இலவசங்களின் இன்னொரு பக்கம் – இரா.இரமணன்தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்கு சில அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது, மக்கள் அதை உரிமையோடு கேட்டுப் பெறுவது ஆகியவை குறித்து தோழர் சுவாமிநாதன் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளவை நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் மக்களின் இந்த மனப்பான்மை – இலவசங்களை ஏற்றுக்கொள்வது, அதற்காக விழுமியங்களை மீறுவது – தேர்தல் நேரத்தில் மட்டுமே வெளிப்படுகிறதா? மற்ற நேரங்களில் வெளிப்படுவது இல்லையா? இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. மற்ற நேரங்களில் வெளிப்படுவது பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால் வாக்குகளுக்கு பணம் பெற்றுக் கொள்வது அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கான காரணங்கள் என்ன என்று சிந்திக்க வேண்டும்.

நான் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது (1969) மதுரைக்கு சென்றிருந்தேன். நகரப் பேருந்துகளில் மக்கள் வரிசையாக நின்று ஏறுவதைப் பார்த்தேன்.. இன்னும் சில நகரங்களில் இன்றும் இது போன்று ஒழுங்கைப் பார்க்கலாம். ஆனால் பல இடங்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதைத்தான் பார்க்க முடிகிறது. இரயிலில் முன்பதிவு செய்தவர்கள் கூட, அதுவும் புறப்படும் நிலையத்தில் கூட, ஏறுவதற்கு அவசரப்படுவதைப் பார்க்க முடிகிறது. கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் ஒன்றிற்கே இதுதான் நடைமுறை என்றால் இலவசத்திற்கு அலைமோதுவதைப் புரிந்துகொள்ளலாம். கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பயம்தான் நம்மை இயக்குகிறது. எல்லோருக்கும் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இருந்தால் வரிசை மீறுவோமா? அல்லது நீண்ட காலமாக இலவசங்களைக் கொடுத்து நம்மை ஒரு பண்பாட்டு சீரழிவிற்கு ஆளாக்கி விட்டார்களோ?

சரித்திர திரைப்படங்களில், புலவர்கள் மன்னனை வாழ்த்திப் பாடியபிறகு ஒரு தட்டில் தங்கக் காசுகளைக் கொண்டு வந்து அரசன் கை நிறைய அள்ளி புலவருக்கு வழங்குவது போல் காட்டுவார்கள். மகாகவி காளிதாஸ் திரைப்படத்தில் அரசவைக் கவிஞனான பின் பல்லக்கில் அவனுடைய ஊருக்கு வருகிறான். அவன் இள வயதில் காதலித்த பெண் மற்றவர்களுடன் தெருவில் நிற்பாள். அவன் தங்கநகையை அவள் மீது தூக்கி வீசுவான். மனிதர்களை பணத்துக்கு அடிமையாக நினைக்கும் மனப்பான்மை அந்த மகா கவிக்குக்கூட இருந்ததோ? சிறையில் வாடிய கணைக்காலிரும்பொறை தாமதமாக தரப்பட்ட தண்ணீரை மறுத்து உயிர் துறந்தான் என்று சொல்லித் தருகிறார்கள். ஆனால் அது போல் செல்வத்தைவிட தன்மானம்தான் பெரிது என்று சாதாரண மனிதர்கள் நினைக்கும் நிகழ்வுகள் பாடப்புத்தங்களில் வருவதில்லை.

நிலவுக்கு டிக்கெட், ஆப்பிள் ஐபோன், 100 சவரன் தங்கநகை

தெனாலிராமன் தான் வளர்த்த குதிரைக்கு தினமும் ஒரே ஒரு பிடி புல் மட்டும் கொடுத்து வளர்ப்பான். அதைப் பார்வையிட வரும் அரசனின் தாடியைப் புல் என்று நினைத்து முரட்டுத் தனமாக இழுக்கும். அதுபோல் நம்மை அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடவைத்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இலவசங்களை நீட்டும்போது நாமும் அதை காய்ந்த மாடு கம்பம் காட்டில் பாய்ந்தது போல் பாய்கிறோமா?

இன்னொருபுறம் தான தர்மங்களை உயர்வாக பேசும் அறநெறிகள். மக்களின் உழைப்பில் செல்வங்களை திரட்டிக் கொண்டு அதிலிருந்து ஒரு சிறு பகுதியைத்தான் தானம் செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா? அதிலும் அன்னதானம் செய்வது மிகச் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. முழு வயிற்றிற்கு சாப்பிட இயலாத மக்கள் இலவச சாப்பாட்டை கண்டதும் முட்டி மோதுவதில் என்ன வியப்பு? கோயில்களில் போடப்படும் அன்னதானமும் சரி பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவும் சரி இன்றைய சூழ்நிலையில் நியாயமானதுதான். ஆனால் மீன் கொடுப்பதுடன் மீன் பிடிக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும் அல்லவா?

இந்த மனப்பான்மை வெளிப்படுவது வசதியில்லாதவர்கள் மட்டுமல்ல; கல்யாண வீடுகளில் சாப்பாட்டு பந்திக்கு முண்டியடிப்பது; அமிதாப்பச்சன் போன்றவர்கள் கூட விவசாயி என்று சொல்லி நிலங்களைப் பெறுவது; எம்பிக்கள் எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் மலிவு விலையில் உணவு பெறுதல் போன்றவைகூட இலவசங்களை பெறுவதில் நம் அறநெறிகள் தாழ்ந்து போவதுதான். இதில் எளியவர்களுக்குக் கொடுப்பதை இலவசம் என்றும் தொழிலதிபர்களுக்கு கொடுப்பதை ஊக்கத் தொகை (incentive), மானியம், சலுகை (concession) என்று பல்வேறு கவுரப் பெயர்களில் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் விவசாயிகளுக்கு நன்றி கூறும் தேங்க்ஸ் கிவிங் டே போன்ற பல தேசிய தினங்களில் விலை குறைப்பு விற்பனை என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அன்று பொருட்களை வாங்க மக்கள் அலை மோதுகின்றனர். தேசிய தினங்களின் முக்கியத்துவம் மறக்கப்பட்டு நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி நிற்கிறது. எதுவும் இலவசமாக வருவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்டோக்களில் விட்டு சென்ற பணம்,நகை ஆகியவற்றை காவல்நிலையங்களில் ஒப்படைக்கும் மனிதர்களையும் பார்க்கிறோம்.இவர்கள் விதிவிலக்கானவர்கள். எல்லோரையும் இவர்களைப் போல மாற்ற என்ன செய்ய வேண்டும்? விதிவிலக்கை விதியாக மாற்ற வேண்டும். அதற்கு இலவசங்களின் பின்னால் உள்ள அரசியல், பொருளாதாரக் காரணிகளை விளக்குவதுடன் பண்பாட்டு பிரச்சாரங்களையும் செய்ய வேண்டும்.