வயதாவதால் மறதி என்று கவலைப்படுகிறீர்களா?
அ. குமரேசன்
“வயசாயிட்டாலே ஞாபக மறதி ஏற்படத்தான் செய்யும்,” என்று சொல்லப்படுவதை எங்கும் கேட்கலாம். இளையவர்கள் மட்டுமல்ல முதியவர்களும் இதை நம்புகிறார்கள். ஆனால், இப்படி நம்புவதே கூட நமது மூளையின் செயல்பாட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. பென்சில்வானியா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் நிக்கி எல் ஹில் தலைமையிலான குழு இந்த ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறது.
“வயதாவது குறித்த சிந்தனையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை கொண்ட முதியவர்கள் சிறப்பான நினைவாற்றல் திறனை வெளிப்படுத்துகிறார்கள்,” என்று அந்த ஆராய்ச்சி கூறுகிறது. வயதாவது குறித்த கண்ணோட்டம் மனத்திடத்தைத் தக்கவைத்துக்கொள்வதிலும், மூளையின் செயல்பாட்டிலும் தாக்கம் செலுத்துகின்றன என்கிறார்கள் ஆய்வுக் குழுவினர்.
மறதி ஏற்படுவது வயது முதிர்வதோடு இணைந்த ஒரு குறிப்பிடத்தக்க இயற்கையான நடப்புதான் என்று நம்பக்கூடிய ஒருவர், சிறு சிறு கவனக்குறைவுகளால் ஏற்படும் சிறு சிறு மறதிகளைக் கூட வயது முதிர்ச்சியால் ஏற்படும் நினைவாற்றல் வீழ்ச்சிதான் என்று நினைத்துக் கவலைப்படத் தொடங்குகிறார். நினைவாற்றலைக் கூர்மையாக வைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடாமலே இருந்துவிடுகிறார்.
இதற்கு மாறாக, நேர்மறையான கண்ணோட்டம் உள்ள ஒருவர், நினைவில் வைத்துக்கொள்வதில் அவ்வப்போது ஏற்படக்கூடிய பின்னடைவுகளை சாதாரணமான அனுபவமாக எடுத்துக்கொண்டு, முதுமையைப் பற்றிக் கவலைப்படாமல் வேண்டிய பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும்
65 முதல் 90 வயது வரையிலான 581 பேர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வயதாவது குறித்து என்ன நினைக்கிறார்கள், மறதி ஏற்படுகிறபோது எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்ற ஆராய்ச்சி அவர்களிடம் நடத்தப்பட்டது.
வயதாவது சார்ந்த உடல் நலம், மன நலம், நினைவாற்றல் நலம் ஆகிய மூன்றுடனும் தொடர்புடைய பல்வேறு வகையான எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டன. இந்த மூன்றுக்குமே வயதாவது குறித்த கண்ணோட்டங்களோடு தொடர்பிருப்பதை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆம், வயதானால் உடல் நலம் சீர்குலையத்தான் செய்யும் என்று எண்ணுகிறவர்களுக்கு, உரிய உடற்பயிற்சி போன்றவற்றைப் புறக்கணிப்பதால் உண்மையாகவே உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. வயது முதிரும்போது மன நலம் குன்றுவது இயல்புதான் என்று நினைக்கிறவர்கள் மனதைக் கூர்மையாக வைத்துக்கொள்வதற்கான முயற்சிகளைத் தவிர்க்கிறார்கள், ஆகவே உண்மையிலேயே அவர்களது மன நலம் குன்றுகிறது.
அதே போல், கிழட்டுப் பருவத்தை அடைந்துவிட்டோம், மறதி ஏற்படாமல் இருக்குமா என்று கருதுகிறவர்கள், மறதியைத் தவிர்க்கும் வழிகள் இருப்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள்.
மாறாக, வயதானாலும் உடல் நலத்தைப் பேண வேண்டும், மன நலத்தைக் காக்க வேண்டும், நினைவாற்றலைப் பசுமையாக வைத்திருக்க வேண்டும் என்ற அக்கறையோடு செயல்படுகிறவர்கள் அந்த மூன்றிலுமே சாதிக்கிறார்கள், அவர்களுக்கு ஞாபக மறதிப் பிரச்சினை மிகக்குறைவாகவே ஏற்படுகிறது.
மறதிப் பிரச்சினை மரபணுவோடு சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். அதே போலக் கடந்த காலத்தில் தங்களுக்குக் கிடைத்த கல்விக்கும் தற்காலத்தில் ஏற்படும் மறதிக்கும் தொடர்பிருக்கிறது என்ற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. இதைப் பற்றிய விழிப்புணர்வாலும், வயதான பின்னும் துடிப்போடு இயங்குவதற்கு முன்னுதாரணமாக இருப்பவர்களோடு பழகுவதாலும், எதிர்மறைச் சிந்தனைகளை எதிர்த்து நிற்பதாலும் வயதாவது பற்றிய கண்ணோட்டங்களை ஆக்கப்பூர்வமானவையாக மாற்றிக்கொள்ள முடியும் என்று ஆய்வறிக்கை அடித்துச் சொல்கிறது.
பயிற்சி இருக்கிறதா?
சரி, நினைவாற்றலை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சிகள் என்ன? இதைப் பற்றி இந்த ஆய்வறிக்கையில் சொல்லப்படவில்லை. ஆனால், வேறொரு கட்டுரையில் இதற்கான வழிகளைக் காண முடிந்தது. நவீன கருவிகளால் ஏற்படும் மறதிப் பிரச்சினை பற்றிய கட்டுரை அது. முன்பு முக்கியமான தொலைபேசி எண்களை நினைவிலிருந்தே சொல்லிவிடுவோம், இப்போதோ மிக நெருக்கமானவர்களின் எண்களைக் கூட, யாருக்காவது சொல்ல வேண்டியிருந்தால், கைப்பேசியின் தொடர்புப் பட்டியலுக்குள் சென்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. புதிய இடங்களுக்குப் போகிறபோது அடையாளங்களை வைத்துக்கொண்டும், விசாரித்துக்கொண்டும் சென்று அந்த இடங்களை அடைவது ஒரு தனிச் சுகமாகவே இருந்தது. இன்று கைப்பேசியின் ‘கூகுள் மேப்ஸ்’ நேவிகேஷன் வழிகாட்ட எளிதாகப் போகிறோம். அது எளிதாக, உதவியாக இருப்பது உண்மை. அதே வேளையில், பாதைகளையும் முக்கிய அடையாளங்களையும நினைவில் வைத்துக்கொள்வதற்கு அது தடையாகவும் ஆகிவிடுகிறது.
ஆகவே, வேறு வழியே இல்லை என்கிற நிலைமைகளில் மட்டும் இத்தகைய தொழில்நுட்பத் துணைகளை நாடி, மற்ற நேரங்களில் முன்போலவே எண்களை நினைவில் வைத்துக்கொள்வது, இடங்களுக்கு அடையாளங்களை வைத்து விசாரித்துப் போவது போன்ற பழக்கங்களை மேற்கொள்ளலாம். பத்திரிகைகளிலும், இணையத்திலும் வருகிற புதிர்விளையாட்டுகளில் ஈடுபடுவதும் அறிவைக் கூர் தீட்டுவதோடு நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும் உதவும். புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது போன்று பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்வதும் பெருமளவுக்குத் துணை செய்யும்.
தாய்சி போன்ற அங்கங்கள்அசைவுக் கலை, உடல் உழைப்பு, ஊட்டச் சத்துள்ள உணவு முதலியவையும் இதில் பங்கேற்கும். நண்பர்களோடு அரட்டையடிப்பதே கூட மறந்துவிட்ட பல நிகழ்வுகளையும் முகங்களையும் நினைவுக்குக் கொண்டுவரும். முக்கியமாக, “வயசாயிட்டாலே மறதி வரத்தான் செய்யும்” என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள்.
முடிந்தால் சிரிப்பதற்கு
வயதாகிவிட்டதைக் கலகலப்பாக ஏற்றுக்கொள்வது பற்றிய ஒரு பழைய ஜோக் நினைவுக்கு வருகிறது. 80 வயதைத் தொட்டுவிட்ட இரண்டு நண்பர்கள் சந்தித்துப் பேசுகிறார்கள். வயது முதிர்ச்சியைப் பற்றியே பேச்சு திரும்புகிறது.
“உடம்பெல்லாம் வலிக்குதப்பா. முந்தி மாதிரி வேகமா எந்திரிக்கவோ உட்காரவோ நடக்கவோ முடியறதில்லை. பல பேர் யாருன்னே ஞாபகம் வர மாட்டேங்குது,” என்கிறார் ஒருவர். “வயசாயிட்ட அனுபவம் உனக்கு எப்படி இருக்கு,” என்றும் நண்பரிடம் கேட்கிறார்.
“எனக்கென்ன, சின்னக் குழந்தையாயிட்ட மாதிரி இருக்கு,” என்கிறார் நண்பர்.
“அதெப்படி உனக்கு மட்டும் இப்படி பாசிட்டிவா நினைக்க முடியுது,” என்று அவர் கேட்கிறார்.
“தலையில முடியெல்லாம் கொட்டிப்போச்சு, பாப்பா தலை மாதிரி இருக்கு. பாப்பா மாதிரியே தத்தக்கா பித்தக்கான்னு பேசுறேன்னு வீட்டுல எல்லாரும் சொல்றாங்க. அப்புறம் பெட்டிலேயே உச்சா போயிடுறேனே…” என்றார் உற்சாக நண்பர்.
கட்டுரையாளர் :
அ. குமரேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.