ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம்
“அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது” கவிதை தொகுப்பின் தலைப்பே பார்த்த மாத்திரத்தில் நமக்குள் பல்வேறு வினாக்களை எழுப்பிவிடுகிறது. ஒரு தலைப்பு நம் சிந்தனையை உசுப்ப வேண்டும். கவிஞர் இந்திரனின் கடவுளுக்கு முன் பிறந்தவர்கள், பிணத்தை எரித்தே வெளிச்சம் கவிஞர் பாரதி கவிதாஞ்சனின் வெட்டப்பட்ட எனது கட்டை விரல் போன்ற சில கவிதைத் தலைப்புகளை உதாரணமாக கொள்ளலாம். அந்தத் தலைப்புகளே ஒரு காலத்தையும் ஒரு கலகத்தின் துளி நெருப்பையும் நெற்றியில் சுமந்திருப்பதை காணலாம். அந்த வகையில் இந்த நூலின் தலைப்புக்காக நூலாசிரியர் கவிஞர் இளமதியை பாராட்டலாம். அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது தலைப்பு சித்தாள்கள் குறித்து பொது புத்தியில் விதைக்கப்பட்ட மலிவான மதிப்பீடுகளை சிந்தனையில் மோதி சிதறச் செய்கிறது. நாளெல்லாம் கலவையில் சில்லிட்ட கைகளும் கழுத்து நரம்புகள் இழுக்க செங்கல்லும் சிமெண்டு மணலும் சுமந்து நூற்றுக்கணக்கில் வீடுகளை உருவாக்கும் ஒரு கட்டிட சிப்பந்தி தன் ஆயுளுக்குள் தனக்கென ஒரு கான்கிரீட் வீட்டை கட்ட முடியாமல் கூரை ஓட்டு வீடுகளுக்குள்ளேயே தேய்ந்து போகிறாள். அவள் கனவுக்குள் இருக்கும் வீடும் வறுமை நீங்க தலையில் குடும்பத்தையே பாண்டுகளில் சுமக்கும் துயரத்தையும் ஒரு வீடு குறித்த இடைவிடாத கனவின் துரத்தலையும் ஏக்கத்தையும் நியாயமான எதிர்ப்பார்ப்பையும் இத்தலைப்பு உணர்த்திவிட்டுச் செல்கிறது. கவிஞர் இளமதியின் நூலுக்குள் நுழைந்து வாசிக்கும்போதுதான் தெரிகிறது கவிதை நூலின் தலைப்பே ஒரு கவிதையாகிவிட்டிருப்பது. இவர் தனது கவிதைத் தொகுப்பு முழுக்க கவிதைகளை குறும்பாக்கள் துளிப்பாக்களால் நிறைத்திருக்கிறார். அளவில் சிறியதென்றாலும் வாசித்து முடித்ததும் சில கவிதைகள் வாசிப்போரை அதன் அடியில் மறைந்திருக்கும் உட்பொருள் குறித்த யூகங்களை நோக்கி சிந்தனையை நகர்த்தி விடுகிறது.
பல கவிதைகள் இயற்கையின் வாசல்களுக்கு அருகில் அழைத்துச்சென்று வசந்தங்களின் மொட்டுகளை அவிழ்த்து விடுகிறது சில கவிதைகள். ஒரு குழந்தையின் பார்வையில் அதன் எண்ணங்களின் மீதமர்ந்து காற்றிலிறங்கும் ஒரு இறகைப்போல் நம்முடன் பயணிக்கிறது. சமூகத்தின் மீதான உள்ளார்ந்த பார்வைகளையும் சில கவிதைகள் போகிறபோக்கில் உணர்த்திவிடுகிறது.
இலைச்சருகுகளினூடே
நடப்பது
இனிமைதான்
நிமிர்ந்து மரத்தைப் பார்க்கும்வரை.
எதையும் மேம்போக்காக பார்க்காமல் அதன் அசல் தன்மையை கூர்ந்து கவனிக்கும்போதுதான் அழகியல் தாண்டிய காட்சிகள் வலிகள் நமக்கு புலப்படும் என்பதை மேற்காணும் கவிதை சொல்லிச்செல்கிறது.
வீட்டைவிட்டு வெளியே சென்று பொருளீட்டும் பெண்ணின் வெளிகள் சுதந்திரமாய் தெரிந்தாலும் அவள் பணி முடித்து வீடு திரும்புதலை அவள் மேலிருக்கும் அடுத்த கட்ட சுமைகளுக்கிடையே தனக்கான தனித்த ரசனைகளை தள்ளிப்போடுவதையும் அவளின் அன்றாடங்களின் மனநிலையையும் நறுக்கென்று ஒரு கவிதை நிலவுடனான ஒரு உரையாடலாய் சொல்கிறது.
ஓடி ஒளிந்துகொள்ள
உனக்கு மேகமில்லை
எனக்கு ஓய்வில்லை
சரி வா பேசலாம் என்றேன்
வீடுவரை வந்துகொண்டிருக்கிறது
எல்லாச்சந்திலும் எதிர்பட்ட
நிலா.
தன் அறிவை அனுபவத்தையெல்லாம் நொடியில் வீசியெறிந்து குழந்தைகளின் உலகத்துக்குள் தன்னை பொருத்திப்பார்க்கும் மனநிலை அபூர்வமானது. பிறை நிலாவைப் பார்த்து ஒரு குழந்தை பெயரிடுவதை அதன் ரசனையிலேயே பதிவிடும் கவிதை அலாதியானது.
மூன்றாம் பிறைக்கு
பாப்பா இட்ட பெயர்
கொஞ்சூண்டு நிலா.
இன்னொரு கவிதை…
மழை பிடித்ததால்
குடை பிடிக்கவில்லை
எல்லோருக்கும் மழை பிடிக்கும். சூழல்கள் சில நேரம் அழகான மழையைக்கூட சிலரை சலித்துக்கொள்ளவும் செய்யும். ஆனால் எப்போதும் மழை விரும்பும் கவிதை மனசுக்கு குடை என்பது எதிர்ச்சொல்தான் போலும். மழை பிடித்ததால் குடை பிடித்தமானதாய் இருக்கவில்லை நனையாமலிருக்க குடை பிடிக்க விருப்பமில்லை என்று இரு பொருளில் அழகாய் வெளிப்படுகிறது கவி ரசனை.
இந்த வானம்
என்னுடையது என்கிறேன்
ஒளிந்திருப்பது
தன்னுடையது
என்கிறாள் பாப்பா.
என்ற கவிதையில் வானத்தின் பிரம்மாண்டத்தை மட்டுமே தனதாக்கிக்கொள்ள நினைக்கும் பெரியவர்களின் பார்வையிலிருந்து விலகி அதனுள் ஒளிந்திருக்கும் நட்சத்திரங்களை இரவின் கண்களால் முன்னோக்கிப் பார்க்கும் ஒரு குழந்தையின் மனமே கவிதையின் பலமாகவும் தெரிகிறது.
கவிஞர் இளமதி இப்படி சின்னச்சின்ன கவிதைகள் மூலம் வாசகரை ஆச்சர்யங்களில் நனைத்து யோசனைகளில் ஆழ்த்த விழைகிறார். எளிமையை போர்த்திருக்கும் கவிதைகளினூடே இன்னும் ஆழமான சொல்லாடல்களையும் பல்வேறு கருத்தியலையும் அடுத்தடுத்த படைப்புகளில் வெளிப்படுத்தும் சாத்தியங்கள் இத்தொகுதியை வாசிப்பதின் மூலம் உணர முடிகிறது.
வழக்கமாக பெண்கள் கவிதைகளை ஆழ்ந்து ரசிக்கும் வாசக நிலையில் மட்டுமே நின்றுவிடுவதாக முந்தைய காலங்களில் ஒரு கருத்து நிலவியதுண்டு. காரணம் தனி மனித உணர்வுகளை பொதுக்கருத்தியலை சமூகம் சார்ந்த சிந்தனைகளை காமத்தை காதலை ஏக்கத்தை அழுகையை சிரிப்பை எழுத்தாய் வெளிப்படுத்த அவர்களுக்கு போதிய வெளியும் வெளிச்சமும் கிட்டாமலிருந்த காலங்கள் அது. ஆனால் அவை யாவும் தேய்ந்து இன்று பல பெண் கவிஞர்களின் படைப்புகள் ஒளிவு மறைவின்றி தெளிந்த சிந்தனையுடன் பெருந்திறப்புடன் வெளிவரத் தொடங்கி பல காலமாகிவிட்டது. கவிஞர் இளமதியின் “அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது” இவரது முதல் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அன்பு மழலை சுய தேடல்கள் இயற்கை சமூகம் என பரவலாய் கவிதைகளை குறும்பாக்களாய் படைத்திருக்கும் இவர் கவிதைகளின் அத்தனை வடிவங்களிலும் நுழைந்து இன்னும் ஆழமான படைப்புகளை அடுத்தடுத்த தொகுதிகளில் தருவார் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
நூல்: அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – கவிதை தொகுப்பு
ஆசிரியர் : இளமதி
வெளியீடு: வேரல் புக்ஸ்
வாழ்த்துகள்.
சந்துரு, ஆர்.சி
சென்னை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.