மூத்த எழுத்தாளர் தோழர் தேனி சீருடையான் எட்டு சிறுகதை நூல்களையும், ஆறு நாவல்களையும் , ஓர் இலக்கிய கட்டுரைத்தொகுப்பையும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கியவர் . இவரது ஒன்பதாவது சிறுகதைத் தொகுப்பு ‘இங்குட்டும் அங்குட்டும்’ ஆகும் . கதையை ஆதியிலிருந்து சொல்வது, இடையிலிருந்து சொல்வது, முடிவிலிருந்து சொல்லுவது, ஒரு நிகழ்வைக் கதையாகச் சொல்வது, ஒரு நினைவைக் கதைப்பது, கனவின் வழி மொழிவது , அமானுஷ்ய எடுத்துரைப்பு என இத்தொகுப்பில் இவர் சிறுகதை வடிவத்தின் அத்தனை அம்சங்களையும் சமைத்து நம்முன் விருந்து படைக்கிறார்.
சீருடையான் ஏழுவயதில் பார்வையிழந்தவர் ; பதினேழுவயதில் பார்வையை திரும்பப் பெற்றவர் . ஆங்கில பெருங்கவி ஜான் மில்டனைப் போல இருளின் அருளையும், ஒளியின் மருளையும் அனுபவித்து உணர்ந்தவர் . அந்த அனுபவங்களை ,’நிறங்களின் உலகம்’, ‘சிறகுகள் முறியவில்லை ‘ எனும் நாவல்களில் வடித்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர்.

பார்வை இழப்பின் ரணங்களை , ‘என்ன சொல்கிறாய் ? ‘,முதல் அடி ‘ எனும் இரு சிறுகதைகளில் வடித்து , இத்தொகுப்பில் சேர்த்துள்ளார்.இவ்விருகதைகளும் பார்வையற்றோர் பள்ளியில் நடந்தவைகளை பின்புலமாகக் கொண்டு புனையைபட்டவை . பார்வையற்றோர் உலகில் உணரப்படும் அன்பும், அரவணைப்பும் , காதலும், துரோகமும், வறுமையும், வக்கிரமும் படைப்பினூடே உணர்த்தபடுகிறது. ‘என்ன சொல்கிறாய் ? ‘ சிறுகதை இத்தொகுப்பில் உள்ள ஆகச் சிறந்த சிறுகதை. கண்ணீர் துளிர்க்காமல் வாசிக்க இயலாது. உருவமும், உள்ளடக்கமும் , உத்தியும்,அழகியலும் பொருத்தமாக அமைந்த கதைகளில் ஒன்று.
‘ஆக்கருவா ‘ எனும் கதை சாதீய ஆணவத்தை ,வன்மத்தை, தோலுரித்தும் காட்டி வாசகமனத்தை துணுக்குறச்செய்யும் கதை. இக்கதை நீண்டு குறுநாவலின் எல்லையைத் தொடுகிறது.’குடமுழுக்கு ‘ கதையும் சிறுகதை எல்லையைத் தாண்டி நவீனத்தை நவில்கிறது.
‘மின்னல்கயறு ‘ காதல்தோல்வியை நளினமாக உணர்த்தி , அவரவருக்கு வாய்த்ததை ஏற்க வைக்கிறது . ‘ அட்டலைகள் ‘ கதை பிச்சைக்காரர்கள் குறித்து தெளிவான பார்வையை முன்வைக்கிறது. படைப்பாளி அனுபவத்தில் கனிந்தவர் என்பதால் காதலுக்கும் காமத்திற்குமான வேறுபாடுகளை , ‘மந்தாரை பூத்த அந்தி ‘ செந்தட்டிக்காடு ‘ போன்ற பலகதைகளில் அழகுற சித்தரிக்கிறார். தாம்பத்தியத்தில் காமக் கொடூரன்களையும் , அவர்களுக்கு பலியாகும் மனைவியையும் [‘இரண்டாகி…மூன்றாகி…’] , காமுகக்கணவனை எதிர்த்து தாக்கும் மனைவியையும் [‘செந்தட்டிக்காடு ‘]எதார்த்தம் பிசகாமல் படைத்துள்ளார்.
‘ மேலவிலிருந்து வந்த பணம் ‘ கதை பணநாயகதைத் தோலுரித்து மக்களரசியலை எள்ளலோடு உணர்த்துகிறார் . ‘நையாண்டிமேளம் ‘ கதையில் இருதரப்பு விருப்ப மணத்திலும் ஊடாடும் சாதி அரசியலை நையாண்டி செய்கிறார். படைப்பாளி அடித்தட்டுமக்களோடு நெருங்கிய தொடர்புகொண்டுள்ளவர் என்பதால் , மக்களின் ஜாதகம், ஜோதிட நம்பிக்கைகளை சுவைபட பணியாரத்தைப் புரட்டிப்போடுவது போல் விண்டுரைக்கிறார். ‘பூக்குழி ‘ கதையில் மூடநம்பிக்கைகளை நயம்பட இடித்துரைக்கிறார் .
இத்தொகுபின் கதைகளில் அவரது வழக்கமான களத்திலிருந்து இன்னும் நிறைய எழுதமுடியும் என்பதை தேனி சீருடையான் பதிவு செய்கிறார். இவரது எழுத்தில் தேனி வட்டார மொழி மெனக்கிடாமல் சரளமான வாசிப்புக்கு உகந்தவகையில் வெளிப்படுவது சீருடையானின் பலம். !.தேனி சீருடையான் அடித்தட்டு மக்களுடன் கொண்ட ஈடுபாடும், வாசிப்பனுபவமும் இணைந்த படைப்பின் ரசவாதத் திறனும் இவரை சிறந்த படைப்பாளியாக முன்னிறுத்துகிறது. இத்தொகுப்பை வாசிக்கும் வாசகர்கள் மேற்சொல்லப்பட்ட அனைத்து சிறப்புகளை எல்லாம் உணருவர்.இத்தொகுப்பிற்கு சிறுகதை ஆய்வாளரும் சிறந்த படைப்பாளியுமான தோழர். ச. தமிழ்ச்செல்வன் அருமையானதோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார்.
நூலின் தகவல்கள்
நூல் : ‘அங்குட்டும் இங்குட்டும் ‘ –சிறுகதைகள்
ஆசிரியர் : தேனி. சீருடையான்
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேசன்ஸ் ,சென்னை 6௦௦ ௦78
தொடர்பு எண் : 99404 46650
பக்கங்கள்: 167
விலை : ரூ .2௦௦
நூலறிமுகம் எழுதியவர்
ஜனநேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

