நூல் அறிமுகம்: காந்தி படம் கண்ட தமிழர் “அண்ணல் அடிச்சுவட்டில்”-  மு.இராமனாதன்

 

(செப்டம்பர், 10 .கே.செட்டியாரின் நினைவு நாள்)

காந்தி ஆவணப்படம் 1940இல் வெளியானது. பத்து நிமிடச் செய்திப் படங்களே மக்கள் மத்தியில் பிரபலமாயிராத காலத்தில், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய முழு நீள ஆவணப் படமாக -அதுவும் தமிழில்– தயாரித்து வெளியிட்டவர் ஏ.கே.செட்டியார். படம் வெளியாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு 1978–79இல், படம் தயாரித்த அனுபவங்களைத் தான் நடத்திவந்த ‘குமரி மலர்’ பத்திரிகையின் 10 இதழ்களில் தொடராக எழுதியிருக்கிறார் ஏ.கே. செட்டியார். அதுவே ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ என்கிற நூலாக வெளியாகியிருக்கிறது. எனில், நூல் அந்தத் தொடரை மட்டும் உள்ளடக்கியதன்று. நூலின் பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, படம் வெளியான காலத்தில் வ.ரா, கல்கி, சங்கு சுப்பிரமணியன் முதலான பிரபலங்கள் எழுதிய மதிப்புரைகளையும், படப் பாடல்களையும், படத்திற்குச் செய்யப்பட்ட விளம்பரங்களையும் பின்னிணைப்பாகக் கொடுத்திருக்கிறார். வெவ்வேறு காலங்களில் படம் குறித்து ஏ.கே.செட்டியார் எழுதிய கட்டுரைகளைத் தேடிக் கண்டடைந்து பொருத்தமாக முன்னுரையாகவும், பின்னுரையாகவும் சேர்ந்திருக்கிறார். ‘உலகம் சுற்றும் தமிழர்’ என்று அவர் எழுதிய நூலொன்றின் பெயராலேயே குறுகிய தமிழ் ஆர்வலர்கள் வட்டத்தில் அறியப்பட்ட, ஏ.கே.செட்டியாரைப் பற்றி ஒரு விரிவான முன்னுரையும் எழுதியிருக்கிறார் பதிப்பாசிரியர்.       

“குடத்திலிட்ட விளக்குகளுக்குத் தமிழுலகில் பஞ்சமில்லை. அவர்களுள் ஒருவர் அ.ராம.அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்ற ஏ.கே.செட்டியார் (04.11.1911 – 10.09.1983)” என்று துவங்குகிற முன்னுரையில், விடுதலைப் போர், சமூகச் சீர்திருத்தம், இதழியல், பயணம் முதலான துறைகளில் ஏ.கே.செட்டியாரின் பங்களிப்பை விவரிக்கிறார். பாரதியியலுக்கு ஏ.கே.செட்டியார் வழங்கிய கொடையையும் அறியத் தருகிறார். ‘காந்தி’ படத்தைப் பற்றிய முக்கியச் செய்திகளையும் முன்னுரையில் பேசுகிறார் சலபதி.

1938இல் 50 பங்குதாரர்களைக் கொண்ட ‘டாக்குமெண்டரி பிலிம்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை ஏற்படுத்திய ஏ.கே.செட்டியார், தொடர்ந்து காந்தி தொடர்பான படச்சுருளைகளைத் தேடி இந்தியாவில் உள்ள பல ஸ்டுடியோக்களின் படிகளில் ஏறி இறங்கினார். ஆவணப்படம் என்ற கருத்தாக்கமே இல்லாத காலம். பலரும் “இந்தக் குப்பைகளை என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டனர். ஆனால், அவற்றின் அருமையை உணர்ந்த ஏ.கே.செட்டியார் ஓராண்டு முழுவதும் சேகரித்தார். அந்தச் சேகரம் போதுமானதாக இல்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் முப்பதுக்கும் மேற்பட்ட செய்திப்பட நிறுவனங்களை நாடினார். ரோம், பாரீஸ், லண்டன், ஜெனிவா, நியூயார்க், வாஷிங்டன், ஜோகன்ஸ்பர்க் என்று உலகையே வலம் வந்தார். அவரது மெய் வருத்தத்திற்குக் கூலி கிடைத்தது. இந்தியாவில் கிடைக்காத பல பொக்கிஷங்களை அவர் வெளிநாடுகளில் கண்டடைந்தார்.        

நேரு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், பண்டித மதன்மோகன் மாளவியா, ஆசார்யா கிருபளானி, சர் சி.வி.ராமன், கல்வியாளர் மாண்டிசோரி அம்மையார், பிரெஞ்சு எழுத்தாளர் ரொமெய்ன் ரொலந்து முதலான பலரையும் நேர்கண்டு படம் பிடித்தார். நூற்றுக்கணக்கான பெண்கள் வரிசையாக அமர்ந்து ராட்டையில் நூல் நூற்கும் காட்சியைப் படம் பிடித்தார். அதற்குப் பின்னணியாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் ‘ஆடு ராட்டே’ பாடலை டி.கே.பட்டம்மாளைப் பாட வைத்தார். 1923 முதல் நடந்த பல்வேறு காங்கிரஸ் மாநாடுகளும் படத்தில் இடம் பெற்றன. எல்லா மாநாடுகளிலும், “கதாநாயகராகத் திகழ்ந்தவர் காந்தியடிகள்” என்கிறார் ஏ.கே.செட்டியார்.

Amazon.in: Buy Annal Adichuvattil அண்ணல் அடிச்சுவட்டில் Book Online at Low  Prices in India | Annal Adichuvattil அண்ணல் அடிச்சுவட்டில் Reviews & Ratings

இந்தப் படம் எடுத்த மூன்றாண்டு காலமும் ஏ.கே.செட்டியார் காந்தியடிகளைச் சந்திக்கவோ உரையாடவோ இல்லை. தென்னாப்பிரிக்கா சென்றபோது பி.கே.நாயுடு, தம்பி நாயுடு ஆகியோரின் மனைவிமார்களைச் சந்தித்தார். இவர்களும், காலஞ்சென்ற இவர்களது கணவன்மார்களும் காந்தியடிகளின் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். இந்தப் பெண்மணிகள் காந்தியடிகளுக்குச் தனித்தனியே கடிதம் எழுதி ஏ.கே.செட்டியாரிடம் கொடுத்தனர். காந்தி பக்தரான ஏ.கே.செட்டியார், காந்தியடிகளைச் சந்திக்க ஏற்பட்ட இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல், இரண்டு கடிதங்களையும் வார்தாவில் அஞ்சலில் சேர்த்தார். ஏன்? அவரே சொல்கிறார்:

“காந்தியடிகளை நான் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தால், ‘நீ என்ன செய்கிறாய்?’ என்று காந்தியடிகள் ஒரு வேளை கேட்கலாம். ‘பாபுஜி! உங்கள் படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூற நேரிடும். ‘படம் எடுக்க வேண்டாம்’ என்று காந்தியடிகள் கூறிவிட்டால், அதுவே கடைசி வார்த்தை! எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த நிலை ஏற்படக்கூடாது என்று ஆண்டவனை பிரார்த்தித்தேன். பிரார்த்தனை பலித்தது!”         

          23 ஆகஸ்டு, 1940 இல் ‘காந்தி’ படம் சென்னை ராக்ஸி, மதுரை சிந்தாமணி, கோவை நியூகர்னாடிக், காரைக்குடி நடராஜா, திருநெல்வேலி ராயல் திரையரங்குகளில் அரங்கேறியது. நாளிதழ்கள் படத்தைக் குறித்துச் சிறப்பாக எழுதின. சென்னையில் காமராஜரும், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும் இரண்டாம் வகுப்பு நுழைவுச் சீட்டு வாங்கிப் படம் பார்த்தனர். ராஜாஜி படத்தைப் பார்த்துவிட்டு மனந்திறந்து பாராட்டினார். காரைக்குடியில் தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம், வள்ளல் அழகப்பச் செட்டியார் முதலியோர் படம் பார்த்தனர். இளைஞர்களும், பெரியவர்களும், கிராமத்தினரும், நகரத்தினரும் ஒருங்கே படத்தால் கவரப்பட்டனர். படம் வெற்றி பெற்றது.

          படத்தின் தொகுப்பு வேலைகள் மும்பையில் நடைபெற்ற போது ஏற்பட்ட ‘எதிர்பாராத பேராபத்து’ ஒன்றையும் ஏ.கே.செட்டியார் விவரிக்கிறார். ஆங்கிலேய அரசு தயாராகி வரும் படத்தின் பிரதிகளைப் பறிமுதல் செய்யத் திட்டமிடுகிறது என்கிற செய்தி படக்குழுவினருக்குக் கிடைக்கிறது. படத்தின் ஆறு பிரதிகளை உருவாக்கி அவற்றைச் சென்னையில் உள்ள நண்பரிடம் கொடுத்து அதை வெவ்வேறு இடங்களில் மறைத்து வைக்க ஏற்பாடு செய்கிறார் ஏ.கே.செட்டியார். “….ஆனால், எங்கு மறைத்து வைத்திருக்கிறார் என்ற விவரம் எங்களுக்குச் சொல்லக்கூடாது” என்றும் சொல்லி விடுகிறார். அப்படிப் போற்றிப் பாதுகாத்த படப்பிரதிகள் ஒன்றும் இப்போது கிடைக்கவில்லை. தமிழ்ப் படம் வெளியானவுடனேயே தெலுங்கிலும், 1950ல் இந்தியிலும் ‘காந்தி’ படத்தை தயாரித்தார் ஏ.கே.செட்டியார். அந்தப் பிரதிகளும் கிடைக்கவில்லை. மூலப்படிவத்தின் அடிப்படையில் 1953ல் ஹாலிவுட்டில் Mahatma Gandhi: Twentieth Century Prophet ஆங்கிலப் படம் தயாரிக்கப்பட்டது. 81 நிமிட நீளமுள்ள படம். 2005ல் கண்டெடுக்கப்பட்டது. சென்னையில் சிலமுறை திரையிடப்பட்டுமுள்ளது.

 

‘அண்ணல் அடிச்சுவட்டில்’ நூலின் முன்னுரையில் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி இப்படிச் சொல்கிறார்: “…ஏறத்தாழ நூறு காமிராக்காரர்கள் முப்பது ஆண்டுகளில் படம் பிடித்த 50,000 அடி நீளமுள்ள படங்களை, உலகம் முழுவதும் ஒரு லட்சம் மைல் பயணம் செய்து தேடியெடுத்து, 12,000 அடி நீளமுள்ள படமாகத் தொகுத்து 1940இல் அதை வெளியிட்டார். அப்போது அவருக்கு வயது 29. இதை ஒரு சாதனை என்று சொல்வது குறைவு நவிற்சியாகவே இருக்க முடியும். இதனைத் தமிழரல்லாதவர் ஒருவர் செய்திருந்தால் இந்தியாவே கொண்டாடி இருக்கும் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை”

இந்தியர்கள் கொண்டாடுவது இருக்கட்டும். தமிழர்களில் எத்தனை பேருக்கு இந்தச் சாதனையாளரைத் தெரியும்? அந்தக் குறையை இந்த நூல் ஓரளவிற்கு நீக்கும்.

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி - Mu Ramanathan | மு  இராமனாதன்

 

அண்ணல் அடிச்சுவட்டில்

மகாத்மா காந்தியின் ஆவணப்படம் உருவான கதை

ஏ.கே.செட்டியார் 

பதிப்பாசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி

விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு, மே 2016

பக்கங்கள்:288, விலை:ரூ.250/=

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001, தொலைபேசி:91-4652-278525

 

##

 

அந்திமழை இதழ் 2018இல் நடத்திய நூல் விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது

##

(மு இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்; தொடர்புக்கு: [email protected])