“குருவி வாயில் பருந்து” ஹைக்கூ தொகுப்பு – நூல் அறிமுகம்
ஹைக்கூ மூன்று வரிகள் தானே எளிதாக எழுதிவிடலாம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வருவது இயல்பு. ஆனால் பல நிமிடங்கள் பேசுவது எளிது. ஒரு நொடியில் எண்ணத்தை காட்சிபடலமாக கண்முன்னே தோன்ற வைப்பது என்பது அத்தனை எளிதல்ல. மனித மனம் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். ஒரு ஹைக்கூ கவிஞர் அந்த நுட்பத்தை அறிந்தவர். ஒரு கணத்தில் அவர்கள் கண்முன்னே காணும் காட்சியை ஹைக்கூவாக படைக்கிறார்கள்.
சொல்லப்போனால் நிகழ்காலத்தில் வாழ்பவர்களால் ஹைக்கூ கவிதைகளை எளிதாக எழுத முடியும். கவிஞர் அனுராதா சௌரிராஜன் அவர்களின் ஹைக்கூ தொகுப்பு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
குருவி வாயில் பருந்து- தலைப்பு. இந்த தலைப்பே நம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறது.
குருவியால் தன்னுடைய சிறிய வாயால் பருந்தை கவ்வ முடியுமா? முரண்/ மிகைப்படுத்துதல்.
ஹைக்கூவை பொருத்தவரை படைப்பாளியின் பார்வையையும் வாசகர் பார்வையும் வெவ்வேறாக இருக்கும். அது தான் ஹைக்கூவின் சிறப்பு. வாசகனை முழுசுதந்திரத்தோடு சிந்திக்க வைக்கும் வாய்ப்பை ஒவ்வொரு ஹைக்கூவரும் (இயக்குனர் சரண் அவர்கள் ஹைக்கூ முற்றம் விழாவில் பிரசவித்த வார்த்தை ஹைக்கூவர்) தருகிறார்கள்.
முயற்சி செய்தால் ஏழையாக இருந்தாலும் தனது தொடர் செயலால் குருவி பருந்தை தன் வாயால் கவ்வும் அளவிற்கு திறன் கொள்ளலாம்.
சிறுவர்களாக இருந்தாலும் சிறந்த ஆலோசனை அளிக்கலாம்
ஒரு கட்சிகள் தொண்டன் கட்சிக்காக ஒரு பெரிய செயலை செய்து இருக்கலாம்.
ஏன் இறந்து போன கழுகை கூட குருவி தன் வாயில் எடுத்து கொண்டு பறக்கலாம் என நினைக்கலாம்.
மிகையாக சொல்வது என்றால் பேராசை என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு போகலாம்.
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
சில ஹைக்கூ கவிதைகள் பற்றி பார்ப்போம்.
முத்தை பறிகொடுத்த
சிப்பியின் ஓலத்தை சொல்கிறது
தூண்டில் மீன்
வலி என்றாலே ஒரு கூச்சல் இருக்கும். இங்கு முத்தை பறிகொடுத்த சிப்பியின் ஒலத்தை தூண்டில் மீன் சொல்கிறது என்கிறார் கவிஞர். முத்தை பறிகொடுத்தாலும் சிப்பி கூச்சல் போடவில்லை. அமைதியாக வலியை சுமக்கிறது. வாழ்க்கையில் பெண்கள் பல இழப்புகளை அடைந்தாலும் அதை வெளியே சொல்லாமல் அமைதியாக கடந்து போகிறார்கள். இப்படி கூட புரிந்து கொள்ளலாம்.
நின்றுபோன கடிகாரம்
ஒன்றை சொல்லி காட்டுகிறது
நேற்றுவரை ஓடியவன்!
ஓய்வுபெற்ற ஒவ்வொரு மனிதர்களுக்கும் இது பொருந்தும். இன்று நின்றால் என்ன நேற்று வரை ஓடிக்கொண்டு இருந்தோம் என்ற செய்தியை அளித்து நம்பிக்கை தருகிறார் கவிஞர்.
ஆய்வுக்கூட சடலங்களில்
வறுமை கோடுகள் எண்ணப்பட்டன
விலா எலும்புகள்..
வறுமையின் வலிகளை, பட்டினியின் வாசத்தை, ஏழைகளின் வாழ்க்கையை வலியோடு சொல்லும் ஹைக்கூ.
நீரில் தத்தளித்த எறும்பை
நிலத்தில் விட்ட கை
நசுக்கியது கடிக்கையில்
சந்தர்ப்பம் சூழ்நிலை மாற்றத்துக்குரியது என்பதை சொல்கிறது இந்த ஹைக்கூ.
தோழர் மு.முருகேஷ் அவர்களின் அணிந்துரை, கவிஞர் அன்புடன் நெல்லை ஆனந்தி அவர்களின் வாழ்த்துரை, கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜ் அவர்களின் வாழ்த்துரை, திரு. இராம. சு. சிவக்குமரன் அவர்களின் வாழ்த்துரை, தோழர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் வாழ்த்துரையோடு இந்த ஹைக்கூ தொகுப்பு மிக சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹைக்கூ தொகுப்பின் சில துளிகள் இவை. முழுமையாக ஹைக்கூ மழையில் நினைய நீங்கள் தயாராகுங்கள். கவிஞர் அனுராதா கௌரிராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “குருவி வாயில் பருந்து” ஹைக்கூ தொகுப்பு |
| ஆசிரியர்: | அனுராதா சௌரிராஜன் |
| வெளியீடு: | நூலேணி பதிப்பகம் |
| விலை: | ₹130.00 மட்டுமே |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 சாந்தி சரவணன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

