சித்தா போன்ற பாரம்பரிய மருந்துகள் கோவிட் 19க்கு எதிரான திறன் கொண்டிருக்கின்றனவா..? – பேராசிரியர் டாக்டர்.ச.கிருஷ்ணசாமியிடம் நேர்காணல் (தமிழில்:தா.சந்திரகுரு)

நியூஸ்க்ளிக்: முன்னதாக பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவிய காலத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் தலைமையிலான ஆயுஷ் அமைச்சகமும், அஇஅதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கமும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நிலவேம்பு கஷாயம் மற்றும் பிற பாரம்பரிய மருந்து வகைகளைப் பயன்படுத்துமாறு மக்களை ஊக்குவித்தன. இந்த கோவிட் 19 காலகட்டத்தில், அதே அரசாங்கங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரை ஊக்குவித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக இது நடந்து வருகிறது. லேசான மற்றும் அறிகுறியற்ற கோவிட் நோயாளிகளுக்கு சித்தா மருந்துகளைத் தருவதை தமிழ்நாடு அமைச்சர் ஊக்குவித்தார். பாரம்பரிய மருந்துகளின்  குறிப்பாக தமிழ்நாட்டில் தோன்றிய சித்தா மருந்துகளின் செயல்திறனைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதற்காக, நியூஸ்க்ளிக் டாக்டர்.ச.கிருஷ்ணசாமியிடம் உரையாடியது. டாக்டர்.ச.கிருஷ்ணசாமி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். அகில இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பின் பொருளாளராக இருக்கும் அவர், தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர்.

ச.கிருஷ்ணசாமி: சித்த மருத்துவம் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்துகின்ற பாரம்பரிய மருத்துவம் ஆகும். அதற்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய பாரம்பரிய மருத்துவத் துறை என்றே அது இருந்து வந்தது. 2003ஆம் ஆண்டில் ஆயுஷ் (ஆயுர்வேதம்,யோகா,யுனானி,சித்தா, ஹோமியோபதி) என்று மறுபெயரிடப்பட்டது என்றாலும், அது ஒரு துறையாகவே இயங்கி வந்தது, 2014ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசாங்கம், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதியை ஊக்குவிப்பதற்காக ஆயுஷ் என்ற தனி அமைச்சகத்தை உருவாக்கியது. அது 2014ஆம் ஆண்டில் நடந்தது. மிகப்பெரிய தொகை அதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனாலும் இப்போது 2020ஆம் ஆண்டில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் எந்தவொரு மருந்துகளையும் சரிபார்ப்பதற்கான எந்தவொரு மருத்துவ பரிசோதனையும் அந்த அமைச்சகம் செய்திருக்கவில்லை. வெளியாகியுள்ள எந்தவொரு ஆய்வுக் கட்டுரைகளும், அவற்றை மதிப்பாய்வு செய்து வெளியிடுகின்ற பத்திரிகைகள் அல்லது நல்ல புகழ்பெற்ற பத்திரிகைகள் போன்றவற்றில் வெளியாகவில்லை. அவர்களுக்கான வெளியீடுகளில் மட்டுமே வெளியாகின்ற கட்டுரைகள், அந்த சிகிச்சை செயல்படுகிறது அல்லது இந்த சிகிச்சை செயல்படுகிறது என்று மட்டுமே கூறுகின்றன.

Zilla Panchayath Dharwad

தாங்கள் சொல்லப் போகின்ற எந்தவொரு மருந்தும் மருத்துவ ரீதியாக மக்களிடம் பரிசோதிக்கப்பட்டதா என்பதை மத்திய அரசும், தமிழ்நாடு அரசாங்கமும் உறுதிப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலுக்காக, நிலவேம்பு கஷாயம் குடிக்கச் சொல்லி, தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பும் இதையே செய்தது. அவர்கள் அப்போது நிலவேம்பு கஷாயத்தை ஊக்குவித்தனர். அதை எல்லா இடங்களிலும் கொடுக்கத் தொடங்கினர். ஆனால் டெங்கு இல்லையென்றான பிறகு, அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன. எனவே நிலவேம்பு கஷாயம் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டதா இல்லையா என்பதற்கான எந்த ஆதாரமும் இப்போது நம்மிடம் இல்லை.

இங்கே இருக்கின்ற பிரச்சனை என்னவென்றால், எந்தவொரு அறிவியல்ரீதியான மனப்பான்மையும் அமைச்சர்களிடமோ அல்லது அரசாங்கத்திடமோ இருக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி   தேவைப்படுகின்ற அறிவியல் மனப்பான்மையை தாங்கள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் யாரும் கருதவில்லை. தங்களிடம் இருக்கின்ற குறிப்பிட்ட சிந்தனை முறை அல்லது கருத்தியல் சிந்தனைக்கு ஏற்றவாறான கூற்றுக்களை மட்டும் அவர்கள் சொல்லிச் செல்கிறார்கள். இங்கே உள்ள ஒட்டுமொத்த பிரச்சனையாக இருப்பது, அதை ஊக்குவிக்கின்ற  அரசியல் தலைவர் மட்டுமல்ல, பொதுமக்களும் இதுகுறித்து கேள்விகள் கேட்பதில்லை. மக்களிடையே அறிவியல் மனப்பான்மை இருக்கிறதா என்று நீங்களே பாருங்கள். ஜவஹர்லால் நேரு இதைத்தான் எழுதினார். அரசியலமைப்பிற்குள்ளும் அது கொண்டு வரப்பட்டது. அறிவியல் மனப்பான்மையை உருவாக்கிக் கொள்வது அனைவருக்குமாக கடமையாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால் இத்தனை ஆண்டுகளில், நமது கல்வி முறையோ அல்லது நமது சமுதாய வழிமுறைகளோ பொதுமக்களுக்கு அறிவியல் மனப்பான்மை குறித்து எதுவும் கற்பிக்கவில்லை. அமைச்சர் ஒருவர் அல்லது யாரோ ஒருவர் அல்லது ஊடகங்கள் இதுபோன்ற ஒன்றைச் சொல்லும்போது, நீங்கள் முட்டாள்தனமாகப் பேசுகிறீர்கள், நீங்கள் மடத்தனமாகப் பேசுகிறீர்கள் என்று மக்கள் சொல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு கற்பிக்கப்படாததால், அவர்களால் அவ்வாறு சொல்ல முடியவில்லை. அதனால் அந்த அமைச்சரும் தான் விரும்பியதை எல்லாம் சொல்லி விட்டுச் செல்வார். இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அந்த அமைச்சருக்கு குறிப்பிட்ட வகையிலான ஆர்வம் இருக்கிறது. மக்களின் நலன் குறித்து அவருக்கு கவலையில்லை. மக்களுக்கு நல்லது எது என்பதை அவர் தன்னுடைய மனதில் கொண்டிருக்கவில்லை என்பதுதான் இங்கே பிரச்சனையாக உள்ளது.

நியூஸ்க்ளிக்: தமிழ்நாடு அரசு இந்த தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, கபசுர குடிநீரை ஊக்குவித்து வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ச.கிருஷ்ணசாமி: கபசுர குடிநீர் என்பது பாரம்பரிய மருத்துவத்தைச் சார்ந்த தயாரிப்பு ஆகும். கபசுர குடிநீர் குறித்து விளம்பரம் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்க வேண்டும். இன்றைய நாளில், கோவிட் 19 நோயை எவ்வறு குணமாக்குவதில் கபசுர குடிநீரின் பங்கு என்னவென்று அதிகாரப்பூர்வமாக மக்களுக்குத் தெரியாது. அதனைப் பரிந்துரைப்பவர்கள், அது பாரம்பரிய அறிவை அடிப்படையாகக் கொண்டது, வைரஸ் காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுநோயை அதனால் குணப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து அரசாங்கம் செய்ய வேண்டியது என்னவென்றால், மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து, அதனைச் சரிபார்த்திருக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனையை செய்வதற்குத் தேவையான போதுமான கால அவகாசம் அவர்களுக்கு இருந்தது. அந்த பரிசோதனைகளைச் செய்த பின்னர் போதுமான சான்றுகள் இருந்தால், அதை  ஊக்குவிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் அது இப்போது சில மாந்திரீகர்களிடம் சென்று, அவர் உங்கள் மீது வேப்பிலையை விசிறுவார், நோய் சரியாகிவிடும் என்று சொல்வதைப் போல, மூடநம்பிக்கை கொண்டிருக்கும் மற்றொரு வழியிலேயே பயன்படுத்தப்படுகிறது.. இவையிரண்டிற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. கபசுர குடிநீருக்கு நோயைத் தீர்க்கும் திறன் இருப்பதாக டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற  செய்திகள்  வந்துள்ளன. ஆனாலும் ஆய்வுக்கூடத்தில் அவை  வேலைசெய்கின்றன என்று உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் எதுவும் இல்லை. அலோபதி மருந்துகளான ஹைட்ராக்ஸி குளோரோகுயின்,  ரெம்டெசிவிர்  போன்ற மருந்துகளுக்கு கூட எவ்வித மருத்துவ பரிசோதனைகளும் இல்லாமல் அத்தகைய மருந்துகளை ஊக்குவிப்பது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

அதனால்தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயனுள்ளதாக இருக்கும் என்று முதலில் சொன்ன உலக சுகாதார நிறுவனம், பின்னர் அது பயனுள்ளதாக இருக்காது என்று சொன்னது. அது மிகவும் வெற்றிகரமாக இல்லை என்பதை மருத்துவப் பரிசோதனைகள் காட்டின. கபசுர குடிநீர் அல்லது எந்தவொரு மருந்தையும் கொடுப்பதற்கு, கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தலாம் அல்லது குறைந்தபட்சம் நோய்த்தொற்று அதிகரிப்பை அல்லது மிகவும் மோசமாவதைத் தடுக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அத்தகைய ஆதாரங்களின் அடிப்படையிலான மருத்துவமே முக்கியத்துவம் பெறுகிறது.

Government to distribute herbal concoction to boost immunity - The ...

நியூஸ்க்ளிக்: அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத இத்தகைய மருந்துகளை அரசியல் தலைவர்கள் ஏன் ஊக்குவிக்கின்றனர்?

ச.கிருஷ்ணசாமி: தமிழ்நாட்டிற்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. பெரியாரின் காலத்திலிருந்தே பகுத்தறிவாளர்களாக இருந்த வரலாற்றையும் கொண்டுள்ளது. திராவிட இயக்கத்திற்குள் இருந்த அனைத்து இயக்கங்களும், வந்த அனைத்து கட்சிகளும் அவ்வாறே இருந்திருக்கின்றன. அஇஅதிமுக என்ற கட்சிக்கு திராவிடப் பெயர் உள்ளது என்றாலும், அது பகுத்தறிவு  சிந்தனை கொண்ட இயக்கமாக இல்லை. பகுத்தறிவுவாத சிந்தனையின் வேர்களிலிருந்து முற்றிலுமாக அது துண்டிக்கப்பட்டுவிட்டது. எந்த அமைச்சரும், அமைச்சரவையில் உள்ள எந்தவொரு நபரும் பகுத்தறிவுவாத அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் காணலாம். அவர்கள் அனைவரும் முற்றிலும் மூடநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற தவறான கருத்துக்களை வழங்குகிறார்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட முறையில் நம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டிய அரசில் இருக்கும்போது, அரசியலமைப்பு மதச்சார்பற்றது என்று சொல்லுகின்ற இடத்தில் இருக்கும் போது, அந்த அரசியலமைப்பைப் பின்பற்றுகின்ற மாநிலத்தின் முதலமைச்சர் கடவுளுக்குத்தான் தெரியும் என்றோ அல்லது நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் சரியாகி விடும் என்றோ சொல்ல முடியாது. ஆகவே, இந்த முதலமைச்சர் விலக வேண்டும் என்று மக்கள் சொல்வதற்கு இது இப்போது போதுமானதாக இருக்கிறது. இப்போது முழு திருப்புமுனை நடந்திருக்கிறது என்று சொல்லலாம். ஒருவேளை இப்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால், பின்னணியில் என்ன காரணம் இருந்தாலும், அவர் பாஜகவின் பின்னால் சென்றிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே நான் கருதுகிறேன். இப்போதுள்ள இந்த அரசாங்கம், எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது.

நியூஸ்க்ளிக்: சில பொருட்கள், கலவைகள், உணவுகள் கோவிட்டுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன என்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவுகின்ற செய்திகள் கூறுகின்றன. அவை உண்மையில் வேலை செய்யுமா?

ச.கிருஷ்ணசாமி: இது முற்றிலும் தவறான சிந்தனையாகும். தவறான தகவல்களைப் பரப்புவதாகும். வைரஸுக்கு எதிரான நமது நோய் எதிர்ப்பு சக்தி முக்கியமானது. ஆனால் ஒரு நாள் ஏதாவது சாப்பிடுவதால் மட்டுமே, உங்கள் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு விடப் போவதில்லை ஒட்டுமொத்த ஊட்டச்சத்து நிலையே மிகவும் முக்கியமானது மிகவும் ஆரோக்கியமான, நன்கு ஊட்டத்துடன் வளர்க்கப்பட்ட நபராக நீங்கள் இருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியும் நன்றாகவே இருக்கும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான கூடுதல் காரணிகள் என்று எதுவுமில்லை. நீங்கள் இதைச் சாப்பிட்டால் இந்த அளவு எதிர்ப்பு சக்தி கூடும், ஆன்டிபாடிகளின் உற்பத்தி திறன், டி செல் எதிர்வினை திறன் உங்களிடம் அதிகரிக்கும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் நம்மிடம் இல்லை.

இரண்டு வகையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. ஒன்று, ஹுமோரல் நோய் எதிர்ப்பு சக்தி (Humoral Immunity)  மற்றது செல் மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தி (Cell mediated Immunity) ஆகியவையாகும். இந்த உணவுப் பொருட்களில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடுவதன் மூலம், டி செல் நோய் எதிர்ப்பு சக்தி திறன் அல்லது ஹுமோரல் நோயெதிர்ப்பு திறன் அதிகரிக்கும் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதைத் தவிர உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி (Innate Immunity) என்ற ஒன்றும் இருக்கிறது.

Immune Pathways | BioNinja

இந்த வகை நோயெதிர்ப்பு திறன் நம்மைப் பாதிக்கும் பல கிருமிகள், பல வைரஸ்கள் இருப்பதால் வருகிறது. அவற்றிற்கெதிராக நமக்கு தனித்தனி தடுப்பூசிகள் தேவையில்லை என்றாலும், அவற்றை நம்மால் இன்னும் தவிர்த்துவிட முடிகிறது. ஏனென்றால் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்திதான் அதற்கு காரணம். இந்த உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்திக்கான காரணிகள் அறியப்பட்டவை என்றாலும், சாப்பாடு தொடர்பான விஷயங்கள் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான துணைக்காரணியாக இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் மக்கள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் இந்த கோவிட் சூழ்நிலையில், எண்பது முதல் எண்பத்தைந்து சதவிகிதம் கோவிட்19ஆல் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சாதாரண நோயெதிர்ப்பு சக்தியின் காரணமாக, வேறு எதையும் செய்யாமல், தங்களை மேம்படுத்திக் கொள்ளாமல் தாங்களாகவே இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். மீதமுள்ளவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.  அவர்கள்  மட்டுமே மிகவும் மோசமான சிக்கல்களுக்கு உள்ளாவதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் போது, ஏராளமான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.  இதற்கு  காரணம்  சைட்டோகைன் புயல் (Cytokine Storm)   என்று  கூறுகிறார்கள்.  சைட்டோகைன் மூலக்கூறுகள் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்படுகின்றன. மேலும் அது பாதிப்பை ஏற்படுத்துவதை விட முழு அமைப்பிற்கும் எதிராக போராடத் தொடங்குகிறது. எனவே இந்த சைட்டோகைன் புயலானது உண்மையில் சில காரணங்களால் தன்னைத் தானே திருப்பித் தாக்கிக் கொள்வதன் விளைவாகும். அது ஏன் என்று நமக்குத் தெரியாது. ஆகவே கொடுக்கப்பட்ட உணவில் இருக்கின்ற சில மூலக்கூறுகள் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தாலும் கூட, அது ஒரு பிரச்சனையையே ஏற்படுத்தும். இதுபோன்ற கூடுதல் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நபர்கள் கோவிட்19ஆல் பாதிக்கப்பட்டு, மிகவும் தீவிரமான கட்டத்திற்குச் செல்லும் போது, இந்த பாதிப்பும் அதிகரிக்கும்.

Inhaled statins to combat COVID-19 – prophylactic and treatment ...

பிரச்சனைகள் இருக்கும்போது, மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பது  மற்றும் முகக்கவசங்களை அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். இதுபோன்ற தவறான செய்திகளும் தவறான தகவல்களும் தவறான  பாதுகாப்பான  உணர்வை ஒருவருக்குத் தந்து விடுகின்றன. விளைவாக  ’நான் நன்றாகவே இருக்கிறேன், ஏனெனில் நான் இந்த குறிப்பிட்ட உணவை  எடுத்துக் கொள்கிறேன். அதனால் நான் நன்றாகவே இருப்பேன். அதனால் நான் முகக்கவசம்  அணிய வேண்டியதில்லை அல்லது கைகளை கழுவுவதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. அதிக எண்ணிக்கையான மக்களுடன் இடைவெளி இல்லாமல் கூட்டமாக என்னால் இருக்க முடியும்’ என்று ஒருவர் நினைக்கக்கூடும். எனவே நிரூபிக்கப்படாத இதுபோன்ற மருந்துகளை தவறாகக் கொடுப்பதன் மூலம், மக்களுக்கு தவறான பாதுகாப்பையே கொடுக்க முடியும். இதுபோன்ற தவறான தகவல்கள், தேவைப்படுகின்ற சரியான நடவடிக்கையை மக்கள் மேற்கொள்வதை தடுத்து விடும்.

https://www.newsclick.in/modi-govt-and-allies-are-promoting-unscientific-ways-fight-covid-19

நன்றி: நியூஸ்க்ளிக் இணைய இதழ்

தமிழில்:தா.சந்திரகுரு