ஜே.கே.ருத்ரா - அரிதாரம் | JK Rudra - Arithaaram - review

 

“ஆய்வகங்களில் நடத்தப்படும் சோதனைகளுக்காக எலிகளை பலியிடுவது அறிவியல் விதியானதைப் போல மனிதன் சமூகத்தில் பிரிவினையை பரவ எலிகளாக தேர்ந்தெடுத்தது பெண்களையே.

ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே உடல், உடை என தன் வன்முறையை தொடங்குகிறான். மதம் சார்ந்த மாசடைந்த மரபுகளை சூத்திரமாக்குகிறான்.
பெண்களை சமூகத்தோடு ஒன்ற விடாமல் தனி வட்டம் போட்டு வாழப் பழக்குகிறான். திட்டமிட்டு தாழ்வு மனப்பான்மை விதைக்கிறான். அடிமை உணர்வை
அணு அணுவாய் திணிக்கிறான்.

21ம் நூற்றாண்டிலும் மானுடம் இ்வ்வன்முறையை நிறுத்தியதாய் தெரியவில்லை.

“அரிதாரம்’பெண்களுக்கான
நிரந்தர விடுதலையைப் பேசுகிறது.
பெண்மையின் மேன்மையை
உரக்க கத்துகிறது.

ஆணாதிக்க சிந்தனையென்பது ஆண்களோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை என்பதை வலியுறுத்துகிறது.

மறுமணம் குறித்த
அழுத்தமான பதிவு “தாரம்.
வெள்ளை புடவை
வண்ணமாகும் போது
அகத்தில் ஏனோ
ஐந்து நிமிட புல்லரிப்பு.

ஆணாகப் பிறந்தும் அத்தவிப்பை பார்த்திருக்கிறேன்.
இங்கேதான் வைத்தேன் என்ற
தெளிவுயிருந்தும்,
எங்கே என்ற கேள்விக்கு
தேடலே விடையாகிறது.

காக்க விடாமல்
கண்ணில் பட மாட்டாள்.
தேடவிடாமல் கூந்தல்
ஏற மாட்டாள்.

“சடை மாட்டி’ கவிதை
வாசிப்பவர்களையும் சேர்த்து
பின்னிக் கொள்கிறது.

“ஜி எஸ் டி’ தோழர் இரு நிமிடம்
கட்டபொம்மனாக மாறிய தருணம் அதிகாரத்திற்கு எதிரான
பெரும் கலை பிரச்சாரம்.

வெறுப்பரசியலை
வெளிப்படையாக வரைந்த
கவிதை சித்திரம்.

உணர்வுகளின் வழியே
நம்பிக்கை பிறக்கும்.
நம்பிக்கைக்கு பின்னே
வெற்றி முளைக்கும்
அருமை தோழர்.

தன்னை உணர்தல் என்பது
மாந்தர்களுக்கு அடிப்படை விதி. மனிதிகளுக்கு அது
அவசியமான மொழி என்பதே
தோழர் ஜே கே ருத்ரா அவர்களின்
ஆழமான பார்வை.

“பெண்மை’
நிரந்தர விடுதலைக்கான
ஒரு வழிப்பாதை.

நீ எழுதி வைத்த ஒன்றை
என்னுடலில் ஒட்டாதே.
உன் எதிர்பார்ப்பையெல்லாம்
என் முதுகில் சுமத்தாதே .
வழி விடு வாழ விடு.

மதங்கியின் மகிமை
புரியா ஜடங்குகளுக்கு
வேண்டுகோள் விடுக்கிறது
“அவளுக்கு.

பெண் விடுதலையை
உரக்கப் பேசும் கவிதை
“மீள் உருவம்.
வாசிக்கும் பெண்களுக்கு
நிச்சயம் கை விலங்கு உடையும். வெகுவிரைவில் அவ்வுறவு
விடுதலை நோக்கி நகரும்.

கணக்கு வராத
என் கூட்டாளிகளுக்கான கவிதை
(a+b)2= a2+b2 +2ab.
வடிவியல் வரைந்து தேர்ச்சி பெற்றது
வந்து போனது ஒரு கணம்.

நிறைய கவிதைகள்
சூசகமாய் சொன்னாலும்
“ஒப்பீடு ‘உறுதிப்படுத்தியது.
கவிஞர் ஆசிரியர் என்பதை.

அலைபேசிக்குள் தொலைந்து போன இன்றைய தலைமுறையை நினைவுபடுத்துகிறது “ஒரு மரம்.

நினைவில் நின்றிருந்த
பால்யத்தை மீண்டும்
ஊசலாட வைத்தது” கனா.

பெண்ணியம் பேசும் வரிகள்
தோழருக்கு கை வந்திருக்கிறது.
தொகுப்பிற்கு மேலும்
வலு சேர்த்திருக்கிறது.

குறிப்பிடும்படியான கவிதைகள்
தொகுப்பில் அதிகம் .
குறிப்பிட்ட கவிதைகள் மீது
எனக்கு அலாதி ப்ரியம்.

 

நூலின் தகவல்கள் 

நூல்: அரிதாரம்

ஆசிரியர்: ஜே.கே.ருத்ரா

வகை: கவிதை

பதிப்பகம்: யாழன் பதிப்பகம்

விலை : ₹100

 

எழுதியவர் 

க. மணிமாறன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 4 thoughts on “ஜே.கே.ருத்ரா எழுதிய “அரிதாரம்” – நூலறிமுகம்”
  1. ஆழமான சிந்தனை, புதிய சிந்தனை, சிந்தனைக்குள் அழகூட்டும் சிந்தனைகள், எழச்சியூட்டும் சிந்தனைகள் என சிந்தனைகள் பல கொட்டிக்கிடக்கும் அற்புதக் குவியல் அரிதாரம். கவிஞர் ஜே.கே. ருத்ராவிற்கு வாழ்த்துகள்.

    1. மிகவும் அருமையாக கவிதை தொகுப்பு. இது போல பல நூல்களை நீங்கள் வெளியிட வேண்டும். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.🤝💐

  2. எழுத்தாளர்களின் மனம் எவ்வாறு இயங்குகிறது என்று நான் எப்போதும் ஆச்சரியப்படுகிறேன். ஜே.கே.ருத்ரா புதுமுகம் போல் தெரியவில்லை. எழுதும் பாணி அசாத்தியமாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள் JK.R!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *