அப்பாவின் சாய்வு நாற்காலி
(கவிதைத் தொகுப்பு), இந்நூலின் ஆசிரியர் முனைவர் யாழ் ராகவன் அவர்கள் தேனி மாவட்டம் இராயப்பன்பட்டியில் புகழ்பெற்று விளங்கும் சவரியப்ப உடையார் நினைவு மேனிலைப்பள்ளியில் (SUM) முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்…முனைவர் யாழ் ராகவன் அவர்கள் ஆசிரியராக மட்டுமல்லாமல் கவி எழுதுவதோடு தலைசிறந்த இலக்கியப் பேச்சாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர்…
நேயர்களின் மனம் கவர்ந்த கோடைப்பண்பலை வானொலி 100.5ல் *சொல்* *இனிது* *சுவை* *புதிது* என்கிற நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அறிவார்ந்த உரைகள் ஆற்றியவர்…
இக்கவிதை நூலுக்கு சவரியப்ப உடையார் நினைவு மேனிலைப்பள்ளியின் தாளாளர் திருமிகு.எம்.எஸ்.பிரபாகர் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.
கவிஞர், பேச்சாளர், திரைப்பட கலைஞர் திருமிகு.ஜோ.மல்லூரி அவர்கள் தனக்கே உரிய கவிநயத்தோடு பாராட்டுரை வழங்கியிருக்கிறார்.
நாடறிந்த நகைச்சுவை பட்டிமன்றப் பேச்சாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.
கோவை எழுத்தாளர் திருமிகு. பாமரன் அவர்கள் சிறப்பானதொரு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.
இனி அப்பாவின் சாய்வு நாற்காலி கவிதைகளில் சில துளிகள்…
காலங்காலமாய்
அப்பாவிகளின்
மேல்மட்டும்
துப்பாக்கி ரவை
கந்தை கட்டவும்
கூழ் குடிக்கவும்
பழகிக்கொடுத்தவர்கள்
அரியாசனத்தில்
மணியடிக்காமல்
யார் இங்கே
ஐஸ் விற்பது
மேகமலை
இருக்கும் கொஞ்ச நாட்களை
மகிழ்வாக்கிக் கொள்ள
முயல்வோம் பூக்களைப் போல
எல்லா இடங்களும்
அன்பின் பாதையாய்த்
தோன்றும் போது
எங்கு கற்றார்கள்
வெறியை…
கால ஓட்டம் சில
கசப்புகளையும்
இனிப்புகளையும்
விரும்பியும் விரும்பாமலும்
அள்ளித்தான் வழங்குகிறது
இந்திய வரைபடத்தில்
வறுமைக் கோடுகளே
எங்கும் வியாபத்திருக்க
வளமான தேசமென யாராவது
வாயாடும் போது கூசுகிறது
வெட்கமில்லா கரை வேட்டிகள்
செவ்வாய் கிரகத்தில்
குடிபுகுவோம் கண்ணே
வக்காளி
சாதிமறந்து
திமிரை எதிர்த்து
மூடநம்பிக்கையில்
முதன்மையானது
வாக்குறுதிகளை
நம்புவது
அஞ்சல் அட்டை
மறந்த தலைமுறை
உறவுகளின் பாசம்
தொலைக்காட்சி வழியே
அந்த சாய்வு நாற்காலி
அப்பாவிற்காக
கடை கடையாய்
தேடி அம்மா வாங்கியது
நாங்கள் உட்பட யாரும் அமரத் தடை
பணி ஓய்வு பரிசாய் வழங்க எண்ணினாள்…பணி காலத்தில் எத்தனை நாற்காலி மாறத் துடித்து போராடி இருப்பார்… அப்பா
பூக்கள் நிறைந்த
நாற்காலி இன்னும் காலியாய்…
இன்னும் ஏராளமாக…
மானுட நேயத்தை உணர்த்துகின்ற கவிதைகள்…
நன்றி!!!
அன்புடன்
அ.கற்பூரபூபதி
நூல்- அப்பாவின் சாய்வு நாற்காலி
(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்- முனைவர் யாழ் ராகவன்
வெளியீடு-புது எழில் வாசகர் வட்டம், மதுரை

