சைமன் ஸ்மித் குஸ்நெட்ஸ் (Simon Smith Kuznets) ஏப்ரல் 30, 1901இல் பிறந்து ஜூலை 8, 1985இல் மறைந்த ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் மற்றும் புள்ளிவிவர நிபுணர் ஆவார். சைமன் குஸ்நெட்ஸ், பொருளாதார வளர்ச்சியின் நடைமுறையின் அடிப்படையில் நிறுவப்பட்ட விளக்கத்திற்காக 1971ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசைப் பெற்றார், இது பொருளாதார மற்றும் சமூக அமைப்பு மற்றும் வளர்ச்சி செயல்முறை பற்றிய புதிய மற்றும் ஆழமான மதிநுட்பத்திற்கு வழிவகுத்தது. சைமன் குஸ்நெட்ஸ் தேசிய வருமானம் மற்றும் அதன் கூறுகள் பற்றிய ஆய்வுகளுக்காகவும் மிகவும் புகழ்பெற்ற பொருளாதார அறிஞராக இனம்காணப்படுகின்றார்.
சேமிப்பு, நுகர்வு மற்றும் முதலீட்டிற்கான நடவடிக்கைகளை சைமன் குஸ்நெட்ஸ் உருவாக்கினார், தேசிய வருமானம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்த கீன்ஸின் கருத்துக்களோடு இவருடைய கருத்தானது ஒத்துப்போனது, கீன்ஸியனின் புரட்சிகரமான கருத்துகள் வலுப்பெற சைமன் குஸ்நெட்ஸ் உதவினார். ராக்னர் ஃபிரிஷ் மற்றும் ஜான் டின்பெர்கன் நிறுவிய பொருளாதார அளவியல் ஆய்வை மேம்படுத்த சைமன் குஸ்நெட்ஸின் நடவடிக்கைகள் உதவியது குறிப்பிடத்தக்கது. தேசிய வருமானக் கணக்கியலில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக சைமன் குஸ்நெட்ஸ் நோபல் பரிசைப் பெற்றார் என்று பல பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள், உண்மையில், அந்த பரிசானது பொருளாதார வளர்ச்சி குறித்த அவரது பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடமேற்கு ஐரோப்பாவில் தொடங்கிய “நவீன பொருளாதார வளர்ச்சி” என்று அவர் அழைத்த ஒரு புதிய பொருளாதார சகாப்தத்தை சைமன் குஸ்நெட்ஸ் அடையாளம் கண்டார். வளர்ச்சியானது தெற்கு மற்றும் கிழக்கு நோக்கிப் பரவியது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அது ரஷ்யா மற்றும் ஜப்பானை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சைமன் குஸ்நெட்ஸின் மிகவும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளில் ஒன்று, வருமானப் பகிர்வில் பொருளாதார வளர்ச்சியின் விளைவைப் பற்றியதாகும். குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான ஏற்றத்தாழ்வை அதிகரிப்பதை அவர் கண்டறிந்தார். பணக்கார நாடுகளில், பொருளாதார வளர்ச்சி வித்தியாசத்தைக் குறைத்தது. கூடுதலாக, பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் வரையிலான காலத்தில் உற்பத்தி மற்றும் விலைகளின் சுழற்சி தன்மையை சைமன் குஸ்நெட்ஸ் பகுப்பாய்வு செய்து அளவிட்டார். இத்தகைய வர்த்தக சுழற்சிகள், சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், பெரும்பாலும் “குஸ்நெட்ஸ் சுழற்சிகள்” என்று குறிப்பிடப்படுகின்றன.
குஸ்நெட்ஸ் வளைவு என்பது பொருளாதார வளர்ச்சிக்கும் வருமான சமத்துவமின்மைக்கும் இடையிலான உறவின் வரைபட பிரதிநிதித்துவமாகும். ஒரு பொருளாதாரம் குறைந்த வருமானம் கொண்ட விவசாய சமூகத்திலிருந்து அதிக வருமானம் கொண்ட தொழில்துறை மற்றும் பின்னர் தொழில்துறைக்கு பிந்தைய சமூகமாக வளரும்போது, வருமான சமத்துவமின்மை ஒரு குறிப்பிட்ட வடிவத்தைப் பின்பற்றுகிறது என்பதை இது குறிக்கிறது. குஸ்நெட்ஸ் வளைவு பெரும்பாலும் தலைகீழ் U- வடிவ வளைவாகச் சித்தரிக்கப்படுகிறது. 1951ஆம் ஆண்டில் PC மஹலனோபிஸ் தலைமையிலான இந்தியாவின் முதல் தேசிய வருமானக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்ட நிபுணர்களில் குஸ்நெட்ஸ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய வருமானத்தை அளவிட அவரது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
சைமன் குஸ்நெட்ஸின் குறிப்பிடத்தக்க படைப்புகள்
(1934): தேசிய வருமானம், 1929–1932
(1966): நவீன பொருளாதார வளர்ச்சி: விகிதம், கட்டமைப்பு மற்றும் பரவல்
ஆதாரம்:- www.nobelprize.org ; www.britannica.com ; www.econlib.org ; www.adamsmith.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

