Appa Oru Kathai Solringala Book Review அப்பா ஒரு கதை சொல்றீங்களா

சொல்ல வேண்டிய கதைகள்.. சொல்ல வேண்டிய மொழியில்….

தமிழில் சிறார் இலக்கியம் ,குழந்தை இலக்கியம் ஆக்குவதில் இப்போது ஏற்பட்டுவரும் வளர்ச்சியும் மாற்றமும் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது . ராமாயணம், மகாபாரதம் என அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து அறிவை முளையிலேயே கிள்ளி எறியும் போக்கு மெல்ல சாகட்டும் !

அறிவைத் தூண்டிவிடும் நம்பிக்கையை போராட்ட குணத்தை சமத்துவ உணர்வை முளையிலேயே உசுப்பிவிடும் முயற்சிகள் மெல்ல முகிழ்த்தாலும் வலுவாய் எழுகிறது . இ.பா.சிந்தனின் “அப்பா ஒரு கதை சொல்றீங்களா…. “ நூல் காத்திரமான வரவு . ஏற்கெனவே விழியன் ,உதயசங்கர் போன்ற சிலர் இப்பாதையில் தடம் அமைக்கின்றனர் .

இந்நூலில் உள்ள இருபது கதைகளும் வெறும் கதைகளல்ல ; கதை வடிவிலான சாதனையாளர் வாழ்க்கை .

” ஹேப்பி பர்த் டே “ நாமும் சொல்லி இருக்கிறோம் .கேட்டிருக்கிறோம் .அதன் பின்னால் ஹில் சகோதரிகளின் இதயமும் உழைப்பும் இருப்பதை இப்போதுதானே அறிந்தோம்.

போர் மேகம் சூழ்ந்த ஈராக்கில் நூலகத்தைக் காப்பாற்றிய ஆலியாவின் கதை சொல்லும் செய்திகள் வலுவானவை .

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பூலே, புதை படிவ ஆய்வாளர் மேரி ஆனிங், உலகின் முதல் பெண் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் அடா லவ்வேஸ், உலகை சைக்கிளில் சுற்றி வந்த ஆனி லண்டண்டெரி, மரங்களின் தாய் வங்காரி மாத்தாய், கிரிகெட்டில் சாதனைப் பெண் மித்தாலி ராஜ், அனிமேசன் நாயகி மேரி ப்ளேரின், முதலில் காரை ஓட்டிய பெண் பெர்த்தா பென்ஸ் உட்பட பல சாதனைப் பெண்களையும், சில ஆண்களையும் பிஞ்சுகளுக்கு அறிமுகம் செய்திருப்பது பாராட்டத் தக்க முயற்சி .

உரையாடல் வடிவம் , எளிய சொற்கள், குழந்தைக்கு சொல்ல வேண்டிய அளவில் செய்தி இவற்றை சரியான விகிதத்தில் கலந்து தந்திருப்பதுதான் இ.பா.சிந்தனின் வெற்றி .

அவர் ஓர் குழ்ந்தைகளுக்கான யூ டியூப் சேனலும் நடத்தி வருகிறார். உங்கள் குழந்தைகளுக்கு அந்த சேனலை அறிமுகம் செய்து வையுங்கள் .

[Kutti Story Kids@KuttiStoryKids‧1.52K subscribers‧759 videosகுழந்தைகளுக்கு கதைசொல்வது மிகமிக அவசியம். இவ்வுலகைப் புரிந்து…]

நான் என் பேரனுக்கும் பேத்திக்கும் கதை போல் ஒரு அறிவியலையோ வரலாற்றையோ சொன்னால் போதும் மறுநாள் சக நண்பர்களோடு விளையாடும் போது இந்த புதிய செய்தியை அவன் /அவள் பாணியில் கைகால் முளைக்க வைத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள் . அவர்களே இதுபோல் தகவல்களை கூகுளில் தேடி நமக்கு பரிட்சை வைக்கும் போது பெரும்பாலும் தோற்றுப் போவேன் . அதில் எவ்வளவு இன்பம் தெரியுமா ?

இந்நூல் அது போன்ற ஆவலை நிச்சயம் கிளர்த்தி விடும் என்பதில் ஐயமில்லை . வாசலை திறந்து விடுங்கள் அவர்கள் வானத்தை ,கடலை அளந்து சொல்வார்கள் .
அப்பா மகளுக்கு சொல்வது நல்ல உத்தி . என் ஞானப் பிள்ளை இ.பா.சிந்தன் எப்போதும் லட்சியத் தெளிவுள்ள தன் படைப்புகளால் என்னை வியக்கவைத்துக் கொண்டே இருக்கிறான் .வாழ்த்துகள் !

 

நூலின் தகவல்கள்: 

நூல்: அப்பா ஒரு கதை சொல்றீங்களா

ஆசிரியர்: இ.பா.சிந்தன்

பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்

விலை: 140.00

தொடர்புக்கு:  44 2433 2924

 

எழுதியவர்: 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *