“ஒரு குடைக்குள்” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்
தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த இலக்கிய வடிவமான கவிதை பலரையும் உள்ளிழுத்து ஒன்றிணைத்து சங்கமிக்கும் மிகப்பரந்த வெளியாக திகழ்கிறது. இதில், இன்று அதிகமான வாசகர்களை உருவாக்கி, அவர்களை எழுத்தாளர்களாக கவிஞர்களாக உருமாற்றிக் கொண்டிருக்கும் குறுகிய வரிகளைக் கொண்ட நவீன கவிதை வடிவம்தான் தன்முனை கவிதை எனும் வடிவம். இவை தன்னம்பிக்கை, சுயமரியாதை, தனித்துவம், சுயசிந்தனை ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கு மிகச்சிறந்த வடிவமாகத் திகழ்கிறது.
சிறந்த சிறுகதை எழுத்தாளரும் கவிஞருமான அப்புதுரை ஜெகன் அவர்களின் இரண்டாவது தன்முனைக் கவிதை நூல்தான் ‘ஒரு குடைக்குள்’ எனும் கவிதை நூல். ‘பனி மூடிய புல்வெளி’ என்பது இவரது முதல் கவிதை நூலாகும். புலம்பெயர்ந்து சுவிஸர்லாந்து நாட்டில் வசித்து வரும் கவிஞரின் தமிழ்மேல் உள்ள ஆர்வத்திற்கு இந்நூலே மிகச்சிறந்த சான்றாக அமைகிறது. இக்கவிதைகள் பிறரை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைவதோடு, நீ நான் உலகம் என்ற முக்கோண உறவை ஆராயக்கூடியதாகவும் படிக்கக்கூடிய வாசகர்களை ஆழமாக சிந்திக்க வைப்பதாகவும் உணர்வுபூர்வமான குறுகிய வரிகளைக் கொண்டதாகவும் உள்ளது.
ஒரு குடைக்குள் எனும் கவிதைத் தொகுப்பில் ஜெகன் அவர்கள் அன்பு, மனித மாண்பு, இயற்கை, காதல், சமூக அக்கறை, அரசியல், விழிப்புணர்வு, பகுத்தறிவு என பன்முகத் தன்மைக் கொண்டு வாழ்வியல் கூறுகளை மிக அழகாக பதிவு செய்துள்ளார்.
கைத்தொழில் போற்றல்
கவிஞரின் முதல் கவிதையே நம்மை கவர்ந்து இழுத்து மேலும் தொடர்ந்து வாசிக்க தூண்டுவதாக அமைகிறது. நீ, நான், உலகம் எனும் முக்கோணப் பார்வையே இவரின் முதல் கவிதை.
“கைகட்டி நிற்காத
நிரந்தர வருமானம்
பாரம்பரிய கைத்தொழிலை
கற்றல் சிறப்பே”
எனும் இக்கவிதை கைத்தொழிலை போற்றுவது சிறப்புக்குரியது. மேலும், இன்றையக் காலகட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பலரின் எண்ணக் குமுறல்களை எடுத்துரைப்பதாக அமைகிறது. இக்கருத்தை அடியொற்றிய மற்றொரு கவிதையில்,
“தொழிலாளியே நேரத்தை
தீர்மானிக்கும் சுதந்திரம்
மனஅமைதி காக்க
கைத்தொழில் தெரிவு”
என பிறரிடம் கைக்கட்டி வேலை செய்பவரின் அமைதியிழந்த மனநிலையை எடுத்துக்காட்டி நம் கைத்தொழிலே நமக்கு மன அமைதியை தரவல்லது. அதையே தெரிவு செய்க என நல்வழியைக் காட்டுகிறார்.
சமூக நலன்
சமுதாயத்தின் மீதுள்ள இவரின் அக்கறையை பல கவிதைகளில் பார்க்கமுடிகிறது.
“தெரு வியாபாரிகளிடம்
பேரம் பேசுவர்
வணிக நிறுவனங்களில்
நிர்ணயிக்கப்பட்ட விலை”
எனும் கவிதையில் இன்றைய வாழ்வியலின் உண்மைநிலையை, மக்களின் மனநிலையை எடுத்துரைக்கிறார். சிறுதொழில் வியாபாரிகளை மதிக்க வேண்டும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனும் அவரின் கருத்து புலப்படுகிறது.
“கடற் கரையில்
உடற் பயிற்சி
கடை உணவுக்கு
கால்கடுக்கக் காவல்”
எனும் கவிதை மக்களின் அறிணாமையை எடுத்தரைக்கிறது. உடற்பயிற்சி உடலுக்கு நலம் எனினும் உணவில் விழிப்புணர்வு தேவை என்பதை எடுத்துரைக்கிறார்.
சமுதாய அவலம்
சமுதாய அவலங்களை படம்பிடித்துக் காட்டும் இவரின் கவிதைகள் மிகவும் சிந்திக்க தகுந்த கவிதைகள். கல்வி கற்காத வீடுகள் இல்லை எனினும் இந்நிலை மாறியும் மக்கள் வாழ்வில் சமுதாயத்தில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை எனும் வருந்ததக்க நிலையை இக்கவிதைகள் எடுத்துரைக்கின்றன.
“திருந்தி வந்தாலும்
வாழவிடாத சமூகம்”
எனும் கவிதை சமுதாய மாற்றத்தை எதிர்நோக்குவதாக உள்ளது. மேலும்,
“வேண்டுதல் பலிக்குமென்று
உண்டியல் நிரம்புகிறது
கோபுரம் உயர்ந்தது
கொடுத்தவர் அதே நிலையில்”
எனும் கவிதை வாழ்வின் எதார்த்தத்தை பதிவு செய்கிறது.
“கோவில் கட்டிடத்திற்கு
நிதி உதவி
உணவில்லாச் சிறுவர்கள்
தெருவில் தவிப்பு”
என பட்டினியால் வாடும் மனிதர்களின் அவலநிலையை எடுத்துரைப்பதாக இக்கவிதைகள் அமைகிறது.
“வளர்ப்புப் பிராணிகள்
நடு வீட்டில்
வயோதியர் இல்லத்தில்
மரணித்த ஆச்சி அப்பு”
இன்றைய ஆடம்பர வாழ்வியல் முறையில் மனிதர்களை நேசிக்க மறந்துவிடுகிறோம். மனித மாண்பு என்பது கேள்விக்குறியாகவே இன்றும் திகழ்வதை எடுத்துரைக்கிறார்.
“உயிர்களைக் கொல்லுதல்
பாவம் என்றனர்
நேர்த்திக் கடனுக்காய்
வேள்விக்கு ஆடு”
எனும் கவிதை எல்லா உயிர்களையும் சமமாக பார்க்க வேண்டும் நே;சிக்க வேண்டும் என்பதையே இக்கவிதை எடுத்துரைக்கிறார்.
“வெள்ளப் பெருக்காய்
வீடில்லா மக்கள்
தேடி வந்த நிவாரணம்
மனிதம் இன்னமும்”
எனும் கவிதை மனிதம் இன்னும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது என்று கூறுவதோடு அல்லாமல் அவை, இன்னும் மேலோங்க வேண்டும் எனும் தன் கருத்தை வெளிப்படுத்துவதைக் காணலாம்.
வாழ்க்கை என்பது பிறருக்கு பயனுள்ளவராக வாழும்போது அர்த்தமுள்ளதாக அமைகிறது. சுயநலப் போக்கு அர்த்தமற்ற வாழ்வின் அடையாளமாகிறது. இதனை,
“பிரிவினைக்கு எதிராக
குரல் கொடுப்பவர்
மனைவியைப் பிரிந்து
தனியாக குடித்தனம்”
எனும் கவிதை மாற்றம் என்பது வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும். வீட்டில் பிரிவினையும் சமுதாயத்தில் ஒற்றுமையையும் பேசுபவரின் போலித்தனம் அர்த்தமற்ற வாழ்க்கையை எடுத்துரைக்கிறார். அதேபோல்,
“பேதங்கள் இல்லை என்று
மேடைப் பேச்சு
சேரிக்குச் சென்றால்
எட்டிக்கால் வைப்பார்”
இக்கவிதை மக்களிடையே பாகுபாடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்பதை எடுத்துரைக்கிறத. மனித மனங்கள் மாறவேண்டும் எனும் ஏக்கத்தையே தன் கவிதைவழி புலப்படுத்துகிறார்.
அரசியல்
நாட்டின் தலைவர் போட்டிக்கு பஞ்சமில்லை. ஆனால், மக்கள் வாழ்வில் பஞ்சம் ஒழிவதில்லை. தலைவர்களின் சுயநலபோக்கால் மக்கள் வாழ்வில் விடியல் என்பது கனவாகவே உள்ளது. இதனை, தன் பல கவிதைகளின்வழி எடுத்துரைக்கிறார்.
“வறுமை நிலையிலிருந்து
நாட்டின் தலைவரானார்
ஏழைகளுக்கான திட்டங்கள்
துளிர்த்து வளர்கிறது”
எனும் கவிதைவழி அறியலாம். மேலும்,
“மக்கள் எழுச்சியுடன்
சுதந்திர தினக் கொண்டாட்டம்
கைகள் மாறியது
கனவுகள் அப்படியே”
எத்தனை தலைவர்கள் வந்தாலும் மக்கள் வாழ்வில் மாற்றம் இல்லை என்பதையே இக்கவிதை வழி அறியமுடிகிறது.
“தேர்தல் காலம்
மதிக்கப்படும் மக்கள்
பதவி கொடுத்தும்
மாற்றமில்லா வாழ்வு”
எனும் கவிதையில் தேர்தல் நேரத்தில் மட்டுமே மதிக்கப்படும் மக்களின் அவலநிலையை எடுத்துரைக்கிறார்.
வாழ்வின் எதார்த்தம்
காலமாற்றம், நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி எனும் வாழ்வியல் மாற்றத்தில் சில எதார்த்தங்களை, மனித மனத்தின் ஏக்கங்களை இவரின் கவிதைகளில் காணமுடிகிறது.
“நம்பிக்கையோடு வந்து
தோல்வியோடு செல்லும்
எதையுமே மாற்றாத
வருடத்தின் மாற்றம்”
எனும் கவிதைகள் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வாழ்வின் எதார்த்தத்தை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.
“உற்சாகமான காத்திருப்பு
தோல்வியோடு செல்லும்
எதையுமே மாற்றாத
வருடத்தின் மாற்றம்”
புது வருடம் பிறக்கும் வாழ்க்கை மாறும் என்ற காத்திருப்பானது நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற வாழ்வியல் உண்மையை எடுத்துரைக்கிறது.
காதல்
காதலைப் பற்றி பல கவிதைகள் வந்தாலும் உண்மையானக் காதலை அன்பை தன் கவிதையில் கூறியுள்ளார்.
“அன்புக்கான காத்திருப்பு
அறுபதிலும் தொடர்கிறது
வாழ்ந்து முடிக்கும்வரை
காதல் அழிவதில்லை”
உண்மையான காதலுக்கு அழிவென்பது இல்லை. காலங்கள் மாறினாலும் அன்பு என்றும் மாறுவதில்லை என்பதை மிக அழகாக கூறியுள்ளார்.
மொழிப்பற்று
கவிஞரின் மொழிப்பற்றை கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார்;.
“தொன்மை மொழி என்று
பெருமை கொள்வோம்
தாய்மொழி தமிழை
போற்றி வணங்குவோம்”
என கவிஞரின் தமிழ்மேல் உள்ள ஆர்வம் வெளிப்படுவதோடு, தமிழை பெருமைக்கொள்வோம் போற்றி வணங்குவோம் என்று கூறும் இவரின் தாய்மொழிப்பற்று போற்றுதற்குரியது.
“சமூகம் சார்ந்து
நிற்பவனே படைப்பாளி
மக்களுக்கான எழுத்தே
பேனாவின் வலிமை”
என்பது கவிஞரின் மிகச்சிறந்த கவிதையாகும்.
இவ்வாறு பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கவிஞர் அப்புதுரை ஜெகன் அவர்களின் ஒரு குடைக்குள் எனும் கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் நம்மை சிந்திக்க வைப்பதோடு, பல கவிஞர்கள் தன்முனை கவிதை எழுத தூண்டுவதாகவும் அமைகிறது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “ஒரு குடைக்குள்” கவிதை தொகுப்பு |
| ஆசிரியர்: | அப்புதுரை ஜெகன் |
| வெளியீடு: |
கவியமுது பதிப்பகம், திருநின்றவூர்
|
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 முனைவர் இ.மேரி இமாகுலேட் ராஜகுமாரி, |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



சிறப்பான அறிமுகம் . நூலாசிரியர் அப்புத்துரை ஜெகன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் .