சிறுகதைச் சுருக்கம் 93: ஜி. காசிராஜனின் அண்ணனின் பனியன் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 93: ஜி. காசிராஜனின் அண்ணனின் பனியன் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்



தமிழ் இலக்கிய உலகில் சிறுவர்களுடைய உளவியலை பலரும் பலவிதத்தில் படம் பிடித்திருந்தாலும் கரிசல் கலைஞர் காசிராஜன் காட்டும் உலகம் என்பது வேறாகத்தான் இருக்கிறது.

அண்ணனின் பனியன்
ஜி. காசிராஜன்

“கூச்சப்படக்கூடாது சம்பத்… நம்ம வீட்டுக்குள்ளேயே கூச்சப்பட்டா வெளியே எப்படிப் பேசுவே… சாப்பாடு போடுங்கன்னு தைரியமாக் கேட்கணும்.. இங்க நீ வந்து ஒரு வருஷம் ஆச்சு.. சாப்பாடு போடவா..”

“போதும்கா..”

“ஆறாம் வகுப்புல வந்து சேர்ந்தே.. நம்ம வீட்ல வசதி இல்லேன்னுதானே இங்க வந்துப் படிக்கறோம்னு நினைக்காதே.  நான்தான் நமக்கு தம்பி இல்லையேன்னு அப்பாக்கிட்டச் சொல்லி கூட்டியாரச் சொன்னேன்.. ஏங்கூட வெளாடுறதுக்கு யாரு இருக்கா.. அக்கா ஓம்மேலே எவ்வளவு பிரயமா இருக்கேன் தெரியுமா?”

“வைச்சது வைச்ச இடத்துல இருக்காதே..” பொன்ராஜ் அண்ணன் மச்சு வீட்டுக்குள்ளிருந்து அலுத்துக் கொண்டான்.

“என்னடா?” என்று சலித்து திண்ணையிலிருந்து அம்மா கேட்டாள்.

“இங்கே பனியன் வைச்சேன்.  இந்தக் கொடியிலதான் போட்டேன்.  காணோம்.”

“யாரு எடுப்பா? அங்கதான் இருக்கும், எங்க போகும்? நல்லா தேடு.”

சம்பத்துக்கு பக்கென்றது.  சொல்லவா வேண்டாமா என்று யோசித்தான்.  சொல்ல வெட்கமாகவும் இருந்தது.  பயமாக இருந்தது.  முகமெல்லாம் வேர்வை.  சொன்னா எல்லாரும் சிரிப்பாங்களே!

“குழம்பு வேணும்னா ஊத்திக்க..” என்று சொல்லிவிட்டு அக்காவும் மச்சி வீட்டுக்குள்போய் தேடினாள்.  “இந்நேரம் பனியன் எதுக்குண்ணே?”

“வெள்ளன உழுகப் போகணும்னு இப்பவே தேடிட்டிருக்கேன்.  சம்பத் நீ பாத்தியாடா?”

“இல்லண்ணே, நான் பாக்கலை.”

பொன்ராஜ் ஏதோ சொன்னான்.

“ஏன் இப்படிக் கத்தறேண்ணே?  வண்ணாத்தி வர்ற நேரம்.  வெளுக்க போட்ருப்போம்.. கேப்போம்..”

சம்பத்துக்கு இடுப்பெல்லாம் கூசியது.  பனியனை நினைத்தவுடனே உடம்புக்கு பாரம் கூடியது.  புத்தகம் எடுத்து உட்கார்ந்தான்.  மனம் செல்லவில்லை.  அப்பாவும் அண்ணனும் மனசில் தோன்றி பனியன் போட்டதுக்காக அவனை அடித்தார்கள்.  பயம் கவ்வியது.

சம்பத்துக்கு ரொம்ப நாளாக பனியன் போட வேண்டும் என்று ஆசை.  ஆனால் பனியன் இல்லை.  இவனும் பனியன் வேண்டும் என்று கேட்கவில்லை.  வீட்டிலும் எடுத்துத்தரவில்லை.  அறிவியல் வாத்தியார் பாடம் நடத்தும் போதெல்லாம் அவருடைய சட்டையையும் நன்கு வெளியே தெரியும் பனியனையும்தான் பார்ப்பான்.  சட்டையில் ஒரு பித்தானைக் கழட்டிவிட்டு முக்கோணம் மாதிரி பனியன் தெரியப் போட்டிருப்பார்.  பின்னால் திரும்பினாலும் பனியன் அப்பட்டமாகத் தெரியும்.  சம்பத்துக்கு கவர்ச்சியாக தெரியும்.

கருத்த வாத்தியாருக்கே இவ்ளோ நல்லா இருந்த நமக்கு எப்படி இருக்கும் …  எண்ணிக் கொள்வான்.

அஞ்சாம் வகுப்பு படிக்கிறவரை பின்னால் கிழிந்த கால் சட்டையும் தொளதொள மேல் சட்டையும்தான்.  அதுகூட ரெண்டு ஜோடிதான்.  எல்லாப் பையன்களும் ‘டேய் தாத்தா வாராண்டா’ என்று கேலி பண்ணுவார்கள்.  மற்றவர்களின் கேலிப் பேச்சு  சம்பத்தை ஊமையாக்கியது.  மனசில் சதா ஏக்கம்.  யாராவது நல்ல சட்டைப் போட்டுப் பார்த்தவுடனே ஏமாற்றம் இயலாமை வருத்தம்.

இவனுடன் படிக்கும் வெங்கடேஸ்வரன் டாக்டருடைய பையன்.  சாயங்காலம் விளையாட பனியன் போட்டுத்தான் வருவான்.  அது சிங்கப்பூர் பனியனாம்.  சம்பத்துக்கு தொட்டுப் பார்க்க வேண்டும் போல இருக்கும்.

அய்யா கூலி வேலை செஞ்சு பனியனா வாங்கித் தரமுடியும்.  அய்யாவே ரொம்ப நாளா சட்டை போடலை.  ஏதோ பெரியம்மா பெரியப்பா இருக்கப்  போயி படிக்கப் போடறாங்க.  பெரியப்பா வீட்டில் மூன்று அண்ணன்களும் ஒரு அக்காவும்.  இரண்டு பேர் படித்து சாத்தூரிலும் மதுரையிலும் வேலையில் இருக்கிறார்கள்.  மூன்றாவது பொன்ராஜ் அண்ணன்.  நான்காவது அக்கா.  அக்காமேல் இவனுக்கு கொள்ளைப் பிரியம்.  பிரியத்தை வெளிக்காட்டாமல் மனசுக்குளேயே வைத்திருப்பான்.

“சம்பத் படிக்கிறியா?” அக்கா கேட்டாள்.

“ம்..”

“பரீட்சை எப்படா இன்னும் ஒரு மாசம் இருக்குமில்ல.  ஆமா நீ அண்ணன் பனியனைப் பாத்தியா?”

சம்பத் அக்காவை நிமிர்ந்து பார்த்தான்.  கொஞ்சம் யோசித்து  “இல்லேக்கா” என்றான்.  அக்கா பாத்திரம் தேய்த்துக் கொண்டே “எங்க போயிருக்கும் வண்ணாத்தி சுப்பு வரட்டும் கேட்போம். நீ படி.”

“ஒண்ணுக்குப் போயிட்டு வந்த்ருறேன்கா.”

சம்பத் வெளியே ஓடினான்.  சற்று தள்ளிப் போய் சட்டையைத் தூக்கி உடம்பைப் பார்த்தான்.  உடம்பு முழுவதும் தெரிந்தது.  இரண்டு கயிறு மட்டும் புஜத்திலிருந்து தொங்க, முழங்கால் வரை வந்த பனியனை மடக்கி டவுசருக்குள் திணித்து வைத்திருந்தான்.  சம்பத்துக்கு அழுகையாய் வந்தது.  என்ன செய்யலாம்?  இன்னிக்குப் பாத்தா அண்ணன் பனியனைத் தேடணும். ஒண்ணுக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தான்.  வண்ணாத்தி சுப்பு சாப்பாட்டுக்காகக் காத்திருந்தாள்.  அக்கா சாப்பாடு போட்டுவிட்டு “சுப்பு அண்ணனோட பனியனை வெள்ளாவி வைச்சுருக்கியா?” என்றாள்.

“பனியனா? ரெண்டு வேட்டி, அம்மா சேலை, துண்டு நாலுதான் போட்டீங்க. பனியன் இல்லை தாயே.”

“இல்ல இங்க காணோம். அதுதான் ஒங்கிட்டப் போட்டோமோ என்னமோன்னு.”

“பனியன் போடலம்மா.”

“எதுக்கும் வீட்ல பாரு சுப்பு.”

சம்பத் புத்தகத்துப் பக்கத்தில் உட்கார்ந்தான்.  காலைல சீக்கிரம் எந்திரிச்சு கழட்டிப் போட்டுட்டு மூட்டைக்குக் கீழே இருந்துச்சுன்ன சொல்லிரனும் என்று எண்ணினான்.

“இங்க போட்ட பனியன் எங்க போகும்.. அண்ணன் எங்கயாச்சும் குளிக்கிற இடத்துல போட்டுருக்கும்.  மறந்து போயி   நம்மளப் போயி தொந்தரவு பண்ணிட்டு” என்று சொல்லிக் கொண்டே திண்ணையைக் கூட்டி படுக்கையை விரித்தாள்.    அங்குதான் அம்மா அக்கா சம்பத் படுத்துக் கொள்வார்கள்.  அண்ணன் பொன்ராஜ் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து விரிப்பானை எடுத்துப் போய் தொழுவத்தில் படுத்துக் கொள்வான்.

“சம்பத் படிக்கப் போறியா? படுக்கப் போறியா?”

“படுக்கப் போறேன்கா..” மெதுவாகச் சொன்னான்.

“ஏண்டா ஒரு மாதிரியா இருக்கே? தலைகிலை வலிக்குதாடா.”

அக்கா வந்து கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள் “ஏண்டா இப்படி பயந்து நடுங்கற. நான் உன் அக்காடா..”

அப்பொழுது பொன்ராஜ் அண்ணன் வந்தான்.

“என்ன பனியன் கேட்டியா? சுப்பு என்ன சொன்னா?”

“வெளுக்கப் போடலியாம், எதுக்கும் பாத்து காலைல  சொல்றேன்னு சொன்னா.”

சம்பத் படுத்துக் கொண்டான்.  தன்னையே நொந்து கொண்டான்.  இவ்ள பெரிய பனியனை யாராச்சும் போடுவாங்களா பனியன் போட்டவர்கள் அறிவியல் வாத்தியார் உட்பட ஒவ்வொருவராக மனதில் வந்தார்கள்.  சம்பத் பலவிதமாக எண்ணிக் கொண்டு தூங்குவதுபோல் கண்ணை மூடிக் கொண்டான்.  அக்கா ஏதோ சொல்லியவாறே பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.  அவள் பக்கத்தில் படுத்தது காதுவழி மனசில் தெரியும்.  அக்கா தன்னையேப் பார்ப்பதாக எண்ணி கண்ணை அசையாமல் வைத்திருந்தான்.

அவளுக்கு ஒரே புழுக்கமாக இருந்தது.  சம்பத்தைப் பார்த்தாள்.  “இந்தப் புழுக்கத்துல எப்ட்றா சட்டை போட்டுத் தூங்றே..” அக்கா எழுந்து அவன் சட்டையை கழட்ட ஆரம்பித்தாள்.  அவன் தூங்குவது போல கைகளை இறுக்கிக் கொண்டான்.  கழட்டிப் பார்த்தால் அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.  பூணூல் மாதிரி இருண்டு தோள்களிலும் இரண்டு பனியன் கயிறு.  சுருட்டி வைத்திருந்த பனியனை வெளியே எடுத்தாள்.  அவனுக்கு முழங்கால் வரை வந்தது.

அக்காவுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. சம்பத் எழுந்து கொண்டான்.  அக்கா விழுந்து விழுந்து சிரித்தாள்.  சம்பத்தை பனியனை பிடித்து இழுத்துக் கேலி பண்ணினாள்.

“அடே படவா, திருட்டுப் பயலே, கல்லுளி மங்கா..”

சம்பத் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான். விக்கி விக்கி அழுதான்.

“டேய், டேய், அழுகாதே சத்தம் போடாதே டா.  அம்மா வந்துடுவா.  கழட்டு, கழட்டு. சீக்கிரம் கழட்டு. யாருக்கும் தெரியாம வைச்சிடுவோம்.”

சம்பத் விசும்பி விசும்பி அழுதுகொண்டே கழட்டிக் கொடுத்தான்.  போர்வையால் முகத்தை மூடி வெட்கப்பட்டு அழுது கொண்டிருந்தான்.  அக்காவுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை.  அவன் முகத்தை மூடிக் கொண்டிருந்த போர்வையைப் பிடித்து இழுத்தாள்.  அவன் பலமாகப் பிடித்துக்  கொண்டிருந்தான்.

“டேய் சம்பத் அழுகாதே.  நாளைக்கு அப்பாக்கிட்டச் சொல்லி ஒனக்கு ஒரு பனியனை வாங்கித் தரச்சொல்றேன் என்ன?” என்று மீண்டும் போர்வையை இழுத்துப் பார்த்தாள்.  முகத்தை மூடிக் கொண்டு சிரித்துக் கொண்டே அழுதான்.  அக்காவுக்கு சிரிப்பு அடங்கவே இல்லை.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது. 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *