகளை விருப்பங்களை பகிர்ந்து கொள்வதற்கு கூட அவன் நேரமும் ஒதுக்குவதென்பது கிடையாது.. விடுப்பு நாளிலும் தன்னுடைய நேரத்தை கம்ப்யூட்டருக்கும் முகநூலுக்குமாய் ஒப்புக் கொடுத்து பொழுதை கழிக்கக் கூடியவன்..ஞாயிற்றுக்கிழமைகளிலும் தன்னுடைய வீட்டில் மஞ்சுவுக்கும் மகனுக்கும் தேவையானதை சமைத்து வைத்து விட்டு வீட்டு வேலைகளை விடுத்து சிறிது நேரம் தன்னை தன் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ஏதேனும் ஒரு காரணத்தை மஞ்சுவிடம் சொல்லி விட்டு அருண் வீட்டிற்கு வந்து விடுவாள்.. தனி ஒருவனாக வாழ்ந்திடும் அருணிடம் இவளின் வார்த்தைகளுக்கான இடம்..அங்கீகாரம் இருக்கிறது என்பதை மனப்பூர்வமாக அவள் உணர்கிறாள் இவர்கள் இருவருக்கும் இடையேயான உரிமை கலந்த வார்த்தை பரிமாற்றங்களுக்கும், ஒருவர்மேல் ஒருவர் கொள்ளும் மெச்சத் தகுந்த அக்கறைக்கும் அன்பிற்கும் வரைமுறைக்குள் இருக்கும் உறவை அடையாளப்படுத்தி விட முடியாது..

அது சகோதரன் சகோதரியாக, காதலன் காதலியாக, கணவன் மனைவியாக எல்லோராலும் பேசப்படும் ஒரு கள்ளத்தனம் மிகுந்த உறவாக இப்படி எதற்குள்ளும் அடங்காத ஒரு உறவு இவர்களுக்குள்.. ஒவ்வொரு நாளிலும் வலு கொண்டே வருகிறது அது. இருவருக்குமான சம்பந்தம் தான் என்ன.? சம்பந்தத்தை உருவாக்க மனிதர்களால் மட்டுமே இங்கு முடியும்.. ஒருவர் அருகே ஒருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள், தனித்தனியே பயணமாகி கொண்டிருக்கும் இருவரின் வாழ்க்கை குறித்தும்.. இருவரின் குடும்ப உறவுகள் சார்ந்த விசாரிப்புகளோடும்.. அது சரி இவர்களுக்குள் அப்படி என்ன ஒரு சம்பந்தம்.? அன்பானவர்கள்.. ஒருவரின் சுயத்தை ஒருவர் அழிக்க முற்படாத சுயமரியாதை அறிந்த மரியாதை போற்றக்கூடிய மனிதர்கள். அவ்வளவே. “மாங்காய் பருவத்தில், அருண் தனித் திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது” கதையில் ஆசிரியர் இயல்பாய் சில கேள்விகளை எழுப்பி இருப்பார்.. ஆனால் அர்த்தம் மிகுந்த செறிவான கேள்விகளாக.

வயது முதிர்ந்த பெரியவர் ஒருவருக்குள் இளம் பெண்ணின் புன்னகை என்னவெல்லாம் செய்து அவருக்குள் ஒரு ரசவாத மாற்றத்தை நிகழ்த்தும் என்பதை.. அன்பிற்காக, நேசம் மிகுந்த சில வார்த்தைகளுக்காக அந்த முதியவர் தன்னை எதிர்நோக்கி பார்த்திருக்கிறார் என்பதை அந்தப் பெண்ணுக்குள் உணரச் செய்தது எந்த உணர்வு.? அந்த உணர்வுகளின் ஒத்திசைவு ஆள் நடமாட்டம் அற்ற அந்தத் தெருவின் ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் அந்த முதியவரின் வீட்டிற்குள் அவளை அழைத்துச் செல்கிறது. அவளின் வருகைக்காக காத்திருக்கிறார்.. ஒரு சின்ன புன்னகை அவர்களுக்குள் அன்னியோன்யத்தை பரிசளிக்கிறது. அந்த புன்னகையால் முதியவரின் இளமை காலம் தொடங்கி இன்று மூளைக்குள் புற்றுநோய் ஏற்பட்டு மரணத்தின் வாசலில் நிற்கும் வரை தாம் சந்தித்த மகிழ்ச்சியான துயரம் மிகுந்த நினைவுகள் அனைத்தையும் அந்த இளம் பெண்ணோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த இளம்பெண்ணை தான் தினமும் பூஜிக்கும் முருக கடவுளுக்கு சமமாக மனதில் பாவிக்கிறார். அந்த பெரியவரின் திடீர் மரணம் தான் அந்த இளம்பெண்ணை மனதளவில் எந்த நிலையில் சிதைத்துப் போகிறது என்பதுதான் “அந்திம காலத்தின் இறுதி நேசம்” என்கிற கதை.. ஆதரவான வார்த்தைகளுக்காக..

பேரன்பின் மடிக்காக ஏங்கிடும் குழந்தைகளின் பிடிவாதத்தையொத்த அன்பின் வெளிப்பாடே “அந்திம காலத்தின் இறுதி நேசம்” சிறுகதை.. குடும்ப உறவுகள், கணவன் மனைவி, குழந்தைகள் இவைகளை மீறிய பேரன்பு கொண்ட இளம் பெண்ணும் அவளின் அன்பு உள்ளம்.. இப்படியாக கதைக்குள் பல பாத்திரங்களை படைத்து மனித உறவுகளின் உள்ளீடாக எதையோ எதிர்பார்த்து இருக்கும் அன்பினையும், எதையுமே எதிர்பார்க்காதே, புன்னகை ஒன்றினால் சின்ன சின்ன மகிழ்வினை கொண்டாடும் மெய்யான பேரன்பு உள்ளங்களை சொல்லியிருக்கிரார் ஆசிரியர்.

சமில்.. நெலும் இருவரும் ஒரே வங்கியில் பணிபுரிகிறார்கள்.. நகரத்திலிருந்து பக்கத்தில் இருக்கக்கூடிய கிராமத்தில் நெலும். இருதயம் முழுவதிலும் நெலும் நினைவாகவே அவளின் கிராமத்திற்கு பேருந்து வழியாக பயணம் ஆகிறான் சமில். நெலும் வீடு, ஆற்றில் குளித்து இவனுக்கு பிடித்த கவுனை உடுத்தி வயல் வரப்புகளில் நடந்து வரும் அழகு, அவளுக்கு முன்அறிவிப்பு செய்யாமல் சென்று எதிரில் நின்றால் சந்தோசத்தை மனதுக்குள் ஏந்தி தம் கண்களை எப்படி நேர் கொள்வாள் என்கிற மகிழ்ச்சியான நினைவுகளோடு அவள் எதிரில் நிற்கிறான் சமில்.

அந்திம காலத்தின் இறுதி நேசம்- சிங்களக் கதைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்
தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

நெலும் மற்றும் அவளின் குடும்பம் சமிலை எப்படி எதிர்கொண்டு வரவேற்கிறார்கள் அவனுக்குள் எந்தவிதமான மாற்றத்தை அந்த வீடும் சூழலும் நிகழ்த்துகிறது.. மனித மனம் எப்படி எல்லாம் உறவுகளை அணுகுகிறது அன்பை பேணுகிறது என்பதினை நெலுமின் இயல்பான அணுகுமுறையில் இருந்து “அன்றைக்குப் பிறகு அவன், அவளருகே வரவேயில்லை” என்கிற கதையில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

“ஒரே திடல்” சிறுகதையில் அன்பு எனப்படுவது யாதெனில் பெண் உடல் அல்ல என்பதனை “அம்மா” வழியாகவும் “சித்தப்பா” வழியாகவும் நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் சந்தித்த மனிதர்களை கலாச்சாரத்தின் ஒழுக்கக்கேடாக பார்த்த பார்வையிலிருந்து அன்பிற்கு ஏங்கும் விழிகளின் வழியாக கொடுத்திருக்கிறார் ஸ்வர்ணமாலி.

பெரியம்மாவின் வாசல் எங்கும் கொட்டிக் கிடக்கும் நந்தியாவட்டை பூக்களின் ஒற்றை பூவிற்கு கூட வலிக்காமல் மொத்தத்தையும் பொறுக்கியெடுத்து மாலை கட்டிக் கொடுக்கும் பெரியம்மாவின் வாசலில் இப்பொழுது குப்பை மேடாக கிடைக்கும் நந்தியாவட்டை பூக்களுக்கு எவர் ஆறுதல் சொல்வது.? எனக்கும்தான் என கேட்கும் பாப்பாவின் கேள்வியில் இருக்கும் அர்த்தம் விளங்கிட நிச்சயம் வாசிக்க வேண்டும் “நந்தியாவட்டை பூக்களை”.. பெரியம்மாவின் அன்பும் அப்பாவின் அன்பும் எப்படி அம்மாவின் பிடிவாதத்தால் சீர்குலைந்து இறுதிகாலத்தில் “டீ தூக்கு” வழியாக அன்பு பரிமாறிக் கொள்ளப் படுவதை “நந்தியா வட்டைப் பூக்கள்” வாசித்து விடும்பொழுது நாம் உணர முடியும்.

வெவ்வேறு சமூக கட்டமைப்புக்குள் தன் கதை மாந்தர்களை உலவவிட்டு 10 கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு முழுவதும் மனங்களின் அரவணைப்பும் ஆறுதலும் வேண்டி நிற்பவர்களின் பேரன்பு.. நேசம்.. பிரியும்.. காதல் இவை மட்டுமே பண்பாடு கலாச்சாரம் கட்டி வைத்திருக்கும் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து வாழ்ந்து கொண்டே இருக்கிறது.. கதைகளில் வருபவர்கள் எல்லோரும் நம்மோடு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழலில் இன்றும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. வாசித்து விடும்பொழுது உங்கள் கண்ணெதிரே அவர்கள் தோன்றி நிற்பார்கள்.

வாசியுங்கள்
“அந்திம காலத்தின் இறுதி நேசம்” சிறுகதைத் தொகுப்பினை.
ரணகளம் உங்களுக்குள்ளும் நிகழும்.

அன்பும் வாழ்த்துக்களும்
தக்ஷிலா ஸ்வர்ணமாலி.

கருப்பு அன்பரசன்.