நூல் அறிமுகம்: ஆன்டன் செக்காவ், ஆகச் சிறந்த கதைகள் | பொன் விஜி – சுவிஸ்புத்தகத்தின் பெயர்:- ஆன்டன் செக்காவ், ஆகச் சிறந்த கதைகள்.
ஆசிரியர் :- ஆன்டன் செக்காவ்
தமிழில்:- சு. ஆ. வெ. சு. நாயகர்
பதிப்பகம்:- தடாகம்
தொலைபேசி :- 00914443100442
கின்டலில்

அன்பான நண்பர்களே, மிக நீண்ட நாட்களாக டால்ஸ்டாய், செக்காவ், கார்க்கி, புஷ்கின் இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இவர்களின் எழுத்து ஆளுமைகளை, அவர்களின் மேம்பட்ட கருத்துக்களை அவர்கள் தம் நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பத்திரிகைகள் மூலமாகவும் எமக்குத் தந்திருப்பதை, நாம் மற்றைய நமது தமிழ் எழுத்தாளர்களின் மேடைப் பேச்சுக்கள் வழியாக அறிகிறோம். எல்லா ரஷ்ய எழுத்தாளர்களுமே ஜாம்பவான்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆன்டன் செக்காவ்வின் கதைகளையோ அல்லது நாவலையோ படிக்கவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை இக்கதை வாசிப்பின் மூலமாக வாசித்து, 1880 க்கும் 2020 க்கும் இடையிலேயான வேறுபாடுகளை அறிய முற்பட்டபோது, அதற்குக் கிடைத்த விடை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது நண்பர்களே.

அதற்கு முன், தமிழ் மொழிபெயர்ப்பாளர், **ஆன்டன் செக்காவை கொண்டாடுவோம்** என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை பற்றி சிறு விளக்கம் தருகிறார். மிக ஆழகாகவும், அவரது வாழ்க்கை எவ்வளவு கஷ்டத்தில் மத்தியில் ஆரம்பித்தார் என்பதும், அவர் வாழ்ந்த நகரங்கள், குடும்பம், கஷ்டப்பட்ட மக்களின் வாழ்வு மேம்படவே வாழ்ந்தார் போன்ற அற்புதமான தகவல்களை ஆசிரியர் தருகிறார். கண்டிப்பாக வாசித்துப்பாருங்கள் நன்பர்களே.

கி. ராவின் பின்னுரையில் ஆசிரியர் சு. ஆ. வெ. சு. நாயகர் பற்றி நல்ல சுவாரஸ்யமான தகவல்களை தருகிறார். பவா சொல்வது போல் (அவர் கதைசொல்லி யில் கேட்டேன்) எழுத்தாளன் கொம்பு முளைத்தவன் இல்லை, இருந்தும் அவன் கொம்பு முளைத்தவன் தான், அப்படி இல்லாமல் ஒரு சாதாரண மனித வாழ்கயைத்தான் ஒரு எழுத்தாளன் வாழ்ந்து செத்து மடிகிறான் என்று நினைக்கத் தோன்றுகிறது நண்பர்களே. இதிலே புதுமைப் பித்தனுடன் நேரடியாக நடந்த சம்பவம் குறித்து கி. ரா எழுதியிருப்பதை வாசிக்கும்போது எழுத்தை எவ்வளவு தூரம் நேசித்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஒன்றும் இல்லை என்றே சிந்திக்கிறேன் நண்பர்களே.
வாசியுங்கள் நண்பர்களே, அசந்து போய்விடுவீர்கள். உணவு, உடை, ஏனைய சந்தோசங்களை விட புத்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் புதுமைப்பித்தன். மற்றும் செக்காவ் எப்படி உலகம் முழுக்கப் பரவினார் என்பதனை சில உதாரணங்கள் முலம் தருகிறார் கி. ரா அவர்கள்.

ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள் – தடாகம் வெளியீடு | THADAGAM PUBLICATIONS

நண்பர்களே ஆன்டன் செக்காவ் இதில் 12 சிறிய கதைகளை எமக்கு மிக இலகுவாகப் புரியும் படி நகர்த்துகிறார். **வீட்டில்** என்ற கதை மிக அற்புதமாக, ஒரு தகப்பனுக்கும் மகனுக்கும் நடக்கும் உரையாடலாக அமைகிறது. இதை வாசிக்கும் போது, இந்திய, இலங்கை மக்களுக்கும் ரஷ்ய மக்களுக்கும் நிறைய தொடர்பு இருப்பது போல் என் எண்ண ஆலைகள் ஓடுகின்றன. ஆனால் ஒரு சிறு வித்தியாசம், 7 வயதில் சிகரட் குடித்தால் எங்களுக்கு தரும் தண்டனை உங்களுக்கே தெரியும் நண்பர்களே,ஆனால் செக்காவின் கதையில் வரும் தண்டனை மிக விசித்திரமானது. என்ன என்று அறிய புத்தகத்தை வாசியுங்கள்.

நண்பர்களே **பேச்சாளர்** என்ற சிறிய கதையும் கொஞ்சம் விசித்திரமான கதையும் கூட. எங்கள் ஊரில் ஒருவர் இறந்து விட்டால், இறந்தவரை எரியூட்டுவதற்கு முன் அவரது வீட்டில் நடக்கும் கிரிகைக்கு தேவாரம் படிக்க ஒரு ஸ்பெசல் ஆள் இருப்பது போல, ரஷ்ய நாட்டில் இறந்தவருடைய நற்பண்புகள், அவருடைய சுபாவங்கள் மற்றும் அவரது ஏனைய நடவடிக்கைகள் பற்றி இறுதியாக ஒரு நீண்ட உரை நிகழ்த்துவதற்கு ஒரு ஸ்பெஷல் ஆள் வருகிறார். அவரது நடை, உடை மற்றும் அவரோடு நடைபெறும் உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது.

அந்த உரையில் அவர் இறந்தவரைப் பற்றி கூறாமல் வேறு ஒருவரைப்பற்றியே சொல்கிறார்.அதனை செக்காவ் அழகாக இக் கதைமூலம் விளக்குகிறார். தெரிந்து கொள்ள வாசியுங்கள் மற்றும் * அசடு* என்ற கதை கூட ஒரு வீட்டு முதலாளிக்கும் அங்கு வேலை செய்யும் ஒரு பணிப்பெண்ணுக்கும் இடையிலான மாதச் சம்பளம், எப்படி அந்தக் காலத்தில் முதலாளிமார்கள் ஒவ்வொரு சிறு பிழைகளுக்கும், எத்தனை ரூபிள்கள் கழித்துக் கொண்டு கொடுத்தார்கள் என்பதனை வைத்து எழுதியுள்ளார்.மிகவும் அற்புதமான கதை நண்பர்களே.

செக்காவின் ஆரம்ப கதைகளே என்னை மிகவும் ஈர்த்து விட்டன என்றே நான் நினைக்கிறேன். எல்லாமே யதார்த்தமான, உண்மையில் நடக்கக் கூடிய, நடந்தவற்றை சிந்தித்தே அவர் எழுதியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை நண்பர்களே. இன்றே வாசியுங்கள், செக்காவை கொண்டாடுங்கள்..
நன்றிகள்

பொன் விஜி – சுவிஸ்