ஆறு பூதம்
——————–
ஏரு கலப்பை உழுத நெலங்களில்
சோறு வெளஞ்ச தேசத்துல
காடு மழை தாண்டி நியாயங்கேட்டு
ஆறு போல கடந்து வரோம்.
சேரும் கடல் எது சாமி..?
கோதுமைக்கும் கோவணத்துக்கும்
வாக்கப்பட்ட குலம் கூடி
வாதைகள தீர்க்கச் சொல்லி
நேரங்கணக்கா தவங்கெடக்கோம்.
அய்யா அரசாங்கம்
அடுத்த வேளை களங்காணும்
மண்ணைப் புடிச்ச கைக்கு
விலங்கேதும் போடாதீங்க.
வெளங்கும்படி சொன்னா
விவசாயி கஞ்சிக்கு
வரி விதிக்காதீங்க
நாங்க பெத்த நெல்லுக்கு
நாங்க தான பேரு வைப்போம்..
யார் யாரோ விலை சொல்ல
உரிமை கோரி வாராங்க
நீங்களே வழி விட்டா
எங்க போயி பந்தி வைப்போம்.
குளம் வத்திப் போனாலும்
மழை வந்து தேத்திகிடும்
குடல் வத்திப் போறதுக்கா
பரிதவிச்சுக் கெடக்கோம்
உத்தரவ எடுத்துகிட்டு
பத்திரமா அனுப்பி வைங்க.
உத்திரவாதம் தந்து
இந்தியாவின் முதுகெலும்ப
சத்தியமா பாத்துக்குவோம்.
ஜே.ஜே.அனிட்டா