கோதண்டனின் வண்டி சரியாக 9 மணிக்கு வந்து விட்டது. சரியாக உஷா வரும் நேரமும் அதுதான். சோழவந்தானிலிருந்து மதுரை வந்து கல்லூரியில் படித்த ஆயிரம் மாணவர்களில் அவனும் ஒருவன். இரண்டாம் நடைமேடையில் இருந்து வேகமாக படிக்கட்டுகளில் ஏறி பாலத்திற்கு வந்தான் இடது புறம் போனால் மதுரை நகர் வலது புறம் போனால் இரயிவே காலணி இடது புறம் முதல் நடை மேடையை அடுத்து வெளியே செல்லும் வழி, நகரினுள் செல்லும் வழி. அது மேல வெளி வீதி என பலருக்கும் தெரியாது. கட்டபொம்மன் சிலைக்கு பின்னே பேருந்து நிறுத்தம். அவன் நேரத்தை துல்லியமாக திட்டமிட்டிருந்தான். வலது புறம் நூறடி தூரத்தில் இரயில்வே காலணி உஷா., அவன் மார்பு துடிப்பு ஆக்சிலரேட்டர் கொடுத்தது போல் விரைவாக துடித்தது. முதல் கீயர். எரி பொருள் அதிகம் விரயம் செய்யக்கூடாது. இரண்டாம் கீயருக்கு வந்தான். உஷா நேர் எதிரே வந்த போது தலை குனிந்து முதுகு வளைந்து குட் மார்னிங் சொன்னான். அவள் காதில் விழுந்ததாக தெரியவில்லை. போக்கு வரத்து நெரிசல். ஜக்ஷனுக்குள் டீசல் வண்டிகள் வருகின்றன. ஒன்றல்ல இரண்டல்ல, பல பல.. சுமை தூக்கிகளீன் கூப்பாடு, பயணிகளின் கூவல், குழந்தைகளின் குதூகலம். பல வகை ஒசைகளின் வெளிப்பாடு ஒரு நெரிசலை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி கோதண்டனின் குட் மார்னிங்கை ஒரு சிற்றொலியாக மாற்றி உஷாவின் காதில் படாமல் செய்து விட்டது என கோதண்டன் நினைத்தான். உஷா என்னவோ அந்த குட் மார்னிங்கை காதில் பெற்றுக் கொண்டாள். ஆனால் பஸ் பிடிக்க வேண்டுமே.
அடுத்து இருவரும், ஆம் கோதண்டன் உஷா இருவரும் வெகு வேகமாக கட்டபொம்மனுக்கு பின்னால் இருந்த பேருந்து நிறுத்தத்தை அடைந்து எண் 2 பேருந்தினுள் தாவி ஏறி உள்ளே அமர்ந்தனர். எதிர் எதிரே இருக்கை. கோதண்டன் வெளியே பார்த்தான். உஷா ஒரு புததகத்தினுள் முகம் மூடினாள்.
அடுத்த இரு வருடங்கள் இதே போல். ஜன சந்தடி, ஒலி சந்தடி, வேலை தேடும் சந்தடி என ஓடின. பல வருடங்கள். யாரும் கணக்கு வைக்க முடியாத பல வருடங்கள். பல முதலமைச்சர்கள் மாறி விட்டதை கூட யாரும் கணக்கில் வைக்கவில்லை. எல்லோருக்கும் அவரவர் பிழைப்பு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். முதுகலை முடித்து மூன்று ஆண்டுகள் கழித்து கோதண்டனுக்கு தனியார் வங்கியில் கிளார்க் வேலை கிடைத்தது. அதுவும். மாமதுரையில். மாணவனாக இருந்த போது சீசன் டிக்கட் பெற்று சோழவந்தானிலிருந்து ரயிலில் வந்த பழக்கத்தை அவனால் நிறுத்த முடியவில்லை. எப்படியோ வேலை கிடைத்தது.
நாள்தோறும் நூறு காதல் கவிதை எழுதியவன் நூறு அலுவலக கடிதங்களை டெஸ்பாட்ச் செய்தான். வங்கியின் எல்லா கடிதங்களை உறையில் போட்டு தபால் தலை ஒட்டி அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பினான். ஒரு புயூன் அவனுக்கு உதவியாக இருந்தான். இந்த வேலையை ஒரு புது கிளார்க் சேரும் வரை நான்கு வருடங்கள் செய்தான். அடுத்து தங்கை திருமணம் முடிய நான்கு ஆண்டுகள் காத்திருந்தான். அடுத்து பதினோரு வருடங்கள் அவன் கணக்கு வைக்காத வருடங்கள் ஓடி அவன் அதிகாரியாக பதவி உயர்வு பெறும் தகுதியை கொடுத்தது. பதவி உயர்வு படிவத்தில் அவன் வயதை எழுத மறந்து விட்டான். தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது, அவன் வயதை அவர்களே எழுதி நிரப்பி விட்டார்களாம் இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்றனர். ஆஃபிசர் ஆனான்.
நண்பர்கள் குற்றம் சுமத்தினர். ‘’கோதண்டா நீ பெரிய முட்டாள் இந்த வருடமும் நீ கல்யாணம் பண்ணிக்கல்லான்ன இப்படியே இருந்துரு, எல்லாரும் உன்ன விவேகானந்தர்னு சொல்லி வணங்குவாங்க.’’இப்படி பல கேலிகள் .அவனை குறி வைத்தாலும் அந்த மாமதுரை விட்டு தொலை தூரத்திற்கு மாற்றல் ஆகாமல் அந்த தனியார் வங்கியின் எல்லா கிளைகளிலும் அவன் பணி புரிந்து விட்டான். அன்று சோழவந்தானில் இருந்து வந்த திண்டுக்கல் மதுரை பாஸன்ஞர் வண்டியில் இருந்து இறங்கியவன் வேகமாக இரண்டாம் நடைமேடையிலிருது முதல் நடை மேடைக்கு செல்லும் லிஃப்டினுள் நுழைந்தான். நல்ல குளிர். அமைதி. எந்த ஓசை ஒலி நெரிசல் இல்லை. முற்றிலும் அமைதி. அவனும் அவன் எதிரே உஷா. அவர்கள் இருவர் மட்டுமே. தீடிரென உஷா அவன் முன் தோன்றி அவனை கால எந்திரத்தில் வைத்து கடந்த காலத்திற்கு பறக்க வைத்தாள்.
’’குட் மார்னிங்.’’
வெரி குட் மார்னிங் அன்கிள்’’
லிஃப்ட் நின்றது. உஷா வெளியேறி நடந்தாள் கோதண்டன் அவளை பின் தொடர்ந்தான். உஷா திரும்பி பார்த்தாள். அன்கிள் பின் தொடர்வதை கண்டு அஞ்சி அவள் வேகமாக நடந்தாள். கோதண்டன் விடவில்லை. வேகமாக நடந்தான். அவள் முன்னே வந்தான் வழி மறித்து சொன்னான், புன் முறுவலுடன் சொன்னான், ‘’உஷா ஐ வ் யூ ‘’
அச்சத்தில் அவள் அதை கேட்கவில்லை
அதற்குள் ஒரு நடுத்தர வயது பெண் வந்து உஷாவின் கையை பற்றி ‘’என்ன அபர்ணா இவ்வளவு நேரம்’’ என்றார்.
‘’அம்மா இந்த அன்கிள் எனக்கு குட் மார்னிங் சொல்லீட்டு என பின்னாலயே வரார்’’
அந்த நடுத்தர வயது பெண் கோதண்டனை பார்த்து பணிவுடன் கை குப்பிவிட்டு சொன்னார்
‘’வணக்கம் கோதண்டன் அப்படியே இருக்கீங்க நாம காலெஜ்ல படிக்கும்போது எப்படி இருந்தீங்களோ அப்படியே, இவ என் பொண்ணு அபர்ணா, அபர்ணா இவர் என் க்ளாஸ்மேட், ரெண்டு பேரும் ஒரே காலெஜ்ல எம் ஏ படிச்சோம், உன்ன நான்னு நினைச்சி குட் மர்னிங் சொல்லியிருக்கார். அப்பயும் இப்படித்தான் டெய்லி குட் மார்னிங் சொல்வார், எனக்கு பஸ் பிடிக்கிற அவசரம் திரும்பி குட் மார்னிங் சொல்ல முடியல்ல..’’ ‘’
கோதண்டன் கண்களில நீர். கோதண்டன் கண்களில் தூசி விழுந்திருக்க வேண்டும்.
கோதண்டன் அலுவலகம் வந்தார். சிறப்பு விடுமுறை சுற்றுலாவிற்கான விண்ணப்ப படிவத்தை எடுத்தார். வயது என்ற இடத்தில் எழுதினார் 44. ஆனால் அவர் உணர்வு கூறியது காலெஜ்ல படிக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படியே இருந்தா வயதும் இருபத்தி இரண்டுதானே காலம் விரவாக சென்றதா. நேரம் அவனை பொறுத்த வரை உறைந்து நின்றதா அல்லது கோதண்டன் தாமதித்து விட்டானா. அவன் தாமதித்து இருந்தால் அதுவே அராஜக தாமதம்.