அரசியல் சிந்தனையாளர் Arasiyal Sinthanaiyaalar Buddhar புத்தர் காஞ்சா அய்லயா God as a political philosefer. Buddha’s chalenge to bramanism

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அரசியல் சிந்தனையாளர் புத்தர் – தேனிசீருடையான்

 

 

 

சங்கம் சரணம் கச்சாமி..

காஞ்சா அய்லயா;-

காஞ்சா அய்லயா தலித் வாழ்வியலின் தத்துவத் தலைவர். அண்ணல் அம்பேத்கரைத் தனது ஞானகுருவாக ஏற்றுக் கொண்டு, இந்தியாவில் சாதிய சமத்துவம் நிலவ வேண்டும் என்ற நோக்கோடு ஆய்வுப் புலத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்.
இன்றைய தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் அருகிலுள்ள ஒரு சிற்றூரில் 1952ம் ஆண்டு ஆடு மேய்பவர்கள் குடும்பத்தில் பிறந்தார். தனது சொந்த அனுப்வத்தில் இருந்தும் கற்றுத் தெளிந்த பிராமணியத்தின் கொடூரங்களில் இருந்தும் அனைத்து சாதியினரும் விடுதலை அடையவேண்டும் என்ற சித்தாந்த பலத்தோடு இயங்கிக் கொண்டிருப்பவர். .பிராமணியத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற தேவையை உணர்ந்து இந்திய அளவிலும், உலக அளவிலும் பார்ப்பனியத்தைத் தோலுரித்துக் காட்டும் அறிவாளர்களில் முக்கியமானவர் காஞ்சா அய்லைய்யா. இன்று அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, இருபத்தோராம் நூற்றாண்டில் சாதியின் பரிணாமத்தை அலசி ஆராய்ந்து, இந்துத்துவத்தை உலக அளவில் தோலுரித்துக் காட்டும் தரமான பல ஆய்வு நூல்களை எழுதியுள்ள அசல் அறிவுஜீவி
பார்ப்பனியம் சூத்திரர்களைச் சில சமயம் செல்வாக்குப் பெற அனுமதிக்கும், இரும்பு மனிதன் எனப் புகழக் கூடச் செய்யும். ஜனாதிபதி என்ற உயர் பதவியில் அமரவும் அனுமதிக்கும். ஆனால் ஒரு போதும் அவர்களை அறிவுத்தளத்தில் மேம்பாடு அடைய, ஆய்வறிஞர்களாக உருவாக,  சமூக விடுதலைக்கான கோட்பாடுகளை முன்வைக்க அனுமதிக்காது. அதனால்தான் இன்றுவரை IIT, IIM உட்பட பிற இந்திய ஆய்வு நிறுவனங்களிலும், சமூக அறிவியல் துறையிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினர் அனுமதிக்கப்படுவதில்லை.

இப்படி ஒடுக்கப்படும் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் லட்சிய நாயகனாக அம்பேத்கரை முன்னிறுத்துகிறார் காஞ்சா அய்லயா. ஏனெனில் தனது கடுமையான உழைப்பின் மூலமாக அறிவை எல்லையற்று விஸ்தரித்து உலகே வியந்து பார்க்கும் அறிஞராக உருவானவர் அண்ணல் அம்பேத்கர்தான், அதுவரை நம் உளவியலில் திணிக்கப்பட்ட அறிவுசார் தாழ்வு உளவியலை அடித்து நொறுக்கினார்.
”தங்களைத் தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ளூம் இந்துத்துவவாதிகளைவிடப் பல மடங்கு தேச அக்கறை கொண்டவர்கள் நாம்தான். ஏனெனில் இந்த மண், வேறு எவரையும் விட, தலித் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்குமே சொந்தமானது: என்கிறார் காஞ்சா. ஆரியர்களின் வருகைக்கு முன்பே ஹரப்பா நாகரிகத்தைக் கட்டமைத்தவர்கள் இன்றைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள். அவர்கள் திராவிடர்கள் என்பது அவரது துணிபு. அவரது எந்த ஒரு ஆய்வும் வெறும் மேற்கோள்கள் நிரம்பியதாக இல்லாமல் நிதர்சனமான கள யதார்த்தத்தை, சாமானிய, உழைக்கும் மக்களின் வாழ்வியலை, அறிவியலை, உழைப்பின் மேன்மையைப் பேசுவதாக இருப்பதே அவரைத் தனித்துவமான அறிஞராக ஆக்குகிறது.

ஏற்கனவே இவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல் “நான் ஏன் இந்து அல்ல?” (why I am not hindu) அதில் அவர் விவரித்திருக்கும் விவரணைகள் நம் நாட்டில் ஜாதிய சமத்துவம் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.. “பாட்டாளிவர்க்கம் ஆட்சியதிகாரத்துக்கு வந்தால் சமத்துவம் உண்டாகும் என்றார் காரல்மார்க்ஸ்; இந்தியாவில் தலித்துகள் ஆட்சியதிகாரம் பெற்றால் அனைத்து சாதியினரும் சமத்துவத்தோடு வாழமுடியும்” என்று ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தர்.

புத்தர்;-

கௌதம புத்தர் பொ. ஆ. மு. 500ஆம் ஆண்டு, சாக்கியர்களின் தலைநகருக்கும் கோலியர்களின் நகருக்கும் இடையிலான ஓரிடத்தில் பிற்ந்திருக்க வேண்டும்” என்கிறார் கென்னத் ஜே சாண்டர்ஸ். கபிலவஸ்து என்ற தேசத்தின் இளவரசனாக, சுத்தோதனருக்கும் மாயா தேவிக்கும் பிறந்தார். அவர் பிறந்த ஏழாம் நாள் தாய் இறந்துவிட்டார். சுத்தோதனரின் இளைய மனைவியாகிய மகா பிரஜாபதி, தாயின் இழப்புத் தெரியாமல் கௌதமனை வளர்த்தெடுத்தார்.

நான் நடுநிலை வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்தபோது சரித்திரப் பாடப் பகுதியில் புத்தரைப் பற்றிய பாடம் இருந்தது. “மனித வாழ்வின் அனைத்துத் துன்பங்களுக்கும் ஆசையே அடிப்படை; ஆசையைத் துறந்தால் நல்வாழு கிடைக்கும்” என்று புத்தர் போதித்ததாக சொல்லப்பட்டிருந்தது. படிப்பின்மீதும் வாழ்விமீதும் ஆசை இருக்கக் கூடாதா என்று மாணவர்கள் பேசிக்கொள்வோம். “ஆசை” என்பதற்கான அர்த்தம் அந்தக் காலத்தில் மேலோட்டமாக மட்டுந்தான் எங்களால் புரிந்துகொள்ளப்பட்டது. இந்த நூலில் வேறுவிதமான உள்ளடக்கத்தோடு அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கௌதமன் மிகவும் சோர்வடைந்திருந்த ஒருநாள் அவர் தந்தை சுத்தோதனர் அவர் மனதை மாற்ற நினைத்து இயற்கை எழில் சார்ந்த காட்சிகளைக் கண்டு களிக்கட்டும் என்று ஒரு கிராமத்துக்கு அனுப்புகிறார். அங்கு உழுதொழில் செய்யும் தொழிலாளிகளைக் காண்கிறார்கைதமன். தலையில் குத்திட்டு நிற்கும் முடியுடன், வெற்றுக் கால்களுடன், மண்படிந்த மேனியுடன் வியர்வை வழிய உழைத்துக் கொண்டிருந்தனர். தார்க்குச்சி குத்தியதால் காளைகளின் முதுகும் புட்டங்களும் ரத்த விளாறு படிந்து காணப்பட்டன. பசியும் தாகமும் மாடுகளை வாட்டின; வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் சப்தமாக மூச்சுவிட்டுக் கொண்டு, ஏர்க்கலப்பையை இழுக்க முடியாமல் இழுத்தன. ஈக்களும் பூச்சிகளும் அவற்றைக் கடித்துக் கொண்டிருந்தன. சீழ் பிடித்து, காயங்களில் இருந்து குருதி வழிந்தோடியது. எச்சில் ஒழுகும் வாயிலும் மூக்கிலும் கொசுக்கள் மொய்த்தன. இந்தக் காட்சியைக் கண்டு புத்தரின் மனம் கலங்கியது. அதிகார பீடப் பேராசைதான் இந்த ஏழைகளின் துன்பத்துக்குக் காரணம் எனக் கண்டறிந்தார்.

அவர்களைப் பார்த்து “நீங்க்கள் யாருடைய வேலையாட்கள்?” என்று கேட்டார். “நாங்கள் அரசனின் அடிமைகள்” என்று அவர்கள் கூறினர். “இன்றிலிருந்து நீங்கள் அடிமைகள் இல்லை; நீங்கள் வேலையாட்கள் இல்லை” என்று அவர்களை விடுவித்து வேறு நிவாரணங்களைத் தேடிக் கொள்ள உதவி செய்தார். தனது குடியரசுப் பகுதியில் இப்படி நடப்பதுகண்டு வேதனைப் பட்டார். இங்கேயே இப்படியென்றால் முடியரசுப் பகுதியில் எப்படி  இருக்கும் என்பதை அவரால் ஊகிக்க முடிந்தது. நான் வாசித்த “ஆசையை அகற்று” என்ற முழக்கம் அதிகார வர்க்கத்தின் ஆசை என்பதை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது.

குடியரசு ராஜ்யத்தை நிறுவி ஆண்டுகொண்டிருந்த மலைவாழ் மக்களிடையில் பிளவை உண்டுபண்ணும் வேலையை பிராமணியம் முடுக்கிவிட்டது. முடியரசுகளாகிய கோசலம், மகதம் உள்ளிட்ட அரசுகளை விரிவாக்கம் செய்வதற்கான நோக்கோடு குடியரசுகளை ஆக்கிரமிப்புச் செய்ய அர்த்தசாஸ்திரம் ஆணையிட்டது. (இந்தக் காலத்தில் கார்ப்பரேட்டிச பாணியிலான ஏகாதிபத்திய கோட்பாட்டை நிறுவ முயல்வதுபோல)

“தண்டநீதி” என்றொரு சித்தாந்த்தத்தை உருவாக்கி, “ஷத்திரியர்களாகிய நீயும் மகா வித்வான்களாகிய பிராமணர்களும் உயர்வடைய அவர்களை அழித்தொழிப்பது தவறில்லை” எனப் போதித்தார் கௌடல்யர்.

ஸ்வேதகேது ஜாதகக் கதை ஒன்று இப்படிக் கூறுகிறது. பிராமண இளைஞன் ஒருவன் தான் நடந்து செல்லும் வழியில் சண்டாளன் ஒருவனைச் சந்திக்கிறான். “நீ யார்?” என்று அவனைக் கேட்டதும் “நான் ஒரு சண்டாளன்” என்று அவன் பதில் சொல்கிறான். இதைக் கேட்ட இளைஞன் அதிர்ச்சியுற்று, சண்டாளன்மேல் பட்ட காற்று தன்னைத் தீண்டிவிடும் என பயந்து ஒதுங்கி ஓடுகிறான். புத்தர்காலத்தில் நிலவிய, மானுட ஒற்றுமையைச் சிதைக்கும் மனுஸ்ம்ருதிக் கதைகளில் இதுவும் ஒன்று.
வறுமையில் உழன்றுகொண்டிருந்த சூத்திரர்களைப் பார்த்து, மறுபிறவிக் கோட்பாட்டை மனு போதித்தார். “இந்தப் பிறவியில் உங்களுக்கு இடப்பட்ட பணிகளைச் சரியாகச் செய்வீர்களானால் மறுபிறவி நீங்கி சொர்க்கம் செல்வீர்கள்.” அடுத்த பிறவியிலாவது விடுதலை கிடைக்கட்டும் என்று அடிமைச் சேவகத்தை மனமுவந்து ஏற்றுச் செயல்படுத்தினர் அடித்தட்டு மக்கள்.

இப்படித்தான் புத்தர்காலத்தில் ஜாதிப் பிடிமானம் மனித மூளையை அழுத்திப் பிடித்திருந்தது. அதை முறியடிப்பதற்கான உத்திகளை புத்தர் வகுத்தளித்தார்.

”புத்தம் சரணம் கச்சாமி;
தம்மம் சரணம் கச்சாமி;
சங்கம் சரணம் கச்சாமி”

என்ற தாரக மந்திரத்தின் காவியத் துடிப்புமிக்க உயிரோட்டமான அமைப்புக் கோட்பாட்டை இந்த நூலில் படிக்க முடிகிறது. அதாவது பௌத்தம் என்பது, மார்க்சியம்போல, நெகிழ்வுத் தன்மையுள்ள அரசியல் மற்றும் வாழ்வியல் கோட்பாடு. அது “தம்மம்” என்ற தத்துவக் கோட்பாடுகளை உருவாக்கி “சங்கம்” என்ற அமைப்பின் வழியாக நடைமுறைப் படுத்தியது.

புத்தர் பிறந்து வளர்ந்து சங்கம் அமைத்த காலம் பொ. ஆ. 600 முதல் 500 வரை என்று கூறப்படுகிறது. அவருக்கும் முன்பாகவே இமயமலைக்குத் தெற்கில் பிராமணர்கள் நுழைந்து நால்வருண முறையை வாழ்க்கைக்குள் திணித்துவிட்டார்கள். 4ஆவது வர்ணமாகிய சூத்திரர்களும் மலைவாழ் மக்களும் கடைக்கோடிக்கு ஒதுக்கப்பட்டனர். ஷத்திரியர்களை ஆளும் வர்க்கமாக உயர்வடைய வைத்ததே பிராமணீயம்தான். தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான பாதுகாவலர்களாகச் செயல்பட அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். தங்கள் பொருளுதவிக்கான தேவையை வைஸ்ய வர்க்க உருவாக்கத்தின்மூலம் நிறைவேற்றினர். படைப் பிரிவில் இல்லாத, செல்வம் சேர்க்க இயலாத மற்ற பகுதி மக்கள், “சூத்திரரகள்” என நாமகரணம் சூட்டப்பட்டு அடிமைச் சேவகம் செய்ய ஊக்குவிக்கப் பட்டனர். ஓதுதலும் ஓதுவித்தலும் மட்டுமே தமது தொழில் என நிர்ணயித்துக் கொண்டு மற்ற வர்க்கங்களைத் தனது சேவகர்களாக மாற்றியதுதான் பிராமணியத்தின் வெற்றி. இப்படியான உச்சநிலை ஜாதியப் பாகுபாடு உதயமான காலத்தில்தான் புத்தர் அவதரித்தார்.

ஜாதகக் கதைகள், பிடகங்கள், சுட்டா, தம்மம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள் புத்தரின் போதனைகளை உள்ளடக்கமாய்க் கொண்டிருக்கின்றன. சில ஆய்வாளர்கள் பௌத்தத்தையும் இந்துத்துவத்தையும் இணைத்து ஆய்வு செய்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள், கே. பி. ஜெயஸ்வால், ஆர், சி, மஜும்தார், டி. ஆர். பண்டார்கர், யு, என், கோஷல். பேனிபிரசாத், ஏ, கே, சென், என். சி. பந்தோபாத்தியாயா, பி, சி, பாசு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாக்கிருஷ்ணன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களின் ஆய்வுகளில் இருந்து புத்தரின் அரசியல் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. (இவர்கள் அனைவரும் பிராமணீயத்தை இந்துமதம் என்றே குறிப்பிடுகின்றனர்.)

புத்தர் காலத்தில் வடபுலத்தில் நான்கு முடியரசுகளும் 14 குடியரசுகளும் கோலோச்சிக் கொண்டிருந்தன. முடியரசு தோன்றுவதற்கான தத்துவ தளத்தை வகுத்துத் தந்த நாயகர்களாக கௌடல்யரும் மனுவும் இருந்தனர். அரசு அதிகாரத்தின்மீதான பிராமணியம் செல்வாக்கு செலுத்த வேண்டியதன் அவசியத்தை அர்த்தசாஸ்திரம் வலியுறுத்துகிறது. மனுதர்மம் சமூகப் பண்பாட்டு நடவடிக்கைகளில் பிராமணீயம் எப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

முடியரசுத் தத்துவம் ஆக்கிரமிப்புச் சிந்தனையை அடியுரமாகக் கொண்டது. குடியரசுகளாகச் சிறுத்துக் கிடக்கிற, பகுதிகளை உள் இழுப்பதற்கான ராஜதந்திர நடவடிக்கையை முன்மொழிகிறது அர்த்த சாஸ்திரம். அதாவது மலைவாழ் மக்களும் அடித்தட்டு மக்களும் குடிவெறியில் மூழ்கிக் கிடந்தனர். அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி, அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கிவிட்டால் ஆக்கி”ரமிப்பு நடவடிக்கை எளிதாகிவிடும். ஒற்றர்களை ஏற்பாடு செய்து குடியரசுப் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் மதுக் குப்பிகளை இலவசமாக வழங்குகின்றனர். அதில் பாலியல் இச்சையைத் தூண்டும் “மாதவம்” என்ற பானத்தைக் கலந்து தருகின்றனர். அருந்திய ஆண்கள் எல்லாம் வேறு வேறு பெண்கள்மேல் இச்சைகொண்டு துவம்சம் செய்கின்றனர். ஒற்றர்களின் வேலை வெற்றியடைந்த நிலையில் விசாரணை செய்த பிராமண அதிகாரிகள் “தண்டநீதி” என்ற கௌடல்ய விதிப்படி இச்சைகொண்டு இயங்கிய ஆண்கள் அனைவருக்கும் உறுப்புகளை வெட்டுதல், உயிரைப் போக்குதல் போன்ற தண்டனைகள் வழங்கி, அந்தக் குடியரசு முடியரசோடு இணைத்துக் கொள்ளப்படுகிறது.

புத்தர்கண்ட சமத்துவ சமுதாயம்;-

அந்தக் காலத்தில் இரண்டு சிந்தனைப் பள்ளிகள் இந்தியக் கருத்தியல் போக்குகளைப் பிரதிபலித்தன. அவை, இயல்கடந்த மதவாதச் சிந்தனையும் இயல்புக்கு உட்பட்ட பொருள்முதல்வாதச் சிந்தனையும் ஆகும். தேவதைகளை மகிழ்விக்க யாகங்கள் நடத்துவது கருத்துமுதல்வாதச் சிந்தனையின் மூலாதாரம். அது இயல்கடந்த சிந்தனையாகும்; அதாவது யதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்காத அதீதச் சிந்தனை.
பின்னது இருத்தல் அல்லது பௌதீக யதார்த்தத்தின் இயங்குநிலை. பொருள் இருப்பு மட்டுமே அனைத்து வளர்ச்சிக்கும் மாற்றத்திற்குமான அடிப்படை என்று போதித்தது. இந்த சிந்தனைப் பள்ளியை உருவாக்கி வளர்த்தெடுத்தவர் பிரகஸ்பதி என்ற கருத்துமுதல்வாத எதிர்ப்புச் சிந்தனையாளர் ஆவார்.

“உடல் இல்லாமல் ஆன்மா இல்லை; உடலுக்கு வெளியே ஆன்மாவுக்கு இருப்பு என்பது இல்லை; மனிதர்களின் புலன் உணர்வு உடல் இல்லாமல் தனித்து இயங்க முடியாது. புலன் உணர்வு என்பது புற உலக யதார்த்தத்தை அக உணர்வு பிரதிபலிப்பதே. இவ்வகையில் புலன் உணர்வின் மேம்பட்ட வடிவமான பகுத்தறிவு தோன்றுகிறது. எங்காவது ஏதாவது ஒன்று இருக்குமென்றால் வேறொன்றின் இருப்பும் அங்கு இருக்கும். அந்த ஒன்று இல்லையென்றால் அந்த மற்றொன்றும் இல்லை. நெருப்பு இல்லையென்றால் ஒளியும் உஷ்ணமும் இருப்பதில்லை.” இந்த சிந்தனைப் பள்ளி, புத்தர் தனது சமத்துவக் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள பேருதவி செய்தது. .
சமத்துவ அமலாக்கத்துக்கு முன்னதாக புத்தர் பகுத்தறிவு என்னும் மகத்தான அறிவு இயல் பாதையைக் கண்டடைந்தார். “அந்தக் காலத்தில் கடவுள் பற்றிப் பேசாத ஒரே சிந்தனையாளர் புத்தர்” என்கிறார் மேலைநாடு அறிஞர் நெர்செஸ்யாண்ட்ஸ். அனைத்தையும் இயக்கவியல் வழிமுறையில்தான் அவர் கையாண்டார். ”சகோதரர்களே! கூர்த்த கவனிப்பில் இருந்து செயலும் பகுத்தறிவிலிருந்து நம்பிக்கையும் எழுகின்றன. பெயரும் வடிவமும் இருக்குமிடத்தில் அறியும் திறன் இருக்கும்; பெயரும் வடிவமும் அறியும் திறனைக் கட்டுப் படுத்துகின்றன.” ஒரு வடிவத்தை விளக்குவதே பெயர்தான் என்பதையும் அறியும் திறன் என்ற உணர்வு சூழலால் கட்டுப்படுத்தப் படுகிறது என்பதையும் புத்தர் கண்டடைந்தார். இப்படி, பகுத்தறிவுத் தளத்தை அடிப்படையாகக் கொண்டு சமத்துவ இலக்கு நோக்கிய பயணத்தை மேற்கொண்டார்.

புத்தர் அஷ்டசீலக் கொள்கையை உருவாக்கி, கதைகள் மூலம் தான் நிறுவிய சங்கம் அமைப்புக்குள் இருந்த பிக்குகளுக்கு விளக்கமளித்தார். ஒரு கதை இப்படிச் செல்கிறது;- “பழங்காலத்தில் பிக்குகளுக்கு சமைப்பதற்கு அரிசி தேவைப்பட்டால் மாலையிலோ காலையிலோ வெளியில் சென்று வாங்கி வருவார்கள். இப்படி நடந்துகொண்டிருந்த போது, பொறுமையற்ற ஒரு பிக்கு இரண்டு வேளைக்குத் தேவையானதை எடுத்து வந்தார். இது தெரியாத இன்னொரு பிக்கு “வா, அரிசி வாங்கி வரலாம்” எனக் கூப்பிடுகிறார். அதற்கு அவர் “உனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்; இரண்டு வேளைக்குத் தேவையானதை எடுத்து வந்துவிட்டேன்” என்கிறார். அடுத்திருந்த இன்னொரு பிக்கு இப்படி நினைத்துக் கொள்கிறார். “நல்லது; நான் ஏழு நாட்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வேன்.” அதன்படி செய்தார். அடுத்திருந்த இன்னொரு பிக்குப் பதினைந்து நாட்களுக்கு அல்லது ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசியை எடுத்துக் கொண்டார். (நாளைக்குத் தேவையானதை இன்றைக்கே சேமிப்பவன் திருடன் என்று அண்ணல் காந்தியடிகள் சொன்னதை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.)

மனிதன் அரிசியை சேமிக்கத் தொடங்கியபின் அது பதுக்கல் என்ற உச்சத்தை அடைகிறது. பதுக்கியவருக்கும் பாதிக்கப் பட்டவருக்கும் இடையில் சண்டை மூண்டு, உற்பத்தி நிலங்களில் எல்லைக் கோடுகள் உண்டாகின்றன. இந்தப் போக்குக்கு எதிராகத்தான் புத்தரின் தம்மக் கதைகளும் அஷ்டசீலக் கோட்பாடுகளும் அதிகம் பேசுகின்றன.

எட்டுக் கோட்பாடுகள்;- (அஷ்டசீலம்) 1 நற்பார்வை, 2 நல்விழைவு. 3 நன்மொழி, 4 நன்னட்த்தை, 5 நல்வாழ்க்கை, 6 நன்முயற்சி, 7 நல்லெண்ணம், 8 நற்பேரானந்தம்.

ஐக்கிய முன்னணித்தந்திரம்; 

ஓர் எதிரியை வீழ்த்துவதற்கு, அந்த எதிரியின் எதிரிகளோடும் அந்த எதிரிகளின் துணைவர்களோடும் கூட்டுச் சேர்ந்து செயல்படுவது என்பதே ஐக்கிய முன்னணித் தந்திரம். டெமிட்ரோ என்ற பல்கேரிய நாட்டு மார்க்சிய அறிஞர் 1935ஆம் ஆண்டு இந்த வியூகத்தை, அரிவியல்பூர்வமான அணுகுமுறையோடு வகுத்தளித்தார். அதற்கு முன்பாகவே, ரஷ்யாவில் லெனின் நடுத்தர விவசாய வர்க்கத்தோடும், சீனாவில் மாவோ ஜப்பானியரை விரட்ட கோமிண்ட்டாங் படைகளோடும் கூட்டணி அமைத்துப் பொது எதிரியை விரட்டிவிட்டு, பாட்டாளி வர்க்க அதிகாரம் என்ற இலக்கு நோக்கிப் பயணித்தனர். 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர், அந்தக்காலச் சூழலுக்குத் தகுந்து இந்த வியூகத்தை அமைத்துச் செயல்பட்டார் என்பது வியப்புக்குரியது.
அஜாத சத்துரு மகதப் பேரரசின் எல்லையற்ற அதிகாரங்களைக் கொண்ட முடிமன்னன் ஆவான். வஜ்ஜியன் என்ற பழங்குடியின கூட்டமைப்பு குடியரசு தளத்தில் நின்று முடியரசுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்தது. புத்தர் குடியரசுகளுக்கு ஆதரவானவர். அஜாத சத்துரு புத்தரோடு நட்போடு இருந்தான். புத்தரை ஆமோதிக்க வைத்துவிட்டால் வஜ்ஜியன்களை எளிதாக வென்றுவிடலாம் எனக் கணக்குப் போட்டு, பிராமண அமைச்சர் ஒருவரைப் புத்தருக்குத் தூது அனுப்புகிறான்.

“மகா பரிதிப்பானா சுட்டா”வில் புத்தர் கூறியதாக இவ்வாறு பதிவாகியுள்ளது. “ஆசீர்வதிக்கப்பட்டவர் (புத்தர்) தனது சீடர் ஆனந்தனிடம் இவ்வாறு கேட்கிறார். “ஆனந்தா! வஜ்ஜியன்கள் அடிக்கடி கூடுகிறார்கள்; இனக்குழுக்களின் பொதுக் கூட்டங்களை அடிக்கடி நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டாயா?” ”பிரபுவே! நான் அப்படிக் கேள்விப்பட்டேன்.” புத்தர் தொடர்ந்து பேசுகிறார். “ஆனந்தா! வஜ்ஜியன்கள் இவ்வாறு ஒன்று கூடுவதும், பொதுக்கூட்டங்கள் நடத்துவதும் தொடர்ந்தால் அவர்கள் அழிந்து போகமாட்டார்கள்; செழித்து வாழ்வார்கள்.” (அதாவது அஜாதசத்துருவின் கோரிக்கையை புத்தர் நிராகரித்தார்.) தோல்வியோடு திரும்பினார் அமைச்சர்.
அஜாத சத்துருவின் மகன் பிம்பிசாரன் அரசுகட்டில் ஏறியதும் அவனுக்கு ஒரு நெருக்கடி வருகிறது. அடிமைகள் அனைவரும் அரசனை மதிக்காமல் சங்கத்தில் சேர்ந்துகொள்கிறார்கள். சேவகம் செய்ய ஆட்கள் இல்லாமல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது; படையணி வலிமை குன்றுகிறது. நாவிதர்கள் கைவினைஞர்கள் அருகிப் போகின்றனர். அப்போது அவன் புத்தருக்குத் தூது விடுகிறான். “நீங்கள் சூத்திரர்களையன்றி எமது அடிமைகளை சங்கத்தில் சேர்க்கவேண்டாம்.”
“அடிமைகளுக்கு முழு மரியாதை கிடைக்குமானால் அவர்களைச் சங்கத்தில் சேர்ப்பதைத் தவிர்க்கிறேன்.” தனது சீடர்களுக்கும் அவ்வாறே ஆணையிடுகிறார். இந்தத் தந்திரமான உத்தரவின்மூலம், அரசனிடம் பிராமனியப் பிடிமானம் குறைவதற்கான ஏற்பாட்டைச் செய்கிறார். மேல் வர்க்கத்தோடு புத்தர் உறவுகொண்டதன் மூலம் பழங்குடியின மக்களையும் குடியரசுகளையும் காப்பாற்றினார். இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தரால் வடிவமைக்கப் பட்ட ஐக்கியமுன்னணித் தந்திர வியூகம் இன்றளவும் ஏற்புடையதாய் இருக்கிறது. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

புத்தரை செதுக்கிய சீடர்கள்;-

சங்கத்தில் ஏராளமான பிக்குகள் அங்கம் வகித்தனர். அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கைமுறைதான். காவியாடை அணிதல், தலையை மழித்துக் கொள்ளுதல், யாசகம் செய்து உண்ணுதல், கிடைத்தவற்றைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுதல்! அவர்களில் மூன்று பேர் நேரடியாக அவரின் சீடர்களாய் இருந்து பணியாற்றினர். அவர்கள், 1 காசப்பர், 2 ஆனந்தன், 3 உபாலி. அவர்களிடம் ஆலோசனை செய்யாமல் புத்தர் எந்த முக்கிய முடிவையும் எடுப்பதில்லை.
பிராமணர்கள் தவிர மற்ற எல்லாரிடமும் நெகிழ்வுத் தன்மையோடு நடந்துகொண்ட புத்தர் பெண்களிடம் கடினமான போக்கைக் கடைப்பிடித்தார். பெண்களைச் சங்கத்தில் பிக்குணிகளாக இணைத்துக் கொள்வதில் சுணக்கம் காட்டினார். அதற்குக் காரணம் மெட்டியா என்ற பெண்பிக்கு. அவள் சங்கத்தில் இருந்தபோது, சில பிக்குகளின் தூண்டுதலின்பேரில் பொய் கூறினாள். மல்லியன்” என்ற பிக்கு தன்னைக் கற்பழித்தான் என்று குற்றம் சாட்டினாள். கௌதமர் நேரடியாக விசாரித்தபோது அது உண்மையில்லை எனக் கண்டறிந்து மெட்டியா சங்கத்தில் இருந்து நீக்கப்படுகிறாள். அவள் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்ட பின்னும் அவளை நிராகரித்தார். இப்படியான பல சம்பவங்கள் பெண்கள் மீதான அவரின் கோட்பாட்டை இறுக்கமடையச் செய்தன.

கௌதமனின் தாய் இறந்த பிறகு, தாய்க்கும் மேலாகப் பாசம் ஊட்டி  வளர்த்தெடுத்தவர் அவரின் சித்தி மகா பிரஜாபதி. புத்தரின் வலிமையான சங்க இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டு தன்னையும் ஒரு பிக்குணியாக இணைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். எந்த எதிர்ப்பும் காட்ட மாட்டார் என்ற நம்பிக்கையோடு, கபிலவஸ்துவிலிருந்து புத்தர் தங்கியிருந்த வைசாலிக்குப் பலகாத தூரம் நடந்து வந்தார். வீங்கிப் போயிருந்த அவரது பாதத்தையும் சோர்ந்துபோயிருந்த முகத்தையும் துவண்டுபோயிருந்த மேனியையும் பார்த்த ஆனந்தன் அவர் சார்பாக புத்தரிடம் வேண்டினார். புத்தர் தன் சித்தியை சங்கத்தில் சேர்க்க நிராகரித்துவிட்ட நிலையில் பெண்களும் நிர்வாணம் அடைய முடியும் என்று ஏற்கனவே புத்தர் கூறியிருந்ததை நினைவுபடுத்துகிறார். ”ஆசீர்வதிக்கப் பட்டவராகிய தாங்கள் உங்களைத் தேடிவந்த ஒருவருக்கு உயர்பதவி தர மறுத்தால் அது எப்படி நியாயம் ஆகும்?” பெண்கள் சங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டால் சங்க விதிகள் சீர்குலைந்து விடும் என்று வாதிடுகிறார் புத்தர். ஆனந்தன் மீண்டும் மீண்டும் வற்புத்தவே, புத்தர் ஏற்றுக் கொண்டு எட்டு நிபந்தனைகளை விதிக்கிறார்.. மற்ற பிக்குகளுக்குப் பணிவிடை செய்வது, துப்புரவுப் பணியாற்றுவது, உட்பட கடினமான எட்டுப் பணிகள் அவருக்கு வழங்கப்பட்டன. அந்தப்புரத்தில் சுகபோகம் அனுபவித்திருந்த பிரஜாபதி, புத்தரின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு சங்கத்தில் சேர்ந்து வேலைசெய்தார். ஆனால் கடைசிவரை அவருக்கு எந்த அதிகாரப் பதவியும் வழங்க்ப் படவில்லை. புத்தர் தனது 80ஆவது வயதில் சமாதியடைந்தபோது பெண்கள் பற்றிய அவரின் சிந்தனையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. “சமத்துவ நிர்வாணம்” நிலவ வேண்டுமானால் பெண்கள் சமமாய் நடத்தப் படவேண்டும் என்று ஏற்றுக் கொண்டார். இந்த முக்கிய மாற்றத்தை அவருக்குள் நிகழ்த்தியவர்கள் அந்த மூன்று சீடர்கள்.

இந்த நூற்றாண்டின் பார்ப்பனீய சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளவும், நம்மீது திணிக்கப்பட்டுள்ள தாழ்வு உளவியலை உடைத்து அறிவுப் பாதையில், சமூகத்தை உற்று நோக்கி விடுதலைக்கான கோட்பாடுகளை உருவாக்கக்கூடிய ஊக்கத்தைத் பெறவும் நாம் படிக்க வேண்டிய முக்கிய் நூல் காஞ்சா அய்லயாவின் “அரசியல் சிந்தனையாளர் புத்தர்”..

 

அரசியல் சிந்தனையாளர் புத்தர்.
காஞ்சா அய்லயா.
தமிழில் அக்களுர் ரவி.
எதிர் வெளியீடு.
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி.642008
தொலைபேசி; 04259 226012. 99425 11302
முதல் பதிப்பு 2021.

…………………………………………………………………………………………

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *