நூல் அறிமுகம்: தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி எழுதிய *அந்திம காலத்தின் இறுதி நேசம்* – முகம்மது யூசுப்தொடர்ச்சியாக 15 புத்தகங்களுக்கு மேல் வந்து சேர்ந்தது. எதையும் வாசிக்காமல் புத்தக அட்டைப்படம் போடுவதில் அர்த்தமில்லை.

அதிலும் நான்கு புத்தகங்கள் இன்று வர வாசித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி எழுதிய சிங்கள கதைகளை தமிழில் மொழிபெயர்த்த ரிஷான் ஷெரிப் எழுதிய ” அந்திம காலத்தின் இறுதி நேசம் ” சிறுகதைத் தொகுப்பை 3 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன்

அந்திம காலத்தின் இறுதி நேசம் – ஆதிரை வெளியீடு
150/- விலை. 128 பக்கங்கள். மொத்தம் 10 சிறுகதைகள்

எல்லா கதைகளும், கதைகளின் பாடு பொருள்களும் எழுதி முடிக்கப்பட்ட ஓன்றா என்று கேட்டால் ஓரளவிற்கு ஆமாம் என்று கூட சொல்லலாம்

இருப்பினும் சிறுகதைகளில் வாசகனை தக்க வைப்பது

புதிய நிலங்களின் வாயிலாக

சொல்லப்படும் முறையில் புதிதாக ஏதேனும் தட்டுப்படும் போது

சுவையான சொற்களின் வாயிலாக

இது தான் என்று கதையின் முடிவுகளை கதையின் போக்கை கணிக்க இயலாத போது வாசகன், வாசிக்கும் கதைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.

தற்கால வாசகனை கதைகளில் கட்டி நிறுத்துவது அத்தனை எளிதல்ல.

சிஞ்சானின் கதைகளில் கூட வேற்று கிரகம், இளவரசி ஹிமேரா, ஹிமோட்டடா எனும் சக்தி என்றெல்லாம் உருட்ட வேண்டியதிருக்கிறது.

ஒரு வாரம் முன்பு ஒரு கதையை வாசித்தேன். முதல் கதையை தாண்டும் முன்பே மூடி வைத்துவிட்டேன்.

அந்திம காலத்தின் இறுதி நேசம் – நம்மை பிடித்து வைத்து வாசித்து விடு என ஊந்தித் தள்ளுகிறது.

10 கதைகளில் 5 கதைகள் வாசித்து முடித்ததும் ” ஆமால்ல ” என்று சில நிமிடம் நம்மை நிறுத்தி வைக்கிறது.

ரிஷான் உபயோகித்த சில சொற்கள் மிக சுவையாக உள்ளன.

அவர் முன்னுரையில் குறிப்பிட்டது போல பல கதைகளில் தாழ்வாரம் முற்றம் வருகிறது. என் வீட்டைப் பார் என்னை பிடிக்கும் என்பது போன்று முற்றத்தை பேணுவது வைத்து அந்த கதாபாத்திரத்தின் மனநிலையை விளக்க முயற்சிகள் நடைபெறுகிறது.முற்போக்கு பெண்களின் மனநிலை என்பது போன்ற சாயல் காட்டப்படுகிறது.

அன்றைக்குப் பிறகு அவன், அவளருகே வரவேயில்லை வெகு சாதாரண எந்த மெனக்கெடலும் இல்லாத கதை.

நூலின் தலைப்பில் உள்ள அந்திம காலத்தின் இறுதி நேசம் நல்லதொரு கதையாடல்.

ஆனால் பொட்டு கதை வாசித்ததும் திகீர் என சில நொடிகள் மனம் நின்று விட்டது. ஓ…வாசித்துக் கொண்டிருப்பது சிங்கள கதைகள். அவர்களுக்கான பக்கங்கள்.

பொட்டு கதை படித்ததும் அபுதாபியில் என்னைத் தேடி வரும் ஒரு அரபி நண்பன் தான் நினைவில் வந்தான். அதைக் கூட கதையாக எழுதலாம்.

ஒரு மருத்துவ கருவிகளின் நிறுவனத்தில் சேல்ஸ் வேலை செய்யும் அரபி நண்பன்.( பாலஸ்தீனைச் சேர்ந்த கிறிஸ்துவன் )

ஏதாவது கூற ஆரம்பித்தால் ” I know “ என்பான். உனக்கு கல்யாணம் ஆன அப்புறம் உன்னை பார்க்கனும்என்றேன். ஏன் என்று கேள்வி கேட்டான்

பொண்டாட்டிகிட்ட அடி வாங்கி அவ கொடுக்கிற டார்ச்சர்ல உனக்கு உலகத்துல ஒன்னுமே தெரியாதுன்னு நீ சொல்லி நான் பார்க்கனும் என்றேன்.

இப்படி தர்க்கத்தில் என்னுடன் நெருக்கமானவன்.

வருடங்கள் கழித்து ஒரு நாள் ஊர் திரும்பச் செல்வதாக கூறி டிரீட் கொடுக்க அழைத்திருந்தான். நானும் அவன் மட்டுமே செல்வதாக இருந்தது. அன்று வேலை விஷயமாக வந்திருந்த மற்ற இரு அரபி நண்பர்களும் சேர்ந்து கொள்ள மூவரும் சாப்பிட சென்றோம்

மூன்று அரபி நண்பர்கள் மற்றும் நான்

ஒருவன் உருதினி (ஜோர்டான்) பிரிந்த பலஸ்தீன்

மற்றொருவன் தற்சமய பலஸ்தீனை சார்ந்தவன்

ஊர் செல்வதாக என்னை விருந்துக்கு அழைத்தவன் பலஸ்தீனில் இருந்து்இஸ்ரேல் புதிதாக ஆக்கிரமித்த நிலத்தில் இப்போது வாழ்பவன்.

அதாவது முந்தைய பலஸ்தீனி இன்றைய இஸ்ரேலி

நல்ல வேலைய விட்டுட்டு ஏன் திரும்ப போறன்னு பலஸ்தீனி அவனிடம் தற்செயலாக கேட்க, விவசாயம் செய்யப்போறேன் அரசாங்கம் உதவி செய்கிறது. எங்களுக்கு நிலம் கிடைச்சிருக்கு என்றான் இஸ்ரேலி

எனக்கு கெதக் என்றது. இதை கூட கதையாக எழுதலாம்

” தமிழ் எழுத்துகளை வாசிக்கும் தமிழ் எழுத்துகளை எழுதும் தமிழ் மொழியால் சிந்திக்கும் உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன் – என்கிறார் இந்த நூலின் மூல ஆசிரியர் சிங்கள எழுத்தாளர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி ”

” அந்திம காலத்தின் இறுதி நேசம் ” நல்ல வாசிப்பனுபவம்.

– முகம்மது யூசுப்

நூல் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/andhima-kalathi-iruthi-nesam/