பெண்ணியம் என்பது வளர்ந்து வரும் மற்றும் பரவலாக விவாதிக்கப்படும் கோட்பாட்டுக் கண்ணோட்டங்களில்ஒன்றாகும்.இன்று பெண்ணியம் என்ற வார்த்தை பரவலாக பேசப்பட்டாலும் சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்துப் பெண்களின் வாழ்வியல் கூறுகள், அவர்களது சமூக பின்புலத்தில் அவர்கள் மீது திணிக்கப்பட்ட திருமண உறவுமுறைகள், சடங்குகள், வாழ்வியல் எதார்த்தம் தந்த நெருக்கடிகள் ,அதன் விளைவாக பெண்களின் மனதில் உளவியல் ரீதியாகஏற்பட்ட மனப் போராட்டங்கள் , மனச்சிக்கல்கள், மனப் பாதிப்புகள் என இரண்டு பெண்களின் தோழமை நெருக்கத்தில் அவர்களது கடிதத் தொடர்புகள் வழியாகவும், அவர்களது பால்ய கால நிகழ்வுகளையும்,இழந்து போன அவர்களது இளமைக்கால சந்தோசங்களையும், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் எதிர்கொண்ட குடும்பம் சார்ந்த பிரச்சினைகளையும், எதிர் கொண்ட உறவுகளையும், வாழ்வின் கசப்பான தருணங்களையும் பல்வேறு நிகழ்வுதொகுப்புகளின் வழியாகவும் நாவலை நகர்த்திச் செல்கிறார் நாவலாசிரியர் அகிலா.
அறவி என்றால் துறவி என்று பொருள்படும் வார்த்தையில் இது பெண்பாலுக்குரிய வார்த்தையாக நாவலின் தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
பெண்களின் மீது திணிக்கப்படும் திருமண உறவுமுறைகள்தான் இந்த நாவலின் மையமாக இழையோடுகிறது. நமது தமிழ் சமூகத்தில்
சென்ற நூற்றாண்டு வரை பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்றிருக்கவில்லை. இதற்கு பல்வேறு சாதிய அடுக்குகள் கொண்ட நமது தமிழ் சமூகமும் ஒரு காரணம். சாதி, இனம், பாரம்பரியம், சொத்து, பெருமை, சமூக அந்தஸ்து போன்ற பல்வேறுபட்ட பழமை கருத்தாக்கங்களிலும், ஸ்டீரியோடைப் பழக்கவழக்கங்களிலும் பெண்களின் இயல்பு வாழ்க்கை தொலைந்துபோன ஒன்றாகவும், தங்களது கனவுகள், விருப்பங்கள் யாவற்றையும் இழந்து போனவர்களாகவும், தங்களது தனித்துவம் இன்னதென்று அறியாதவர்களாகவும் ஆகிவிட்டதை இந்த நாவலின் பல முக்கிய நிகழ்வுகளின் வழியாக அறியத் தருகிறார் நாவலாசிரியர்.மனநிலை சரியில்லாத வரதனுக்கு தேவகியை கட்டிவைக்கும் செல்லம்மா ஆச்சியின் பிரயத்தனங்கள் இந்த நாவலில் சொல்லப்பட்டிருப்பதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேவகியின் தோழி வசுமதியும் நல்ல உதாரணங்கள்.
அதற்கான காரணங்களில் அன்றிருந்த சமூக காரணிகளும் முக்கியமானவையாக இருந்திருப்பதை அறியமுடிகிறது. தேவகியின் திருமணம் வரை சில ரகசியங்கள் பாதுகாக்கப்பட்டு திருமணம் முடித்து வைக்கப்படுவது வரை நமது சமூகம் பெண்கள் மீது நிகழ்த்திய வன்முறையாகவே பார்க்கத் தோன்றுகிறது. ஆனால் குடும்பம், சமூக அந்தஸ்து கருதி அவர்களின் வாழ்வு மறுக்கப்பட்டு அவர்களது தியாக வாழ்விலே புதியதொரு சமுதாயம் பிறக்கிறது. அந்தப் புதிய தலைமுறை யமுனாவகவும் சரவணனாகவும் இந்த நாவலில் அறியப்படுகின்றனர். அவர்கள் இந்தநூற்றாண்டு சமூகத்தின் பிரதிநிதிகளாய் தங்களது வாழ்க்கையை தாங்களே வாழ்ந்து அறியத் துடிக்கும் செயல்வீரர்களாய் …வாழ்வு குறித்த புகார்கள் ஏதுமின்றி தங்களுக்கு என்று தனித்த பார்வையுடன் முன்னோக்கி நகர்பவர்களாகவும், அதே சமயம் தங்களுக்கு தாயாய் வாய்த்த தேவகி, வசுமதி என்ற பெண்களின் முந்தைய நிலையிலிருந்து அவர்களை மீட்க போராடுபவர்களாகவும் இருப்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.
குறிப்பாக நாவலில் பெண்களின் வயது குறித்து பேசும்போது பெண்கள் அவர்களது திருமணத்திற்கு பிறகு அவர்கள் குடும்பம், குழந்தைவளர்ப்பு, வீட்டுவேலைகள் என்று தங்கள் இல்லம் தாண்டி எங்கும் செல்லாமல் வெளியுலகம் அறியாமல் உழலும் போது தங்களை அறியாமலேயே தங்கள் உடல்நலம் பேணுவதை மறந்து போய்விடுவதும் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டதை நாவலில் சில இடங்களில் குறிப்பிட்டு சொல்கிறார். உண்மையில் நமது தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான குடும்பங்களில் பெண்களின் உடலமைப்பு எந்தவித உடற் பயிற்சியுமின்றி
ஏதோ பிறந்தோம் … வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… என்ற ஒரு பேதமை மனநிலையுடன் வாழப் பழகியிருப்பது பெண்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு பன்தங்கியிருக்கிறது என்பது அறியப்பட வேண்டிய ஒன்றாகும்.நாவலில் சில இடங்களில் வாழும் இடங்கள், கட்டிடங்கள் குறித்த விவரணைகள் நீளமாக வருகிறது. கதைமாந்தர்களின் உரையாடல்கள் நாவலின் நீளத்தை கூட்டுகிறது போல் உள்ளது.
இதைக் குறைத்து நாவலை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. நாவலில் இடையே வரும்பண்ணைவீடு பயங்கரங்கள் திகில்சம்பவங்களால் நம்மை வேறொரு மர்ம உலகுக்கு அழைத்துச்செல்கின்றன.
நாவலில் இரண்டு நாடுகளுக்கிடையேயான தூரம் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு இடையே கடிதத் தொடர்புகளின் வழியே மட்டும் தங்கள் நட்பை இறுதி வரைக்கும் காப்பாற்றிக் கொண்டிருந்த தேவகி, வசுமதியின் தோழமையான பகிர்வுகளின் வழியே சென்ற நூற்றண்டின் பின்னால் வந்த ஒரு தலைமுறை பெண்களின் உலகம் அறியப்படுகிறது. பெண்களின் உலகத்தை பெண்களே அறியத் தரும் வகையில் நாவல் தனது முழுமைத் தன்மையை அடைந்திருக்கிறது.. கோவையை சேர்ந்த அகிலா அவர்கள் இந்த நாவலை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தந்திருப்பது அவரது பெண் விழிப்புணர்வு செயல்பாட்டில் இன்னொரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது .
மஞ்சுளா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.