புத்தக அறிமுகம்: அரசியல் எனக்கும் பிடிக்கும் – த.கௌதம் (இந்திய மாணவர் சங்கம்)

 

அரசியல் என்றாலே முகம் சுளிப்பவர்கள் உண்டு. தேர்தல் வந்தால் ஓட்டு மட்டும் போடுவோம் ஆனால் அரசியலிலிருந்து விலகி நிற்போம் என்பதே பலரின் செயலாக உள்ளது. நேற்று ஒரு கட்சியிலிருந்திருப்பார் இன்று வேறு ஒரு கட்சியில் இருப்பார் நாளை வேறொரு கட்சியில் போகலாம் என்பது போன்ற செய்திகளை வாசிக்கும்போது அரசியல் இப்படித்தான் என்று நினைப்பவர்களும் உண்டு. தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகள் மேலும் இதை உறுதிப்படுத்திவிடுகிறது. அரசியலை ஒரு சிறந்த தொழிலாக மாற்றிவிட்டனர் என்ற எதார்த்தமும் எளிய மக்களை அதிலிருந்து விரட்டுகிறது.

அரசியலிலிருந்து பெரும்பகுதி மக்கள் விலகியிருக்கவே நினைத்தாலும் அரசியல் நிகழ்வுகள் யாரையும் அதிலிருந்து விலக்கிவைப்பதில்லை. மக்களின் அன்றாட வாழ்வைத் தீர்மானிப்பதே இந்த அரசியல்தான், ஏழை எளிய உழைப்பாளி மக்களின் வாழ்க்கையில் குவிந்துகிடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படையானது அரசு கடைப்பிடிக்கும் கொள்கைகள்தான். அரசு, அரசியல், அரசாங்கம் போன்றவற்றை எளிய நடையில் கலந்துரையாடல் பாணியில் எளிமையான முறையில் விளக்கும் நூல் தான் “ அரசியல் எனக்குப் பிடிக்கும்”. அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது ஆனால் இங்கு அரசு சமூகத்தில் உள்ள ஒரு சாராருக்குத் தான் சாதகமாக உள்ளது என்கிற உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய மார்க்ஸ், எங்கல்சின் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் நூலாசிரியர் ச.தமிழ்ச்செல்வன் விளக்கியிருக்கிறார்.

கனிச்சாறு: அடுத்த ...

நாம் எந்தப்பக்கம்?

அரசு மட்டுமல்ல அரசியலும் இங்கு எல்லோருக்கும் பொதுவானதே. விவசாயிகளிலிருந்து தொழிலதிபர் வரை யாரும் ஒரே நிலையில் இல்லை. இருப்பவன் இல்லாதவன் என இரண்டு பாகங்களாக சமூகம் பிரிந்து கிடக்கும் போது எந்த ஒரு அரசியல் கட்சியும் எந்த ஒரு அரசும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க முடியாது என்கிற நுட்பமான அம்சத்தை நூலாசிரியர் தெளிவாக விளக்குகிறார். உழைப்பாளி மக்கள் மத்தியில் அரசியல் பற்றியும் அரசு பற்றியும் பல கேள்விகளுக்கு விடை அளிப்பதாக இச்சிறு நூல் அமைந்துள்ளது.

இங்கு அரசியல் பேசக்கூடாது என்று சில டீக்கடைகளிலும் முடிதிருத்தும் நிலையங்களிலும் எழுதிப் போட்டிருப்பார்கள். பொது இடங்களில் புகைப்பிடித்தால் தவறு என்பது போல அரசியல் பேசினாலும் தவறு என்பதைச் சேர்த்துவிட்டனர். பொதுவாகவே பெற்றோர்கள் தம் பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுவதை பொதுவாகவே விரும்புவதில்லை. காசு பணம் சம்பாதிக்க வழி உள்ள சில கட்சிக்காரர்கள் தன் பிள்ளைகளை அரசியலில் இணைக்கின்றனர்.

இங்கு விதவிதமான அரசுகள் உண்டு அரசியல் என்கிற சொல்லுக்குள் இரண்டு வார்த்தைகள் உள்ளது. அரசு + இயல் என்பதே அரசியலாகும். அரசு என்றால் என்ன ?தமிழக அரசு, மத்திய அரசு, திமுக அரசு, அதிமுக அரசு என்பது நமது பொதுவான புரிதல். உண்மையில் அரசு என்பதற்கான அர்த்தம் யாதெனில், நிர்வாகம், சிறைச்சாலை, நீதிமன்றம், ராணுவம் இந்த நான்கும் சேர்ந்தது தான் அரசு என்பதாகும். நாட்டுக்கு நாடு ஆட்சி முறைகள் மாறுபடும். அரசு என்பது மாறாதது.

ஆட்சி முறைகள் ராணுவ ஆட்சி முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, பாசிஸ்ட் ஆட்சி, காலனி ஆட்சி, ஜனநாயக ஆட்சி எனப் பலவகையுண்டு. ஆனால் வலதுசாரி அரசியல் மற்றும் இடதுசாரி அரசியல் என்கிற இரண்டே அரசியல் தான் உலகம் முழுவதும் இருக்கிறது. நாட்டின் வளங்கள் எல்லாம் எல்லோருக்குமானது என்கிற பொதுவுடைமை என்பது இடதுசாரி அரசியல் என்றும் அவ்வளங்கள் எல்லாம் சில முதலாளிகளுக்கான தனியுடைமை என்பது வலதுசாரி அரசியல் என்பதையும் அழகாக எளிய நடையில் நூல் முன்வைக்கிறது. நாம் எந்த அரசியலின் பக்கம்? என்பதே நம்முன் இந்நூல் முன்வைக்கும் கேள்வியாகும்.

நூல் : அரசியல் எனக்குப் பிடிக்கும்
நூலின் ஆசிரியர் : ச.தமிழ்செல்வன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை : ₹20
பக்கம் : 50 பக்கங்கள்