கையில் புத்தகத்தோடு தேர்தலில் வாக்களிப்போம்: ஏப்ரல் 23 : உலகப் புத்தக நாள் சிந்தனை
– சு.பொ.அகத்தியலிங்கம்
2026 ஏப்ரல் 23 , உலகப் புத்தக நாளும் தமிழ்நாட்டில் சட்ட மன்றத் தேர்தல் நாளும் ஒன்றாக அமைந்துவிட்டது . இரண்டுக்கும் தேவை விழிப்புணர்வு . புத்தக வாசிப்பு உங்களை மனிதனாக்கும் . உங்களின் நெஞ்சில் பொங்கும் மனிதம் தேர்தலில் எதிரொலிக்கும் . ஆகவே கையில் புத்தகத்தோடு தேர்தலில் வாக்களிப்போம் . பாசிசத்தை வீழ்த்தும் பேராயுதம் புத்தகங்கள்தாமே !
[ புத்தகத்தை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்காவிட்டாலும் ; வாக்குச் சாவடி வாசல் வரை கையில் வைத்திருக்கத் தடை இல்லை . ]
இன்றைய உலகில் புத்தக நாள் என்பது ஒன்றல்ல . இரண்டு . ஆம் . ஒன்று ,ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள் . இரண்டு ,பிப்ரவரி 21 சிவப்புப் புத்தக நாள் . எதில் எதைக் கொண்டாடுவது ? முற்போக்காளர்கள் இரண்டையும் கொண்டாடுவார்கள் . வலதுசாரிகளுக்கு இரண்டும் கசப்புத்தான் , ஆனாலும் ஏப்ரல் 23 ஐத் தவிர்க்க முடியாமல் சடங்காகக் கடைப் பிடிப்பார்கள் . இரண்டின் வரலாற்றையும் கொஞ்சம் புரட்டலாமே !
உலகெங்கும் பாசிசமும் சர்வாதிகாரமும் நூலகங்களைத் தீயிட்டுப் பொசுக்கியதை வரலாறு நெடுகிலும் பார்த்தோம் . ஹிட்லரின் பாசிச நெருக்கடியிலும் , இலங்கையில் இனவெறி ஆட்சியிலும் இன்னும் பல நிகழ்வுகளிலும் இக்கொடுமை நடந்தேறியது .
சதாம் உசேனை அழிக்க ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நுழைந்த போது துறைமுக நகரமான பாஸ்கரா நகரின் மிகப் பெரிய நூலகத்தின் புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாற்றி பாதுகாத்த பெண் நூலகர் ஆலியாவும் அவர் தம்பி அனீஸ் முஹமதுவும் வரலாற்றில் தனி இடம் பிடித்துவிட்டனர் . ஜெர்மனியிலும் இத்தாலியிலும் இது போன்ற வரலாற்று நிகழ்வுகள் உண்டு . அது இருக்கட்டும் உலகப் புத்தக நாள் எப்போது தொடங்கியது ?
ஐக்கியநாட்டின் கலை பண்பாட்டு பிரிவான யுனெஸ்கோ முடிவின் படி உலக “புத்தக நாளும் படைப்புரிமை நாளுமாக” [ book day and copy right day ] 1995 ஏப்ரல் 23 முதல் கொண்டாடப்படுகிறது. இப்போதும் அதுதான் .ஆயினும் இரண்டாவது விஷயம் பதிப்பாளர்களுக்குப் பிடிக்காது எனவே வெறும் புத்தக நாளானது .
[ தமிழ்ப் பதிப்பகங்கள் பெரும்பாலானவை ராயல்ட்டி நியாயமான எழுத்துக்கூலி தருவதே கிடையாது .இதுவும் வரலாறே . என் அனுபவமும் அப்படியே ]
வரலாற்றில் பின்னோக்கிப் போனால் 1922 இல் புத்தக நாள் ஸ்பெயினில் பார்சிலோனா நகரில் கொண்டாடப்பட்ட தகவல் கிடைக்கிறது . அதைத் தொடர்ந்து 1926 இல் தேதி மாற்றிக் கொண்டாடப்பட்டது . 1930 இல் ஸ்பெயினில் கத்தலான் [ catalan ] மொழிப் பாதுக்காப்பு நாளாகவும் புத்தக நாளாகவும் கொண்டாடப்பட்டது . Day of books and roses புத்தகம் மற்றும் ரோஜாக்களின் நாளாக ஒரு பாதிரியார் முன்னெடுப்பில் இது நடந்தது . ஆண்களுக்கு பெண்கள் புத்தகங்களையும் பெண்களுக்கு ஆண்கள் ரோஜாக்களையும் பரிமாறிய நாளானது . நாளடைவில் இரு பாலரும் புத்தகங்களைப் பரிமாறத் தொடங்கினார்கள் .இந்நாட்களுக்கு எல்லாம் அவ்வப்போது வெவ்வேறு நினைவுகளும் கதைகளும் வலம் வந்துகொண்டே இருக்கின்றன .
ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் [William Shakespeare] , பெரு நாட்டில் பிறந்து ஸ்பெயினில் வாழ்ந்த எழுத்தாளர் இன்கா கார்சிலசோ டே லா வேகா [ Inca Garcilaso de la Vega ] ஆகியோரின் நினைவுநாள் ஏப்ரல் 23 என்றும் அதுவே உலக புத்தகநாள் என்றும் சொல்லும் வழக்கம் 1995க்கு பிறகு உறுதியானது . இருவர் நினைவுநாட்கள் தேதிகளில் சில மாறுபாடு உண்டென்று சொல்வாரும் உண்டு ; ஆயினும் இருவர் நினைவைப் போற்றும் நாளே உலக புத்தகநாளானது .
இப்புத்தக நாள் தமிழ்நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது . மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அரசு முன்கை எடுப்பில் தன்னார்வலர்களும் இணைந்து மாவட்டம் தோறும் புத்தகத்திருவிழா நடத்துவது போற்றத்தக்க முன்னேற்றம் . தேர்தலுக்குப் பின்னும் அது தொடர அதற்கொப்ப வாக்களிப்போம் .
‘பிப்ரவரி 21 சிவப்பு புத்தக நாள்’ என்பது உலக புத்தக நாளு [ ஏப் 23 ] க்கு போட்டி நாளல்ல ; மேலும் ஓர் நாள் . உலகை மாற்றும் ஓர் சித்தாந்தத்தின் வெளிச்சத்தில் உதயமான நாள் .
1848 பிரவரி 21 ஆம் நாள் என்பது காரல் மார்க்சும் பிரடெரிக் எங்கெல்சும் இணைந்து எழுதிய மாபெரும் ஆவணம் . உலகைக் குலுக்கிய இன்னும் குலுக்கிக் கொண்டிருக்கிற சிந்தனைக் களஞ்சியம் ; உலகைப் பற்றி வியாக்கியானம் செய்கிற சித்தாந்தமாக இல்லாமல் மாற்றி அமைக்கும் அறிவுச்சுடராய் இன்றும் பிரகாசிக்கும் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை” வெளிவந்த நாள் . இப்புத்தகத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது 1998 இல் இவ்வறிக்கையை மீண்டும் பெருமளவு கொண்டு போக வேண்டுமென்கிற தேவை உலகெங்கும் முன்னுக்கு வந்தது . இடதுசாரிகளும் கம்யூனிஸ்டுகளும் ஆங்காங்கு அவர்களுக்கான வழியில் முயன்றனர் . 2020 பிப் 21 இல் சிவப்புப் புத்தக தினமாகப் பிறந்தது .
1920 பிப்ரவரி 21 ஆம் நாள் தென்கொரியா முதல் வெனிசுலா வரை சுமார் முப்பதாயிரம் பேர் ஒன்றாக ’கம்யூனிஸ்ட் அறிக்கை’யை வாசித்த நாள் . அன்றுதான் சிவப்பு புத்தகதினம் தொடங்கியது . உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி பதிப்பகங்களும் , கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகளும் கூட்டாக முன்னெடுக்கும் நாளானது . தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா ,தெலுங்கானா என்கிற நான்கு மாநிலங்கள் இந்நாளின் துவக்கத்திலேயே வலுவாக தன்னை இணைத்துக் கொண்டு ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை வாசித்தது சிறப்புக்குரியது. இம்முயற்சி சித்தாந்தப் போராட்டத்தின் ஓர் பகுதி எனில் மிகையல்ல.
எந்தப் புத்தக நாளாயினும் நமக்கு உவப்பே . புத்தகம் என்பது புதிய புதிய சாளரங்களைத் திறக்கும் . புதியபுதிய சேதிகளைச் சொல்லும் . புதிய புதிய பண்பாட்டோடு கைகுலுக்க வைக்கும் .விசாலப் பார்வையால் மனித குலத்தை அரவணைக்க வழிகோலும். புத்தகம் வாசிக்காத எந்த ஒரு நாளாயினும் அது வீணான நாளென கணக்கில் பதிக !
வாசிக்க நேரம் எங்கே இருக்கிறது ? எதை வாசிப்பது ? எப்படி வாசிப்பது ? இக்கேள்விகளுக்கான விடையை , ‘ ஏன் வாசிக்க வேண்டும்?’ என்ற கேள்விக்கான விடையோடு தொடங்க வேண்டும் . ‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி’ என்றார் பட்டுக்கோட்டை . அறிவு நாளும் , வளர புதியன அறிய, உலகத்தோடு ஒட்ட ஒழுக ;படித்துக் கொண்டே இருக்க வேண்டும் ; படித்துக் கொண்டே இறக்க வேண்டும்.
இந்த முடிவுக்கு வந்துவிட்டால் நேரத்தை கண்டடைவது பிரச்சனையே அல்ல . வீடு ,அலுவலம் ,பயணம் ,போர்க்களம் ,காத்திருக்கும் நேரம் எங்கெங்கும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தாலும் புரட்ட புத்தகத்தை எப்போதும் உங்களுடன் சுமந்து திரியுங்கள் !
📚 எழுதியவர்:–
சு.பொ.அகத்தியலிங்கம்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

