ஒருவர், தனது முகநூல் பதிவினில் திருவண்ணாமலையை ‘தமிழ்நாட்டின் டப்ளின்’ என்று குறிப்பிட்டிருந்ததைக் காண நேர்ந்தது.
கலை இலக்கிய செயல்பாடுகளுக்கு பெயர்பெற்றதாக ச் சொல்லப்படும் டப்ளின், அயர்லாந்தின் தலை நகர். டப்ளின் நகரினது நடுத்தரவர்க்க வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசும் 15 கதைகள் கொண்ட தனது சிறுகதை தொகுப்பிற்கு ஜேம்ஸ் ஜாய்ஸ் , ‘டப்ளினர்ஸ்” என்றே பெயர் சூட்டினார். இந்தப்பின்னணியில் தான் அவ்வாசகர் இப்பெயரை திருவண்ணாமலைக்கு சூட்டியிருக்கக்கூடும்
இப்படியெல்லாம் சில இலக்கிய வாசகர்கள் தங்கள் ஊருக்கு பெயர் வைத்துள்ளார்கள் என்பதை திருவண்ணாமலை மக்கள் அறிய மாட்டார்கள்.
பல்வேறு காரணங்களால் பரவலாய் அறியப்பெற்ற ‘திருவண்ணாமலை’ யின் உண்மை நிலை வேறானது. தனி நபர் வருமானத்தில் , பிற சமூக வளர்ச்சிக் குறியீடுகளில், ஒப்பீட்டளவில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இது.
எந்த வித நவீனத்தொழில்களும் இம்மாவட்டத்தில் இல்லை. அண்மையில்தான் செய்யாறில் ஒரு தொழிற் வளாகம் தொடங்கப்பட்டுள்ளது எனினும் இம்மாவட்டத்தின் பெரும்பான்மையான பொருளாதாரமென்பது விவசாயமும் அதை சார்ந்த வணிகமும்தான். வணிகமென்று சொன்னால் விவசாய விளை பொருட்களை வாங்கி விற்கிற தரகு வணிகம்தான்.
கடந்த 25,30 ஆண்டுகளில் வளர்ச்சி பெற்ற தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் மேல்நிலைப்பள்ளிகள் இவற்றால் திருவண்ணாமலை நகருக்கு மற்றொரு முகம் கிடைத்திருக்கிறது எனச்சொல்லலாம். மேலும் சுற்றுலாத்தலம் , யாத்திரீகர்களின் புனிதத்தலம் என்கிற வகையில் இந்நகருக்கு வேறொரு முக்கியத்துவம் உண்டே தவிர உண்மையில் மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ் நாட்டில் 27 ஆவது இடத்தில்தான் உள்ளது.
https://eprawisdom.com/jpanel/upload/articles/1234am15.Dr.I.Sundar.pdf
ஆனால் இத்திருவண்ணாமலை நகரம் தான் மக்கள் பண்பாட்டுச் செயல்பாடுகளின் நவீன கால அடையாளமான “கலை இரவு” என்கிற வடிவத்தை தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகம் செய்துவைத்தது.
அதுமட்டுமல்ல பல்விதமான கலை இலக்கியச்செயல்பாடுகளுக்கு திருவண்ணாமலை தொடர்ந்து இடமளித்து வந்துள்ளது. அவற்றில் எனது நினைவில் பதிந்தவற்றை இங்கே பதிவு செய்ய முயல்கிறேன்
திருவண்ணாமலை மக்களுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதியென்பது சுதந்திர தின கொண்டாட்டம் மட்டுமல்ல; அந்நாளினை , அருணகிரிநாதர் விழாவெனவும் வெகு சிறப்பாகக் கொண்டாடுவர். இவ்வழக்கம் அவர்களுக்கு வெகுகாலமாகவே உண்டு.

திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற பக்தி ப் பாடல்களை இயற்றிய அருணகிரிநாதர், திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவர். 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரை பிரபுட தேவ மகாராஜன் என்கிற மன்னர் ஆதரித்ததாக திருப்புகழ் பாடல்களில் தெரிகிற குறிப்புகள் சொல்கின்றன.
கி.பி 1431 முதல் 1456 வரை ஆண்ட இரண்டாம் தேவராயனே [Devarayan-II] பிரபுட தேவ மகாராஜன் என இங்கே அழைக்கப்படுகிறார். இவர் கிருஷ்ணதேவராயருக்கு 60 ஆண்டுகள் முற்பட்டவர்.
அருணகிரிநாதர் இறந்த தும் திருவண்ணாமலையில்தான். அவரது சமாதி அண்ணாமலையார் கோவிலின் மேற்கு பிரகாரத்தில் அமைந்துள்ளது.
எனவே தமது ஊர்க்காரரான அருணகிரி நாதரைப் போற்றுகிற விழாவை திருவண்ணாமலை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவதில் ஆச்சர்யங்களேதுமில்லை.
ஆகஸ்டு 14 மாலை தொடங்குகிற இந்த அருணகிரி நாதர் விழா ஆகஸ்டு 16 இரவு வரை நடக்கும்.
இம்முன்று நாள் நிகழ்வுகளுக்கும் பெருங்கூட்டம் சேரும். அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரத்தினருகேயுள்ள கம்பத்திளையனார் சன்னதியிலிருந்து வல்லாள மகாராஜ கோபுரம் கோபுரத்திளையனார் சன்னதி வரை யிலுள்ள பெரும்பரப்பில் கொட்டகை போட்டிருப்பார்கள். கொட்டகையென்றால் நிழற்பந்தல்தான். நிழல் தரும் ; மழைபெய்தால் ஒழுகும். அத்தகையதான ஒற்றைக்கீற்றினை வேய்ந்த பந்தல் . ஆயிரங்கால் மண்டப நுழைவாயில் படிக்கட்டிற்கும் பாதாள லிங்க நுழைவாயிலுக்கும் இடையில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாயிரம் பேருக்கு மேல் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிலான பிரம்மாண்டமான ஏற்பாடு இது.
14 மாலை, அமைச்சர்கள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் தொடங்கிவைக்க அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பிரதானமான இசைக்கலைஞர்களது இசைக்கச்சேரியோ அல்லது நடன நிகழ்வோ நடக்கும். மதுரை சோமு, பாலமுரளி கிருஷ்ணா,டி.கே.பட்டம்மாள் , சூலமங்கலம் சகோதரிகள் போன்றவர்களுடைய கச்சேரியினை எனது சிறிய வயதில் நான் இவ்விழாவினில் கண்டும் கேட்டுமிருக்கிறேன்.
மறுநாள் 15 ஆம் தேதியன்று நாடுமுழுவதுமிருந்து வந்த சங்கீத கோஷ்டிகளின் இன்னிசைக்கச்சேரிகள் , நாமாவளி கோஷ்டிகளின் பஜனை என காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நிகழ்வுகள் நடக்கும். இடையிடையே உரைகள், சங்கீத உபன்யாசங்கள் நிகழும். இந்நிகழ்ச்சியினையெல்லாம் மேடையிலிருந்து கொண்டு பித்துக்குளி முருகதாஸ்தான் ஒருங்கிணைப்பார். இடையிடையே அவரும் தனது கம்பீரக்குரல் கொண்டு பாடவும் செய்வார்.
ஒவ்வோராண்டும் அன்று பிற்பகல் சரியாக 12.30 முதல் 1.30 வரை கிருபானந்தவாரியாரின் அருளுரை நடக்கும். அப்போது மிகப்பெரும் கூட்டம் சேர்ந்துவிடும். வாரியாரின் உரைக்குப்பிறகு எல்லோரும் மதிய உணவிற்கு கலைந்து செல்வார்கள். அதன்பிறகு தொடர்ந்து இன்னிசை நிகழ்வுகள் மாலையில் மறுபடியும் பெங்களூர் ரமணியம்மாள் இசை நிகழ்வு ,புலவர்.கீரன் போன்றவர்களின் சொற்பொழிவு, எம்பார் விஜயராகவாச்சாரியார் போன்றோரின் கதாகாலட்சேபம் என 15ஆம் தேதி நிகழ்வு முடிவுக்கு வரும்.
அவ்விழாவில் பங்கேற்ற எல்லா இசைக்குழுக்களும் 15ஆம் தேதி இரவு நகரினது மாடவீதிகளில் பாடியபடியே உலாவும் வருவர்.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன், எனக்கு இசை கற்பித்த ஆசிரியர் மற்றும் என்னோடு இசைபயிலும் சக மாணவர்கள் இவர்களோடு மாடவீதியில் பாடிக்கொண்டே உலாவந்த அனுபவம் எனக்குமுண்டு.
மறுநாள் 16 ஆம் தேதி முழுக்க முழுக்க இலக்கிய உரைகள் தாம். காலையில் தனித்த உரைகள். மதியத்திற்குப்பிறகு வழக்காடுமன்றம், பட்டிமன்றம் என நிகழ்ச்சிகள் தொடரும்.
இவ்வுரைகள் எல்லாம் பக்தி இலக்கியத்தை மையமாகக்கொண்டே நிகழும்.
பெரிய புராணம்,கம்ப ராமாயணம், வில்லி பாரதம் எனச்சுழலும் அவ்வுரைகள் சிற்சில சமயங்களில் சிலப்பதிகாரம் ,திருக்குறள் என நீளவும் செய்யும்.
கம்பன் அடிப்பொடி சா.கணேசன், தமிழ்க்கடல் ராய .சொ, வாகீச கலாநிதி.கி.வா.ஜகன்னாதன், சிலம்புச்செல்வர்.ம.பொ.சி, பேராசிரியர்.ராதாகிருஷ்ணன், பேரா. சொ.சத்ய சீலன், ஜெயகுமாரி பாஸ்கரன், பேரா.ராமநாதன், பேரா.சரஸ்வதி ராமநாதன் போன்ற அன்றைக்கிருந்த பிரபலமான பக்தி இலக்கியப் பேச்சாளர்கள்தாம் அந்நிகழ்வுகளின் நாயகர்கள். அவர்கள் அன்று எவ்வாறு அடைமொழிகளோடு அழைக்கப்பட்டனரோ அவ்வாறே அவர்களை இங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன் . இன்னும் கூட பல பிரபலங்கள் அவ்விழாவில் பங்கேற்றதுண்டு. என் நினைவில் இருப்போரை மட்டுமே இங்கே என்னால் குறிப்பிட முடிந்துள்ளது.
இவ்விழாவின் போது விழாப்பந்தலின் ஒரு புறமாக அதாவது கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலின் நுழைவாயிலருகே தண்ணீர் பந்தல் அமைத்து எங்கள் குடும்பத்தின் சார்பாக விழாவிற்கு வரும் அனைவருக்கும் நீர் மோர், தண்ணீர் வழங்குவது வழக்கம். அதனால் எனது தந்தையார் தமையனாரோடு நானும் அத்தண்ணீர்ப்பந்தலில் சேவையிலிருப்பேன். எனவே மிகச்சிறு வயது முதற்கொண்டே அருணகிரிநாதர் விழாவில் பங்கேற்பது என்பது என்னுடைய வருடாந்தர வாடிக்கையாகிவிட்டது.
80களிலோ அல்லது 90களிலோ அவ்விழாக்குழுவினரில் ஒரு பகுதியாக இருந்த டெல்லி மற்றும் சென்னை வாசிகளெல்லாம் தனியாக பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு அருணகிரிநாதர் விழாவானது முன்பு போல அவ்வளவு பிரம்மாண்டமாகவெல்லாம் நடத்தப்படுவதில்லை. அண்ணாமலையார் கோவிலின் கல்யாணசுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குப் புறமாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் உள்ளரங்க நிகழ்ச்சியாக தற்போது நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமல்ல கந்தர் சஷ்டி சமயத்தில் திருவண்ணாமலை குமரகோவில் தெருவிலுள்ள குமரகோவிலில் இன்னிசைக்கச்சேரிகள் நடக்கும். எம்.எம்.தண்டபாணி தேசிகர், கே.பி சுந்தராம்பாள் போன்றோரின் கச்சேரிகள் நடந்ததை நான் சிறுவயதில் கண்டிருக்கிறேன். புரிசை. முருகேச முதலியாரின் கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவுகள், பெரிய புராண , கந்தபுராண சொற்பொழிவுகள் அங்கே நடக்கும்.

பின்னர் கோடை காலத்தில் ஆனி,ஆடி மாதங்களில் கோவிலுக்கு மேற்புறமுள்ள பே கோபுரத்தெருவில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோவிலில் பாரதச் சொற்பொழிவு நடக்கும். ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கும் பாரதச் சொற்பொழிவு மதியம் 2மணிக்கு தொடங்கி மாலை நாலரை மணி வரை நடைபெறும். நாலரை மணிக்கு மேல் அன்றைய பாரதக்கதை நிகழ்வுகளை நாடகமாக நடித்துக்காட்டுவர்.
பகாசூரன் வதம், அர்ஜூனன் மச்ச யந்திரத்தை வீழ்த்துவது, இதையெல்லாம் நடித்துக்காட்டுவர்.
உதாரணத்திற்கு, பார்ப்பன வேடத்திலிருக்கும் பீமசேனன் மாட்டுவண்டியில் ஏறி நின்று கொண்டு பகா சூரனுக்காக கொண்டு செல்லப்படும் பெரிய அண்டாவில் இருக்கும் உணவை அள்ளி அள்ளித் தின்று கொண்டவாறே வருவான். அண்டாவை நிரப்ப வழியெங்கும் மக்கள் அவரவர்கள் வீட்டில் தயாரித்த கொழுக்கட்டை, அப்பம்,பணியாரம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நிற்பார்கள். அந்த அண்டாவுள்ள வண்டிக்கு முன்னாலே பகாசூரன் வேடமிட்ட ஒருவர் பெரிய கதாயுதத்தை ஏந்தி ஆ ஹூ வென கத்தி ஆர்ப்பாட்டமிட்ட படி வந்து கொண்டிருப்பார். இப்படி மாடவீதியில் ஊர்வலமாக வருகின்ற இவர்கள் திரௌபதியம்மன் கோவிலருகில் வந்ததும் கீழே இறங்கி சண்டையிடுவார்கள். சண்டை முடிவில் பகாசூரன் கொல்லப்படுவார். இவற்றை அப்படியே நிகழ்த்திக்காட்டுவார்கள்.
அது போல பாரதப்போருக்கு முன் வருகிற விராட பருவத்தில் சொல்லப்படும் மாடுகளைக் கவரும்
(ஆநிரை கவர்தல்) நிகழ்வு ‘மாடு மடக்குதல்’ என்ற பெயரில் நிகழும். இதற்காக நூற்றுக்கணக்கான மாடுகளை மாடவீதிகளில் ஓட்டிவருவார்கள்.
இவையெல்லாம் கூத்துக்கலைஞர்களாலும் ஊர் மக்களாலும் நிகழ்த்தப்பெறும். அர்ச்சுனன் மச்ச யந்திரத்தை வீழ்த்துதல் போன்ற சில நிகழ்வுகளை பள்ளி மாணவர்களைக்கொண்டும் நிகழ்த்திக்காட்டுவர்.
பாரதக்கதை சொல்லல் நிறைவு பெறுகிற கடைசி வாரங்களில் இரவு நேரத்தில் கூத்து நடக்கும்; இறுதி நாளன்று பகல் நேரத்தில் துரியோதனன் படுகளத்தோடு கூத்தும் பாரதச் சொற்பொழிவும் முடிவுக்கு வரும்.
இது மட்டுமல்லாது செங்கம் ரோட்டில் தாமரைக்குளமருகில் அமைந்துள்ள தர்காவினருகே ஒவ்வோராண்டும் நடைபெறும் கந்தூரி திருவிழாவினையொட்டி ஒருவார காலம் இரவு முழுக்க ‘கவ்வாலி இன்னிசைக் கச்சேரிகள்’ நடக்கும். நாகூர் ஹனிபா தொடங்கி வட இந்தியாவின் புகழ் பெற்ற கவ்வாலி கலைஞர்கள் வரை பலர் இந்நிகழ்வுகளில் பங்கேற்பர்.
நான் கல்லூரி படிக்கிற காலத்தில் மிகவும் புகழ்பெற்ற கவ்வாலிக்கலைஞரான அஜீஸ் நாஸனது [‘ஜூம் பராபரி ஜூம் ஷரபி’ பாடலைப் பாடியவர்] கச்சேரியினை இவ்விழாவில் கேட்டிருக்கிறேன்.
இவை எல்லாவற்றிற்கும் சமய பேதமின்றி எல்லாதரப்பினரும் கூடுவார்கள்.
அது மட்டுமல்லாது அப்போதெல்லாம் நடக்கிற அரசியல் கட்சிக்கூட்டங்களுக்கு , அது திமுக, அதிமுக, காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் என எந்தக்கட்சிக்கூட்டமாக இருந்தாலும் சரி , அக்கட்சியினது தொண்டர்கள் மட்டுமல்லாது ஆர்வத்தோடு பொது மக்களும் கூடுவர்.

ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் சார்பில் அடிக்கடி நடக்கும் டேப் ராவணனின் கலை நிகழ்ச்சி, திமுக வினரின் இரா. வெற்றிகொண்டான், அதிமுகவினரின் ஆலங்குடி சோமு, ஆகியோரின் மேடைப்பேச்சுக்கள் மார்க்சிஸ்ட் கட்சியினரின் ‘மதுரை மாரி –மணவாளன்’ கலைக்குழுவினர் நடத்துகிற கலை நிகழ்ச்சி இவற்றுக்கெல்லாம் பெருங்கூட்டம் சேரும்.
மாற்றுக்கட்சியினராக இருப்பினும் கட்சி பேதம் தாண்டி மேடைப்பேச்சுக்களை ரசிக்கிற பழக்கம் நகரவாசிகளுக்கு உண்டு.
இப்படி எல்லாவற்றையும் போற்றுகிற ஒரு பண்பு திருவண்ணாமலை மக்களுக்கு இருந்தது.
அதுமட்டுமல்ல வணிகர்கள், சேவைத்துறையினர் என ஓய்வை அனுபவிக்கிற வர்க்கத்தினர் [Leisured class] திருவண்ணாமலை நகரில் ஒரு கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். இவர்கள்தாம் இத்தகைய ஒரு பண்பை ப் போற்றுபவர்களாகவும் ஆதரவளிப்பவர்களாகவும் இருந்தனர். வணிக நிறுவனங்களில் ,கடைகளில் வேலை செய்யும் அறிவுழைப்பினர், உடலுழைப்பினர், உதிரித்தொழிலாளர்கள் என அனைத்துத்தரப்பினருமே இப்பண்பினது ஆதிக்கத்திற்கு ஆட்பட்டனர் என்றே சொல்லலாம்.
ஓய்வை அனுபவிக்கிறவர்கள் அதிகமாயிருப்பதற்கு வேறொரு காரணமும் சொல்வர்.
“ஆண்டிக்கு பெருத்தது அண்ணாமலை” என்றொரு சொல்வழக்கு உண்டு. அதாவது துறவறம் மேற்கொண்ட ஆண்டிகள்,துறவிகள் அதிகமாயிருப்பது திருவண்ணாமலை என்றிதற்குப்பொருள். காவி கட்டிக்கொண்டு வந்தாலே போதும் , ஒருவருக்கு , உறங்க இடமும் மூன்று வேளை உணவும் திருவண்ணாமலையில் கிடைத்துவிடும். அதற்கான ஏற்பாடுகள் இன்று மட்டுமல்ல நீண்ட நெடுங்காலமாகவே இந்நகரில் உண்டு.
மாடவீதிகள் நெடுக உணவளிக்கும் சத்திரங்கள்,மடங்கள்; இப்படி ஓயாமல் உணவளிப்பதால் ஒரு மடத்திற்கு ஓயாமடம் என்றே பெயர். தற்போது இவையெல்லாம் பழங்கதைகளாகிவிட்டனவென்றாலும், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், ரமணாசிரமம், யோகி ராம்சரத்குமார் ஆசிரமம் என எல்லோருக்கும் உணவளிக்கிற புதிய ஏற்பாடுகள் தற்போது பெருகிவிட்டன.
அதுமட்டுமல்ல இவ்வூரினது அமைப்பு, அதன் எளிமை, இதன் மையமாயிருக்கிற மலை ,அதன் இயற்கைச் சூழல், பெரிய விசாலமான கோவில் என இந்நகரின் பல அம்சங்கள் ஆன்மீகத்தேடலில் உள்ளோரை ஈர்த்து விடுகிறது.
கிபி 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குரு நமச்சிவாயர் எனும் துறவி எழுதிய அண்ணாமலை வெண்பாவில் இப்படிப் பாடல்கள் உண்டு.
சீலமுனிவோர்கள் செறியுமலை/ சிந்திப்பார் முன் நின்று முக்திவழங்கு மலை/
ஞான நெறி காட்டுமலை /ஞான முனிவோர்கள் நித்தம் நாடும் மலை/
அஞ்ஞானக்கங்குல் அகற்றும் மலை /அன்பருக்கு மெய்ஞானச்சோதி விளக்கு மலை /ஞானத்தபோதனரை வாவென்றழைக்கும் மலை அண்ணாமலை.
ஆதிநடமாடும் மலை/ அன்றிருவர் தேடும் மலை /
சோதிமதி ஆடரவம் சூடும் மலை-நீதி
தழைக்கும் மலை/ ஞானத் தபோதனரை –
வாவென்றழைக்கும் மலை !அண்ணாமலை !!
“ஞானத்தபோதனரை வாவென்றழைக்கும் மலை அண்ணாமலை”, இங்கே தபோதனர் என்று சொல்வது ‘தபஸ்’ செய்வோரை.
தபஸ் எனும் வடமொழிச்சொல்லுக்கு இணையானதுதான் ‘தவம்’ எனும் சொல்.
தவம் , வேள்வி எனும் இரு சொற்கள் பண்டைய இந்தியாவின் சமய வரலாறுகளை வாசிக்கிறபோது நாம் எதிர்கொள்கிற மிக முக்கியமான சொற்களாகும்.
தவம் வேறு; வேள்வி வேறு .
தேவதைகளை அல்லது தெய்வங்களை திருப்தி செய்ய அதாவது தீ வளர்த்து அதில் பலிகளை ஆகுதிகளை இட்டு செய்யப்படுவதே வேள்வியெனப்படும். ஒரு காலத்தில் மிருகங்களை கால்நடைகளை இவ்வேள்வியில் பலியிடுவது வழக்கம்; தற்போது அவை கைவிடப்பட்டு தானியங்கள் பிறபொருட்கள் போன்றவை இடப்படுகின்றன.
இந்த வேள்விகளைச் [யக்ஞம்] செய்வோர் எவரும் சமூகவாழ்விலிருந்து ஒதுங்கியிருக்கமாட்டார்கள். ஆனால் தவம் அல்லது தபஸ் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிற சமூக வாழ்க்கையினை விட்டு விலகி, [Renunciation] தனித்து வாழும் ஒரு வாழ்வைத் தேர்ந்து கொள்வதாகும்..

இப்படி சமூக வாழ்விலிருந்து ஒதுங்கி ஒரு மெய்த்தேடலை மேற்கொள்பவரையே தபசிகள் அல்லது தவசிகள் என்றழைப்பர்.
வேள்வி என்பது ஆண்களால் மட்டுமே செய்யப்படுவது. ஆனால் தபசிகளில் இரு பாலரும் உண்டு.
ஆரியர்களின் படையெடுப்பிற்குப் பிறகே இந்திய மண்ணில் “வேள்வி” என்கிற சடங்கு அறிமுகமாகிறது. ஆனால் சமூகத்திலிருந்து ஒதுங்கி நின்று ‘தவம்’ மேற்கொள்கிற வாழ்முறை என்பது ஆரியர்களின் நுழைவிற்கு முன்பிருந்த ‘தொல் சமூகத்திலேயே’ இருந்துள்ளதென சமூக வரலாற்றியலாளர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய தபோதனர்களை கவர்ந்திழுக்குமிடமாக இந் நகர் விளங்குகிறது என்றே அண்ணாமலை வெண்பா சொல்கிறது.
பெரிய வேலையில் இருந்து பெரிய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்துவிட்டு ஓய்வு பெற்ற பின் தன் சேமிப்பு, ஓய்வூதியம் எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்கு தானம் தந்துவிட்டு பிச்சை ஏற்று வாழும் பல முதியவர்களை நீங்கள் சர்வ சாதாரணமாக திருவண்ணாமலை நகரில் சந்திக்கலாம்.
பணம் ,புகழ் அந்தஸ்து எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு மனநிறைவு கிட்டாததால் இவர்கள் இவ்வாழ்வைத்தேர்வு செய்கின்றனர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அதுமட்டுமல்ல பஞ்சத்துக்கு ஆண்டி ஆனவர்களும் இங்கே நிறைய உண்டு.
எனவே ஒட்டுமொத்தமாக இவர்களையெல்லாம் தபோதனர்கள் எனச்சொல்லமுடியுமா எனத்தெரியவில்லை.
எப்படியோ திருவண்ணாமலை நகரில் ஓய்வை அனுபவிக்கிற இன்னொரு வகையான பகுதியினரே இத்தகையவர்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான மக்கள் தொகுதி அவர்களது பொதுவான ஒரு மனநிலை இவையே திருவண்ணாமலையின் ‘பொதுப்புத்தியினை’ வடிவமைத்தது என நாம் முடிவுக்கு வரலாம்.
அதே நேரத்தில் , இந்நகரினது பொதுப்புத்திக்கு மாறான வேறு சில மாற்று போக்குகளுக்கும் இந்நகர் இடமளித்திருந்தது என்பதையும் நாம் உணரவேண்டும் .
1940 கள் தொடங்கி திராவிட இயக்கத்தினது செல்வாக்கு தளங்களில் ஒன்றாக இந்நகர் விளங்கியிருக்கிறது.
1948 இல்பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த ப.உ.சண்முகத்தை நகரமன்றத்தலைவராக திருவண்ணாமலை தேர்வு செய்தது.
சரியாகச்சொல்லவேண்டுமெனில் தமிழ்நாட்டிலேயே திராவிட இயக்கம் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற முதல் நபர் ப.உ.சண்முகம் அவர்கள்தான். அவருக்கு இவ்வாய்ப்பை வழங்கியது திருவண்ணாமலை நகர மக்கள்தான்.
1950களின் தொடக்கத்தில் திமுக வின் சார்பில் திருவண்ணாமலையில் ‘இந்தி எதிர்ப்புக்காக’ மிகப்பெரிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக திமுக செயல் படத்தொடங்கிய பிறகு நடந்த மாநாடு என்பதால் திமுக வரலாற்றில் இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. பிச்சைக்காரர்கள் மாநாடு நடத்துகிறார்கள் என பிற கட்சியினர் திமுகவை கேலி செய்ததாகவும் இதற்கு பதிலடி தரும் வகையிலே பராசக்தி திரைப்படத்தில் ‘பிச்சைக்காரர் மாநாடு’ நடத்துவது போன்ற ஒரு காட்சியை கலைஞர்.கருணாநிதி எழுதியதாகவும் சொல்லப்படுவதுண்டு.
1957 இல் திமுகவின் சார்பில் போட்டியிட்ட ப உ சண்முகத்தை சட்டமன்ற உறுப்பினராக திருவண்ணாமலை தேர்வு செய்கிறது.
மேலும் 1957 ,1962 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத்தேர்தல்களில் திராவிட முன்னேற்றக்கழகமே வெற்றி பெற்றது. இந்நகரைச்சேர்ந்த இரா.தர்மலிங்கம் இரு முறை மக்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.

1970 களின் பிற்பகுதிகளில் , அவசர நிலைக்குப் பிறகு, நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் திராவிட மாணவர்கழகம் ஒரு செல்வாக்கு பெற்ற மாணவர் அமைப்பாக விளங்கியது. அரசியலில் ஈடுபாட்டோடு இருந்த போதிலும் கலை இலக்கிய செயல்பாடுகளிலும் ஆர்வங்காட்டுகிறவர்களாக அவர்கள் இருந்தனர்.
எங்களது சீனியர் மாணவர்களில் ஒருவரான திமுகவைச் சேர்ந்த முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சரும், தற்போதைய கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பேரவை துணைத்தலைவருமான கு.பிச்சாண்டி அவர்கள், அவ்வமைப்பில் தீவிரமாகச்செயல்பட்டுவந்தவர்தாம். அவர் ,கல்லூரியில் படிக்கிற காலத்தில் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராய் இருந்தார். அவர் ஆதரிக்கிறவர்கள்தாம் கல்லூரியின் மாணவர் பேரவைத்தலைவராக வெல்ல முடியும். அதனால் அவரை ’கிங் மேக்கர்’ என அவரது நெருங்கிய நட்பு வட்டம் அழைக்கும்.
அவர் ‘பேங்கோஸ்’ எனும் தாள இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர். அவர் மற்றும் கல்லூரி நண்பர்களெல்லாம் சேர்ந்து மெல்லிசை நிகழ்ச்சிகளெல்லாம் நடத்துவர். நான் முறைப்படி இசை பயின்றவன் என்ற போதிலும் மெல்லிசைக்கச்சேரிகளில் பாட நான், என்னை தயார் படுத்திக்கொண்டவனல்ல. எனினும் அம்மெல்லிசைக்குழுவில் ‘டைமிங்’ வாசிப்பது கோரஸ் பாடுவது எனச்சிறு பங்களிப்பினைச்செய்துள்ளேன்.
இன்று நினைத்துப் பார்த்தால் ஒப்பீட்டளவில் மிகவும் வலுவான மெல்லிசைக்குழுதான் அது. முறைப்படி மேற்கத்திய சங்கீதம் பயின்ற ஜெயகுமார், பிரேம் குமார், எனும் சகோதரர்கள் அக்கார்டினையும் எலக்ட்ரிக் கிதாரையும் வாசிப்பார்கள். இன்றைய கீ போர்டுக்கு முந்தைய வடிவமான ‘காம்போ ஆர்கன்’ மற்றும் ட்ரம்ஸ் வாசிப்பதற்கு வேலூரில் இருந்து சிலர் வருவார்கள். அஞ்சல் துறையில் பணியாற்றுகிற சிவலிங்கம் என்பவர் தபேலா, டோலக் வாசிப்பார். எனது மற்றொரு கல்லூரி சீனியரான விஜயகுமார் ட்ரிபிள் காங்கோ வாசிப்பார் மற்றும் ஜேசுதாஸ் பாடிய பாடல்களைப் பாடுவார். இப்படித் தொழிற் முறையில் திறன்மிக்க குழுதான் அது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் பிச்சாண்டி அவர்களது முன்னெடுப்பில் ‘ரம்யா ஆர்ட்ஸ் அக்காடெமி ’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. உறுப்பினர்களைச்சேர்த்து ஆண்டுச்சந்தா வசூலித்து அவர்களுக்காக மாதம் ஒரு மெல்லிசை நிகழ்ச்சியோ நாடகமோ நிகழ்த்திக்காட்டுகிற ஏற்பாடு அது. சென்னையில் ‘சபா’ க்கள் இருக்கிறதல்லவா அது போன்றதுதான் இதுவும்.
பிச்சாண்டி மட்டுமல்லாது அப்போது கல்லூரி பேரவைத்தலைவராக இருந்த என்.செல்வராஜ், ஏ.சண்முகம், ஜி. சேஷாத்திரி,ஆர்.கோபால்சாமி, சிவ.இளங்கோ,ஸ்கூட் குமார், வை.ஆனந்தகுமார், என்.சம்பத், ஆர்.கே.மனோகரன், ஊரிசு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த துரை.புகழேந்தி மற்றும் என்னைப் போன்ற சக மாணவர்களெல்லாம் இந்த அமைப்பினை வழி நடத்தும் இயக்குநர்கள் குழுவில் இருந்தோம்.

முற்றிலும் மாணவர்களால் நடத்தப்பட்ட இந்த ரம்யா ஆர்ட்ஸ் அகாடெமி, அப்போது மிகவும் பிரபலமாக இருந்த மெல்லிசைக்குழுவில் ஒன்றான ‘விவேக் சாரதி’ குழுவினரை அழைத்து காமட்சியம்மன் கோவில் தெருவிலுள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில் முதல் நிகழ்ச்சியினை நடத்தியது.
பின்னர் ரேடியோ கிரவுண்டில் பூர்ணம்.விஸ்வநாதனின் ‘கால்கட்டு’, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘தூக்கு மேடை’ போன்ற நாடகங்களும் ‘லலிதாஞ்சலி’ குழுவினரின் இசை நிகழ்ச்சியும் என தொடர்ந்து நிகழ்ச்சிகள் ரம்யா ஆர்ட்ஸ் அக்கடெமி சார்பில் நடத்தப்பட்டன. இந்த லலிதாஞ்சலி குழுவினரில் பிரதானமாக ஷோபா,சுந்தர், சுரேந்தர் என மூவர் பாடுவார்கள். இந்த ஷோபா என்பவர் வேறு யாருமல்ல நடிகர் விஜய் யின் தாயார்தான் அவர் .
இப்படி நான்கு நிகழ்ச்சிகள் நடத்தியதோடு சரி. ரம்யா ஆர்ட்ஸ் அக்காடெமி யின் கதை அற்பாயுசில் முடிந்து போனது. அதற்குப்பல காரணங்கள்.
இப்படியொரு தருணத்தில்தான் திராவிட மாணவர் கழகத்தில் தீவிரமாகச்செயல்பட்டு வந்த மோகனசுந்தரம், பாரி என்கிற எங்களது சீனியர் மாணவர்கள் இருவர் தர்மபுரியில் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய ஓர் அரசியல் பயிற்சி முகாமிற்கு சென்று வந்தனர்.
10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற அம்முகாமில் பங்கேற்ற அவர்கள் திரும்பிவந்ததும் மிகப்பெரிய மாற்றம் எங்கள் மாணவர் வட்டத்தில் நிகழ்ந்தது.
இடது சாரி சித்தாந்தம் குறித்த விவாதங்கள், அவை குறித்த நூல்கள் வாசிப்பது என ஒரு புதியபோக்கு எங்களிடையே மேலெழத்தொடங்கியது. இதன் விளைவாக இந்திய மாணவர் சங்கத்தின் கிளை ஒன்று , எங்களது கல்லூரியில் உதயமானது. குடியாத்தத்திலிருந்த இந்திய மாணவர் சங்க தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் சம்பத்குமார் எங்களைத் தொடர்பு கொள்கிறார்.
இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மின்சார வாரியத்தில் பணியாற்றுகிற மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் எங்களுக்கு பரிச்சயம் ஆகிறார்கள். அவர்கள் எங்களுக்கு அடிப்படையான மார்க்சீய சித்தாந்தம் குறித்த வகுப்புகளை எடுக்க ஏற்பாடு செய்கின்றனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான சூர்ய நாராயணன், நடராஜன், ராமகிருஷ்ணன், பொன்னுசாமி,பாஸ்கர், இந்தியன் காஃபி ஹவுஸில் பணியாற்றிக்கொண்டிருந்த ராஜகோபால் போன்ற தோழர்கள்தாம் எங்களுக்கு மார்க்சீய சிந்தனைகளை அறிமுகம் செய்து வைத்தனர். மின் ஊழியர் தோழர்களில் இரண்டு நடராஜன்கள் இருந்தனர்.

அவர்களை அடையாளம் காண்பதற்காக ஒருத்தருக்கு புகையிலை நடராஜன் என்றும் மற்றொருவருக்கு புரட்சி நடராஜன் என்றும் பெயர்.
அடிக்கடி புகையிலை போடும் வழக்கம் இருந்ததால் ‘புகையிலை நடராஜன்’ எனப்பெயர் பெற்ற அவர் கோவில்பட்டிக்காரர்; சிறந்த பேச்சாளர்; மின்வாரியத்தில் தலைமை எழுத்தராகப் பணியாற்றிவந்தார். இளநிலை பொறியாளரான புரட்சி நடராஜன் , உள்ளூர்க்காரர்.
இவர்களோடு ஏற்பட்ட ஒரு தொடர்பு அதன் நீட்சியாக இலக்கிய ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைக்கிற ஒரு முயற்சியும் உருவானது.
திருவண்ணமலையிலிருந்து சென்று சென்னை மாநிலக் கல்லூரியில் முது நிலைக்கல்வி பயின்று கொண்டிருந்த வீபா.கணேசன்தான் இம்முயற்சியை அப்போது முன்னெடுத்தார். வீபாகணேசனை அமைப்பாளராகக் கொண்ட ஒரு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளை ஒன்று உருவாக்கப்பட்டது.
கிளை தொடங்கியதும் அடிக்கடி கூடிப்பேசுகிற விவாதிக்கிற செயல்பாடுகள் நடந்ததேயொழிய பொது நிகழ்ச்சிகள் எதுவும் திட்டமிடப்படவில்லை.
அப்போது காஞ்சி புரத்தில் மேல் நிலைப்பள்ளி ஆசிரியராகப்பணியாற்றிக்கொண்டிருந்த கவிஞர்.வெண்மணி மாற்றலாகி திருவண்ணாமலை நகருக்கு வந்தார். தமுஎச-வில் பரவலாக அறியப்பட்ட கவியரங்கக் கவிஞர் அவர்.
அவர் வந்தபிறகு தமுஎச நடவடிக்கைகள் சற்று சூடு பிடித்தன. ,திருவண்ணாமலை கிளையின் சார்பில் பொது நிகழ்ச்சி ஒன்று நடத்துவது எனத் தீர்மானமாயிற்று.
வரலாறு தொடரும்..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் சிறப்பான கொஞ்சம் முந்தைய காலத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள் தோழர்…. நன்றி…