அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் | Araikkul Vantha Africa Vaanam

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்

 

ஆப்பிரிக்க இலக்கியமும், தலித் புரட்சியும்.

கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வாழ்வியலையும் கற்பனைகளின் புனைவுகளையும் சுமந்து கொண்டு கதை கட்டுரை சிறுகதை நாடகம் என தனித்தனி தொகுப்புகளாக வளம் வந்து கொண்டிருக்கும் இந்த இலக்கிய உலகில் இவை அனைத்தையும் ஒரே தொகுப்பில் வாசிக்கும் வாய்ப்பை அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் என பெயரிட்டு நமக்கு வழங்கிய கலை இலக்கிய உலக ஜாம்பவான் கலை இலக்கிய விமர்சகர் ஐயா இந்திரன் அவர்களுக்கு முதலில் பேரன்புகள்

அவர் நினைத்திருந்தால் அரசவை கவிஞர்களின் கவிதைகளையும் புராண இதிகாச பொய் புரட்டு கதைகளையும் மொழிபெயர்த்து நமக்கு கொடுத்திருக்கலாம் ஆனால் அவர் கருப்பின மக்களின் விடுதலை வேட்கையை நமக்கு மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார் என்பதிலேயே அவர் உலக சமத்துவத்தை விரும்புபவர் என்பதை ஊர்ஜிதம் செய்கிறார்

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கு முன்பு நான் வாசித்துப் பார்க்கும்போது அவைகள் என்னிடம் வெட்கப்படாமல் அழுதன குற்ற உணர்வின்றி சிரித்தன கர்வம் இன்றி கோபப்பட்டன சுயநலம் இன்றி நட்பு பாராட்டின என்று இந்த தொகுப்பின் முன்னுரையில் அவர் சொல்லி இருக்கும் அத்தனையும் இந்த தொகுப்பை வாசிக்கும் யாவரும் உணராமல் இருக்க முடியாது

ஏற்றத்தாழ்வுகளை சுமந்து சுழலுகின்ற இந்த உலகில் சமத்துவத்தை சகோதரத்துவத்தை சுதந்திரத்தை சுவாசிக்க செய்ய ஒரு சிறு கல் எடுத்து அடித்து சலசலப்பை ஏற்படுத்தி கலகம் செய்து உறக்கம் கலைக்காத ஒரு எழுத்து படைக்கப்படுவதில் சமூகத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லை என்பேன் ஆனால் இந்த ஆப்பிரிக்க இலக்கியமோ சமூக மாற்றம் வேண்டி ஒவ்வொரு வரிகளிலும் கலகம் செய்கிறது

கலை, இலக்கிய விமர்சகர் இந்திரன்
கலை, இலக்கிய விமர்சகர் இந்திரன்

பசியும் தூக்கமும் வாட்டி வதைக்க இருள் சூழ்ந்த ஒரு நல்லிரவில் அலைந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞன் தன்னை தேவாலயத்திற்குள் அனுமதிக்காத வெள்ளையர்களின் இனவெறி ஆதிக்கத்தை எதிர்த்து அந்த தேவாலயத்தையே இடித்து சுக்குநூறாக்கி சிலுவையில் சிறைப்பட்டிருக்கும் இயேசுநாதருக்கு விடுதலை கொடுத்து கம்பீரமாக நடக்கும் காட்சியை இருட்டுக்கு நிழல் இல்லை எனும் சிறுகதை விவரிக்கும் வரிகளை வாசிக்கும் போது இந்தியாவில் தீண்டாமையை எதிர்கொள்ள நிகழ்த்தப்பட்ட ஆலய நுழைவு போராட்டங்களும் திருவிழாக்களில் தலித்துகள் சம உரிமை கேட்கும்போது நடக்கும் வன்முறைகளில் சிறை வைக்கப்பட்டிருக்கும் வாய் திறவாத அம்மன்களும் நினைவுக்கு வருகின்றன

வேலை என்ற தலைப்பில் உள்ள நாடகத்தில் நாங்கள் கேட்டது எங்களின் உரிமையை நீங்கள் கொடுப்பது எங்களுக்கு வேலையை என உரத்த குரலில் கர்ஜித்துக் கொண்டு தன் கையில் வைத்திருந்த இசைவாத்தியத்தை அந்த அதிகாரியின் மண்டையை ஓங்கி பிளக்கும் போது விடுதலை வேட்க்கையின் உணர்வுகள் நெஞ்சை ஆக்கிரமித்துக் கொள்கிறது அதே நேரத்தில் தலித்துகளுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை அபகரித்துக் கொண்டு அந்த நிலத்தின் உரிமையை கேட்கும் போது அதற்கு செவிசாய்க்காமல் அதே நிலங்களில் கூலிகளாக வேலைக்கு அமர்த்தப்படுவது நினைவுக்கு வருகிறது

விவசாயம் செய்வதிலிருந்து தொழிற்ப்பேட்டை வரை உழைத்துக் கொட்டும் எங்களால்தான் உங்கள் தலைமுறைகள் செழித்து வாழ்வதும் எங்கள் தலைமுறைகள் அடிமைகளாக விலைக்குப் போவதுமாக அவலச்சுழல் நிலவுகிறது என்று சொல்லும் கருப்புத் தொழிலாளர்கள் எனும் கவிதை ஆண்டான் அடிமை முறையின் அவலத்தை எடுத்து இயம்புகிறது அதே நேரத்தில் விவசாயக் கூலிகளாகவும் நகரமயமாக்கத்தில் கட்டுமான தொழிலாளர்களாகவும் உற்பத்தித் துறை தொழிலாளர்களாகவும் துப்புரவு தொழிலாளர்களாகவும் இப்படி பார்ப்பனிய மற்றும் ஏவல் சாதிகளின் நலனுக்காக உழைத்துக் கொட்டும் தலித் தொழிலாளர்களை நினைவூட்டுகிறது

கருப்பு இயேசுநாதர் எனும் கவிதை கடவுளாகப்பட்ட இயேசு மீண்டும் பிறக்கும்போது அவர் கருப்பாக பிறந்தாரானால் நிச்சயமாக அவர் சிலுவையில் அறையப்படுவார் என்று சொல்லும் இந்த வரிகளை வாசிக்கும் போது தலித்தாக பிறந்ததற்காக நந்தன் கொன்றழிக்கப்பட்டு கடவுளோடு சேர்ந்து விட்டதாக கதை கட்டப்பட்டது நினைவுக்கு வருகிறது

ஆறடி நிலம் என்ற ஒரு கவிதை உலகத்தில் நீங்கள் உங்களை எவ்வளவு உயர்வாக கருதிக் கொண்டாலும் சரி மற்றவர்களை எவ்வளவு தாழ்வாக கருதினாலும் சரி அனைவருக்கும் இங்கே ஆறடி நிலம் தான் சொந்தம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் கவிதையை வாசிக்கும்போது அரிச்சந்திர மயானத்தில் பாவ புண்ணிய வகையறா கூறும் வெட்டியார் பாடல் நினைவுக்கு வருகிறது

களைப்பு எனும் தலைப்பிலான கவிதை நாங்கள் யார் யாருக்கோ உழைத்து களைத்து விட்டோம் யாருடைய நாகரிகங்களை பாதுகாப்பதற்காகவோ உழைத்து களைத்து விட்டோம் இனி நாங்கள் உழைப்பை நிறுத்திக் கொள்கிறோம் அவர்கள் அழுக்காகி போகட்டும் குப்பைகளிலும் சகதிகளிலும் வாழட்டும் என்று சொல்லும் அந்த கவிதை உலகம் முழுவதும் இருக்கின்ற உழைக்கும் மக்கள் தங்களின் உழைப்பை நிறுத்திக் கொண்டால் உழைப்பை சுரண்டி வாழும் மக்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை விவரிப்பதை வாசிக்கும் போது இங்கே தலித்துகள் மற்றவர்களுக்காக உழைப்பதை நிறுத்திக் கொண்டால் என்ன ஆகும் என்பதை நினைத்தால் நகைப்பாக இருக்கின்றது

துணைக்கு வராத துப்பாக்கிகள் எனும் சிறுகதை வெள்ளை இன மற்றும் கருப்பின மக்களின் கலப்பு மணம் குறித்தும் இந்த சமூகத்தில் அவர்கள் படும் அவதி குறித்தும் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் எதிர்கொள்கின்ற சூழல் குறித்தும் பேசுவதை வாசிக்கும் போது இங்கே நடக்கும் சாதிய ஆணவக் கொலைகள் நினைவுக்கு வந்து போகின்றது

இப்படியாக இந்தத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் கவிதையும் கட்டுரையும் நாடகமும் மொத்தமாக கருப்பின மக்களையும் அவர்களை ஆதிக்கம் செய்கின்ற வெள்ளையர்களையும் மையமாக வைத்து பேசுகின்ற எதிர்கொள்கின்ற அறிவுறுத்துகின்ற அத்தனையையும் அப்படியே இங்கே சாதிய சமூகத்தில் உழலுகின்ற ஏவலர்களையும் ஏவி விடுபவர்களையும் எதிர்கொள்கின்ற தலித்துகளுக்கு பொருத்திப் பார்க்க முடிகிறது

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் முழுவதும் நீலம்.

நூலின் தகவல்கள்: 

நூல்: அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் 

ஆசிரியர்: கலை, இலக்கிய விமர்சகர் இந்திரன்

பதிப்பகம்: யாளி பதிவு வெளியீடு

விலை: .120.00

 

எழுதியவர்: 

வெறுத்தா
9994432270

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *