நாவலாசிரியர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையை சேர்ந்த தமிழ் எழுத்தாளர்,கவிஞர்,மொழிபெயர்ப்பாளர். இலங்கை அரசு வழங்கக்கூடிய உயரிய விருதான சாகித்திய இலக்கிய விருது பெற்றுள்ளார்.
“ஆரண்ய வாசி” சிறிய நாவலாக இருந்தாலும் மெல்லிய சிறு சோகத்தோடு ஆரம்பித்து பயங்கரமான ஒரு அதிர்ச்சியை கொண்டது. இறுதியாக மனம் சாந்தமடைய கூடிய ஒரு சாந்தத்தோடு நாவல் முடிகிறது.
ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருக்கக்கூடிய ஒரு சின்ன கிராமத்தில், பழங்குடியின மக்கள் வசிக்கக் கூடிய வாழ்வாதாரத்தை பற்றியும், அம்மக்களின் சடங்கு, பாரம்பரியம், உடை, உணவு முறைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் போன்ற பல விஷயங்களோடு மெதுவாக நகர்கிறது. குறிப்பாக ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய பிரச்சனை குறித்தும் இதில் பேசப்படுகிறது.
பெண்கள் பற்றியும் பெண்களின் பங்களிப்பு அர்ப்பணிப்பு சில குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் பெண்களை மையக் கருத்தாகவும், வாழ்க்கையில் பெண்களுக்கு நடக்கும் வேதனை, துன்பம்,மகிழ்வு பற்றி சிந்திக்க நேரம் தந்துள்ளார்.
மேலும்,இந்த நாவலில் மனிதருக்கு முக்கியத்துவம் அளிப்பது போல தேனீக்களின் முயற்சியையும், பூக்களின் தியாகங்களையும் சிறப்பாக சொல்லியிருப்பார். தித்திக்கும் தேன் சிறிது உருவாக எத்தனை தேனீக்கள் எத்தனைப் பூக்களிடம் அலைந்து திரிந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்திருக்கும். எத்தனை நாட்கள் தனது கூட்டினை காத்திருக்கும் என்பதை உணர வைத்துள்ளார்.தேனீக்கள்
இவ்வளவு கடைசியில் யாருக்கு பிரயோஜனம் என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டிருப்பார்.
மேலும் அன்புக்கும் காதலுக்கும் உள்ள நேசத்தை கூறும்படி இளம் ஜோடி பற்றியும் கூறியுள்ளார். இந்த சிறு கிராமத்தில் பழங்குடியை சேர்ந்த இளம் ஜோடி வாழ்ந்து வந்தனர். திடீரென கணவன் இறந்து விடுகிறான். அவனது நினைவுகளை மறக்க முடியாமல் தினமும் நினைத்து நினைத்து வாடுகிறாள்,அவனது கல்லறையை ஒரு நாள்கூட மறவாமல் நேரில் சென்று பார்த்து பார்த்து கதறி அழுகிறாள். பெண்களின் தியாகத்தையும் வேதனையும் இதில் அழகாய் காட்சியளிப்பார்.
மது எவ்வளவு பெரிய தீமை, எந்தளவு ஒரு குடும்பத்தை அளிக்கும் சூனியம் என்பதை பற்றியும், ஆரண்ய காடு பார்ப்பதற்கு அடர்த்தியாகவும், இருள் சூழ்ந்து, விலங்குகள் சுற்றித் திரிந்து பயமுறுத்தினாலும், மனிதன் வாழ்வதற்கு சாந்தம் அடைவதற்கு மகிழ்ச்சியாய் பயணிப்பதற்கு ஒரு சிறந்த இடம் என முடித்துள்ளார் இந்நாவலின் ஆசிரியர்.
இந்த சிறு நாவலை படித்தால் நாமும் இதில் வரும் கதாபாத்திரத்தோடு பயணிக்கும் உணர்வை தூண்டும்.
நூலின் தகவல்
புத்தகத்தின் பெயர் : ஆரண்ய வாசி
ஆசிரியர் : எம். ரிஷான் ஷெரிப்
வெளியீடு : கஸல் பதிப்பகம், இலங்கை-2022
விலை : 45
எழுதியவர்

தி. தாஜ்தீன் முதுகலை ஆசிரியர் தி கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி ஆவணியாபுரம்.

