அண்ணாமலை புராணம் (திருவண்ணாமலை தமுஎகச வரலாறு) 2 – பிரளயன்

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam



அது 1978ன் இடைப்பகுதி என நினைக்கிறேன். தமுஎச திருவண்ணாமலை கிளையின் முதல் நிகழ்ச்சி, தேரடி வீதியிலுள்ள அன்னசத்திரத்தினது முதல் மாடியில் நடந்தது. அப்போது தமுஎச நடத்துகிற பொது நிகழ்ச்சிகளில் கவியரங்கத்திற்குத்தான் ‘மவுஸ்’ அதிகம். எனவே அந்த முதல் நிகழ்வு என்பது ஒரு கவியரங்கமாகத் தான் நடந்தேறியது.

வெண்மணி கவியரங்கத் தலைமையேற்க கவிஞர்கள், அருணை செயவேங்கடன், வெ.மன்னார், ஏ.டி.எம். பன்னீர் செல்வம், முகில்வண்ணன், கலை தாசன், மற்றும் ஒருசிலர் அவர்களின் பெயர்கள் எனக்கு நினைவிலில்லை இவர்களோடு நானும் ஒரு கவிதை வாசித்தேன். இறுதியில் கவிஞர்.தணிகைச்செல்வன் சிறப்புக்கவிதை வாசித்தார். தணிகைச்செல்வனது கவியரங்கக் கவிதைகள் கேட்போரை வசீகரிப்பவை; பிரபலமானவை.

அவர் ஒவ்வொரு கவியரங்கத்தின் போதும் அப்போதுள்ள சூழலையொட்டிய சில கவிதைகளை வாசிப்பார். இறுதியில் முத்தாய்ப்பாக தொழிலாளர்கள் மத்தியில், தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தனது ‘செஞ்சேனை மறவனே வா! “ எனும் கவிதையினை வாசிப்பார்.

சங்கரர் பிறந்த பூமி
சைதன்யர் வளர்ந்த பூமி
வங்கத்துப் பரமஹம்சர்
வடலூர் விவேகானந்தரோடு
எத்தனை மகான்களின்
ஜென்ம பூமி-இன்னும்
தரித்திரம் ஏனோ சாமி
பூசையில் குறை வைத்தோமா-சபரிமலை
செல்லும் ஆசையில்
குறை வைத்தோமா
திருப்பதி
உண்டியலில் போடும்
காசினில் குறை வைத்தோமா- இல்லை
வாரியாருக்குத் தரும் ஃபீஸினில்
குறை வைத்தோமா
இருந்தும் ஏன் பற்றாக்குறை?
போன்ற பல கூர்மையான சமகால சமூக விமர்சனக் கேள்விகளால் தொடங்கும் தணிகைச்செல்வனது கவிதை , ஒரு காத்திரமான அரசியலை முன்வைத்து மக்களை இவ்வாறு அறைகூவி அழைக்கும்.

நிலமன்னர், தொழில் மன்னர், டாலர் நாட்டின்
நிதிமன்னர் என்கின்ற மூன்று மன்னர்
விழும் முன்னர்,நம் நாட்டுக்குடிமன்னர்கள்
வெறும் மன்னர் தாம்! நாமும் விதியை நோக்கி
அழும் முன்னர் சிந்திக்கவேண்டும்; …………….
கணவனை இழந்ததாலே
கண்ணகி சீற்றம் நியாயம்
துணியினை இழந்ததாலே
துரோபதை சபதம் நியாயம்
மனைவியை இழந்ததாலே
ராமனின் யுத்தம் நியாயம்
அனைத்தையும் இழந்த
நமது ஆவேசம் நியாயம் நியாயம்
உழுநிலம் பறிக்கப்பட்டால்
உழுபவன் கிளர்ச்சி நியாயம்
உழைப்பவன் மறுக்கப்பட்டால்
உரிமைப்போர் முழுதும் நியாயம்!
அறுபது கோடி மக்கள்
அனைத்துமே பறிக்கப்பட்டு
அழுகையில் சிரிக்கிறாயே
ஆத்தா ! இது என்ன நியாயம்?
அமைதியின் பேரால்
இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம்
இமை மூடிக்கிடக்கவேண்டும்?
எண்ணினேன்; எண்ணும்போதே
குமுறினேன்; கொந்தளித்தேன்;
கொடுங்கோலை முறிக்காவிட்டால்
தமிழுமேன்? இலக்கியமேன்?
சரித்திரப்பெருமைகள் ஏன்?
நொடிக்கொரு சட்டமிட்டு
நொறுக்கிடும் ஆதிக்கத்தின்
குடிக்கு இங்கே நாட்டையாளும்
கொற்றம் ஏன்? கோட்டங்கள் ஏன்?

அடித்திடச்சீறுகின்ற
ஆற்றலின் வர்க்கமே ,நீ
வெடித்திடும் முழக்கம் எங்கே?

வெறி எங்கே? தூங்கும் போதும்
துடித்திடும் தோள்கள் எங்கே?
துரோகத்தை தூள்படுத்தி
பொடித்திடும் தடக்கை எங்கே?
போர் எங்கே? எங்கே என்று
நடந்திடும் தாள்களெங்கே?
நரம்பெங்கே ? நாளங்களெங்கே?
அறுத்தெறி தளையை; இந்த
அடிமைச்சங்கிலியைத் தூளாய்
உடைத்திட வா,வா! என்று
உதிரமே கொப்பளிக்க
அழைக்கிறேன் தோழா! உன்னை
அணைக்கிறேன் வாராய்! வாராய்!!
என்று அவர் கவியரங்கை முடித்தார். கவியரங்கு முழுக்க அவர் வாசிக்கும் போது கைதட்டி ஆரவாரித்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் இப்படி அவர் கவியரங்கை முடித்ததும் அதிர்ந்து போய் அமைதியாகிவிட்டனர். அவர்களுக்கு என்ன செய்வதெனத்தெரியவில்லை. சில நொடிகள் ஆழ்ந்த மௌனம். பிறகு ஏக காலத்தில் கைதட்டி எழுந்து நின்று பாராட்டினர்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
முற்றம் நிகழ்வில் பவா

தணிகைச்செல்வனது கவிதைகள் ‘ விமர்சன யதார்த்தவாதத்தினடிப்படையில்’ சமூகத்தை நோக்குபவை. அவரது கவியரங்க பாணி குறித்தும் கவிதை குறித்த அவரது அணுகுமுறை குறித்தும் விமர்சனங்கள், மாற்றுக்கருத்துகளெல்லாம் தமுஎச-விற்குள் அப்போதே நிலவிவந்ததுண்டு. அவை தனித்து பேசவேண்டிய விஷயம். அவர் அன்று ஒரு மணி நேரம் வாசித்த கவிதையில் ஒரு சில வரிகளையே இங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் தமுஎச-வினது நிகழ்வுகளில் , நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்கள் தங்கள் கருத்தினை வெளிப்படுத்தும் விதமாக பார்வையாளர்கள் விமர்சனம் என்கிற ஏற்பாடுகள் உண்டு. அன்று அது போலவே பார்வையாளர் விமர்சனமும் இறுதியில் வைத்திருந்தோம்.

நிகழ்வின் நிறைவில், அப்படி தனது கருத்தைச் சொல்லவந்த நகரப்பிரமுகரும் டாக்டருமான ஒருவர், கவிதை வாசித்த தணிகைச்செல்வனை கடுமையான தரக்குறைவான வார்த்தைகளால் வசைமாரி பொழிய ஆரம்பித்துவிட்டார். கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை கள் குறித்து விமர்சனங்கள் சொல்லவும் மாற்றுக் கருத்துகளை ப்பகிரவும் நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் வந்தவர் இப்படி எதுவும் சொல்லாமல் தரக்குறைவான தனிநபர் வசையில் இறங்கிவிட்டார்.

பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பலர் எழுந்து பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறுமாறும் அவரை, மன்னிப்பு கோருமாறும் கூச்சலிட்டனர். இருப்பினும் அவர் தாறுமாறாய் ப் பேசிக்கொண்டே போனார். எங்கள் சீனியர் மாணவர்களான மோகனசுந்தரமும் பாரியும் மைக்முன்னால் நின்றிருந்த அவரது சட்டையைப்பிடித்திழுத்து அவரைப் பேச விடாமல் தடுத்தனர். ஆத்திரமுற்ற பார்வையாளர்களிலொருவர் தனது கால் செருப்பை கழட்டிக்கொண்டு அந்த டாக்டரை அடிக்க ஓடிவந்தார். அதற்குள் மேடையிலிருந்தவர்கள் தடுத்து அவரை க் காப்பாற்றினார்கள்.

மாற்றுக்கருத்துககளுக்கு இடமளிக்கிற அவற்றை காதுகொடுத்து கேட்கிற ஏற்பாடான ‘பார்வையாளர்கள் விமர்சனம்’ என்கிற இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தாது வசைபாடுதலிலும் அவதூறிலும் இறங்கியதால் கடைசியில் அந்த டாக்டரை பாதுகாப்பாக அனுப்பிவைப்பதே பெரும்பாடாய் ப்போயிற்று.
இந்த அசம்பாவிதத்தால் என்னவாயிற்றென்றால் தமுஎ ச வின் அம்முதல் நிகழ்வு ஊர் முழுதும் பரபரப்பாகப்பேசப்பட்டது. ‘ஓவர்நைட்டில் ஃபேமஸ் ஆகிவிடுவது’ என்பார்களே அது போல அந்நிகழ்வால் த மு எ ச நகர் முழுதும் பிரபலம் ஆனது.

அதற்குப் பிறகு த மு எ ச எந்தவொரு அரங்கக்கூட்டம் நடத்தினாலும் இருநூறு முதல் முன்னூறு பேர் வரை சர்வ சாதாரணமாய்த் திரண்டு விடுவார்கள்.
அப்போதுதான் விழுப்புரத்தில் , பட்டியல் சமூகத்தினரின் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அவர்களது குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு சாதிவெறியர்கள் மிகப்பெரிய கோரதாண்டவத்தினை அரங்கேற்றியிருந்தனர். சமூக முன்னேற்றத்தை ,நல்லிணக்கத்தை நாடுவோரின் கடும் கண்டனத்திற்கு உள்ளான கொடூரம் இது.

அந்த முதல் நிகழ்வில் நடைபெற்ற கவியரங்கில் மேடையேறிய நான், பிரளயன் எனும் புனை பெயரையெல்லாம் அப்போது கொண்டிருக்கவில்லை; எனது இயற்பெயரான சந்திரசேகரன் எனும் பெயரிலேயே அறிமுகமானேன்.

அங்கே அன்று படித்த எனது நீண்ட கவிதையின் ஓரிடத்தில் இவ்வுணர்வை இவ்வாறுவெளிப்படுத்தியிருந்தேன்!

“வெண்மணிச்சாம்பலை
சுகமாய்ப் புசித்தாய்
விழுப்புரச்சாம்பலை
மறுபடியும் கேட்கிறாய்
இந்தியத்தாயே
உனக்கென்ன மசக்கையா?”
எனது கவிதையும் பார்வையாளர்களின் பெருத்த வரவேற்புக்குள்ளானது. நான் அதற்கு ப்பிறகு மாவட்டம் முழுதும் நடைபெறுகிற கவியரங்குகளுக்கு அடிக்கடி அழைக்கப்படலானேன். இந்நிகழ்வினைத்தொடர்ந்து த மு எ ச வலுவான அமைப்பாக திருவண்ணாமலையில் செயல்பட ஆரம்பித்தது. கிளையின் சார்பில் ‘வார்ப்பு’ எனும் கையெழுத்துப் பிரதியைக் கொண்டுவந்தோம்.

கவிஞர்.வெண்மணி, வீ.பா.கணேசன் இருவரது கையெழுத்தும் சித்திரம் போல் மிக வடிவாக இருக்கும். இவர்கள் கைவண்ணத்தால் பலரது படைப்புகளையும் அதில் கொண்டுவருவோம். அரசு ஊழியர் சங்கச் செயற்பாட்டாளரான சந்துரு, ‘பெடரல்’ எனும் பெயரில் சிறுகதைகளையெல்லாம் எழுத ஆரம்பித்தார்.பல புதிய எழுத்தாளர்கள் உருவாயினர். நானும் பல பெயர்களில் அதில் எழுத ஆரம்பித்தேன். எங்கள் கல்லூரி நண்பர்களாக இருந்த சேஷாத்திரி,சீனுவாசன் போன்றோரும் வார்ப்பில் எழுதுவதன் மூலம் எழுத்தாளராயினர்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு பேனரோடு பல்லவன்

வார்ப்பு இதழ் தயாரானதும் டேனிஷ் மிஷன் பள்ளியின் எதிரில் இருந்த திருவண்ணாமலை கிளை நூலகத்தில் கொண்டு போய் வைப்போம். வைத்த ஒருவாரத்தில் 40,50 பின்னூட்டங்கள் வந்துவிடும். அந்த அளவிற்கு நூலக வாசகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது எங்கள் கையெழுத்து இதழ். இதனைத்தொடர்ந்து சற்று அகலக்கால் வைத்து ஒரு பெரிய எட்டு எடுத்துவைப்பது போல் திருவண்ணாமலை நகரில் ஒரு ஃபிலிம் சொஸைட்டியைத் தொடங்கினோம்.

மாற்று சினிமாவை, இணை சினிமாவை மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிற ஃபிலிம் சொஸைட்டிகள் இந்தியாவில் பரவலாகிக்கொண்டிருந்த தருணம் அது.
ஃபிலிம் சொஸைட்டி என்பது , திரைப்பட ஆர்வம் உள்ளவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து அவர்களிடம் சந்தா வசூலித்து, சர்வதேசத்தரம் வாய்ந்த படங்களை அவ்வுறுப்பினர்களுக்கு திரையிட்டு அது குறித்து விவாதித்து அவர்களிடத்தே திரைப்பட ரசனையை மேம்படுத்துகிற ஓர் அமைப்பாகும்.

சென்னையில் மெட்ராஸ் ஃபிலிம் சொஸைட்டி, ஐ சி ஏ ஃபாரம், வேலூரில் வேலூர் ஃபிலிம் சொஸைட்டி, மதுரையில் எதார்த்தா ஃபிலிம் சொஸைட்டி என தமிழ் நாட்டில் நான்கு ஃபிலிம் சொஸைட்டிகள் மட்டுமே அப்போது செயல்பட்டுவந்தன.

இன்று திரைப்படங்களைத்திரையிடுவது என்பது மிகவும் சுலபம் . டிவிடிக்கள், போன்ற மின்னணுச் சாதனங்கள் வாயிலாகவே நமக்கு திரைப்படங்கள் [மென்பொருட்கள்] கிடைத்து விடுகின்றன. அம்மென்பொருட்களை எந்தவொரு [USB] யுஎஸ்பி சாதனங்கள் வாயிலாகவும் சிறிய புரொஜெக்டர்கள் மூலம் எங்கு வேண்டுமானாலும் எந்த ஒரு ஹாலிலும் திரையிட்டு விடமுடியும். ஆனால் அன்று நிலைமை அவ்வாறில்லை. திரைப்படங்கள் 35 எம்.எம். ஃபிலிம் சுருள்களில் தான் கிடைக்கும். அவற்றைத் திரையிட 35 எம்.எம் புரொஜெக்டர்கள் தேவை. அதற்கு திரையரங்குகளைத்தான் நாம் நாடிச்செல்லவேண்டும்.

இத்தகைய ஒரு சூழலில்தான் திருவண்ணாமலையில் ‘வானவில் ஃபிலிம் சொஸைட்டி’ என்கிற ஒரு திரைப்படக்கழகம் தொடங்கப்பட்டது. திரைப்படங்களை 35 எம்.எம் சுருள்களில் பெற்று திரையரங்குகளில் திரையிட்டால் அவற்றிற்கு கேளிக்கை வரி செலுத்தவேண்டி வரும். எனவே வணிக நோக்கற்ற திரையிடல் என்று சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து வரி விலக்கு பெறவேண்டும்.

மத்திய தகவல் துறை அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற ஃபிலிம் சொஸைட்டிகளின் கூட்டமைப்பு [Federation of Film societies of India] ஒன்று இருக்கிறது. இவ்வமைப்பில் இணைப்பு [affliation] பெற்றால் நீங்கள் கேளிக்கை வரி செலுத்தத்தேவையில்லை. ஆனால் ஓராண்டுகளோ ஈராண்டுகளோ தொய்வின்றி ஒரு ஃபிலிம் சொஸைட்டியை நீங்கள் நடத்தினால் மட்டுமே உங்களுக்கு இக்கூட்டமைப்போடு இணைப்பு கிடைக்கும். இப்படிப்பட்ட சவால்கள் இருப்பதை அறிந்தேதான் ஃபிலிம் சொஸைட்டி தொடங்கப்பட்டது.

எங்களில் வீ.பா.கணேசன் சென்னை ஐசி ஏ ஃபாரத்திலும் , எல் ஐ சியில் பணியாற்றுகிற சத்யநாராயணன் வேலூர் ஃபிலிம் சொசைட்டியிலும் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்தவர்கள். இவர்களுக்கே ஃபிலிம் சொஸைட்டிகள் குறித்த பரிச்சயம் உண்டு. இயல்பாக இவர்களே ஃபிலிம் சொஸைட்டியினை வழி நடத்துபவர்களாக இருந்தனர்.

மேலும் எல் ஐ சி யில் பணியாற்றிய ஜோஷி, கிருஷ்ணமுர்த்தி, சண்முகம், அரசு ஊழியர் சந்துரு, நான் மற்றும் வெண்மணி ஆகியோர் இச்செயல்பாட்டில் அவர்களோடு இணைந்துகொண்டோம். மாதச்சம்பளம் பெறுகிற நடுத்தர வர்க்க ஊழியர்களோடு நகரின் பல வணிகர்கள் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு பேனரோடு பல்லவன்

எங்கள் கல்லூரித்தோழர்கள் திக, திமுக மாணவர் அமைப்பைச்சேர்ந்தவர்கள் உட்பட இதில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். அப்போதைய எங்கள் கல்லூரித்தோழர்களான முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கு.பிச்சாண்டி, ஜோதி.ராஜேந்திரன் போன்றோர் ஃபிலிம் சொஸைட்டியின் நிர்வாகக்குழு வில் இருந்து செயல்பட்டனர். ஏற்கனவே ரம்யா ஆர்ட்ஸ் அக்காடெமி நடத்தி பெற்ற அனுபவங்கள் இதற்கு பேருதவியாய் இருந்தன.
ஃபிலிம் சொஸைட்டியின் தொடக்கவிழா கிருஷ்ணா தியேட்டரில் நடந்தது.

‘சம்ஸ்காரா” எனும் கன்னடப்படத்தைத்தான் முதல் படமாக திரையிட்டோம். தென்னிந்திய நியோ ரியலிச சினிமாவின் மைல் கல்களில் ஒன்றென வர்ணிக்கப்பட்ட சம்ஸ்காரா, 70 களில் தொடக்கத்தில் வெளியாகி பல விருதுகளை அள்ளிக்குவித்த திரைப்படம். சம்ஸ்காரா எனில் [funeral rite] ‘இறுதிச்சடங்கு’ எனப்பொருள்.
ஆனால் இதனை நாங்கள் ‘கருமாதி’ என மொழிபெயர்த்து, இறப்பு வீட்டில் 16 ஆம் நாள் நடக்கும் ‘நீத்தார் சடங்கினை’ அறிவிப்பதற்கு அஞ்சலட்டை போல ஒரு காரியப்பத்திரிகை அச்சிடுவார்கள் அல்லவா, அதுபோலவே அட்டையின் ஓர் ஓரத்தில் மூலையில் கருப்பு வண்ணமெல்லாம் இட்டு முதல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தயாரித்து எல்லோருக்கும் அனுப்பினோம்.

அழைப்பிதழைப் பார்த்த உறுப்பினர்கள் பலர் நொந்து விட்டார்கள். என்னங்க இது முதல் நிகழ்ச்சியே இப்படி அபசகுனம் மாதிரி கருமாதின்னு அடிச்சிருக்கீங்க என்றெல்லாம் கேட்டார்கள். எனினும் அந்நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. திரைப்படக்கழகத்தை தொடங்கிவைக்க திரைப்படக்கழகங்களினது கூட்டமைப்பின் [FFSI] செயலாளர்.சுப்பிரமணியம் அழைக்கப்பட்டிருந்தார். ரிசர்வ் வங்கியில் அலுவலராக பணியாற்றிக்கொண்டிருந்தவர் அவர். வந்திருந்த பார்வையாளர்கள் கூட்டத்தைப்பார்த்ததும் அவருக்கு ஏக ஆச்சர்யம்!. இவர்கள் எல்லோரும் உறுப்பினர்களா ? மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்று கேட்டார். நாங்கள் நானூறுக்கு மேல் என்று சொன்னதும் அசந்துவிட்டார்.

பெரும்பாலான சொஸைட்டிகள் 100 அல்லது 150 உறுப்பினர்களைக் கூட த் தாண்டுவதில்லை. நீங்கள் 400க்கும் மெற்பட்டவர்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே இது பெரிய விஷயம். தென்னிந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஃபிலிம் சொஸைட்டி எதுவென்றால் அது உங்கள் வானவில் ஃபிலிம் சொஸைட்டி தான் என்று பாராட்டினார். இப்படி ஒவ்வொரு மாதமும் தவறாது திரைப்படங்களை திரையிட்டு ஓராண்டு கழித்து ஃபிலிம் சொஸைட்டிகளின் கூட்டமைப்பில் இணைப்பையும் பெற்றுவிட்டோம்.

இதனை முழுநேரமாகக் கவனித்துக்கொண்ட வீ.பா. கணேசன் சென்னையிலே ஒரு பணியில் சேர்ந்தார். அதன் பிறகு நான் தொடர்ந்து அப்பொறுப்பினை மேற்கொண்டேன். 1981 இல் நான் சென்னைக்கு வந்த பிறகும் கூட , சிலகாலம் அதாவது 1982 முடிய சென்னையிலிருந்த படி திரையிடல் பணிகளை ஒருங்கிணைத்தேன். இப்படி ஒரு நான்காண்டு காலம் அத்திரைப்படக்கழகம் செயல்பட்டது.

திருவண்ணாமலை அப்போது தனி மாவட்டமாகப் பிரிக்கப்படவில்லை. மாவட்டத்தலைநகராகக் கூட இல்லாத ஒரு சிறிய நகரத்தில் ‘திரைப்படக்கழகம்’ நடத்தியது என்பது உண்மையிலேயே சவால் மிக்க ஒரு விஷயம்தான். கவிஞர். வெண்மணி தங்கியிருந்த 105,சன்னதிதெரு, செட்டியார் மேன்ஷன் என்கிற முகவரிதான் வார்ப்பு கையெழுத்திதழ், வானவில் திரைப்படக்கழகம், தமுஎச கிளைபோன்ற அனைத்து செயல்பாடுகளின் மையமாக இருந்தது. அடிக்கடி அனைவரும் கூடுவது ,விவாதிப்பது, என எல்லா நடவடிக்கைகளும் அங்குதான் நடந்தன.

அந்த மேன்ஷனில் தங்கியிருக்கும் பெரும்பாலோர் இந்த செயல்பாடுகளோடு தங்களை இணைத்துக்கொண்டனர் அல்லது தார்மீக ஆதரவளிப்போராய் பரிணமித்தனர். அப்போது மாவட்ட கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த ‘ஜிடி ஐயா’ என எல்லோராலும் அன்போடும் மதிப்போடும் அழைக்கப்பட்ட ஜார்ஜ் டேனியல் என்பவரும் அந்த மேன்ஷனில் தங்கியிருந்தார். அவர் கன்னியாகுமரிக்காரர்; மாணவப்பருவத்திலிருந்து முற்போக்கு இயக்கங்களில் செயல்பட்டவர். உயர் பொறுப்பில் இருந்ததால் அவரால் நேரடியாக எங்கள் பணிகளில் கலந்து கொள்ளமுடியாதெனினும் மதிப்புமிக்க ஆலோசனைகளை அளிப்பவராக எங்களது செயல்பாடுகளுக்கு ஊக்கமளிப்பவராக எங்களது தார்மீகப் பின்புலமாக இருந்துவந்தார்.

1981ஆம் ஆண்டுக்குப் பிறகு கவிஞர் வெண்மணி யின் வழிகாட்டுதலில் அழகேசன் என்பவர் தமுஎகச கிளைச் செயலாளராக பொறுப்பெடுக்கிறார்.. அப்போது ராமலிங்கம் என்பவர் திருவண்ணாமலையிலிருந்து ‘மாத நாவல்கள்’ வெளியிடுகிற பத்திரிகையொன்றை நடத்திவந்தார். அவரெல்லாம் அப்போது தமு எ சவில் இணைந்து தீவிரமாகச் செயல் பட்டிருக்கிறார்.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
1992 கலை இரவில் கருணா

இந்த ராமலிங்கம்தான் பின்னர் சென்னைக்கு வந்து தராசு பத்திரிகையில் பணியாற்றி , பின்னர் ‘ கழுகு’ எனும் பத்திரிகையை தனியாக நடத்தி கழுகு ராமலிங்கம் என அறியப்பெற்றவர். தற்போது சென்னையில் நிவேதிதா பதிப்பகம் எனும் பெயரில் ஒரு பதிப்பகத்தை நடத்திவருகிறார். 1983 என நினைக்கிறேன். தேரடி வீதியிலுள்ள ‘வன்னிய மடத்தில்’ தமு எ ச வின் மாவட்ட மாநாடு நடந்தது. அம் மாநாட்டின் கவியரங்க நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது இவர்களையெல்லாம் நான் சந்தித்திருக்கிறேன். இம்மாநாட்டின் போதுதான் கே.ஏ. குணசேகரனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மிகப்பெரிய அளவில் மக்களது பாராட்டுதல்களை ப் பெற்ற நிகழ்ச்சி அது.

அதன் பிறகு ஓவியர் பல்லவன் தமுஎகசவுக்கு வருகிறார். அவரது பெயிண்டிங் ஸ்டூடியோ தமுஎ சவினர் கூடும் இடமாக உருப்பெறுகிறது. அந்த சமயத்தில் கவிஞர்.வெண்மணி யை ஆசிரியராய்க்கொண்டு திருமணத்திற்குப்பிறகு அவர் வசித்த வடமாத்தாதி தெரு முகவரியிலிருந்து ‘அதிர்வுகள்’ எனும் முற்றிலும் கவிதைகளுக்கான ஒரு இதழ் கொண்டுவரப்பட்டது.

மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் என்னோடு தங்கியிருந்த கவிஞர் வெண்மணியின் தம்பி ஓவியர் ராஜாதான் அச்சிடுவதற்கான பொறுப்பு. எனவே அவ்விதழின் பிழைதிருத்தம் அச்சாக்கம் தயாரிப்பு விநியோகம் என எல்லாப்பணிகளும் எங்களது மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெரு அறையிலிருந்தே நடந்தேறின.
அப்போது காளிதாஸின் தலைமையில் ‘நிதர்சனா’ எனும் நாடகக்குழு திருவண்ணாமலை தமுஎகச கிளையின் சார்பில் செயல்பட்டுவந்தது.

தமுஎச-வில் இணைந்து செயல்படுவதற்கு முன் காளிதாஸ் ‘கலைவாணர் நாடகக் குழு’ எனும் பெயரில் மாசி மகத்தின் போது நகர எல்லையின் விளிம்பிலிருக்கிற பள்ளிகொண்டாபட்டில் நாடகங்களை நிகழ்த்துவார். மாசிமகத்திற்கு வருகிற மக்கள் மத்தியில் இது பிரபலமாகி சுற்றுமுள்ள கிராமங்களுக்கெல்லாம் சென்று நாடகம் நடத்துகிற குழுவாக பின்னர் இது உருப்பெற்றது. அதே போன்று அளகேஷ் கன்னா என்பவர் நடத்திய ‘முத்தமிழ் மன்றம்’ என்கிற நாடகக்குழுவும் திருவண்ணாமலை சுற்றியுள்ள கிராமங்களில் பரவலாக நாடகம் நடத்திவந்தது.

1985-86 என நினைவு, இது போன்ற அமெச்சூர் நாடகப் பின்னணியில் இருந்து வந்த காளிதாஸின் எழுத்தாக்கம் மற்றும் இயக்கத்தில் ‘வெவரமில்லாதவர்கள்’ என்கிற நாடகத்தை ‘நிதர்சனா’ குழு மேடையேற்றியதை நான் பார்த்திருக்கிறேன். காளிதாஸ் மற்றும் பவா செல்லத்துரை, கருணா, ஜீவன் பிரபாகரன், ரவிச்சந்திரன், போன்றவர்கள் அந்நாடகக்குழுவில் செயல்பட்டார்கள்.

பின்னர் 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து திமுக அதன் தோழமைக்கட்சிகளுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தீட்சண்யா என்ற பெயரில் இயங்கிய நாடகக்குழு தாக்குதலுக்குள்ளானது. நாடகக் குழுவில் அப்போது செயல்பட்ட கோமதியின் [தற்போது இவர் மானிடவியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்.கோமதி] இல்லத்தை வன்முறையாளர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். கருணா தலைமையில் இயங்கிய இந்த தீட்சண்யா நாடகக்குழு 90களின் இறுதிவரை செயல்பட்டது.

‘வார்ப்பு’ க்குப்பிறகு அழகேசன்,பவா.செல்லதுரை, கருணா ஆகியோரின் முன்முயற்சியில் ‘பாதைகள்’ எனும் கையெழுத்திதழ் சிலகாலம் நடத்தப்பட்டது.
இவ்வாறு அரசம்பட்டு அழகேசன், தமுஎசவின் கிளைச்செயலாளராக இருந்த காலத்தில் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் ஒரு கவியரங்கு நடத்தப்படுவதுண்டு. அதாவது டிசம்பர் 31 அன்று இரவு எட்டு மணிக்கு கவியரங்கு தொடங்கும். எல்லோரும் கவிதை வாசிப்பார்கள். சரியாக இரவு 11.55க்கு விளக்குகள் அணைக்கப்படும். 12.00 மணிக்கு மீண்டும் விளக்குகள் ஏற்றப்படும். புத்தாண்டை வரவேற்றபடி ஒருவர் சிறப்புக்கவிதை வாசிப்பார்.

வடமாநிலங்களில் தற்போதும் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு புழக்கத்திலிருக்கும் ‘முஷைரா’ [கவிராத்திரி] எனும் வடிவத்திலிருந்து உந்துதல் பெற்றதுதான் இந்நிகழ்வு. நூற்றுக்கு மேற்பட்டோர் திரளும் இக் கவியிரவுக்கு ஆண்டுக்கு ஆண்டு எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே போனது; கூட்டமும் அதிகரித்தது.
நிகழ்ச்சிகள் 6 மணிக்கே தொடங்கப்பட்டன. கவிதை வாசிப்பு என்பதோடு நில்லாமல் ,பாடல்கள், நாடகங்கள், இலக்கிய உரைகள் என நிகழ்வுகள் விரிவடைந்தன.
இப்படி நிகழ்வுகள் விரிவடைந்ததும் கூட்டமும் அதிகரித்தது. முதலில் டேனிஷ் மிஷன் கிண்டர் கார்டன் பள்ளி மேடை யில் நடந்த இந்நிகழ்வு அடுத்த ஆண்டு பெண்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது . இருநூறு முன்னூறு பேரைக் கொள்கிற ‘பள்ளியின் அரங்கம் ’ கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. கூட்டம் அதிகமானதால் அடுத்த ஆண்டு நிகழ்ச்சியை காந்தி சிலைக்கு அருகே திறந்தவெளியில் மேடை போட்டு நிகழ்த்தத்தொடங்கினர். திறந்த வெளியென்பதால் பாடல்கள் நாடகங்கள் என நிகழ்கலைகள் அதிகமான அளவில் மேடையேற்றப்பட்டன. மாலை 7 மணிக்கு இருநூறு முன்னூறு பேராக இருந்த கூட்டம் இரவு 10 மணிக்கு ஆயிரம் ரெண்டாயிரமென அதிகரித்தது.

அதற்கடுத்த ஆண்டு இதைவிடப் பெரிய மேடையில் பற்பல நிகழ்ச்சிகளோடு இரவு 7 மணி தொடங்கி விடியற்காலை 5 மணி வரை ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் நடைபெறுகிற கலை-இலக்கிய இரவாக வடிவம் கொண்டது. இப்படி புத்தாண்டை வரவேற்க, ஒரு சிறிய உள்ளரங்கில் கவியிரவாகத் தொடங்கிய இந்நிகழ்வு , பாடல்கள், நாடகம் என நிகழ்கலைகளோடு கலக்கிறபோது உள்ளரங்கினை விட்டு வெளியே வீதிக்கு வந்து ஆயிரக்கணக்கான வெகு மக்களை ஈர்க்கிற கலை-இலக்கிய இரவாக பரிணமித்தது.

இப்படி திருவண்ணாமலை தமுஎகச பரிணாமம் பெறுகிற காலத்தில், கவிஞர் வெண்மணி மாற்றலாகி தேனிக்குச் சென்றுவிடுகிறார். கிளைச்செயலாளரான அரசம்பட்டு அழகேசனோடு களமாடுகிறவர்களாக புதிய செயற்பாட்டாளர்களாக, காளிதாஸ், பவா செல்லதுரை, கருணா, பல்லவன், ரேணுகோபால், சாமிநாதன், வைகறை சுகந்தன், வைகறை கோவிந்தன், உத்தமன், கவிஞர் ஃபீனிக்ஸ், சோமு, பாலாஜி, பாஸ்கரன், குழந்தைவேல், ஜெயஶ்ரீ, ஷைலஜா, உத்திரகுமாரன், அன்பரசன் ஆகியோர் உருவெடுக்கின்றனர்.

 

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
த மு எ ச மாநில மாநாடு, 2005. திருவண்ணாமலை

அரசு ஊழியர் சங்கத்தலைவர்களில் ஒருவரான சந்துரு மட்டும்தான் 1978 இல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை திருவண்ணாமலை தமு எச வில் தொடர்ந்து செயற்பட்டுவருபவர் எனச்சொல்லலாம். திருவண்ணாமலை தமுஎச கிளையின் செயல்பாடுகளில் கிளைத்த கலை யால் பொழுதளந்த இவ்விரவுகளுக்கு , கலைஇரவு என்கிற இவ்வடிவத்திற்கு மிகப்பெரும் பண்பாட்டு முக்கியத்துவமுண்டு.

சாதி சமய பேதமின்றி, ஒரே குடையின் கீழ் எல்லாத்தரப்பினரையும் பார்வையாளர்களாய் திரட்டிய ஆகப்பெரும் பண்பாட்டு செயல்பாடு இது. அரசு மற்றும் பெரும் வணிக நிறுவனங்கள், நிதி முகமைகள் இவர்களின் உதவிகளின்றி மக்களது நன்கொடைகள் மற்றும் சமூக ஆதரவை மட்டுமே கொண்டு பெரிய அளவில் மக்களைப் பார்வையாளர்களாகத் திரட்டுகிற ஒரு சுயாதீனமான ஏற்பாடு தான் கலை இரவு என்பது.

பிரபலமானவர்களை அழைத்து அவர்களது பிரபலம் தருகிற ஈர்ப்பால் மக்களைத்திரட்டி புகழ்வெளிச்சத்துக்கு வந்த நிகழ்வல்ல இது. மாற்றுச்சிந்தனையில் , மாற்று வெளிகளில், மாற்றுக் கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவோரை செயல்படுவோரை அழைத்து அவர்களுக்கு ‘மேடை போட்டுத்தருவதன் மூலம்’ பிரபலமடைந்த நிகழ்வு இது.

கரிசல் குயில்கள் கிருஷ்ணசாமி, சந்திரசேகரன், வைகறை சுகந்தன், கோவிந்தன், உத்தமன் ஆகியோரது பாடல்கள் சென்னைகலைக்குழுவின் நாடகங்கள், பாரதி கிருஷ்ணகுமாரின் உரைவீச்சு இவையே அன்று அக்கலை இலக்கிய இரவின் மையமான நிகழ்வுகளாயிருந்தன. நாடகக்கலைஞர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள் போன்றோருக்கு மிகப்பெரிய பார்வையாளர் திரளைத் திரட்டித்தருவதன் மூலம் அவர்களது கலைத்திறன்களுக்கு புதிய சவால்களைத் தந்து அவர்களை வளர்த்தெடுத்த நிகழ்வு இது.

உண்மையைச்சொல்லப்போனால் இக்கலை இரவின் மூலம் பலர் பிரபலமானார்கள். இப்படி இக்கலை இரவில் மேடையேற்றப்பட்ட பாப்பம்பாடி ஜமா ,பின்னர் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று நிகழ்வை நடத்துகிற குழுவாக பலரது கவனத்திற்குள்ளானது. பல எழுத்தாளர்கள் கலை இரவு மேடைகளில் ஏறுவதை விரும்பினார்கள். அவர்களது படைப்புகள் அம்மேடைகளில் பேசப்படுவது குறித்து பெருமிதம் கொண்டார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘திசைகளின் நடுவே’ இப்படி இந்நகரில் நடந்த ஒரு கலை இரவில்தான் வெளியிடப்பட்டது. அதனை பதிப்பித்து வெளியிட்டதும் திருவண்ணாமலை தமுஎச தான்.

பவா செல்லதுரை,கருணா,பல்லவன், போன்ற தோழர்களின் கற்பனை,திட்டமிடல்,ஒருங்கிணைப்பு இக்கலை இலக்கிய இரவினை ஒரு காத்திரமான இடத்திற்கு இட்டுச்சென்றது எனலாம். ஓவியர் பல்லவனின் கைவண்ணத்தில் உருவான ஹோர்டிங்குகள், விளம்பர தட்டிகள், முற்போக்கு இயக்கச் செயல்பாடுகளின் மக்கள் தொடர்பு உத்தியினை, அதன் பரப்புரையினை , ஒரு புதிய எல்லைக்கு விரிவு படுத்தியது. உண்மையில் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற அக்கலை இரவுகளுக்கு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் எழுத்தாளர்கள்,கலைஞர்கள் செயற்பாட்டாளர்களெல்லாம் அழைக்காமலே வந்துவிடுவர்.

அப்படி வந்து பார்த்து பெற்ற உந்துதலில்தாம் அவரவர்களும் தத்தமது ஊர்களில் இது போன்ற கலை இரவுகளுக்குத் திட்டமிடுகின்றனர். இப்படித்தான் தமிழ்நாடு முழுதும் கலை இரவுகள் பரவலானது. திருவண்ணாமலையின் பௌர்ணமி இரவுகள் ‘கிரிவலத்துக்கு’ மட்டும் பெயர் போனவை அல்ல. தமுஎசவினர் நடத்துகிற ‘முற்றம்’ நிகழ்வும் இப்படியோர் பௌர்ணமி இரவில்தான் நடக்கும்.

திருவண்ணாமலையில் தமுஎசவினர் ஒழுங்கு செய்த மற்றொரு முக்கியமான நடவடிக்கை இந்த “முற்றம்” எனும் படைப்பாளரை சந்திக்கிற நிகழ்வாகும். ஒவ்வோர் மாதமும் ஓர் எழுத்தாளர், அவரது நீண்ட உரை பின்னர் அவரது படைப்புகள் குறித்து அடர்வும் ஆழமுமிக்க கலந்துரையாடல் எனச் செறிவாக நடந்தேறும் இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் கலை இலக்கிய வாதிகள் பெரும்பாலோர் பங்கேற்றனர்.

சுந்தர ராமசாமி , கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், அசோகமித்திரன்,மேலாண்மை பொன்னுச்சாமி, கோணங்கி,எஸ்.ராமகிருஷ்ணன் என தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் மட்டுமல்ல சச்சிதானந்தன்,பால் சக்கரியா போன்ற ஆங்கிலத்தில் எழுதுகிற எழுத்தாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். இச்செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட பி.லெனின், பாலுமகேந்திரா, நடிகர்.மம்மூட்டி போன்ற திரைப்பிரபலங்கள், தமுஎகச திருவண்ணாமலை கிளைக்கு நெருக்கமான நண்பர்களாயினர்.

2005 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற தமுஎகச-வின் மாநில மாநாடு இக்கிளைச்செயல்பாட்டின் சிகரங்களில் ஒன்று. டேனிஷ் மிஷன் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அம்மாநாட்டினையும் இறுதி நாள் இரவில் நடைபெற்ற எங்களது சென்னை கலைக்குழுவின் ‘உபகதை’ நாடகத்தையும் திருவண்ணாமலை நகரம் இன்னும் நினைவில் கொண்டுள்ளது

2008 இல் சென்னையில் நடந்த மாநில மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்சங்கம் [தமுஎச] தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் [தமுஎகச] எனப்பெயர் மாற்றம் கண்டது. கலைஞர்கள் என சேர்க்கப்பட்டு பெயர் மாற்றம் பின்னர் நடந்திருந்தாலும் சாராம்சத்தில், அடிப்படையில், நடைமுறையில் ஏற்கனவே திருவண்ணாமலை கிளை என்பது, எழுத்தாளர்கள் கலைஞர்களின் கூட்டுச் செயல்பாட்டில்தான் தொழிற்பட்டுவந்தது. அண்மையில் திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்படவிழாவொன்றை வெற்றிகரமாக நடத்திமுடித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் 5 நாட்கள் தங்கியிருந்து படங்களை கண்டனர். 30க்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பலரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படவிழா இது.

Annamalai Puranam (அண்ணாமலை புராணம்) 2 Article Series By Pralayan Shanmugasundaram Chandrasekaran. Book Day And Bharathi Puthakalayam
கலை இரவு 1993- போப்பு பரிசளிக்கிறார் பக்கத்தில் கருணா, பின்னால் சந்துரு, பல்லவன்

தொடக்ககாலத்தில் மின்வாரிய ஊழியர்கள் தமுஎகசவை தொடங்க பின்னணியில் இருந்தார்கள் என்று சொன்னோமல்லவா! இன்று என்ன நிலைமை தெரியுமா? அடுத்தடுத்த தலைமுறையினைச் சேர்ந்த மின்வாரியத் தோழர்கள்தாம் முன்கையெடுத்துச் செயல்பட்டு அமைப்பின் முன்னணித் தலைவர்களாக பரிணமித்துள்ளனர். தற்போதுள்ள மாவட்டச் செயலாளர் பாலாஜி, துடிப்புமிக்க செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான நகர்க் கிளைச்செயலாளர் செந்தில்குமார் இருவருமே மின்வாரிய ஊழியர்கள்தாம். அது மட்டுமல்ல நாடறிந்த எழுத்தாளர் பவா செல்லதுரையும் மின்வாரியத்தில் கணக்கு அலுவலராகப் பணியாற்றுபவர்தாம்.

ஓவியர் பல்லவனின் வழியில் தற்போது வசந்த் வந்திருக்கிறார். முன்னவர் பெரிய பேனர்களில் தூரிகை கொண்டு வரைபவர். வசந்த், கணிணி திரையில் தன் கைவண்ணத்தைக் காட்டும் ஒரு கிராஃபிக் டிஸைனர். அண்மைக்காலமாக தமுஎகச-வினது அனைத்து நிகழ்வுகளுக்கும் தோழர் கருப்பு கருணாவின் மேற்பார்வையில் போஸ்டர் மற்றும் அழைப்பிதழ்களை வடிவமைப்பு செய்வது வசந்த் தான். தமுஎகச மட்டுமல்லாது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற பல்வேறு இலக்கிய அமைப்புகள் தற்போது திருவண்ணாமலையில் செயல்படுகின்றன; பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

எழுத்தாளர் பவா செல்லதுரை தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உருவாக்கியுள்ள ‘பத்தாயம்’ எனும் அரங்கில் அடிக்கடி பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நாடக அளிக்கைகளை நடத்திக்கொண்டிருக்கிறார். இப்படி அவர் பத்தாயத்தில் தொடங்கிய ‘பெருங்கதையாடல்’ எனும் சமகால எழுத்தாளர்களின் கதை சொல்கிற நிகழ்வு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று இன்றைக்கு தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு மட்டுமல்ல பலநாடுகளுக்கும் அழைக்கப்பட்டு நிகழ்த்தப்படுகிற ஒரு நிகழ்வாக வெளிச்சம் பெற்றிருக்கிறது.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான 2020 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற கே.வி.ஜெயஶ்ரீ , த மு எ க ச திருவண்ணாமலை கிளைச் செயல்பாடுகளிலிருந்து முகிழ்த்தெழுந்தவர்தாம். கிட்டத்தட்ட 42 ஆண்டு கால தமுஎகச திருவண்ணாமலை கிளையின் செயல்பாட்டுக்குத் தரப்பட்ட ஓர் எளிய சிறு அங்கீகாரமாகக் கூட இவ்விருதினை நாம் கருதலாம்.

இப்படி பல முன்மாதிரிச் செயல்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ள திருவண்ணாமலை நகரம், இன்னும் பல முன்மாதிரிகளை துருவியறிந்து செயலாக்கவேண்டும் என்பதுதான் பலரது விருப்பமும். அதற்கான வளனும் திறனும் திருவண்ணாமலைக்கு நிச்சயம் உண்டு. இவ்வரலாற்றின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியான கவிஞர்.வெண்மணி , கருப்பு.கருணா ,வைகறை சுகந்தன், வைகறை.கோவிந்தன்,பாஸ்கர், கவிஞர்.பீனிக்ஸ் ஆகியோர் இன்று இல்லை. எனினும் அவர்கள் நினைவுகள் தரும் உந்துதலில் இவ்வரலாற்றை முன்னெடுத்துச் செல்கிற வலு திருவண்ணாமலை த மு எ க ச வினருக்கு என்றென்றும் உண்டு.
வெளிவரவுள்ள ‘வரலாற்றில் திருவண்ணாமலை’ எனும் நூலுக்காக எழுதிய ஒரு கட்டுரை

கட்டுரையாளர் தொடர்புக்கு:
[email protected]

முந்தைய தொடரை வாசிக்க: 

அண்ணாமலை புராணம் (திருவண்ணாமலை தமுஎகச வரலாறு) – பிரளயன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.