கொரானாவைக் கட்டுப்படுத்த சமூக பொருளாதார நெருக்கடி மரணங்கள் அவசியமா? – விகாஸ் ராவல், கார்த்திக் ஏ மாணிக்கம் மற்றும் விவேக் ராவல் ( தமிழில்: நா.மணி )

கொரானாவைக் கட்டுப்படுத்த சமூக பொருளாதார நெருக்கடி மரணங்கள் அவசியமா? – விகாஸ் ராவல், கார்த்திக் ஏ மாணிக்கம் மற்றும் விவேக் ராவல் ( தமிழில்: நா.மணி )

கோவிட்-19 பரவலைத் தடுக்க திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள, எந்தவித கால அவகாசமும் தரப்படவில்லை. எந்தவித திட்டமிட்ட செயல்பாட்டில் ஒரு பகுதியும் அல்ல இது. திட்டமிடல் இன்மையின் பற்றாக்குறையின் வெளிப்பாடு. மார்ச் 16 ஆம் தேதி அன்று, மார்ச் 22ஆம் தேதி ஒரு நாள் ஊரடங்கு இருக்க வேண்டும் என்று அறிவித்தார் பிரதமர். அன்று மாலையே சில மாவட்டங்களுக்கு கதவடைப்பு அறிவிப்பு செய்யப்பட்டது. 23ஆம் தேதி அன்று மாலையே, மார்ச் 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் 21 நாள் ஊரடங்கு என்று அறிவித்தார். இந்த கட்டுரையை வெளியிடும் தருணத்தில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு என்ற அறிவிப்பு செய்திருக்கிறார்.

கோவிட்- 19 பரவலைக் கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், பரிசோதனை செய்தல், தனித்திருத்தல், மற்றும் தனிமைப்படுத்துதல் அவசியம். ஆனாலும் முழு ஊரடங்கும் மொத்த கதவடைப்பும் மொத்த பொருளாதார நடவடிக்கைகளை முடக்குவதும் ஒரு சிறந்த தடுப்பு நடவடிக்கையா என்பது விவாதத்திற்குரியது. இந்த ஊரடங்கு காலத்தில் பெருவாரியான முறைசாரா தொழிலாளர்களின் சமூக பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்தன. தங்களைத் தாங்களே ஏதும் அற்றவர்களாக ஆக்கிக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர் என்பதில் இக்கட்டுரை மையம் கொள்கிறது.

அனைத்து தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு பொருளாதார செயல்பாடுகள் முடங்கி கிடக்கும் நேரத்தில், சிறு உற்பத்தியாளர்களும் உழைப்பாளி மக்களும் வாழ்விழந்து ஏதும் அற்றவர்களாக நிற்கின்றனர். திடீரென திணிக்கப்பட்டு தொடரும் இந்த தேசிய அளவிலான ஊரடங்கு உருவாக்கியுள்ள சமூக பொருளாதார அழுத்தம் மரணங்களை அதிகரித்துள்ளன. ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25ஆம் தேதி துவங்கி கடந்த மூன்று வாரங்களாக இடைவெளியின்றி இது தொடர்கிறது.

எந்த ஒரு முன் தயாரிப்பும் திட்டமிடுதலும் இன்றி அமுலுக்கு வந்து தொடரும் இந்த ஊரடங்கு கொடுத்த சமூக பொருளாதார அழுத்தம் காரணமாக நிகழ்ந்த மரணங்களை இக்கட்டுரை முறையாக ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வில் கோவிட் -19 தோற்றால் ஏற்பட்ட மரணங்கள் நோய்த்தொற்றோடு இணைந்த இதர மரணங்கள், கொரானா தடுப்பில் நிகழ்ந்த கதவடைப்பு மரணங்கள் என தனித்தனியாக பிரித்து ஆராய்ந்து உள்ளோம்.

கோவிட் 19 கால மரணங்களும் அதன் புள்ளிவிவரங்களும் அதன் வரையறைகளும்:

கோவிட் -19 கால சமூக பொருளாதார அழுத்தம் தந்த மரணங்கள் இந்தியா முழுவதும் வந்த செய்தித்தாள்கள் வழியாக தொகுக்கப்பட்டது. இதனைத் தவிர பல இணையதளங்களும், சமூக ஊடகங்களும், நண்பர்களும் பயன்படுத்தப்பட்டனர். இந்தப் புள்ளிவிவரங்கள் சரிபார்க்கப்பட்டு, ஒரே மரணம் இரண்டு முறை கணக்கில் வராமல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் சமூக பொருளாதார அழுத்தத்தால் இழந்தவர்கள் பலரது புள்ளிவிவரங்கள் நம் கைக்கு கிடைக்க பெறாமல் இருக்கிறது.

    Coronavirus: More businesses in Italy to shut down as outbreak photo courtesy financial times

இதற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது. ஒன்று கோவிட்- 19 நோய்த்தொற்று மரணங்கள் போல் மன அழுத்த மரணங்கள் நிகழவில்லை. சமூக பொருளாதார அழுத்தத்தால் இறந்தவர்கள் பற்றிய முறையான புள்ளிவிவரங்கள் இல்லை. இரண்டாவதாக, தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களின் மரணங்கள் எந்த ஊடகங்களில் பதிவாவது இல்லை. அதேபோல் ஊடகங்களில் எல்லா மரணங்களுக்கும் இடம் கொடுக்க முடிவதில்லை. ஊரடங்கு காலம் பத்திரிகைகளில் கொண்டு வரும் செய்திகளும் சுருங்கிவிட்டது. பல செய்திகள் மாநில மொழியில் இருப்பதும் ஓர் பிரச்சனை. பல்வேறு வழிமுறைகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி ஆகிய மாநில மொழிகளில் வெளியாகும் மரணங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளை தாண்டி விடுபட்ட புள்ளிவிவரங்கள் மரணங்கள் இருக்கலாம்.

இறுதியாக கொரானா கால தற்கொலைகளும் மரணங்களும் சரியாகப் பதிவு செய்யப்படாமலும் இருக்கலாம். முறையாக பதிவு செய்யப்படாவிட்டால் அந்த புள்ளிவிவரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. இதனால் சில மரணங்கள் விடுபட்டு போயிருக்கின்றன. ஒவ்வொரு நாளிதழும் இந்த மரணங்களை ஒவ்வொருவிதமாக பதிவு செய்து இருக்கிறது. பெயர்கள் தேதி வயது அது ஒரே மாதிரி இருப்பதில்லை. இதனால் ஒரே மரணம் இரண்டு முறை பதிவேற நேரும். இதனைத் தவிர்கவும் தக்க வழிமுறைகளை கையாண்டு இருக்கிறோம். கோவிட் -19 மரணங்களை பொருத்தவரை மத்திய மாநில அரசின் துறைசார்ந்த இணையதள மற்றும் அன்றாடம் அரசு அறிவிக்கும் புள்ளிவிவரங்கள் தொகுகக்கப்பட்டது.

தொற்று மரணங்கள் பற்றி அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், இதில் உண்மையான மரணங்களை காட்டிலும் குறைவாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது. காய்ச்சல் கண்ட எல்லோருக்கும் கோவிட்- 19 பரிசோதனை செய்யப்படவில்லை. ஏற்கனவே இருதயநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருப்போருக்கு காய்ச்சல் கண்டு மரணம் அடைந்திருந்தால், அவர்களது ரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்படாமல் இருந்திருந்தால், அவர்கள் கோவிட்-19 மரணங்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. கோவிட் -19 பரிசோதனை செய்ய ஏற்படும் காலதாமதமும் இதற்கு முக்கிய காரணம். அதேபோன்று அவசர சிகிச்சை தேவைப்படுவோர் கோவிட்- 19 பரிசோதனைக்கு முன்னரே இறந்துவிட்டால் அவர்களும் கோவிட்-19 மரணங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

இந்த புள்ளிவிவரங்கள் எதைக்காட்டுகிறது?

தொற்றுநோய் மரணங்களும் சமூக பொருளாதார மன அழுத்த மரணங்களும்:

           Italy confirms coronavirus deaths as cases surge past : photo courtesy Metro UK

இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு கோவிட்-19 தொடர்பான மரணங்கள் அனைத்தும் கோவிட்19 மரணங்கள் அல்ல என்பதே. திடீர் கதவடைப்பால் ஏற்பட்ட சமூக பொருளாதார மன அழுத்தங்களால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது. இந்த சமூக பொருளாதார மரணங்கள் குறைவான எண்ணிக்கையில் ஆனது அல்ல. கோவிட்- 19 மரணங்களும் சமூக பொருளாதார மன அழுத்த மரணங்களும் உண்மை நிலையை விட குறைத்து கூறப்பட்டிருந்தாலும், சமூக பொருளாதார மன அழுத்த மரணங்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியிருக்கிறது.

ஊரடங்கு மூன்று வாரம் முடியும் தருவாயில் நமக்கு கிடைத்த கோவிட்-19 மரணங்கள் 515. இதில் 334 மரணங்கள் கோபிட் தொற்று நோய் மரணங்கள் ஆகும். 181 மரணங்கள் திடீர் அறிவிப்பால் ஏற்பட்ட பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை இழந்ததால் ஏற்பட்ட சமூக பொருளாதார மன அழுத்தத்தில் நிகழ்ந்தவை. பதிவு செய்யப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை ஏற்பட்ட கோவிட்-19 மரணங்களைக் காட்டிலும் சமூக பொருளாதார மன அழுத்தத்தில் ஏற்பட்ட மரணங்களை அதிகமாக இருந்திருக்கிறது. அதன்பிறகு கொரானா தொற்று மரணங்கள் அதிகரித்திருக்கிறது.

‌சமூக பொருளாதார மன அழுத்தத்தின் தன்மை என்ன?:

தொற்று நோய் மரணங்கள் தவிர்க்க முடியாதது. ஆனால் சமூக பொருளாதார மன அழுத்த மரணங்கள் தடுக்கப்படக் கூடியது. இதற்கு அடிப்படை காரணம், திடீர் கதவடைப்பும் வாழ்வாதாரங்களை இழந்ததுமே முக்கிய காரணம் எனும்போது, அந்த மன அழுத்தத்தின் தன்மையை புரிந்துகொள்ள முயன்றோம். கடந்த மூன்று வார புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்து இதனை கண்டறிதல் எளிதான பணி அல்ல.

                                       How Will the Coronavirus End? – photo courtesy The Atlantic

இதற்காக மரணங்களின் இயல்புகளை கண்டறிந்தோம். சமூக பொருளாதாரம் தோற்றுவித்த மன அழுத்த மரணங்களுக்கு முக்கிய காரணம் கோவிட்- 19 பற்றிய தவறான சித்தரிப்புகளும் அடங்கும். கோவிட்-19 இருக்கும் பலர் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகின்றனர். தனிமைப்படுத்துதல் என்ற நிலையை நினைத்துப் பார்த்து, அந்த நிலையிலிருந்து தப்பிக்க மற்றவர்களை கொன்றுவிட்டு தப்பி பிழைத்ததும் நிகழ்ந்திருக்கிறது. 181 சமூக பொருளாதார மன அழுத்த மரணங்களில் 50 பேர் இப்படி இறந்திருக்கிறார்கள். மார்ச் 27-ம் தேதி தொடங்கி, மார்ச் 30ஆம் தேதி வரை காலத்தில் திடீர் ஊரடங்கை கண்டு பல்வேறு இடங்களில் இருந்தும் நகரங்களிலிருந்தும் தங்கள் சொந்த ஊருக்கு குடிபெயர்ந்தனர். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வண்டிகள் உட்பட கிடைத்த வாகனங்கள் மூலம் இவர்கள் பயணித்தனர்.

இந்த பயண விபத்தில் ஏற்பட்ட மரணங்கள் 32. தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இவை நிகழ்ந்துள்ளது. இதே மாநிலங்களில் அது கிடைக்காமல் போலி அல்லது விஷ சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 41ஆகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்தே சோர்வடைந்து பட்டினியால் மரணமடைந்துள்ளனர். ஊரடங்கிற்கு பிந்தைய ஒரு வாரம் காலத்திற்கு பிறகும் கூட இந்த பட்டினி மரணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 20 பேர். இந்த இருபதில் சோறின்றி தன் சொந்தக் குழந்தைகளை கங்கை நதியில் வீசி எறிந்து இறந்தவர்களும் அடங்கும். மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் சென்று சேர இயலாமல் ஏற்பட்ட மரணங்கள் 13. காவல்துறை தாக்குதல் மற்றும் வன்கொடுமையால் இறந்தோரின் எண்ணிக்கை 8பேர். கதவடைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக சாதி, வர்க்கம், பால்இனம் என எல்லா வகைப் பாகுபாட்டு மரணங்களும் நிகழ்ந்துள்ளது.

‌ சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு சென்றவர்கள் எங்கும் வாழ முடியாமல், மீண்டும் ஊருக்கே வந்ததால் கொலை செய்யப்பட்டவர்கள், அதேபோன்ற தம்பதியர்கள் ஊருக்கே திரும்பிவந்து வாழ வழியில்லை என்று தற்கொலை செய்து கொண்டவர்கள் என ஐந்து பேர் பட்டியலில் அடங்குவர். தனித்திருந்த பெண்கள் பாலியல் கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டதும் இக்காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது. தற்பாதுகாப்பு வசதிகளின்றி மருந்து தெளித்து மூச்சுத்திணறி உயிரிழந்த நகர சுத்தி தொழிலாளியும் இதில் அடங்குவர். காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவரும் பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரசின் செயல்பாடுகளால் ஏற்பட்ட விபத்துகளின் காரணமாக மரணமடைந்தவர்கள் நான்கு பேர். இதில் ஏப்ரல் 5ஆம் தேதி அன்று இரவு 9 மணிக்கு பிரதமர் கூறியதற்கு இணங்க தன் குடிசை வீட்டில் தீபம் ஏற்றி, குடிசை எரிந்து இறந்து போன பெரியவர் மற்றும் அவரது 2 பெண் குழந்தைகளும் இதில் அடங்குவர்.

‌ஊரடங்கால் உயிர் இழந்தோர் யார்?

கொரானா வர்க்க, சாதி, பாலினம் கடந்தது என்று கூறப்படுகிறது. ஆனால கதவடைப்பால் பாதிக்கப்பட்டு சமூக பொருளாதார மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு இறந்து போனவர்களுக்கு இது பொருந்தாது என்பதை எங்கள் புள்ளி விவரங்கள் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதில் இறந்து போனவர்கள் பெரும்பாலானவர்கள் ஏழைகள் விளிம்புநிலை மக்கள். பெரும்பாலான அறிக்கைகளில் இறந்தோரின் சமூக பொருளாதார நிலையை தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இறந்தவர்கள் பற்றிய பொதுவான செய்திகளை கிடைக்கிறது.

    In America, Coronavirus Takes a Higher Toll on Men – photo courtesy The New York Times

சமூக பொருளாதார மன அழுத்தத்தால் இறந்த 181 பேரில், 43 பேரின் சமூக பொருளாதார நிலைகள் தெரியவில்லை. இவற்றில் பெரும்பகுதி அடையாளம் காணப்படாத, மது தொடர்பான மரணங்கள். அதேபோன்று மருத்துவமனைக்கு சென்று சேர முடியாமல் உயிரிழந்தோரின் சமூக பொருளாதார நிலைகளையும் கண்டறிய முடியவில்லை. எனவே இந்த மரணங்களை அடையாளம் காணப்பட முடியாத மரணங்கள் என்றும் வகைப்படுத்த முடியாத மரணங்கள் என்றும் வரையறுத்து கொண்டோம். கிடைத்த செய்திகள் வழியாக ஒரு பரந்த வகைப்பாட்டை செய்திருக்கிறோம். இதன்படி 131 பேர் விவசாயிகள் கிராமப்புற மக்கள் நகர்ப்புற உழைக்கும் மக்கள் அல்லது ஏதுமமற்றவர்கள். இரண்டு வெளிநாட்டவர்கள். இரண்டு அரசு ஊழியர்கள். இரண்டு பேர் அபார்ட்மென்ட் குடியிருப்பு வாசிகள் இவர்கள். இது தவிர அனைவரும் ஏழை மக்கள்.

கோவிட்- 19 நோய்தொற்று மரணங்கள் சில பெருநகரங்களில் தான் அதிகமாக நிகழ்ந்துள்ளது. ஆனால் சமூக பொருளாதார அழுத்தத்தின் காரணமாக நிகழ்ந்த மரணங்கள் கிராமம் சிறு நகரங்கள் என்று பாராமல் இந்தியா முழுவதும் நிகழ்ந்திருக்கிறது. மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த மரணங்களை கழித்துவிட்டு பார்த்தால் சமூக பொருளாதார மன அழுத்த மரணங்களே அதிகமாக நிகழ்ந்திருக்கிறது என்பதை உணரமுடியும். நோய் பாதித்த நகரங்களிலும் இன்ன பிற வழமையான பகுதிகளிலும் தனிமனித இடைவெளியில் பின்பற்ற ஊரடங்கு உத்தரவு பயனுள்ளதாக இருக்கலாம். இதே நகரங்களில் அதிக நெரிசல் நிரம்பிய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க ஊரடங்கு போதுமானது அல்ல.

கிராமங்களில் தொடரும் இந்த சமூக பொருளாதார நெருக்கடி அவர்களது வாழ்வில் அச்சுறுத்தி வருகிறது. மும்பை பூனா இந்தூர் மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் தான் நோய் தோற்று மரணங்கள் அதிகம். அதேசமயம் அசாம், பீகார், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, ஒடிஷா, தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நோய்த்தொற்று மரணங்களை காட்டிலும் சமூக பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இறந்தோர் எண்ணிக்கையே அதிகம். அருணாச்சல பிரதேசத்தில் நோய்தொற்று மரணம் ஏதும் இல்லை. ஆனால் மன அழுத்தம் மரணம் பதிவாகி இருக்கிறது. கோவிட்-19 எதிரான இந்த திட்டமிடப்படாத செயல்பாடு எப்படி நோய் தொற்று மரணங்களை தடுக்க போகிறதோ தெரியவில்லை. ஆனால் நோய்த் தொற்றை காட்டிலும் சமூக பொருளாதார மன அழுத்தம் வேகமாக பரவி வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

ஏன் இந்த ஆய்வு முக்கியமானது?:

இது போன்று வேகமாக பரவும் தொற்று நோய்கள் படுவேகத்தில் பொரும்பான்மை மக்களுக்கு தொற்று பரவி, பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று விட்ட நிலையில்தான் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று பரவலாக பேசப்படுகிறது. இருந்தபோதிலும், என்ன ஒரு விஷயம் பெருமளவு அங்கீகாரத்தை பெறவில்லை என்றால், ஒரு சிறந்த பொது செயல் திட்டம் இல்லாமல் இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதே. இல்லையெனில் சமூக பொருளாதார நெருக்கடி தரும் மன அழுத்தத்தால் வாழ்வாதாரம் இழப்பார்கள். இதன் தொடர்ச்சியாக நச்சு சுழற்சி போன்று பொருளாதார சமூக அழுத்தத்தால் நிகழும் மரணங்கள் தொற்று மரணங்களை காட்டிலும் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி தரும் மன அழுத்தத்தால் நிகழும் மரணங்கள் அதிகரிக்கும் என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று, பொருளாதார காரணிகள் ஒன்றுக்கொன்று உந்து சக்தியாக இருந்து மொத்த நெருக்கடியில் கூட்டுகிறது.

                                                 photos courtesy the economic times

இரண்டு, மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு சமூக பொருளாதார நிதி நெருக் கடியை தாங்கிக் கொள்வார்கள். அதற்கு மேலும் கூடும் போது அதனை தாங்கிக் கொள்ளும் திறனை இழந்து விடுவார்கள். ஒரு மனிதன் பசியோடு சில நாள் வாழலாம். ஆனால் அதுவே அதிகரித்துக் கொண்டே செல்லும் போது மொத்த சத்துக்களையும் இழந்து விடுவார்கள். மிகுந்த இயலாமையிலும் சத்து இன்மையான வாழ்வு ஆகியவற்றால் மன அழுத்தத்திற்கு முதலில் ஆட்டுவார்கள். எனவே கோவிட்-19 தொற்றால் ஏற்படும் மரணங்களை காட்டிலும் ஒரு கட்டத்தில் சமூகப் பொருளாதார நெருக்கடி அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்துவிடும். கோவிட்-19 நோய்த் தொற்றின் மூலம் நிகழும் ஆபத்துக்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

மாறாக சமூக பொருளாதார நெருக்கடிகளையும் அதனால் ஏற்படும் மரணங்களையும் கட்டுப்படுத்தவில்லை என்றால் ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். இது போன்ற ஒரு நெருக்கடி நிலையை கையாள போதுமான அளவு சமூக பாதுகாப்பு தரப்பட வேண்டும். அது பெருமளவிலான நேரடி மானியம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எல்லோருக்கும் இலவசமாக வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட வேலையில்லா கால நிவாரணம் வழங்குவது, பொதுச் செலவு மூலமே சரி செய்ய முடியும், என்று பல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முன்யோசனை இல்லாத திட்டமிடப்படாத கதவடைப்பால் ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார அழுத்தத்தை தீர்க்க எந்த வித கால அவகாசம் இன்றி உடனடியாக இந்த நிவாரணங்களை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தற்போது இந்த அழுத்தம் இனி வரும் வாரங்களில் காலத்திற்கு தகுந்தது போல் வேகமாக அதிகரிக்கும்.

கதவடைப்பின் தொடக்க நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் சாலை விபத்துகள் மூலம் மரணமடைந்தார்கள். அத்தோடு பட்டினி சாவு வேலையின்மை பாலியல் தொந்தரவு அச்சம் பீதி கலந்த மன அழுத்தம் ஆகியவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கதவடைப்பு தொடரும்போது சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை கொடுக்கும் எந்த அறிகுறி தெரியவில்லை. இது மேலும் அளவுக்கு அதிகமாக சமூக பொருளாதார நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்யும். இந்த வகையான அழுத்தம் எங்கே நிலைகொள்கிறது என்பதை முறையாக பதிவு செய்வது அவசியத் தேவையாக எழுந்துள்ளது.

கட்டுரையாளர்கள்: 1)விகாஸ் ராவல் மற்றும் கார்த்திக் ஏ மாணிக்கம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளியல் அறிஞர்கள்.2) விவேக் ராவல்: பேரிடர் மேலாண்மை நிபுணர், மக்கள் மையம் அகமதாபாத்.

– நன்றி www.coronapolicyimpact.com

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *