[ மொழி பெயர்ப்பாளர் குறிப்பு : ஆர்டிக் பெருங்கடல் பகுதியில் உறைந்த நிலையில் படிந்துள்ள மீத்தேன் வேளியேறத் தொடங்கி விட்டால், அது கடும் வேகத்தில் புவி வெப்பமாதலை துரிதமாக்கும். அது மேலும் அதிகமாக மீத்தேன் வெளியேற்றத்தை நடத்தும். இப்படி சுயசார்புள்ள தொடரோட்டமாக புவி வெப்பமாதல் தன்னிகழ்வாக நடக்கத் தொடங்கிவிடும். இது முழுமையாக நடக்கத் தொடங்கிவிட்டால் பின் மானுடம் புவி வெப்பமாவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது பயன் தராது. அது செத்தவன் கையில் கொடுத்த வெற்றிலை பாக்காக, இறந்த பிணத்திற்கு ஆக்ஸிஜன், குளுக்கோஸ் ஏற்றும் செயலாகவே இருக்கும்.]
லப்தேவ் கடலில் கண்டறியப் பட்டுள்ள இந்த வெளியேற்றம், ஒரு புதிய காலநிலை பின்னூட்ட சுழற்சியைத்
(climate feedback loop) துவக்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கவலைப்படுகிறார்கள்.
கார்பன் சுழற்சியின் உறங்கும் ராட்சதன் (sleeping giants of the carbon cycle) என அறியப்படும் ஆர்க்டிக் பெருங்கடலின் உறைந்த மீத்தேன் படுடிவுகள் கிழக்கு சைபீரிய கடற்கரையின் ஓரமுள்ள ஆழமற்ற ஒரு பெரிய பகுதியில் வெளியேறத் துவங்கியுள்ளதை கார்டியன் பத்திரிக்கை உறுதி செய்துள்ளது.
ரஷியாவின் அருகில் உள்ள லப்தேவ் கடலில், 350 மீட்டர் ஆழத்தில் பெரும் அளவிலான பசுங்கூட வாயுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது உலகளாவிய வெப்பமயமாதலின் வேகத்தை துரிதப்படுத்தக்கூடிய ஒரு புதிய காலநிலை பின்னூட்ட சுற்றைத் தூண்டக்கூடும் என்று ஆய்வாளர்களிடையே கவலை எழுந்துள்ளது.
ஆர்க்டிக்கின் ஆழமற்ற பகுதிகளில் உள்ள மணற்படிவுகளில் அதிக அளவு உறைந்த மீத்தேன் மற்றும் ஹைட்ரேட்டுகள் என அழைக்கப்படும் பிற வாயுக்கள் உள்ளன. 20 ஆண்டு காலப்பரப்பில் கார்பன் டை ஆக்சைடை விட 80 மடங்கு அதிக புவி வெப்பமாதல் விளைவை மீத்தேன் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு ஏற்கனவே ஆர்க்டிக் ஹைட்ரேட்களின் நிலைகுலைவை (Artic Hydrate destabilisation) திடீர் காலநிலை மாற்றத்திற்கான நான்கு மிக முக்கியமான சாத்தியங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது .
பெரும்பாலான மீத்தேன் வாயுக் குமிழ்கள் தற்போது தண்ணிரில் கலந்து கொண்டிருந்தாலும், கடலின் மேற்பரப்பில் காணப்படும் மீத்தேன், இயல்பான அளவை விட நான்கு முதல் எட்டு மடங்கு அதிக அளவில் இருப்பதாகவும், அது வளிமண்டலத்தில் கலந்து கொண்டிருப்பதாகவும், அகேடமிக் கெல்டிஷ் என்ற ரஷிய ஆய்வுக் கப்பலில் இருக்கும் சர்வதேச ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
தற்போது புவி வெப்பமாதலில் பெரிய மாற்றம் ஏற்படுத்தாத போதிலும், இந்த நிகழ்வு துவங்கியுள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று எனவும், கிழக்கு சைபீரிய மீத்தேன் ஹைட்ரேட் அமைப்பு நிலைகுலைந்து, மேற் குறிப்பிட்ட நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் எனவும் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்வீடன் விஞ்ஞானி அர்ஜன் குஸ்டாஃப்ஸன் கப்பலில் இருந்து செயற்கைக்கோள் அழைப்பில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கும் – அவர்களின் கண்டுபிடிப்புகள் ஆரம்பகட்டத்தில் உள்ளதை விஞ்ஞானிகள் வலியுறுத்தினர். இந்த ஆய்வு பயணம் முடிந்த பிறகே சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு மீத்தேன் வெளியீட்டின் சரியான அளவினை உறுதி செய்ய முடியும்.
ஆனால் நிலைகுலைந்துள்ள இந்த சாய்வி நில உறைந்த மீத்தேன், புவி வெப்பமாதலின் வேகத்தை துரிதப்படுத்தும் மேலும் ஒரு புதிய கட்டத்தை அடைந்து விட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடலில் உறைந்த மீத்தேன் படிவுகளின் பாதிப்பு பற்றிய விவாதத்தில் ஆர்க்டிக் ஒரு துவக்கப் புள்ளியாக கருதப் படுகிறது.
ஆர்டிகின் வெப்பம் பூமியின் சராசரி வெப்ப ஏற்றத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக ஏறி வருகிற நிலையில், இந்த மீத்தேன் வெளியேற்றம் நடக்குமா, எப்போது நடக்கும் என்ற கேள்விகளுக்கு காலநிலை கணினி மாதிரிகளால் தற்போது நிச்சியமாக கணிக்க முடியவில்லை.

கரையிலிருந்து 600 km தொலைவில் மீத்தேன் வெளியேற்றத்தை முதன் முதலில் கண்டறிந்தது தாங்கள் தான் என நம்புகிறது அகேடமிக் கெல்டிஷ் கப்பலில் உள்ள 60 பேர் கொண்ட ஆய்வுக்குழு,
150 கி.மீ நீளமும் 10 கி.மீ அகலமும் கொண்ட பரப்பளவில் அமைக்கப் பட்டிருந்த ஆறு கண்காணிப்பு புள்ளிகளில், வண்டலில் இருந்து குமிழ்கள் மேகங்கள் வெளிவந்தது காணப்பட்டது.
லப்தெவ் கடலின் ஒரு இடத்தில் சுமார் 300 மீட்டர் ஆழத்தில் மீத்தேனின் செறிவு வழக்கமாக காணப்படும் அளவை விட 400 மடங்கு அதிகமாக இருந்தது.
முன்பு எப்போதும் கண்டிராத அளவக்கு அதிகமான அளவு இந்த வெளியேற்றம் இருப்பதாக, கப்பலின் தலைமை விஞ்ஞானியான, ரஷ்ய அகாடமி ஆஃப் சயின்ஸின் இகோர் செமிலெடோவ் தெரிவிக்கிறார். ஹைட்ரேட்டுகளின் இந்த வெளியேற்றம் கண்டுபிடிக்கப்பட்டது முக்கிய நிகழ்வு என்றும், இதுவரை அறிந்திராத ஒன்று என்றும் கூறுகிறார். இவை கடுமையான காலநிலை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அதை உறுதிப்படுத்துவதற்கு முன்பு கூடுதல் ஆய்வு தேவை. ” என்றும் அவர் கூறினார்.
கிழக்கு ஆர்க்டிக்கில் சூடான அட்லாண்டிக் நீரோட்டங்கள் ஊடுருவுவதே இந்த உறுதியற்ற நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அட்லாண்டி பிகேஷன் எனும் இந்த நிகழ்வுக்கு மனிதனால் ஏற்படும் காலநிலை சீர்குலைவு தான் காரணம்.

தற்போதை கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்த மீத்தேன் வெளியேற்றம், இந்த பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள மூன்றாவது ஆகும். இருபது ஆண்டுகளாக இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வரும் செமிலெடோவ் ஏற்கனவே ஆர்க்டிக் பெருங்கடலின் ஆழமற்ற பகுதியில் ஏற்படும் வாயு வெளியேற்றத்தை கண்டுஅறிந்தவர்.
இரண்டாவது வருடமாக தொடர்ந்து செமிலெடோவ்வின் குழு லப்தேவ் கடல் மற்றும் கிழக்கு சைபீரியக் கடலின் ஆழமற்ற பகுதிகளில் மீத்தேன் வாயுவை பீய்ச்சி அடிக்கும் பெரும் பள்ளங்களை கண்டு பிடித்துள்ளனர். இவை கடல் பரப்பிற்க்கு இயல்பை விட பத்து முதல் நூறு மடங்கு அதிக அளவில் வந்து சேருகின்றன.
கடந்த இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் சைபீரிய டன்ட்ராவில்[ உறைந்த சதுப்பு நிலப் பகுதி] காணப்பட்ட பள்ளங்கள் மற்றும் புதைகுழி போன்றவை இவை.
இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் மாதங்களில், சைபீரியாவில் வெப்பநிலை வழக்கமான சராசரியை விடவும் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இந்தப் பிறழ்வு மனிதர்களால் வெளியேற்றப்படும்
கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் வாயுக்களால் 600 மடங்கு சாத்தியமாகி இருக்கிறது. கடந்த வருடம் இங்கே கடல் பனிக்கட்டிகள் வழக்கத்திற்கு மிகவும் முன்னதாகவே கரைந்து விட்டன. இந்த வருட குளிர்கால பனி உறைவது இன்னும் தொடங்கவே இல்லை, சுற்றுச்சூழல் வரலாற்றில் இத்தனை கால தாமதமாக பனி உரைவது நடக்காமல் இருந்ததில்லை.
ஜோனாத்தன் வாட்ஸ் (கார்டியன் பத்திரிக்கையின் உலக சுற்றுச்சூழல் ஆசிரியர்.)
[நன்றி: தி கார்டியன் (The Guardian- 28 Oct 2020)]