2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த மலையாள திரைப்படம். அறிவியல்,
நகைச்சுவை, பாச உணர்வுகள் இவை எல்லாம் கலந்த ஒரு படம். ரதீஷ் பாலகிருஷ்ணன்
பொதுவால் என்பவர் இயக்கியுள்ளார். அவரின் முதல் படம் இது. 2019ஆம்
வெளியிடப்பட்ட 192 மலையாளப் படங்களில் வசூலில் வெற்றியடைந்த ஏழு படங்களுள்
இதுவும் ஒன்று என கேரளா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவிக்கிறது. முக்கிய
பாத்திரமான பாஸ்கரனாக சூரஜ் வெஞ்சிரமூடு சிறப்பாக நடித்திருக்கிறார்.
பாஸ்கரன் எனும் சற்று வயது முதிர்ந்தவர். ஒரு கையில் ஊனம் உடையவர்.
மனைவி இறந்துவிட்டார். மகன் சுப்பிரமணியன் பொறியியல் பட்டதாரி. அவன்
வெளியூரில் சென்று வேலை பார்ப்பதை அவர் அனுமதிப்பதில்லை. அவருடைய
அழுத்தத்தினால் நல்ல வேலைகளை எல்லாம் இரண்டு மூன்று மாதங்களிலேயே விட
வேண்டியதிருக்கிறது. அவருக்கு உதவியாக தாதியர்களை வைத்துப் பார்க்கிறான்.
அவருடைய பழக்க வழக்கங்களுக்கும் உணவு ருசிக்கும் அவர்கள் சரிப்பட்டு
வருவதில்லை. ஒரு கட்டத்தில் சுப்ரமணியன் துணிந்து ரசியாவில் இயங்கும் ஜப்பான்
நிறுவனம் ஒன்றில் கிடைத்த வேலையை ஏற்றுக்கொள்கிறான். தந்தையைக் கவனித்துக்
கொள்ள ஒரு தாதியை ஏற்பாடு செய்கிறான். அந்த ஊரில் சிறிய உணவுக் கடை நடத்தும்
அவன் வயதுடைய உறவினன் பிரசன்னனிடம் தந்தையை கவனித்துக் கொள்ளுமாறு
சொல்லிவிட்டு. ரசியா சென்று விடுகிறான்.
அங்கு மலையாளி தந்தைக்கும் ஜப்பானிய தாய்க்கும் பிறந்த ஒரு பெண்ணை
காதலிக்கிறான். ஊரில் தந்தையுடன் சமாளிக்க முடியாமல் தாதி நின்று விடுகிறாள்.
எனவே தான் வேலையை விட்டு ஊருக்கு போவதாக கூறுகிறான் சுப்பிரமணியன், அவன்
பணி புரியும் நிறுவனம் ரோபோக்கள் தயாரிக்கிறது. அதில் ஒன்றை தந்தைக்கு
துணையாக பணி புரிய சோதனை செய்து பார்க்குமாறு மேல் அதிகாரி கூறுகிறார்.
சுப்பிரமணியன் அவ்வாறே செய்கிறான். முதலில் அதை சந்தேகம், வெறுப்பு, கோபம்
கலந்து பார்க்கும் பாஸ்கரன், கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் ஒரு ஈடுபாட்டை
வளர்த்துக் கொள்கிறார். அந்த ஊரில் குஞ்சப்பன் என்பவர் சில காலம் முன் காணாமல்
போய்விடுகிறார். அவர்தான் இந்த ரோபோ உருவத்தில் வந்திருப்பதாக மக்கள் கருதி
அதை குஞ்சப்பன் என்றே அழைக்கின்றனர். குஞ்சப்பனின் மகன் தன் தந்தை குடும்பத்தை
விட்டு விட்டு சென்று விட்டதால் அவரைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறான்.
சோதனைக் காலம் முடிந்து ரோபோவை திரும்ப எடுத்துக் கொண்டு போக
சுப்பிரமணியன் வருகிறான். அதை விட்டு பிரிய பாஸ்கரன் மறுக்கிறார். அது
அவனைவிட தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதாகக் கூறுகிறார். ஆனால் ரோபோ
தான் ஒரு இயந்திரம்தான் என்றும் தனக்கு உணர்ச்சிகள் கிடையாது; அது ஒருபோதும்
அவரது மகன் ஆக முடியாது என்றும் கூறுகிறது. குஞ்சப்பனின் மகன் அதன் தலையை
எடுத்துக் கொண்டு போவதாகக் கதையை முடிக்கிறார். கதையை எப்படி முடிப்பது என்று
தெரியாமல் இயக்குனர் தடுமாறுவது தெரிகிறது.
முந்தய தலைமுறையினர் தங்களுடைய பழக்க வழக்கங்களை விடாமல், தங்கள்
பிள்ளைகளையும் முன்னேற விடாமல் இருப்பது, தந்தைக்கும் மகனுக்கும் இடையில்
நடக்கும் பாசப் போராட்டம், காதல், பாசம், முன் யோசனை, உற்சாகம் என பன்முக
ஆளுமையான அந்த மலையாள-ஜப்பானியப் பெண், ரோபோ கிட்டத்தட்ட ஒரு
மகனாகவே மாறி அவருக்கு பணிவிடைகள் செய்வது என ரசிக்க பல அம்சங்கள்
உள்ளன. ரோபோ ஆடையில்லாமல் இருக்கிறது என்று பெண்கள் கேலி செய்கிறார்கள்.
அதனால் பாஸ்கரன் அதற்கு ஒரு வேஷ்டியைக் கட்டி அழைத்துப் போகிறார். சிறிது
சிறிதாக அது சட்டை, அரை டிராயர் என பல்வேறு உடைகளில் வலம் வருகிறது. அதை
ஒரு சோதிடரிடம் அழைத்து சென்று அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று
கேட்கிறார். நீண்ட காலம் வாழும் என்றும் ஆனால் நடுவில் சில சங்கடங்கள் வரும் என்று
சொல்லி ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்றும்
இப்போதைக்கு ஒரு தாயத்து தந்து கட்டி விட சொல்கிறார் சோதிடர்.
பாஸ்கரன், பொதுவால் எனும் சாதியை சேர்ந்தவர். சுப்பிரமணியன் ரோபோவும்
பொதுவால் சாதிதான் என்று சொல்லும் இடம் சிரிப்பை வரவழைத்தாலும் இந்தியாவில்
ரோபோக்கள் வந்தால் அதிலும் சாதி வந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
(இயக்குனரும் அதே சாதியை சேர்ந்தவர் என்பது அவரது பெயரிலிருந்து தெரிகிறது.)
அதேபோல் பாஸ்கரன் ரோபோவை கோயிலுக்கு அழைத்து செல்கிறார். ரோபோ இந்து
அல்ல;அதனால் உள்ளே விடமுடியாது என்கிறார் அங்குள்ள நம்பூதிரி. பொதுவுடமைப்
பார்வை கொண்ட ஒருவருக்கும் நம்பூதிரிக்கும் வாக்குவாதம் நடைபெறுகிறது. ரோபோ
கீதையிலிருந்து ஸ்லோகங்களை சொல்லி தான் இந்துதான் என்று காட்டுகிறது.
விவாதத்திற்குரிய காட்சி இது. இன்னும் சில இடங்களிலும் கதாசிரியர்/இயக்குனரின்
சமூகப் பார்வைகள் வெளிப்படுகிறது. ரோபோவை நகராட்சிஇடமிருந்து மீட்டு வரும்
பாஸ்கரன் அங்குள்ள ஊழியர்களிடம் நாட்டில் நடைபெறும் பல ஊழல்களையும்,
பாலியல் வன்முறைகளையும் குறிப்பிட்டு அதற்கெல்லாம் இந்த ரோபோவா காரணம்
என்கிறார். இன்னொரு இடத்தில் பொதுவுடைமை இயக்கத்தினர் பேசிக்கொண்டே
இருப்பார்கள் என்று வசனம் வருகிறது.
முதல் படத்திலேயே பொழுதுபோக்கவும் சிந்திக்கவும் தகுந்த படத்தைக்
கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு திரைப்படத்திற்கு முக்கியமான இறுதிக் காட்சியில்
தெளிவில்லாமல் குழப்புகிறார்.