Appanasamy's Agasthiyar Ennum Purali Tamil Book Reviewed By Lavanya Gunasekaran

மூ.அப்பணசாமி எழுதிய “அகஸ்தியர் என்னும் புரளி” – நூல் அறிமுகம்

தோழர் மூ.அப்பணசாமி அவர்கள் எழுதிய “அகஸ்தியர் என்னும் புரளி”என்னும் நூல் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிர் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. கைக்கு அடக்கமாக 87 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த நூல் பார்வையில் சிறிதாகவே தோன்றுகிறது. அப்படித்தான் நானும் எண்ணி வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் உள்ளே செல்லச் செல்ல நூல் சொல்லித் தரும் பாடங்கள் ஏராளமாக உள்ளது. ஐந்து கட்டுரைகளை மட்டுமே கொண்டுள்ள இந்நூல் என்னுடைய பார்வையில் ஐந்தாயிரம் வருட பண்பாடு, பொருளாதார, மற்றும் வரலாற்று அரசியல் நகர்வுகளை பேசுகிறது.

உலகமெங்கிலும் மனித குலம் மேய்ச்சல் சமூகமாக, வேளாண் சமூகமாக தாங்கள் வாழ்வதற்கு தகுதியான இடங்களாக ஆற்றங்கரைகளையே நாடிச் சென்றனர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அப்படியாக வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்த இனக்குழுக்கள் அந்தந்த இடங்களின் செழுமைத் தன்மை குறையும் போது மற்ற இடங்களை நாடிச் சென்றுள்ளனர். இவ்வாறாக உணவுக்காக இடம்பெயர்ந்த மனித கூட்டம் பின் நாட்களில் தங்களுடைய எல்லைகளை விரிவாக்க, மற்ற இனக் குழுக்களை ஆதிக்கம் செலுத்துவதிலும்,அடிமைகளாக்குவதிலும்,அழித்து ஒழிப்பதிலும்,கவனம் செலுத்தியுள்ளது.

பொது யுகம் ஆரம்பித்த பின்னரும் கூட காலனி ஆதிக்கத்தின் பெயரில் தங்களது மூலப்பொருள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், வணிக மேம்பாட்டுக்காகவும் முதலாளித்துவ சமூகம் பல்வேறு நாடுகளை அடிமைகளாக்கி அவர்களை அழித்து ஒழித்த வரலாறும் நாம் அறிவோம். அந்த வகையில் கி.மு 1500 வாக்கில் ஈரான் பகுதிகளில் இருந்து மலைகள் வழியாக இரவோடு இரவாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிய கூட்டம் இந்திய பண்பாட்டை உள்வாங்கிக் கொள்ள அல்லது தன்வயப் படுத்த அவர்கள் முதலில் கையில் எடுத்தது “மொழி” என்னும் ஆயுதமே என்கிறார் நூலாசிரியர்.

இன்றைய நவீன உலகிலும் கூட வடநாட்டைச் சேர்ந்த பானிபூரி வியாபாரிகள் நம்மை விட அழகாக தமிழ் பேசும் விதமும், நம்முடைய தமிழ்நாட்டை சேர்ந்த வியாபாரிகள் , பம்பாய் உள்ளிட்ட இடங்களில் தொழிலுக்காக குடியேறியவர்கள் முறையாக படிக்காமலே மிக நேர்த்தியாக இந்தி பேசும் விதத்தையும் பார்த்தாலே நம்மால் மொழியின் கூர்மையை உணர முடிகிறது. இவ்வாறாக இந்தியாவிற்குள் நுழைந்து அவர்களோடு கலந்து வெற்று கருதுகோள்களையும், கற்பனைக் கதைகளையும் மனித வாழ்வோடு பொருத்தி ஏய்த்துப் பிழைத்து வந்த ஆரிய கூட்டம் விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்து வந்த திராவிட மண்ணிற்குள் அவ்வளவு எளிதாக காலூன்ற முடியவில்லை என்பதை நூல் தெளிவாக விளக்குகிறது.

ஆனாலும் செயலுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட தேவையானவற்றை சிந்தித்து வாழ்ந்து கொண்டிருந்த தென்னகத்தில், தங்களுடைய ஒரே வேலையான சிந்தனையை பயன்படுத்தி பல்வேறு வகைகளில் உள்ளே நுழைய ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. ஆனபோதும் 5000 ஆண்டுகளுக்கு முன்பே நகரமய வாழ்க்கையை மேற்கொண்ட இந்த திராவிட கூட்டம் அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்காமல் அவ்வப்போது தட்டி விட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டியே பழக்கப் பட்ட ஆரிய கூட்டம் தங்களுடைய அறிவியலுக்கு பொருந்தாத, யாராலும் நிரூபிக்கப்பட முடியாத, பல்வேறு சடங்குகளையும்,புராணங்களையும், நம் தொப்புள் கொடியில் ஒட்டுறவில்லாத தெய்வங்களையும் நம் மீது திணிக்கப் பார்க்கிறது. அவர்களுக்கு சற்றும் தொடர்பற்ற திராவிடர்களின் தொழில்நுட்பம், கட்டிடக் கலை போன்றவற்றை தன்வயப் படுத்த சிலருக்கு விலை கொடுத்தது. அது தான் நான்கு வகை பார்ப்பனர்களில் ஒன்றான “அடையாளமற்ற பார்ப்பனர்கள்”. அதுமட்டுமின்றி பல்வேறு அறிவியலாளர்களாலும், ஆராய்ச்சியாளர்களாலும்,தொல்லியல் துறை ஆய்வாளர்களாலும் வரலாற்று பேராசிரியர்களாலும் பல்வேறு கோணங்களில் நிரூபிக்கப்பட்ட பல உண்மைகளை சற்றும் சட்டை செய்யாமல் தங்களுடைய இல்லாத வரலாற்றை புராணங்களாகவும் வேதங்களாகவும் நம் மீது திணிக்கிறது.

அந்த வகையில் இந்த நூல் தாய் என்னும் தகுதி பெற்ற ஒரே இனமான “பெண்”களால் பேசப்படாத ஆண்கள் மட்டுமே வந்த ஆரிய கூட்டத்தின் தந்தை வழி மொழியான சமஸ்கிருதம், தாய் வழிச் சமூகமாக வாழ்ந்து வந்த திராவிட மொழிக் குடும்பத்தின் தாய் மொழியாகிய தமிழ் மொழி மீது ஆதிக்கம் செலுத்த தொடர்ந்து முயற்சிக்கிறது என்பதை விளக்குகிறது. ஈரானைச் சேர்ந்த “அவெஸ்த ” என்னும் மூல மொழியை சார்ந்த சமஸ்கிருதம் பேச்சளவில் மட்டுமே விளங்கி வட இந்தியாவின் பாலி, பிராகிருதம் போன்ற மொழிகளோடு கலந்து பல திருத்தங்களையும், சீர்மையும் பெற்று பின்னர்தான் அதன் பாதுகாப்பை வேண்டி இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருதத்தின் காலம் முறையான சான்றுகளின்றி கி. மு 3 ம் நூற்றாண்டு என்று சொல்லப் படுகிறது.தொல்காப்பியரின் காலம் இன்னும் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுமே யானால் கி. மு 3 -கி. மு 4 ம் நூற்றாண்டிற்கும் பின்னோக்கிச் செல்லும் என்ற அளவிலும், அதற்கு முன்பே இலக்கணத்தோடு வலம் வந்த வழக்காறு, இலக்கியம், இலக்கணம்,உரைகள் என்று சீர்கொண்டு விளங்கிய தமிழ் மொழியின் காலமும் ஒன்றென்றால் அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் அதை எப்படி ஏற்கும்? என்ற ஆணித்தரமான கேள்வியை இந்நூல் முன் வைக்கிறது. இதனை தெளிவுப்படுத்த சிந்து முதல் வைகை வரை திராவிட கூட்டம் கொண்டிருந்த கணிதவியல், விண்ணியல், கண்டறிந்த கடல் வழிப் பாதைகள், கைவினைப் பொருள்கள், வணிகம், மொழி அறிவு,அவர்கள் பெற்றிருந்த எழுத்தறிவு ஆகியவற்றை பல்வேறு தரவுகளின் வாயிலாக எடுத்து வைக்கிறார் ஆசிரியர்.

இந்த மொழிப் போருக்கும் புத்தகத்தின் தலைப்பான “அகஸ்தியர் என்னும் புரளி ” க்கும் என்ன தொடர்பு என்றுதானே சிந்திக்கிறீர்கள். தென்னகம் தாழ்ந்து விட்டது என்பது போன்ற உண்மைக்கு புறம்பான கற்பனைகளால் வடக்கே இருந்து விந்திய மலைகளில் உருட்டி விடப்பட்ட பகடை தான் “அகஸ்தியர் “. இந்த உருட்டுகளை பற்றிய விளக்கங்களை இந்த நூல் செவ்வனே விளக்குகிறது.

வேத இலக்கியங்களுக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முற்பட்ட சங்க இலக்கியங்களில் எங்குமே காணப்படாத அகஸ்தியர் பொது யுகம் ஆரம்பித்த பிறகு 600 -1400 களிலேயே முதன்முதலாக மதுரை காஞ்சிக்கு உரை எழுதிய நச்சினாக்கினியரால் புனையப்பட்டார் என்பதையும், அறிவியலுக்கு புறம்பாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதையும், இன்றும் கூட நம்மில் பலரும் ஏற்றுக்கொண்டு வழிபடும் சிவபெருமான், முருகன்,துவாரகையின் கண்ணன் போன்ற கடவுள்களையும் தன்னுடைய அவையில் வைத்திருந்தார் என்பதையும், தமிழை ஆட்கொள்ள வந்தவரை அவர்தான் தமிழின் தலைமகன் என்ற பிம்பத்தின் வாயிலாக நம்முள் திணிக்க பார்க்கிறார்கள் என்பதையும் இவ்வாறான புழுகுகளுக்கு தமிழ் உரையாசிரியர்களில் சிலரும், தமிழ் சினிமா துறையில் சிலரும் ஒத்து ஊதியதையும் மிக நுட்பமாக விளக்குகிறார்.

ஆகவே “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று உலகிற்கு பொதுமறை வழங்கிய வள்ளுவனின் வழிவந்த நாம் வெற்றுப் பெருமை பேசுவதை விட்டுவிட்டு இதுபோன்ற ஆதாரப்பூர்வ தரவுகளை நம் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வோம். இந்த 87 பக்கத்தினாலான சிறிய பூமாலையினை, பல்வேறு தரவுகளை பூக்களாக ஆய்வாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் போன்றோரிடமிருந்து பெற்று மிக அடர்த்தியாக தொடுத்திருக்கிறார். இந்தப் பூ மாலையின் வாசத்தை தமிழ் சமூகம் முழுமையிலும் வீசச் செய்து, பல்வேறு விவாதங்களை மேற்கொண்டு அகஸ்தியர் என்பது புரளியே என்ற உண்மையை உரத்த குரலில் எதிரொலிப்போம்.

கண்ணெதிரே பாய்ந்தோடும் வைகை நதிக் கரையாம், கீழடியை விட்டு, விட்டு இல்லாத சரஸ்வதியைத் தேடித் திரியும் சனாதன சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம். அகஸ்தியரைக் கட்டுடைக்க வழி காட்டும் நூலாசிரியருக்கு வாழ்த்துகள். காலத்திற்கேற்ற இந்த நூலை வெளியிட்ட உயிர் பதிப்பகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நூலுக்கு தன்னுடைய வாழ்நாளில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக செலவு செய்து தமிழ் கூறும் நல்லுலக எல்லைகளை சங்க இலக்கியங்களின் வாயிலாக நிறுவி இருக்கும் ஆய்வாளர். ஆர். பாலகிருஷ்ணன் இ. அ. ப அவர்கள் அணிந்துரை வழங்கியிருப்பது உள்ளபடியே பொருத்தமானதாகும்

நூலின் விவரங்கள்:
நூல்: அகஸ்தியர் என்னும் புரளி
எழுதியவர்: மூ. அப்பணசாமி
பதிப்பகம்: உயிர் பதிப்பகம்
விலை : ரூ.95/-
எழுதியவர் : 

✍🏻 – மு.லாவண்யா குணசேகரன் –

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *