நூல் : அரண்
ஆசிரியர் : அல்லி உதயன்
விலை : ரூ. ₹150.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
நவீன மணிமேகலையை நவிலும் “அரண்” நாவல்
தென்மேற்கு பருவக்காற்றில் மிதந்து உலாவும் வாய்ப்பு பெற்ற தேனியைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அல்லி உதயன் அரண் என்ற நாவல் மூலம் நாவலாசிரியராக அடி எடுத்து வைத்திருக்கிறார்.
வயிற்றுப்பசி தான் உலகின் பற்பல மாற்றங்களின் ஊற்று என்பதை சீத்தலை சாத்தனார், இராமலிங்க வள்ளலார் தொட்டு மாமேதைகள் மார்க்ஸ் ஏங்கல்ஸ் வரை தம் படைப்புகளில் பதிவு செய்து மானிட சமூக முன்னேற்றத்திற்கான வழிகளை உலகிற்குத் தந்துள்ளனர். தாதுவருஷ பஞ்ச காலத்தில் மதுரை மண்ணின் மாண்பினை உணர்த்திய மனுஷி அம்மணி அம்மாள் தன் சொத்துகளை விற்று மக்களின் வயிற்றுத்தீயை அணைத்த வரலாறு அறிவோம்.
இதேபோல் தேனி அருகில் கிராமத்தில் ஒரு பஞ்சாலையில் நடந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு வயிற்றுப்பசி தீர்த்து அரணாக இருந்து அவர்களது போராட்டத்தை வெற்றிபெற உதவிய ஒரு பெண்ணின் கதைஇந்த நாவல். வைராக்கிய பெண் முத்துமாடத்தியின் போரட்டபாடுகளை, உதவிய ஊர்மக்களின் கருணைமிகு இயல்பினை, வழிகாட்டிய இயக்கங்களின் காத்திரமான பங்களிப்பை அல்லி உதயன் நாவலாக்க முயன்றுள்ளார். இம்முயற்சிக்கு , தேனி மாவட்ட மக்களின் இயல்பான மொழியை சிக்கல் சிடுக்கு இல்லா எளிமையான நடையில் சொல்லும் அல்லி உதயனின் எழுத்தாற்றல் கைகொடுக்கிறது.இது நாவலைச் சரளமாக வாசிக்கவைக்கிறது.
மனங்களைப் பிளவு படுத்தும் மத அறிவும், அரசு அதிகாரமும், மக்களைப் பாதுகாக்காது. மக்களின் உறுபசி தீர்த்து, கருணையோடு நடத்துவது தான் உயர்பண்பு. உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்று உலகிற்கு பிரகடனப்பபடுத்திய மணிமேகலை பாத்திரத்தை முன்மாதிரி படுத்தி முத்துமாடத்தி எனும் பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் அல்லி உதயன். முத்துமாடத்தியைக்கொண்டு தொழிலாளர் பசி தீர்த்து தொழிலாளர் போராட்டத்தை நீர்த்துவிடாமல் வெற்றிபெறச் செய்கிறார்.
சரளமான வாசிப்பு நடையுள்ள “அரண்” என்னும் இந்நாவல் புதியதாக எழுதவருபவர்களுக்கும், எழுதிக் கொண்டிருப்பவருக்கும் பகிர் நிறையக் கூறுகளை கொண்டிருக்கிறது. வாங்கி வாசித்துணரலாம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.