நூல்: ஆன்டன் செகாவ் சிறுகதைகள்
ஆசிரியர்: ஆங்கிலத்தில் கான்ஸ்டன்ஸ் கார்னெட், தமிழில் சந்தியா நடராஜன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம், ஒன்பதாவது அவென்யு, அசோக் நகர், சென்னை -83.
விலை. ரூ.200

இலக்கியத்தில் சிறுகதை என்னும் வடிவம் உருவாகி வந்த காலத்தில் அதற்கு நிலையானதொரு செவ்வியல் தன்மையை உருவாக்கியதில் இரு முக்கியமான முன்னோடிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஒருவர் பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பசான். மற்றொருவர் ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். தம் கதைகளில் சுவாரசியத்துக்கும் அப்பால் வாழ்க்கையின் ஒரு துண்டு சித்திரத்தை முன்வைத்து, அதில் பொதிந்திருக்கும் எண்ணற்ற சிக்கல்களையும் கோணங்களையும் உணர்த்தும் கலையில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.

அபூர்வமான ஒரு வாழ்க்கைத்தருணம், அதன் வழியாக வெளிப்படும் மானுட மேன்மை, கீழ்மை, மோகம், வெறுப்பு, பகடி, காதல், பாசம், இரக்கம் போன்ற பண்புகளை தம் சித்தரிப்பின் வழியாக உணர்த்தும் ஆற்றல் ஆகிய இரண்டையும் கொண்ட பின்னலாகவே அந்த மேதைகள் தம் படைப்பை உருவாக்கினர். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் உருவாக்கிய தடத்தில்தான் இன்றும் சிறுகதையின் பயணம் நிகழ்கிறது.

இரு முன்னோடிகளின் படைப்புகளையும் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் உலகெங்கும் கொண்டு சென்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மாப்பசானை மொழிபெயர்த்த ஆல்பெர்ட் மெக்மாஸ்டரும் செகாவை மொழிபெயர்த்த கான்ஸ்டென்ஸ் கார்னெட்டும். அவற்றைப் படித்த பிரதேச மொழிபெயர்ப்பாளர்கள் தத்தம் மொழிகளில் அப்படைப்புகளை மொழிபெயர்த்து வாசகர்களுக்கு அளித்தனர். தமிழில் புதுமைப்பித்தன் தொடங்கி ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம், இளம்பாரதி, சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர், ச.சுப்பாராவ் வரையிலும் பலர் செகாவ் சிறுகதைகளை அவ்வப்போது மொழிபெயர்த்திருக்கின்றனர். செகாவ் பற்றி ஒரு தனிப்புத்தகமே எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். அவர்களின் வரிசையில் சமீபத்தில் செகாவின் பத்தொன்பது சிறுகதைகளை மொழிபெயர்த்து ஒரு தொகுதியாக வெளியிட்டிருக்கிறார் சந்தியா நடராஜன். கதைகளுக்கு அப்பால் தன் முன்னுரையில் செகாவ் பற்றி அவர் எழுதியிருக்கும் குறிப்புகள் மிகவும் முக்கியமானவை. எழுத்தாளன் என்னும் ஆளுமைக்கும் அப்பால் மானுடநேயராக காலராவுக்கு எதிரான சுகாதாரப்பணிகளிலும் பல பள்ளிகளை நிறுவும் பணிகளிலும் பங்காற்றிய அவருடைய ஆளுமையைப் பற்றி அவை புரிந்துகொள்ள உதவியாக உள்ளன. ஏற்கனவே அகிரா குரோசுவாவின் தன்வரலாற்று நூலையும் சீன வாழ்வியல் நூலான தாவோ தே ஜிங் நூலையும் தமிழுக்கு மொழிபெயர்த்து வழங்கியிருக்கும் நடராஜனின் ஆளுமையும் அர்ப்பணிப்புணர்வும் ஆன்டன் செகாவ் தொகுதியிலும் வெளிப்படுகிறது.

நாற்பத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்ந்த செகாவ் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு சிறுகதையையும் படித்து முடித்ததும் வாழ்க்கையில் மிக எளிமையான ஒரு தருணத்தில் இத்தனை உள்ளடுக்குகளா என்னும் வியப்பே மேலிடுகிறது. மற்றவர்கள் பார்வையில் மிக எளிதாக நழுவிவிடும் கூறுகளை ஒரு மீன்கொத்தியின் பார்வையுடன் சரியாக அடையாளம் கண்டு, அவற்றை நாம் அறியச் செய்வதில் செகாவ் சிறந்து விளங்குகிறார்.

அவதூறு தன் வாயாலேயே தன்னைப்பற்றிய மதிப்பைச் சீர்குலைத்துக்கொள்ளும் ஓர் ஆசிரியரின் சிறுகதை. நுணலும் தன் வாயால் கெடும் என்னும் பழமொழியை நினைத்துக்கொள்ளாமல் இச்சிறுகதையைப் படிக்கமுடியாது. ஓர் ஆசிரியரின் மகனுக்குத் திருமணம் முடிந்து, விருந்துக்கான ஏற்பாடுகள் நடைபெறும் தருணத்தில் சிறுகதை தொடங்குகிறது. சமையல் ஏற்பாடுகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக சமையல் கூடத்துக்குள் நுழைகிறார் ஆசிரியர். அங்கே வகைவகையான இறைச்சி வகைகள் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மணம் அவரைக் கிறங்கடிக்கின்றது. அவருடைய கட்டுப்பாட்டை மீறி அவருடைய நாவில் எச்சிலூறுகிறது. அக்கம்பக்கத்தில் சத்தம் கேட்கும் அளவுக்கு அவர் தன்னை மறந்து நாக்கைச் சப்புக்கொட்டிக்கொள்கிறார்.



தற்செயலாக அந்தப் பக்கம் வரும் ஒருவன் அச்சத்தத்தைக் கேட்டு ”யாரை முத்தமிடுகிறீர்கள்? அந்தச் சமையல்காரியையா?” என்று கேலியாகக் கேட்டுவிட்டுச் செல்கிறான். அதிர்ச்சியுடன் திரும்பும் ஆசிரியர் அப்போதுதான் அந்தக் கூடத்தில் மற்றொருத்தி இருப்பதையே பார்க்கிறான். அது முத்தமிடும் சத்தமல்ல, சுவையூறியதால் நாக்கு சப்புக் கொட்டிய சத்தமென எடுத்துச் சொன்னது எதையும் அவன் காதுகொடுத்துக் கேட்காமலேயே வெளியேறிவிடுகிறான்.
பதற்றமுடன் சமையல் கூடத்தைவிட்டு வெளியே வரும் ஆசிரியர் அவன் யாரோ சிலருடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, தன்னைப் பற்றித்தான் ஏதோ தப்பும் தவறுமாகச் சொல்வதாக நினைத்து உணர்ச்சிவசப்பட்டு அவர்களை நெருங்கிச் செல்கிறார். முத்தமிட்டதாக அவன் சொல்வது அனைத்தும் பொய்யென்றும் உண்மையில் தான் நாக்கு சப்புக்கொட்டியதாகவும் வலியுறுத்திச் சொல்கிறார். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. எனினும் ஆசிரியர் சொல்வதை தலையசைத்து கேட்டுக்கொள்கிறார்கள்.

அதற்குள் அந்த உதவியாளன் அங்கிருந்து வேறு எங்கோ சென்று வேறு சிலருடன் உரையாடத் தொடங்குகிறான். மீண்டும் பதற்றத்துடன் அந்த இடத்துக்குச் சென்ற ஆசிரியர் மீண்டும் விளக்கம் அளிக்கத் தலைப்படுகிறார். இப்படி யாருக்குமே தெரியாத ஒரு செய்தியை அவராகவே அனைவரிடமும் பரப்பி தனக்குத்தானே அவதூறைத் தேடிக்கொள்கிறார்.

அவசரபுத்தியும் பதற்றமும் ஒருவரிடம் ஒருங்கே அமையும்போது அவர் மனத்தில் அமையும் கோணல்களுக்கு எல்லையே இல்லை. தன் அசட்டுத்தனத்தால் தனக்குத் தானே இழிவைத் தேடிக்கொள்கிறார் அவர். செகாவ் அளிக்கும் சுருக்கமான விவரணைகள் அந்த ஆசிரியரின் நிலையை ஒரு நேர்த்தியான புகைப்படத்தைப்போல உணர்த்துகிறது. “நடந்து சென்றபோது தன் முகத்தில் தார் பூசப்பட்டிருப்பதைப்போலவும் தன்னை ஊரே வேடிக்கை பார்ப்பதுபோலவும் அவனுக்குத் தோன்றியது” ”தேனீக்கள் சூழ்ந்துவந்து கொட்டியதைப்போல இருந்தது” “கொதித்த நீரை தன்மீது யாரோ கொட்டியதைப்போல உணர்ந்தான்” போன்ற வரிகள் அவதூறின் அச்சத்தால் அந்த ஆசிரியர் அடைந்த மனவேதனையை உணர்த்துகின்றன. ஓர் ஆசிரியராக இருந்தும்கூட சிந்தித்துச் செயல்பட முடியாத அளவுக்கு அவதூறைப்பற்றிய அச்சம் அவர் கண்களை எப்படி மறைத்துவிட்டது என்பதையும் உணர்த்துகிறது. .எல்லாவற்றுக்கும் மேலாக ”யாரை வேண்டுமானாலும் முத்தமிடுங்க. சுத்துங்க. ஆனா எல்லாருக்கும் தெரியறமாதிரி வேண்டாம்” என்று சொல்கிறாள் அவர் மனைவி. குற்றத்தைப்பற்றிய புதியதொரு பார்வைக்கோணத்தை முன்வைக்கிறது அக்கூற்று.

குடும்பத்தலைவன் என்னும் சிறுகதையில் ஒருவனுடைய ஒருநாள் வாழ்க்கையைச் சித்தரிக்கிறார் செகாவ். சூதாட்ட மையத்துக்குச் சென்று சூதாட உட்காரும்போது அவன் நடந்துகொள்ளும் விதம் ஒரு மாதிரியாக இருக்கிறது. சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து விரக்தியுடன் எழுந்திருக்கும்போது அவன் நடந்துகொள்ளும் விதம் மற்றொரு மாதிரியாக இருக்கிறது. மனச்சோர்வுடன் வீட்டுக்கு வந்து உணவு மேசையில் அமர்ந்ததும் வேறொரு விதமாக அவன் நடந்துகொள்கிறான். இரவு தூங்கி விடியலில் எழுந்ததும் நடந்தவை அனைத்தும் மறந்துபோக அவன் நடந்துகொள்ளும் விதம் முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் உடை மாற்றுவதுபோல அவன் தன் குணத்தை மாற்றிக்கொள்கிறான். ஒருவனுடைய குணத்தைத் தீர்மானிப்பது அவனுடைய அக உலகமா, புற உலகமா என்னும் ஆதாரமான கேள்வியின் நரம்பைத் தொடுகிறார் செகாவ்.

Anton Chekhov

இத்தொகுதியின் மிகச்சிறந்த சிறுகதை பிச்சைக்காரன். ஒருநாள் வழக்கறிஞரான ஸ்கார்ட்சோவை நெருங்கி பிச்சைக்காரன் தோற்றத்திலிருந்த ஒருவன் பணத்துக்காக யாசிக்கிறான். ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவன் என்றும் வேலையிழந்து தற்சமயம் வாடுவதாகவும் அவன் சொல்கிறான். அதைக் கேட்டு வழக்கறிஞர் வேதனைப்படுகிறார். அதே சமயத்தில் அவன் முன்பொரு தருணத்தில் தன்னை ஒரு மாணவன் என்று சொல்லிக்கொண்டு பணம் யாசித்த பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. உடனே பிச்சைக்காரனை மிரட்டுகிறார் அவர். அவன் உண்மையை ஒத்துக்கொள்கிறான். அவனுக்கு வேலை கொடுப்பதாக அவனை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் அவர். வீட்டு சமையல்காரியை அழைத்து அவனுக்கு விறகு உடைக்கும் வேலையை வழங்கும்படி சொல்லி அனுப்பிவைக்கிறார். திரும்பி வந்ததும் பணம் கொடுத்து அனுப்பிவைக்கிறார். மாதாமாதம் வந்து விறகு உடைத்துவிட்டு பணம் பெற்றுக்கொண்டு செல்லும்படியும் சொல்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு அவனிடம் ஓர் அறிமுகச்சீட்டை எழுதிக் கொடுத்தனுப்பி வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறார். ஒரு மனிதனை நல்ல சீர்திருத்தப்பாதைக்குக் கொண்டுவந்த நிறைவில் அவர் மகிழ்ச்சி கொள்கிறார்.

இரு ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக ஒரு நாடக அரங்கில் அவனைச் சந்திக்கிறார் அவர். ஒரு நோட்டரியின் அலுவலகத்தில் மாதம் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் வேலை செய்வதாக அவன் தெரிவிக்கிறான். அவருடைய சொற்கள் தன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததைச் சொல்லி நன்றி தெரிவிக்கிறான். அவனை நல்வழிப்படுத்தி காப்பாற்றிவிட்டதை நினைத்து பெருமையில் திளைக்கிறார் வழக்கறிஞர். அவரோடு சேர்த்து, அவர் வீட்டுச் சமையல்காரிக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக அவன் தெரிவிக்கிறான். அதைக் கேட்டு அவர் முதலில் குழம்பிவிடுகிறார். அவர் வீட்டில் ஒருநாளும் அவன் விறகு வெட்டியதில்லை என்றும் அவனுக்காக சமையல்காரியே விறகு வெட்டியதாகவும் அவனுக்காக அவள் வடித்த கண்ணீரே தன் பாதையை மாற்றியமைத்ததாகவும் அவன் சொல்லிவிட்டுச் செல்கிறான். வழக்கறிஞருக்கு அவனைத் திருத்தவேண்டும் என்கிற முனைப்பு இருக்கிறது. அந்த வேலைக்காரியோ தன் கண்ணீராலேயே அவனைத் திருத்திவிடுகிறாள். நல்வழிப்படுத்துவதை ஒரு நோக்கமாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறார் வழக்கறிஞர். நல்வழிப்படுத்துவதை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் தன் இயல்பாகவும் நினைத்துச் செயல்படுகிறாள் வேலைக்காரி.

பணிச்சுமையின் காரணமாக இரவுகளில் தொடர்ச்சியாக தூக்கமின்றி தவிக்கிற ஒருத்தி, ஓயாமல் அழுது ஆரவாரம் செய்கிற குழந்தையை அமைதிப்படுத்த முடியாமல் கழுத்தை அழுத்திக் கொன்றுவிட்டு பக்கத்திலேயே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட ஒரு பெண்ணின் கதையை முன்வைக்கிறது தூங்கவிடு என்னும் சிறுகதை. ஒரு தகவலை உறுதிப்படுத்துவதற்காக அரசு அலுவலகத்துக்கு வருகை தரும் ஒரு கிராமத்துக்காரனை தொடக்கத்தில் உதாசீனம் செய்துவிட்டு, தனக்குரிய கையூட்டு கிடைத்ததும் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிற எழுத்தரொருவரைப் பற்றிய கதை விசாரணை. ”என்ன மாதிரியான மனிதர்கள்” என்று அலுத்துக்கொண்டே வெளியேறுகிறார் கிராமத்துக்காரர்.

செகாவின் கதைகளில் உள்ள இறுதிக்கணங்கள் மிகமுக்கியமானவை. அவை மனிதர்களின் மனத்தில் நிழலென மறைந்துள்ள மற்றொரு உருவத்தை அடையாளப்படுத்துகின்றன. நிழலில்லாத மனிதர்களே இல்லை என்பதுபோல நிழலுருவம் இல்லாத மனிதர்களும் இல்லை. ஆடியில் தெரியும் பிம்பத்தைப்போல கதையின் இறுதிக்கணத்தில் அந்த நிழலுருவம் வெளிப்பட்டுவிடுகிறது.

இத்தகு இறுதிக்கணங்களுக்கு நவீன சிறுகதைகளில் ஒரு முக்கியமான இடம் உருவாகி மெல்ல மெல்ல நிலைபெறத் தொடங்கியது. எல்லா வகைகளிலும் அதைத் தொடங்கிவைத்தவர் செகாவ். திரை விலகுவதுபோல, மழைக்காலத்தில் வானவில் எழுந்து மறைவதுபோல இந்த இறுதிக்கணங்களை நவீன சிறுகதைகள் காட்டி மறைகின்றன. அக்கணத்தில் எல்லா அழகு அழகின்மைகளோடும், நன்மை தீமைகளோடும், பெருமை சிறுமைகளோடும் இணைந்து ஒரு கூட்டு உருவமென மானுடம் காட்சியளிக்கிறது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *