பள்ளிக்கல்வி ஆணையர் நியமனம்: ஓர் எச்சரிக்கை நிகழ்வு.. – தேனி சுந்தர் TNSFஇலட்சக்கணக்கான மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.. மருத்துவமனைகள் நோயாளிகளாலும் சுடுகாடுகள் பிணங்களாலும் நிரம்பி வழிகின்றன.. போதுமான ஆக்சிஜன் இன்றி மாநிலங்கள் திண்டாடி வருகின்றன.. தடுப்பூசி போதுமான கையிருப்பு இல்லை.. போதுமான உற்பத்தியும் இல்லை.. தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து விழுகின்றனர்.. அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் தன் பொறுப்பில் இருந்து விலகி நிற்கிறது மத்திய அரசு.. மாநில அரசுகள் தங்களுடைய சுய முயற்சியாலும் திட்டமிடலாலும் இந்த சுகாதாரப் பேரிடரை சமாளித்து வருகின்றன..
இன்று முன்னுரிமை அளித்து மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கொஞ்சமும் மதிக்காமல் தனது வழக்கமான பாணியில் நேரடியாக அரசாணைகள் மூலமாகவும் அதிகாரிகள் மூலமாகவும் மக்கள் விரோத, மாணவர் விரோத, மாநில உரிமைகளுக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை தொடர்பான சதி வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டது..
இந்த நிலையில் நெருக்கடியான இந்த சுகாதாரப் பேரிடர் பணிகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து வருகின்ற தமிழக அரசு மத்திய கல்வி அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்து உள்ளது.. ஏற்கனவே தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அதிகாரிகளுடன் நேரடியாக பேசுவதை விட்டு விட்டு அந்தந்த மாநில கல்வித் துறை அமைச்சர்களுடன் பேசுங்கள் என்று தெரிவித்த பின்னரும் கூட அதனைக் கொஞ்சமும் பரிசீலிக்க தயாராக இல்லை மோடி அரசு.. திட்டமிட்டவாறு தனது கூட்டத்தை நடத்தி இருப்பது முதலில் கண்டிக்கத் தக்கது ஆகும்.. புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் என்ற பெயரில் கதவடைப்புக் கூட்டங்கள் நடத்தியவர்கள்  இப்போது சொல்கிறார்கள்.. புறக்கணித்து  இருக்க வேண்டியதில்லை.. கலந்து கொண்டு தமிழக அரசு தங்களது மாற்றுக் கருத்துகளை முன்வைத்து பேசி இருக்கலாம்.. சிரிப்பு தான் வருது நமக்கு…!
மேலும் தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர்களின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான பேச்சுக்கள் தமிழகத்தில் முதுகெலும்பு உள்ள ஒரு ஆட்சி அமைந்து விட்டது என்பதை அறைகூவி அறிவிப்பதாக அமைந்துள்ளது.. சமீபத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்கள் மத்திய அரசைப் பார்த்து, இதுவரை நீங்கள் சந்தித்தவர்களைப் போன்றவர்கள் அல்ல நாங்கள் என்று கூறியது நினைவுக்கு வருகிறது.. ஆம், மோடி சர்க்காருக்கு நாமும் சொல்ல வேண்டும்.. தமிழ்நாட்டில் உங்கள் சொல்லுக்கெல்லாம் ஆடியவர்கள் இப்போது ஆட்சியில் இல்லை… இப்போது முதுகெலும்பு உள்ளவர்கள் நடத்தும் ஆட்சி நடைபெறுகிறது..


தமிழகத்தில் வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு நமது மாநிலத்தின் மிக நீண்ட கால கோரிக்கையான கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருதல், மாநிலத்திற்கென்று சுயமான கல்விக் கொள்கை உருவாக்குதல், மத்திய அரசு கொள்ளைப் புறமாக அமல்படுத்த நினைக்கின்ற சனாதன, மக்கள் விரோத கல்விக் கொள்கையை நிராகரிப்பது ஆகியவற்றில் மிக உறுதியாக செயல்படும் என்ற நம்பிக்கையினை விதைக்கும் நல்ல துவக்கமாகவே தெரிகிறது..
ஏற்கனவே கல்வியில் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருக்கும் தமிழகம் அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான சமமான சமச்சீர்க் கல்வி வழங்கி சரித்திரம் படைக்கும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.. அந்த திசையில் மதிப்பிற்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான  தமிழக அரசு வீறுநடை போட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்..
அதே நேரத்தில், கடந்த ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்தின் ஒரு பகுதியாகத் தான் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேற்பார்வையிட்டு வழிநடத்திடும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் வட்டாரக் கல்வி அலுவலர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன.. அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் வட்டார மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒழித்துக் கட்டப் பட்டு பொறுப்பு மேற்பார்வையாளர்கள் என்று நியமிக்கப்பட்டனர்.. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டன.. புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.. இந்த மாற்றங்கள் பலவும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பல்வேறு குழப்பங்கள் உருவாக காரணமாக இருந்தனவே தவிர வேறு எந்த விதமான புதுமைகளையோ மாற்றங்களையோ கல்வித் தரத்தில் முன்னேற்றங்களையோ உருவாக்கவில்லை என்பது தான் தமிழகத்தின் அனுபவமாக உள்ளது.. அதன் தொடர்ச்சி தான் கடந்த ஆட்சியில் மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனர் பதவிக்கு மேலே ஆணையாளர் பணியிடம் உருவாக்கப்பட்டதுவும் ஆகும்.. இன்று இயக்குனர் பணியிடம் கூட இல்லை என்று ஆகி இருக்கிறது… இதுவும் புதிய கல்விக் கொள்கையின் செயலாக்கமே ஆகும்..
பல்வேறு ஆசிரியர் அமைப்புகளும், கல்விக்கான இயக்கங்களும் சுட்டிக்காட்டி இருக்கும் நிலையில் அரசு இதுகுறித்து நிச்சயம் பரிசீலிக்க வேண்டும்..
இந்த இடத்தில் திமுகவின் வரலாற்றில் இருந்தே ஒரு உதாரணம் சொல்லத் தோன்றுகிறது…


திமுக – வின் ஆரம்ப காலத்தில் இந்த கட்சி பிராமணர்களுக்கு எதிரானதா..? இந்த கட்சியில் பிராமணர்களுக்கு இடம் உண்டா..? என்ற கேள்விகள் அடிக்கடி பேரறிஞர் அண்ணா அவர்களிடம் கேட்கப்பட்டன… வி.பி.ராமன் முதல் ஓ.பி.ராமன் வரை இருக்கும் கட்சி திமுக என்று அண்ணா  அவர்களுக்கு பதிலுரைப்பார்.. வி.பி.ராமன் என்பவர் திமுக-வில் வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.. பிராமணர்.. ஓ.பி.ராமன் என்பவர் தலித் சமூகத்தை சேர்ந்த திமுக தலைவர்களில் ஒருவர்.. இதில் வி.பி.ராமன் தமிழை விட ஆங்கிலத்தில் நன்கு எழுதக் கூடியவர்.. பேசக் கூடியவர்.. அண்ணா நடத்திய ஹோம்லண்ட் இதழில் அவருடைய கட்டுரைகள் முழுப் பக்க அளவில் அவ்வப்போது வெளிவருவது உண்டு..
ஒரு முறை குவெஸ்ட் என்கிற பத்திரிகையில் வெளிவந்த தனது கட்டுரை ஒன்றை ஹோம்லேண்ட் இதழில் வெளியிட அனுப்பி வைத்திருந்தார் வி.பி.ராமன்.. அந்த கட்டுரை  ஹோம்லெண்ட் இதழில் வெளிவரவே இல்லை.. இந்த தகவல் அண்ணாவின் கவனத்திற்கு செல்கிறது.. உடனே கோபமடைந்த அண்ணா இதழின் துணை ஆசிரியர் எம்.எஸ்.வெங்கடாசலம் என்பவரைத் தொடர்பு கொண்டு ஏன் வெளியிடவில்லை என்று சத்தம் போடுகிறார்… உடனே அந்த உதவியாளர் கட்டுரையை கையோடு எடுத்துச் சென்று அதனை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததற்கான காரணங்களை அண்ணாவிடம் நேரில் சென்று விளக்குகிறார்… அந்தக் கட்டுரையில் தந்தை பெரியாரை கடுமையாக விமர்சித்தும் மூதறிஞர் ராஜாஜியைப் புகழ்ந்தும் எழுதப்பட்டிருந்தது.. மேலும் ராஜாஜியை சக்கரவர்த்தி ராஜாஜி என்றும் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றும் குறிப்பிட்டிருந்தார்… விளக்கத்தை பொறுமையாக கேட்ட பேரறிஞர் பெருமூச்சு விட்டபடி, 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நம்மோடு இருந்து கொண்டே இப்படி எழுதி இருக்கிறாரே.. இப்படியொரு கட்டுரையை  நம்முடைய இதழிலேயே தந்திரமாக வெளியிட செய்து நம் கண்களை நம் விரல்களாலேயே பதம் பார்க்க எண்ணி இருக்கிறாரே என்று வருத்தமாக பேசியிருக்கிறார்.. இதழின் துணை ஆசிரியர் என்ற வகையில் என்னுடைய எழுத்துகளைக் கூட திருத்துவதற்கும் நிறுத்தி வைப்பதற்கும் உரிமை உண்டு என்று அந்த உதவியாளரை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவருக்கு வெகு சீக்கிரமாகவே அந்த இதழின் பொறுப்பாசிரியர் ஆகவும் பதவி உயர்வு வழங்கி இருக்கிறார் பேரறிஞர்… எதற்கு இந்த உதாரணம் என்றால் வெகுகாலம் நாம் பழகிய, அறிந்த அதிகாரிகளாக இருந்தாலும் கூட அவர்களது உள்நோக்கம் காரணமாக சில நேரங்களில் அரசை அவர்கள் தவறாக வழிநடத்தி விடக் கூடும்…
எனவே புதிதாக பொறுப்பேற்று இருக்கக் கூடிய தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் புதுமையாக இருக்கின்றன.. இதுவரை தமிழகம் கண்ட காட்சிகளில் இருந்து வேறுபடுகிறது.. ஒவ்வொன்றையும் கவனிக்கும் மக்கள் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் நிறையவே அதுகுறித்து பகிர்வதையும் பாராட்டுவதையும் பார்க்க முடிகிறது… என்ற போதிலும் இன்னும் கூடுதல் கவனமாக இந்த அரசு செயல்பட வேண்டும் என்பதே இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு அளிக்கும் எச்சரிக்கையாக உள்ளது….
*தேனி சுந்தர்*