நூல்: அப்பா சிறுவனாக இருந்தபோது
ஆசிரியர்: அலெக்சாந்தர் ரஸ்கின்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.110
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/appa-siruvanaga-irundhabodhu-alexandar-ruskin/
ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னுடைய பெற்றோர்களின் சிறுவயது நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கேட்பதற்கு மிகவும் பிடிக்கும். இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிற தன்னுடைய அம்மாவும் அப்பாவும் கூட ஒரு காலத்தில் தன்னைப்போல சிறுகுழந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதே குழந்தைகளுக்கு மலைப்பாக இருக்கும். நம்முடைய பெற்றோர் சின்னவயதில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், நம்மைப்போல ஏதாவது செய்திருப்பார்களா என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எல்லா குழந்தைகளுக்கும் இயல்பாகவே இருக்கும்.
“நான் குட்டி வயசா இருக்கும்போது…..” என்று உங்களுடைய குழந்தைகளிடத்தில் சொல்லத்துவங்கிப் பாருங்கள். உடனேயே அவர்களது கண்கள் விரிந்து ஆர்வதத்தில் கதைகேட்கத் துவங்கிவிடுவார்கள். அதிலும் தன்னுடைய பெற்றோர்கள் சிறுவயதில் செய்த சேட்டைகளை அறிந்துகொள்வதற்கு மிகுந்த ஆவலோடு இருப்பார்கள் குழந்தைகள்.
ஒவ்வொரு பெற்றோரிடமும் ஒரு முப்பது ஆண்டுகால வாழ்க்கையின் அனுபவங்கள் குவிந்திருக்கும். அதனை தன்னுடைய குழந்தைகளுக்கு பயன்படும்விதமாக சிறுசிறு கதைகளாக சொல்லலாம். ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொள்ள புதிதாக ஏதேனும் நிச்சயமாக் இருக்கும். உலக வரலாற்றில் மாபெரும் பெயர்பெற்ற சாதனையாளர்களிடமிருந்து மட்டும்தான் வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டுமா என்ன?
சிறுவயதில் பள்ளிக்கு சென்ற அனுபவம், விளையாடச் சென்றபோது நடந்த சம்பவங்கள், நண்பர்களோடு நடந்த சண்டைகள், சகோதர சகோதரிகளோடு பழகிய நாட்கள், ஆசிரியர்களுடனான அனுபவங்கள், பண்டிகைகளைக் கொண்டாடிய விதம், அக்காலகட்டத்தின் அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சியின் நிலை, பட்டம் விட்டகதை, முதன்முதலாக தொலைக்காட்சியினை பார்த்த நிகழ்வு, தெருக்களில் கிரிக்கெட் விளையாடி கண்ணாடிகளை உடைத்த கதை, பள்ளித் தேர்வுகளை எதிர்கொண்ட விதம், என நூற்றுக்கணக்கான சம்பவங்களை யோசித்து நம்மால் கதைகளாக சொல்லமுடியும்.
ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரஸ்கினின் மகள் நோய்வாய்ப்பட்டிருந்தாள். அப்போது அவளுக்கு வாழ்க்கை குறித்தான நேர்மறை சிந்தனைகளை விதைப்பதற்காக, தன்னுடைய சிறுவயதில் நடந்த சம்பவங்களை கோர்வையாகவும், சிறுசிறு கதைகளாகவும், நகைச்சுவையாகவும் தன்னுடைய மகளுக்குச் சொல்கிறார். அவர் சொல்கிற ஒவ்வொரு கதையையும் கேட்கிற குழந்தை நிச்சயமாக நம்பிக்கை பெறுவது உறுதி. அக்கதைகளைக் கேட்ட தன்னுடைய மகளே, அதனை மற்றவர்க்கு சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து, அதனை ஒரு நூலாக எழுதி வெளியிட்டார். அந்நூலின் பெயர் “When my daddy was a little boy”.
அந்நூலை தமிழில் “அப்பா சிறுவனாக இருந்தபோது” என்கிற பெயரில் “புக்ஸ் ஃபார் சில்ட்ரன்” (பாரதி புத்தகாலயம்) பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சமீபகாலத்தில் வாசித்த மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூலிது என்று சொல்லலாம். நானும் என்னுடைய சிறுமகளும் ஒருநாளுக்கு ஒரு அத்தியாயத்தை வாசித்து முடித்தோம். ஒவ்வொரு கதையை வாசித்துமுடித்ததும், அக்கதையைப் போன்றே என்னுடைய வாழ்க்கையிலும் ஏதேனும் நடந்திருக்கிறதா? என்று ஆர்வமாக கேட்டறிந்தாள் என் சிறுமகள். பழைய நினைவுகள் பலவற்றையும் இந்நூல் கிளவிட்டதோடு, அவற்றை என் மகளோடும் பகிர்ந்துகொள்ளமுடிந்தது. இந்நூலை வாசிக்கிற பெற்றோர்களும் அவர்களது வாழ்க்கையையே மற்றொரு நூலாக, “அப்பா சிறுவனாக இருந்தபோது” என்றோஅல்லது “அம்மா சிறுமியாக இருந்தபோது” என்றோ எழுதி வெளியிட்டுவிடலாம் போல தோன்றவைக்கும். அதுவே இந்நூலின் மிகப்பெரிய வெற்றியென்றும் சொல்லலாம்.
2016 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஒரு நூலை வாங்கவேண்டுமென்று நீங்கள் நினைத்திருந்தால், நிச்சயமாக இந்நூலை வாங்கிவிடுங்கள். யாருக்கேனும் புத்தாண்டுப் பரிசாக கொடுக்கவேண்டுமென்று நினைத்தாலும், இந்நூலையே வாங்கிவிடுங்கள்.
நன்றி: மாற்று இணையதளம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.