அனிமல் ஃபார்ம் – நூல் அறிமுகம்

அனிமல் ஃபார்ம் – நூல் அறிமுகம்

அனிமல் ஃபார்ம் – நூல் அறிமுகம்

 

ஆசிரியர் : ஜார்ஜ் ஆர்வெல்
ஆசிரியர் : ‘அனிமல் ஃபார்ம்’

ஜார்ஜ் ஆர்வெல் (1903-1950) பத்திரிகையாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், கவிஞர் என்று பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளராகத் திகழ்ந்தார். ‘எரிக் ஆர்தர் பிளேர்’ அவரின் இயற் பெயராகும். இந்தியா, பர்மா போன்ற பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் அதிகாரியாக சிலகாலம் வேலை பார்த்தார். ஹிட்லரின் நாசிசம், முசோலினியின் ஃபாசிசம், ஸ்டாலினின் கம்யூனிசம் போன்ற சார்வாதிகார அரசுகளை ஜனநாயக சோசலிசவாதியான ஆர்வெல் விரும்பவில்லை. இத்தகு எதேச்சாதிகார அரசுகளை ‘அனிமல்ஃ பார்ம்’, (Animal Farm) மற்றும் 1844 (Eighteen Forty-Four) நாவல்களில் கேலி செய்த அவர் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டார். விமர்சனத்திற்கும் ஆளானார். எளிய மொழியில் எழுதப்பட்ட இவரின் ‘பர்மா நாட்கள்’, ’ஹோமேஜ் டு கேட்டலோனியா’, ’தி ரோட் டு விகன் பையர்’ போன்ற படைப்புகளும் வாசகர்களால் பெரிதும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

எதேச்சாதிகாரப் போக்கை ’ஆர்வெல்லியன் போக்கு’ எனக் குறிப்பிடும் அளவிற்கு ஆர்வெல்லின் பகடி இலக்கியம் பிரபலமாகியுள்ளது. ஆர்வெல்லின் பகடிகள், பதினெட்டாம் நூற்றாண்டின் ஆங்கில எழுத்தாளர் ஜோனாத்தான் ஸ்ஃபிட் (Jonathan Swift) எழுதிய பகடிகளுக்கு இணையாகப் போற்றப்படுகின்றன. ஜனநாயகம், சோசலிசம் ஆகிய இரு அரசியல் விழுமியங்கள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஆர்வெல், எந்தவொரு எதேச்சதிகார அமைப்பையும் ஏற்க மறுத்தார். ’அனிமல் ஃபார்ம்’ நாவல் ஸ்டாலினின் கம்யூனிச அரசின் மீதான கடுமையான விமர்சனமாகவே கருதப்படுகிறது. நாவலின் பலகாட்சிகள் ஸ்டாலினின் சோவியத் யூனியனில் நிகழ்ந்த காட்சிகளுக்கு இணையாக இருப்பதைப் பார்க்கிறோம்.

வெலிங்டன் எனுமிடத்தில் ஜோன்ஸ் என்ற குடிகாரன் ஒருவன் நடத்தி வந்த ’மெனார் ஃபார்ம்’ என்ற பண்ணையில் நடக்கும் நிகழ்வுகளே நாவலின் கதைக்களமாகும். பண்ணையில் இருக்கும் விலங்குகளை எப்போதும் சாட்டையால் அடித்துத் துன்புறுத்திய ஜோன்ஸ்க்கு எதிராகப் புரட்சி வெடிக்கிறது. புரட்சிக்கான கனல் ’கிழட்டு மேஜர்’ என்றழைக்கப்பட்ட ஒரு வயதான பன்றியிடமிருந்து தொடங்குகிறது. அந்தப் பன்றியின் மரணத்திற்குப் பின்னர் ஸ்னோபால், நெப்போலியன் என்ற இரண்டு பன்றிகள் புரட்சிக்குத் தலைமை தாங்குகின்றன. குடிகாரப் பண்ணையார் ஜோன்ஸ் விரட்டி அடிக்கப்படுகிறான். இவ்விரண்டு பன்றிகளின் தலைமையில் சமத்துவ சமுதாயத்தைச் சமைத்திட அனைத்து மிருகங்களும் திட்டமிடுகின்றன. மெனார் ஃபார்ம் பெயர் மாற்றப்பட்டு ’அனிமல் ஃபார்ம்’ எனப் பெயர் சூட்டப்படுகிறது.

அடிமை வாழ்வு ஒழிந்து சுதந்திரமாக வாழப் போகிறோம் என்ற கனவுடன் அனைத்து மிருகங்களும் இணைந்து வேலை செய்கின்றன. ”இரண்டு கால் பிராணிகள் மோசமானவை; நான்கு கால் பிராணிகளும் இறக்கைகள் கொண்ட பறவைகளும் நல்லவை” என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. ”அனைத்து மிருகங்களும் சமத்துவமானவை” என்ற முழக்கம் அனிமல் ஃபார்மில் தாரகை மந்திரமாகிறது. சாட்டையடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது, அனைத்து மிருகங்களும் வயிறாரச் சாப்பிட்டு நிம்மதியாக உறங்கி வாழ்கின்றன. பச்சை நிறத்தில் குளம்பு, கொம்பு சின்னங்கள் பொறித்த கொடி அனிமல் ஃபார்ம் கொடியாகிறது. ’இங்கிலாந்தின் மிருகங்கள்’ என்ற பாட்டு இயற்றப்பட்டு அதுவே அவர்களின் கீதமாகிறது. ’அனிமலிசம்’ அவர்களின் கோட்பாடாகிறது. ஏழ அம்சங்கள் அடங்கிய பிரகடனம் பண்ணையின் பிரதான பகுதியில் எழுதி வைக்கப்படுகின்றன.

1.இரண்டு கால் பிராணிகள் எதிரிகள்,
2.நான்கு கால்கள் அல்லது இறக்கைகள் கொண்ட பிராணிகள் நண்பர்கள்,
3.எந்தவொரு பிராணியும் ஆடைகள் அணியக் கூடாது,
4.எந்தவொரு பிராணியும் கட்டிலில் படுக்கக் கூடாது,
5.எந்தவொரு பிராணியும் மது அருந்தக் கூடாது,
6.எந்தவொரு பிராணியும் மற்ற பிராணிகளைக் கொல்லக் கூடாது,
7.அனைத்துப் பிராணிகளும் சமத்துவமானவை ஆகிய ஏழு பிரகடனங்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

பண்ணையை இழந்த ஜோன்ஸ், தான் இழந்ததை மீட்க மீண்டும் வருகிறான். மிருகங்கள் ஒற்றுமையுடன் நின்று அவனைத் தாக்கித் துரத்துகின்றன. அனிமல் ஃபார்மைக் காப்பாற்ற நடந்த இந்தச் சண்டையில் ஸ்னோபாலின் பங்கு மிகவும் முக்கியமானது. சண்டை நடைபெற்றபோது நெப்போலியன் ஓடி ஒளிந்து கொண்டது. பண்ணையில் ஒரு காற்றாலை நிறுவ வேண்டும் என்று ஸ்னோபால் ஆலோசனை கூறுகிறது. நெப்போலியன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இருப்பினும் காற்றாலை கட்டுவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவாகிறது. தோல்வியைப் பொறுக்காத நெப்போலியன் வஞ்சம் தீர்க்க நினைக்கிறது.

பண்ணை வீட்டுக்குள் இருந்து பாய்ந்து வரும் நாய்கள், ஸ்னோபால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அதனைத் தாக்குகின்றன. விரட்டி அடிக்கின்றன. புதருக்குள் விழுந்து தப்பி ஓடும் ஸ்னோபால் அதற்கப்புறம் வரவேயில்லை. இரகசியமாக ஒரு நாய்ப் படையை நெப்போலியன் காவலுக்கு வைத்திருப்பது தெரிய வருகிறது. நெப்போலியன் பண்ணையின் ஒரே தலைவனாகிறது.

நிலைமைகள் சிறிது சிறிதாக மாறத் தொடங்குகின்றன. பண்ணையில் உள்ள மற்ற மிருகங்களை காவல் நாய்கள் அச்சுறுத்துகின்றன. மிருகங்கள் எந்நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. சந்தேகப்படும் மிருகங்களை நெப்போலியன் நாய்களை ஏவிவிட்டுக் கொல்வது இயல்பாகிறது. இப்போது காற்றாலை கட்டும் பணியை நெப்போலியன் தொடங்குகிறது. பாக்ஸர் என்ற குதிரை, பண்ணையின் விசுவாசமான பிராணி. காற்றாலை கட்டும் பணியில் அல்லும் பகலும் உழைக்கிறது. ஒரு கடும் புயலில் காற்றாலை இடிந்து விழுகிறது. அதைத் திரும்பக் கட்டுமாறு நெப்போலியன் ஆணைபிறப்பிக்கிறது. நெப்போலியனுக்கு குற்றேவல் புரிய ஸ்கூயிலர் என்ற பன்றியும், பாதுகாப்பளிக்க எட்டு நாய்களும் இருக்கின்றன.

காற்றாலை கட்டுமானத்திற்கு அதிகம் செலவாகிறது. விலைவாக பிராணிகளுக்கு வழங்கப்படும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. குறைந்த உணவு, அதிக வேலை என்பதால் மிருகங்கள் மெலிந்து வாடுகின்றன. கோழிகள் இடும் முட்டைகள் அனைத்தும் விற்கப்படுகின்றன. கோழிகளின் எண்ணிக்கை குறைகிறது. மாடுகளிடமிருந்து அதிகம் பால் கறக்கப்படுகிறது. பால் முழுவதையும் பன்றிகள் குடிக்கின்றன. பன்றிகள் பண்ணையின் சிறப்புப் பிராணிகள் ஆகின்றன. ஜோன்ஸ் வாழ்ந்த வீட்டுக்குள் அவை வசதியாக வாழ்கின்றன. கட்டிலில் படுத்து உறங்குகின்றன. பீர் குடித்து போதையில் மிதக்கின்றன. ஜோன்ஸ் உடுத்திய ஆடைகளை அணிந்து நெப்போலியன் அழகு பார்க்கிறது. ஜோன்ஸ் மனைவி உடுத்திய ஆடைகளை பெண் பன்றிகள் அணிந்து மகிழ்கின்றன. நெப்போலியனின் வாரிசுகளாக பன்றிகள் பெருகுகின்றன.

ஜோன்ஸ் மீண்டும் பண்ணையை மீட்க வருகிறான். கடும் சண்டை. நடக்கிறது. ஜோன்ஸ் தோற்கடிக்கப்படுகிறான். ஆனால் மிகப் பெரிய சேதாரம் ஏற்படுகிறது. காற்றாலை எதிரிகளால் இடிக்கப்படுகிறது. சண்டையில் கிடைத்த வெற்றி நெப்போலியனின் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. நெப்போலியனைப் புகழ்ந்து ’தோழர் நெப்போலியன்’ என்ற பாடல் பாடப்படுகிறது. ’இங்கிலாந்தின் மிருகங்கள்’ கீதம் நீக்கப்பட்டு ’அனிமல் ஃபார்ம்’ என்ற புதிய பாடல் இயற்றப்படுகிறது. பண்ணையின் முகப்பில் நெப்போலியனின் முழு உருவப் படம் வைக்கப்படுகிறது.
மொத்தத்தில் நெப்போலியன் சர்வாதிகாரியாக மாறுகிறது. மிருகங்கள் மீண்டும் அடிமைகள் ஆகின்றன.

பட்டினியால் அவதிப்படுகின்றன. அடிமை மிருகங்களில் சற்று கெட்டிக்கார மிருகமான பெஞ்சமின் என்ற கழுதை ஏழு பிரகடனங்கள் மாற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது, “அனைத்து மிருகங்களும் சமத்துவமானவை, ஆனால் சில மிருகங்கள் அதிகம் சமத்துவமானவை” என்று மாற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ”எந்தவொரு மிருகமும் மது அருந்தக் கூடாது” என்பதை மாற்றி, அளவுக்கு அதிகமாக மது அருந்தக் கூடாது என்று எழுதப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகிறது. மிருகங்கள் திகைத்து நிற்கின்றன.

உழைத்துக் களைத்த பாக்ஸர் குதிரை நோயில் விழுகிறது. பாக்ஸர் குதிரையை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்வதாக நெப்போலியன் பொய் சொல்லி பாக்ஸரை கசாப்புக் கடைக்காரனிடம் விற்றுப் பணமாக்குகிறது. ஆனால் பாக்ஸருக்கு இறுதி மரியாதை செய்வதாக நாடகமாடுகிறது.

நெப்போலியனும், மற்ற பன்றிகளும் அருகிலிருக்கும் மற்ற பண்ணை உரிமையாளர்களின் நட்பு வட்டத்தில் இருக்கின்றன. மனிதர்களுக்கு இணையாக நாற்காலிகளில் அமர்ந்து விருந்துண்கின்றன. குடித்துக் கும்மாளமிடுகின்றன. பசியில் வாடும் மற்ற மிருகங்கள் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கின்றன. உள்ளே குடித்துக் கும்மாளம் போடும் பன்றிகளுக்கும், மனிதர்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை. அடிமை வாழ்வுக்கு முடிவு கட்டுவோம். சமத்துவ சமுதாயம் படைப்போம் என்ற கனவுகள் தோற்றுப் போகின்றன. தங்கள் சமத்துவ சமுதாயத்தில் நெப்போலியன் சர்வாதிகாரியாக மாறும் என்பதை எதிர்பார்த்திராத மிருகங்கள் அதிர்ச்சி அடைகின்றன.

அனிமல் ஃபார்ம் நாவல் அரசியல் பகடி மட்டுமல்ல. மனிதர்களுக்கான கதையை மிருகங்களின் கதைபோல் சொல்லிச் செல்லும் உத்தியுடனான உருவகக் கதையுமாக (Allegory) அது இருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் நிறைவான, மகிழ்ச்சியான உலகைச் சித்தரிக்கும் உடோப்பியா (Utopia) எனப்படும் நாவல்களும், குறைகள் நிறைந்த மோசமான உலகைச் சித்தரிக்கும் டிஸ்டோப்பியா (Dystopia) நாவல்களும் படைக்கப்படுகின்றன. இந்த வகையில் அனிமல் ஃபார்ம் மிகச் சிறந்த டிஸ்டோப்பியா நாவலாகும்.

நூல் அறிமுகம் எழுதியவர் :

– பெ.விஜயகுமார்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *