தோழர் D.L. எனப்படும் தே. இலட்சுமணன் மறைந்துவிட்டார் என்னும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.

நான் அரசு ஊழியராக மாறியபின்னர் பெரியாரிய, மார்ச்சிய சமூகத் சிந்தனைகளை என் மீது ஏற்றியவர்கள் அப்போது கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த என் மைத்துனர் (தோழர் இரா.இரத்தினகிரி) அவர்களும், பொதுச் செயலாளராக இருந்த தோழர் தே. இலட்சுமணன் அவர்களும் ஆவார்கள்.

பெரியாரிய சிந்தனைகளுடன் இருந்த என்னை, படிப்படியாக மார்க்சியச் சிந்தனைப்பக்கம் கொண்டுவந்ததில் தோழர் D.L.-க்குக் கணிசமான பங்கு உண்டு. நான் சென்னை வரும்போதெல்லாம் அப்போது சைதாப்பேட்டை, சேசாஷசல முதலித்தெருவில் இருந்த அவர்கள்  அறையில்தான் தங்குவது வழக்கம். இரவு முழுவதும் அவருடன் கலந்துரையாடியிருக்கிறேன். இயக்க இயல் பொருள்முதல்வாதம் குறித்து அவரிடம் அரை மணிநேரம் கூறச்செய்து என்னுடைய டேப்-ரிக்கார்டரில் பதிவு செய்திருக்கிறேன்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தில் இருந்தபோதே அரசு ஊழியர் இதழைக் கொண்டுவந்த சமயத்தில் அவர்தான் defacto ஆசிரியராக இருந்தார்.

நான் சென்னையில் சட்டமன்ற மேலவையில் பணிசெய்த காலத்தில் அரசு ஊழியர் இதழுக்காக அடிக்கடி தோழர் எம்.ஆர். அப்பன் வீட்டில் சந்தித்துக்கொள்வோம். அரசு ஊழியர் இதழைக் கொண்டுவர தோழர்கள் எம்.ஆர்.ஏ. மற்றும் டி.எல். ஆகியோரின் பங்களிப்பு என்பது அநேகமாக நூறு சதவீதம் என்றே கூறலாம். பின்னர் அரசு ஊழியர் சங்கம் உருவானபின்னர்தான் அரசு ஊழியர் இதழ் அரசு ஊழியர் சங்கத்தின் அதிகாரபூர்வ இதழாக மாறியது.

காரைக்குடியில் தோழர் சோமசுந்தர போஸ் ஐ.டி.ஐ-இல் பணியாற்றிய காலத்தில் ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் தோழர்கள் தே. இலட்சுமணன், அரசின் பொருளதாரக் கொள்கைகளும், அரசு ஊழியர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்- அதனை நான் பதிவு செய்து, வைத்திருந்தேன். அதேபோன்று பின்னர் ஒரு கருத்தரங்கம் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாட்டில் நடைபெற்றது. அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் நடைபெற்ற  இக்கருத்தரங்கில் தோழர்கள் எம்.ஆர்.ஏ., தே.இலட்சுமணன், டி.கே. ரங்கராஜன் மற்றும் சிவ.இளங்கோ கலந்துகொண்டார்கள்.  அதன்பிறகு இதுபோன்ற கருத்தரங்குகள் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் வேறெங்கும் நடந்ததாகத் தெரியவில்லை.

தஞ்சையில் அரசு அலுவலர் ஒன்றிய மையத்தில் அரச ஊழியர்களை எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்து தோழர் டி.எல். ஒரு வகுப்பு எடுத்தார். அதனை “அதோ ஆபத்து” என்ற தலைப்பில் ஒரு சிறுபிரசுரமாக தஞ்சை அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் வெளியிட்டோம். அந்த  உரையில் பாதிரியார் நிமரல் கூறிய கவிதையை மேற்கோள் காட்டியிருந்தார். பின்னர் நம் தோழர்கள் கணிசமாக அதனைப் பிரபல்யப்படுத்தினார்கள்.

எனக்கு உண்மை மனிதனின் கதையை அறிமுகப்படுத்தியது தோழர் டி.எல்.தான். அதேபோல் காலையில் நான்கு மணிக்கு எழுந்து ஆறு மணி வரை படிக்க வேண்டும் என்கிற பழக்கத்தை அவர் கொண்டிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியதர வகுப்பு அரங்கங்களில் வேலை செய்துகொண்டிருந்த தோழர்களில் கட்சியின் முழுநேர ஊழியர்களாக வர வேண்டும் என்று கேட்கப்பட்டு அவ்வாறு வந்த தோழர்கள் அப்போது மூன்று பேர். அவர்கள் தோழர்கள் டி.எல்., உ.ரா.வரதராசன் மற்றும் சந்திரசேகரன் என்பவர்களாவார்கள். டி.எல். அப்போதிருந்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை-செங்கை மாவட்டக்குழு இரண்டாகப்பிரிக்கப்பட்டு, செங்கை மாவட்டத்திற்கு செயலாளராகப் பொறுப்பேற்றார். கட்சியின் மாநில செயற்குழுவிலும் இடம்பெற்றார்.

தென்தமிழகத்தில் கேரளாவிற்கு அடுத்ததாக தமிழகத்தின் அரசு ஊழியர் அரங்கில் கணிசமான அளவிற்கு சிவப்புச் சிந்தனையாளர்களை உருவாக்கியதில் தோழர் டி.எல். மற்றும் எம்.ஆர்.ஏ. போன்றோர் காரணம் என்றால் அது மிகையல்ல.

நான் 45 வயதில் அரசு ஊழியர் பணியிலிருந்து வெளியேற, என் குடும்பத்தாரை, குறிப்பாக என் வாழ்க்கைத் துணைவியாரை, என் மைத்துனர் இரா. இரத்தினகிரி மூலமாக இணங்கச் செய்வதற்கு உதவியது தோழர் டி.எல். அவர்கள்தான்.  ஓய்வுபெற்றபின் மாநிலக்குழு அலுவலகத்தில் வந்து ரிப்போர்ட் செய்தபோருது, தோழர்கள் என்.வரதராஜனும், டி.எல்.-உம்தான் என்னை தீக்கதிர் இதழுக்கு உதவி ஆசிரியராக நியமனம் செய்து அனுப்பிவைத்தார்கள். மதுரை, தீக்கதிர், பொது மேலாளருக்கும் உரிய முறையில் தெரிவித்தார்கள்.

தோழர் அரணமுறுவல் ‘செந்தாரகை’ என்று ஓர் இதழ் வெளிக்கொண்டுவந்தார். அதில் இயக்க இயல் பொருள்முதல்வாதம் குறித்து தொடர்ந்து எழுத ஒப்புக்கொண்டு, டி.எல்., செங்கை இளவல் என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதினார். ஆயினும் பின்னர் அந்த இதழ் வெளிவரவில்லை.

அதேபோல் அரசு ஊழியர் சங்கத்தின் நாட்குறிப்பிலும், ஓய்வூதியர் சங்கத்தின் நாட்குறிப்பிலும்  முதல் பக்கத்தில் தொழிலாளர் இயக்கத்தின் இலக்கணம் குறித்து சுரங்கத்தொழிலாளி ஒருவரின் கவிதையை வெளியிட்டுவருகிறோம், அல்லவா! அதனைத் தமிழாக்கம் செய்ததும் தோழர் டி.எல். அவர்கள்தான்.

தோழர் டி.எல்.! என்றென்றும் எங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள். செவ்வணக்கம் தோழர்.

..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *