Androos Viduthi (Arai En Yethumillai) Novel book review by K. Ramesh. Book day website is Branch of Bharathi Puthakalayam

எஸ். சுஜாதாவின் *ஆண்ட்ரூஸ் விடுதி நாவல்* – கி. ரமேஷ்நூல்: ஆண்ட்ரூஸ் விடுதி
ஆசிரியர்: எஸ். சுஜாதா
விலை: ரூ. 100
வெளியீடு: தமிழ்வெளி
கடந்த கரோனா அலையின்போது தோழர் சுஜாதா எழுதிய முதல் நாவல் இந்த ‘ஆண்ட்ரூஸ் விடுதி’.  அந்தப் புத்தகம் வெளிவந்தவுடனேயே ஏராளமான மதிப்புரைகள் அதைப் பற்றி வந்து விட்டன.  எனினும் நேரடியாக புத்தகம் கிடைக்காததால் அதைப் பற்றி சுஜாதாவிடம் பேசும்போது என்னை தோழர். மோகனாவிடம் தொடர்பு கொள்ளுமாறு சொன்னார்.  அடுத்த இரண்டாவது நாள் புத்தகம் தோழர் மோகனாவின் அன்புக் கையெழுத்துடன் என் வீட்டில் ஆஜர்.
எனக்கு ஒரு மோசமான பழக்கம்.  ஒரே சமயத்தில் பல புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு படிப்பது.  ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கும்.  பல வகை ருசியான உணவுகளை முன்னால் வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் சாப்பிடுவது போன்ற உணர்வு.  ஒன்று படித்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு புத்தகத்தைப் பார்த்தால் அதைப் படிக்க வேண்டுமென்று தோன்றும்.  இந்தக் குழப்பத்தில் ஆண்ட்ரூஸ் விடுதி இடம் கிடைக்காமல் தள்ளிப் போனது.  இந்தக் கரோனாவில் தோழர் கணேஷ்குமார் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது போல் சரியாக எதிலும் மனம் லயிக்காமல் போக, ஆண்ட்ரூஸ் விடுதி கண்ணில் பட்டது.  சரி எடுத்துப் படிப்போம் என்றால், ஞாயிறு காலை பிரார்த்தனை போல முடிந்தே விட்டது.
சுஜாதா எனக்கு கிழக்குப் பதிப்பகத்தில் வைத்து அறிமுகம்.  எனக்கு முதலில் அங்கு அறிமுகமானது சத்யா, பிறகு பத்ரி என்றாலும், இப்போது எனக்கு மற்றவர்களெல்லாம் மிகவும் நெருக்கமாகி விட்டனர். சுஜாதாவைக் கேட்கவே வேண்டாம். நமக்கு இயக்க ரீதியாக தோழர். அவர் எடிட்டராகப் பணிபுரியும் போது எனக்குக் குழந்தைகள் புத்தகம் இரண்டை மொழிபெயர்க்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அவர் ஒரு எழுத்தாளர் என்ற வீச்சைப் பிறகுதான் கண்டு கொண்டேன்.  இந்த நாவல் முயற்சி மிகச் சிறப்பு.
 எனக்கு விடுதியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பில்லை.  ஆனால் பத்தாங்கிளாஸ் படிக்கும் போது பத்து நாட்கள் என்.சி.சி. முகாமில் நண்பர்களுடன் தங்கியிருக்கிறேன். அது ஒரு சுகம்தான். பின்னால் ஒரு மூன்றரை ஆண்டுகள் பம்பாயில் வேலை பார்த்தபோது வீடெடுத்துத் தங்கியிருக்கிறேன். ஆனால் விடுதியில் தங்குவது என்பது வித்தியாசமான அனுபவமாகவே பதிவாகியிருக்கிறது. எங்களையெல்லாம் வீட்டில் கலாட்டா செய்தால் விடுதிக்கு அனுப்பி விடுவேன் என்றுதான் மிரட்டுவார்கள்.  ஆனால் சுஜாதா தானாக விரும்பி விடுதிக்குப் போயிருக்கிறார்!


தோழியர்களுடன் அவரது உறவு, சீனியர்கள் எப்படி ஜூனியர்களை காக்காய் பிடித்துத் தமது காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதில் தொடங்கி, எப்படி மெஸ்ஸில் வேலை பார்ப்பது, அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது, எப்படி தோழியர்களுடன் பகிர்ந்து உண்பது, அவர்களது சுக துக்கங்களில் பங்கு கொள்வது என்று ஏராளமான விவரங்களை இந்த நாவல் கொடுக்கிறது.  தனது விருப்பமில்லாமலேயே கன்னியாஸ்த்ரீக்கு ஒப்புக் கொடுப்பது, மணமுடிப்பது என்ற பல தடங்கல்கள்.  இதற்கிடையே இலங்கைப் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண் இங்கு வருவது.  உண்மையிலேயே சற்று ஆழ்ந்து யோசித்தால் வெலவெலத்துப் போகும்.  நேற்று தனுஷின் படத்தைப் பார்த்து விட்டு அதுவும் தோன்றியது.
இன்னொன்று ஒன்றன்பின் ஒன்றாக பள்ளிகளில் பாலியல் சீண்டல்கள் பிரச்சனைகள் வெளிவந்து கொண்டிருக்கும்போது, இந்த விடுதியிலும் அப்படிபட்ட ஒரு சம்பவத்தைப் பதிவு செய்கிறார் சுஜாதா.  குழந்தைகள் மீது பரிதாபமும், இந்த சமூகத்தின் மீது கோபமும் வருகிறது.  இனியாவது ஆண் குழந்தைகளை தகுந்த விழுமியங்களைச் (values) சொல்லிக் கொடுத்து வளர்க்க இந்தs சமூகம் முயல வேண்டும்.  அதற்கேற்றாற் போல் கல்வியும் அமைய வேண்டும்.  இல்லாவிட்டால் இவற்றைத் தடுக்க முடியாது.
ஆனால் இன்னொரு பக்கம் எனக்கு வருத்தமாக இருந்தது.  அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என்று அரசு ஊழியர்களே ஏன் சேர்க்க யோசிக்கிறார்கள்?  காரணம் அங்கு அடிப்படை வசதிகள் கூடக் கிடைப்பதில்லை என்ற சிந்தனைதான்.  சற்று யோசித்துப் பார்த்தால் இப்போது அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எண்பதுகளில் அரசுப் பள்ளியில்தான் பெரும்பாலும் படித்திருப்பார்கள்.  அங்கு இருக்கும் பிரச்சனைகள் அவர்களுக்குத் தெரியும்.  ஒரு தோழர் அமெரிக்காவில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளி குறித்த ஒரு காணொளியை அனுப்பியிருந்தார்.  அதைப் பார்த்தவுடன் எனக்கு இந்தப் பள்ளி போல் நம் அரசுப் பள்ளிகள் இருந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியது.  அந்தக் காணொளியை தோழர் உமாமகேஸ்வரி விரிவாகப் பரப்பி விட்டார்.  தில்லி அரசும், கேரள அரசும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தியதில் லட்சக் கணக்கானோர் அப்பள்ளிகளில் சேர்ந்திருப்பது நமக்கு நம்பிக்கையளிக்கிறது.  இங்கும் விரைவில் அது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.
சரி, விஷயத்துக்கும் வரலாம்.  விடுதியில் இருக்கும் கிணற்றுப் பகுதி அசுத்தம், கழிவறை அசுத்தம், வாயில் வைக்க விளங்காத உணவு என்று பல விஷயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.  பின்னால் சுஜாதாவின் தோழி ஸ்டெல்லா இன்னும் இந்த நிலை மாறவில்லை என்று கூறுகிறார்.  நிஜமாகவே நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விஷயம்.  இந்த நிலை மாறினால்தானே குழந்தைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் இடத்தில் படிக்க முடியும்?  பள்ளிக்குப் போக வேண்டுமென்ற ஆர்வம் வரும்?
மற்றபடி, இந்தக் காலத்தில் சற்று இலேசான, ஆனால் உணர்வுமிக்க புத்தகம் படிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.  ஆனால் சுஜாதாவுக்கு ஒரு வேண்டுகோள்.  அடுத்த முறை நாவல் எழுதும்போது கொஞ்சம் பெரிதாக எழுதுங்கள்.  முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தைத் தடுக்க முடியவில்லை.
அன்புடன்
தோழன் கி.ரமேஷ்.இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Show 2 Comments

2 Comments

  1. இர.மணிமேகலை

    தோழர் ரமேஷ் அவர்களின் சிறந்த பதிவு, ஒரு வாசகியாக என்னால் நெருக்கமாக உணர முடிந்தது. பெரிய நாவல் எழுதுங்கள் என்ற வேண்டுகோள் அருமை 😊

  2. தோழர் ரமேஷ் அவர்களின் ஆண்ட்ரூஸ் விடுதி குறித்த பதிவு சிறப்பு. ஒரு வாதியாக என்னால் நெருக்கமாக உணர முடிந்தது.புதினத்தைப் பெரிதாக எழுதுங்கள் என்ற வேண்டுகோள் அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *