மற்றுமொரு குடியரசு தினம், வெகுஜனப் போராட்டம், அடக்குமுறை ஆண்டு?  – மந்தீப் திவானா | தமிழில்: தா.சந்திரகுரு

Image Credits: Rights Corridorகடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தினத்தையொட்டி ஒட்டுமொத்த கவனமும் ஷாஹீன் பாக் பெண்கள் மீதே இருந்தது. கடுமையான தில்லியின் குளிரில் கூடாரங்களின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவர்களின் அமைதியான தொடர் மறியல் போராட்டம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. அனைத்து தரப்பு போராட்டக்காரர்களையும் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கான இந்திய அரசியலமைப்பின் உறுதிப்பாட்டிற்காக இணைந்து நிற்பதற்கு அவர்களுடைய போராட்டம் தூண்டியது. மகாத்மா காந்தியால் மெருகேற்றப்பட்ட சத்தியாக்கிரக மரபில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு உறுதியளித்துக் கொண்டிருந்த ஆர்வலர்கள், கவிஞர்கள். ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் என்று அவர்கள் அனைவரும் இந்திய குடியுரிமை பெற தகுதியுடைய அகதிகளை மதத்தால் பிரித்து வைத்து குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டிருந்த திருத்தங்களை எதிர்த்து நின்றனர். அன்று அவர்கள் காட்டிய எதிர்ப்பு அதற்குப் பிறகு நடந்த மிருகத்தனமான கலவரம், காவல்துறை ஒடுக்குமுறை, கடுமையான கோவிட்-19ஆல் தூண்டப்பட்ட பொதுமுடக்கம் ஆகியவற்றால் இன்று நமது நினைவுகளுக்குள் சற்றே மறைக்கப்பட்டுள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Republic Day\2021-01-27T062048Z_1_LYNXMPEH0Q0AU_RTROPTP_4_INDIA-REPUBLICDAY-FARMERS.jpg

ஓராண்டு கழித்து ‘புதிய இந்தியா’வை உருவாக்குவதற்காக இந்த தேசிய அரசாங்கத்திடம் இருக்கின்ற வேட்கையின் விளைவாக, மதம் மற்றும் பிராந்திய ரீதியிலான தடைகளைக் கடந்த மற்றுமொரு மிகப் பெரிய அமைதியான வெகுஜன அணிதிரட்டல் தூண்டப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்படுகின்ற இழப்பிலே பெருவணிகத்தின் நலன்களுக்குப் பயனளிக்கும் வகையில் விவசாய விளைபொருட்களுக்கான சந்தைகளின் தன்மையை முற்றிலும் மாற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். தேவையெதுவுமற்ற அவசரத்துடன். விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் குறித்து அல்லது வேளாண் நடவடிக்கைகள் மீது அரசியலமைப்பில் மத்திய அரசிற்கான உரிமைகள் சந்தேகத்திற்குரிய வகையில் இருக்கின்ற நிலையில் மாநிலங்களுக்கு இருக்கின்ற உரிமைகள் குறித்து முறையான விவாதங்கள் எதுவும் இல்லாமல் இந்தச் சட்டங்கள் அவசர அவசரமாக வரையப்பட்டு பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

1950 ஜனவரி 26 அன்று முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள ஜனநாயகச் சடங்குகளில் மகிழ்ச்சி அடைவதற்கான  சந்தர்ப்பமாக இந்திய குடியரசு தினக் கொண்டாட்டங்கள் இருக்கின்றன. நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலிருந்தே அரசியலமைப்பு அதன் முக்கிய விழுமியங்களுக்கான தூண்டுதலைப் பெற்றிருக்கிறது. நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவம், சகோதரத்துவத்தை மேம்படுத்துதல் ஆகியவை அவற்றில் முதன்மையானவையாக இருக்கின்றன.

தங்கள் அரசியலமைப்பு குறித்து பெருமிதம் கொள்கின்ற, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தங்கள் நாட்டை அங்கீகரித்துக் கொண்டுள்ள உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கின்ற இந்தியர்கள் பலரிடமும் இப்போது அவநம்பிக்கை உணர்வு உருவாகியுள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Republic Day\India-Ranks-142nd-in-World-Press-Freedom-Index-2020.jpg

பொதுவாக அறியப்படுகின்ற உண்மைகள் தங்களைத் தாங்களே ஆதரித்துக் கொள்வதாக இருக்கின்றன. உலகளவில் குடிமை சுதந்திரங்களின் நிலைமை குறித்து அளவிட்டு வருகின்ற சிவிகஸ் மானிட்டர் என்ற பங்கேற்பு தளம், அடிப்படை உரிமைகள் என்று இந்திய அரசியலமைப்பில் உள்ள அத்தியாயத்தில் பொதிந்துள்ள கருத்து சுதந்திரம், அமைதியாக கூடி வாழுதல் போன்ற சுதந்திரங்கள் மிகவும் மோசமாகப் பாதுகாக்கப்படுவதன் காரணமாக ‘ஒடுக்கப்பட்ட’ என்ற பிரிவில் இந்தியாவை தரவரிசைப்படுத்தி வைத்திருக்கிறது. ‘எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள்’ அமைப்பின் பத்திரிகை சுதந்திரக் குறியீடு 180 நாடுகளில் இந்தியா 142ஆவது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. உலகெங்கிலும் இருந்து வருகின்ற ஜனநாயகத்தின் நிலையை அளவிடும் ‘சுதந்திர மாளிகை’ என்ற அமைப்பு உலகின் மிகப் பெரிய இருபத்தைந்து ஜனநாயக நாடுகளில் மிகப் பெரிய வீழ்ச்சியை இந்திய நாடு பெற்றுள்ளது என்று தன்னுடைய உலக சுதந்திரம் 2020 என்ற அறிக்கையில் பதிவு செய்திருக்கிறது.  அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் காரணங்களில், ஜம்மு-காஷ்மீரில் தன்னாட்சி அந்தஸ்தை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்தது, நடமாடும் சுதந்திரம், இணைய முடக்கம் என்று கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருப்பது ஆகியவை அடங்கும்.

இந்திய ஜனநாயகத்தை உறுதிப்படுத்த உதவுகின்ற சிவில் சமூகம் இன்று சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி சமூக நீதிக்கான ஆதரவாளர்கள், கல்வியாளர்கள், மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட அமைதியான ஆர்வலர்கள் பலரும் சந்தேகப்படும் வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக முயற்சியில் அவர்கள் விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் சிறைகளுக்குள் உள்ளனர். தாங்கள் செயல்படுவதற்கும், நிதி திரட்டுவதற்கும் கொண்டிருக்கும் திறனைக் கட்டுப்படுத்துகின்ற சட்டங்களிடமிருந்து உரிமைகள், நீதி, சமத்துவத்தை ஆதரிக்கின்ற சிவில் சமூக அமைப்புகள் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன, எடுத்துக்காட்டாக நாட்டில் நடைபெறும் உரிமை மீறல்களைக் கண்காணித்ததற்காக உலகின் மிகச்சிறந்த மனித உரிமை இயக்கமான அம்னஸ்டி இன்டர்நேஷனல் வேட்டையாடப்பட்டு பழி வாங்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அலுவலகங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டனர்.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Republic Day\Amnesty.jpg
Image Credits: Domiplay

துன்புறுத்தலுக்கு அஞ்சாமல் ஜனநாயகரீதியாக தங்களுடைய மாற்றுக் கருத்தை அனைவராலும் வெளிப்படுத்த முடியுமா என்பதுதான் ஜனநாயகத்தைக் கண்டறிவதற்கான உண்மையான சோதனையாக இருக்கும். குறுங்குழுவாதம், கருத்தியல் ரீதியாக சமூகத்தில் பிளவுகளை உருவாக்கி ஆழப்படுத்துதல், விமர்சனக் குரல்களை நெறித்தல் போன்ற செயல்பாடுகள் நாட்டின் சமூகக் கட்டமைப்பை அச்சுறுத்துவதாகவும், சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பைக் கெடுப்பதாகவும் இருக்கின்றன. அவை நாடு செழிக்க வேண்டும் என்பதைக் காண ஆர்வமுள்ள எவருக்கும் ஆழ்ந்த கவலையளிப்பதாகவே இருக்கின்றன.

நாட்டின் துடிப்பான சிவில் சமூகம் அனைவரையும் உள்ளடக்கிய ஆளுகைக்கான அர்ப்பணிப்புடன் சர்வதேச அளவில் தலைமைப் பாத்திரங்களை ஏற்கத் தயாராக இருப்பதற்கான சான்றாக இருப்பதை பல ஆண்டுகளாக இந்திய அரசியல் வல்லுநர்களால் சுட்டிக்காட்ட முடிந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்கள் உச்சத்தில் இருந்த போது ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாகவும், உலகெங்கிலும் உள்ள சுதந்திர இயக்கங்களுக்கான நம்பிக்கையாகவும் இந்தியா கருதப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசியலமைப்பே புதிதாகத் தோன்றிய பல சுதந்திர நாடுகள் தங்களுக்கான ஜனநாயக ஆட்சியை வடிவமைத்துக் கொள்வதற்கான வரைபடத்தை வழங்கியது. சர்வதேச அரங்கில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் நம்பகத்தன்மையுடன் பேசக்கூடிய இந்தியாவின் திறன் தற்போதைய சூழலில் சீரழிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான விதிமுறைகளை மேம்படுத்துவது, பாதுகாப்பது போன்றவை முக்கியமாக இருக்கின்ற பலதரப்பு நிறுவனங்களில் இந்தியாவின் பங்களிப்பின் மீது தாக்கங்களை அந்த நிலைமை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தினங்கள் சாராம்சத்தில் ஜனநாயகத்தின் பண்டிகைகளாகவே இருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கலாச்சார வாழ்க்கையைச் சித்தரிக்கின்ற அலங்கார ஊர்திகள் வண்ணமயமான குடியரசு தின அணிவகுப்புகளின் முக்கிய அம்சமாக இருந்து வருகின்றன. மதநம்பிக்கை அல்லது அடையாளம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த ஒன்றியத்தில் இடம் உண்டு என்பதை இந்தியர்களுக்கு நினைவூட்டும் வகையிலேயே அவை வடிவமைக்கப்படுகின்றன. ஜனவரி 26 உண்மையில் அரசியலமைப்பின் முதன்மையையும், நமது ஜனநாயகத்தை வென்றெடுக்க, ஒவ்வொரு நாளும் அதைப் பாதுகாக்க உதவியவர்களின் தியாகங்களையும் கொண்டாடுகின்ற நாள் ஆகும். குடியரசு தினத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 30 அன்று தியாகிகள் தினத்தை இந்தியா கொண்டிருக்கிறது. அது 1948இல் மதவெறியன் ஒருவனால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது குறித்த ஆண்டு நிகழ்வாக உள்ளது. கருத்தியல் வெறியின் அபாயங்களை நமக்கு முழுமையாக நினைவூட்டுகிற நாளாக அது இருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Republic Day\R Day Parade.jpg
Image Credits: Republic Day Parade

நமது அரசியலமைப்பு பல்வேறு கண்ணோட்டங்களுக்கு இடமளிக்கும் பாதைகளை நமக்கு வழங்கியிருக்கிறது. நிலப்பிரபுத்துவ, சாதி ஒடுக்குமுறையின் கீழ் இருந்து கொண்டிருந்த புதிய சுதந்திர இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது உண்மையில் ஜனநாயகம், சமத்துவத்திற்கான ஆர்வங்களுக்கு சிறகுகளைக் கொடுக்கும் நோக்கிலான நம்பிக்கைக்கான முயற்சியாகவே இருந்தது. இன்று அந்த ஜனநாயகம் உடைந்து சிதறக் கூடியதாக மாறியுள்ளது. இன்றைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லாத பலரும் மனம் சோர்வடைந்து போயுள்ளனர்.

ஆயினும்கூட, இந்திய அரசியல் தலைமையின் முன்பாக மற்றொரு பாதை இருக்கிறது. நிச்சயமாக பாதை மாற்றம் இன்னும் சாத்தியமானதாகவே உள்ளது  – அரசியலமைப்பு அதை உறுதிப்படுத்துகின்றது.

மந்தீப் திவானா

தலைமை திட்ட அதிகாரி

சிவிகஸ் நியூயார்க் அலுவலகம் 

https://thewire.in/rights/india-republic-day-protest-repression

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு